Showing posts with label தீபாவளி. Show all posts
Showing posts with label தீபாவளி. Show all posts

Monday, November 12, 2012

தீபாவளி சிறுகதை - சிவகாசி -சி.பி.செந்தில்குமார்





சர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.


.., புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்..., டுமீல்..., டுமீல்..., டமால்..., டமால்...,


தன் குடிசை வீட்டு வாசலில் அம்மா மைடியில் படுத்திருந்த வாணி அண்ணாந்து வானத்தை பார்த்தாள். பக்கத்து அடுக்கு மாடி  குடியிருப்பிலிருந்து வெடிக்கப்படும் பட்டாசுகளின் வெளிச்சமும், சத்தமும் அவளின் கவனத்தை ஈர்த்தது.

அம்மா! அப்பா எப்போம்மா வருவாங்க?

வேலையை முடிச்சுட்டு வந்துட்டே இருப்பாங்க கண்ணு...,

என்கிட்ட இருக்குற பைசாவுல அதுப்போல வெடி வாங்க முடியுமா?!

ம் ம் ம் முடியும் மா. நிறைய வாங்க முடியாது., ஆனா, கொஞ்சமா வாங்கலாம்...

புது சொக்கா?!


ம் ம்  வாங்கிக்கலாம் கண்ணு...,

ஸ்வீட்?

அதுக்கூடத்தான்..., எத்தனை முறை கேட்பே?! நான் போய் பக்கத்து வூட்டு அக்கா கூட போய் இட்லிக்கு மாவு அரைச்சுட்டு வரேன்.., நீ வூட்டை பத்திரம பார்த்துக்கோ...,


டே பட்டாச்சுடா..., கலர் கலர மின்னுது.., சூப்பரா இருக்கு...,ன்னு பேசிக்கிட்டே வரும் தன் ஃப்ரெண்ட்சுகளை பார்த்தாள்...,


ஹேய் வாணி! நாளைக்கு தீபாவளி பண்டிகைங்குறதால இன்னிக்கு அங்க ஏதோ விழாவாம். எல்லா மதத்துக்காரர்களும் கொண்டாடுறங்களாம். இது வருசா வருசமும் நடக்குதாம்.நாங்கலாம் அங்க போய் பட்டாசு வெடிக்குறதை பார்க்க போறோம். நீயும் வர்றியா?!


இல்லடா மணி..., நான் வர்லை...,


ஏன்? உங்க அம்மா அங்கதானே வேலை பார்க்குறாங்க?!



ஆமா, ஆனா, அந்த அப்பார்ட்மென்டுல ஒரு வீட்டுல பணக்கார முஸ்லீம் குடும்பம் இருக்கு. அந்த வீட்டு அம்மா, ஐயாலாம் என்கிட்ட பாசமாத்தான் இருக்காங்க. சாப்பிடறதுக்கும் பலகாரமும், போட்டுக்கு பழைய துணியும் குடுப்பாங்க.



ஆனா,  அவங்க பையனுக்குதான் என்னை கண்டாலே பிடிக்கலை. அங்க போனாலே நாயை அவுத்து விட்டு என்னை கடிக்க விடுவான். போன வருசம் தீபாவளிக்கு முதல் நாள் கொண்டாட்டத்தை பார்க்க போன போது, அங்க இருக்குற ஒரு அக்கா எனக்கு கம்பி மத்தாப்பு குடுத்தாங்க.


அதை கொளுத்தி விளையாடிக்கிட்டு இருக்கும்போது என்னை ஏளனமா பார்த்து சிரிச்சுட்டு..., என்ன நினைச்சானோ அக்கா குடுத்த பட்டாசு பாக்சுல தண்ணியை ஊத்தி நனைச்சுட்டு.., ஒரு பாக்கட் மொளகா பட்டாசுக்கூட வாங்க முடியலை..., உனக்கெதுக்கு தீபாவளின்னு கிண்டல் பண்ணிட்டான். இப்போ போனாலும் அதேப் போலதான் கிண்டல் பண்ணுவான்.


அதனால, உண்டியல்ல பைசா சேர்த்து வெச்சு, புது சட்டை, பட்டாசு வாங்கை வர சொல்லி அப்பாக்கிட்ட குடுத்திருக்கேன். இப்போ வந்துடுவாரு. நான் இங்கிருந்தே  பட்டாசு வெடிப்பேன்.  அங்கலாம் நான் வரலை. வேணுமின்னா நீங்களும் இங்க வந்து வெடிங்க..




வாணி நம்மால எப்படி அவங்களை போலலாம் பட்டாசு வாங்கி வெடிக்க முடியும்? தூர இருந்து பார்த்துக்கத்தான் முடியும். வா வாணி!


இல்லடா .., நீ போய் வா! எனக்கு பிடிக்கலை நான் வரலை...,


சரி நீ சொன்னா கேட்க மாட்டே! நாங்கலாம் போறோம்..,


என்ன வாணி? அப்பா இன்னுமா வர்ல?


இல்லம்மா.., மணி எட்டாச்சே?! எப்போ வருவாரும்மா?



தெரியலையேம்மா..., இந்நேரத்துக்கு வந்திருக்கனும். நீ சாப்பிட வாயேன்...,

இல்லம்மா.., அப்பா வரட்டும் எல்லாத்தையும் பார்த்துட்டு சாப்பிடுறேன்...,

சரி உன் இஷ்டம்...,


மணி பத்தாச்சு..., காலைல வெள்ளனமே எழுந்துக்கனும்.., சாப்பிட்டு படு வாணி...,


இல்லம்மா எனக்கு தூக்கம் வரலை...,


டொக்.., டொக்..,

வாணி யாருன்னு பாரு.., அட! உக்காந்த படியே தூங்கிட்டியா?


என்னங்க இது மணி 12 ஆச்சு.., இப்போதான் வர்றீங்க? வாணி இம்புட்டு நேரமும் அப்பா எப்போ வருவாங்கன்னு தொண தொணத்துட்டு இப்போதான் தூங்கியிருக்கா போல... அவ சொன்னதுலாம் வாங்கி வந்துட்டீங்களா? எங்கே? சைக்கிள்ள மாட்டீயிருக்கியா? இரு போய் எடுத்தாரேன்...



 தங்கம்...

சொல்லுங்க..., ஏன் ஒரு மாதிரியா இருக்கீங்க? சாப்புடலியா?


அதெல்லாம் இல்ல தங்கம்.., நான் வாணி சொன்னதெல்லாம் வாங்கி வரலை...,



என்னது வாங்கி வரலியா? ஏன்? இத கேட்டா குழந்தை ஏமாந்துப்புடுவாளே?!  பைசாலாம் என்னய்யா பண்ணே? குடிச்சு அழிச்சுட்டியா?!


ஐயோ! தங்கம் என்னை கொல்லாதே..., குடிக்குறதில்லைன்னு வாணி மேல சத்தியம் பண்ணியிருக்கேனே.., குடிப்பேனா?



அப்புறம் என்னாச்சு சொல்லித் தொலையேன்...



அது வந்து.., அது வந்து...,  வேலை முடிச்சுட்டு பட்டாசு, சொக்காத்துணிலாம்  வாங்க கடைத்தெருவுக்கு போனேன். அங்க சிவகாசி பட்டசு ஃபேக்டரில  பாதிக்கப் பட்டவங்களுக்கு உதவி பண்ணுறதுக்காக எதோ சங்கத்துல நிதி திரட்டிக்கிட்டு இருந்தாங்க... அவங்க வெச்சுக்கிட்டு இருந்த அடிபட்டவங்க ஃபோட்டோலாம் பார்க்கும்போது பாவமா இருந்துச்சு. அதான்.., கைல இருந்த பைசாவை போட்டுட்டேன்..,



ஐயையோ! என்ன காரியம் பண்ணிட்டேயா?!




இல்லை தங்கம் அந்த ஃபோட்டோல நம்ம வாணி போல சின்ன புள்ளைங்கலாம் இருந்துச்சா?! அதை பார்க்கும்போது மனசு கலங்கி போய் என்ன செய்யுறேன்னே தெரியாம பைசாலாம் போட்டுட்டேன்..., இப்போ நினைச்சா அவசரப்பட்டுட்டேன்னு தோணுது..., வாணியை நினைச்சாதான் கவலையா இருக்கு. என்ன சொல்ல போறளோ?!



பெரிய கர்ணன்னு மன்சௌக்குள்ள நினைப்பா? கையிலுருந்த பணமெல்லாத்தையும் போட்டு வந்திருக்கே. புள்ளைக்கு வருசத்துக்கொரு முறை சொக்க எடுத்துக் குடுத்து.., பட்டாசு வாங்கி குடுக்க துப்பில்ல. அவளே சேத்து வெச்ச பணத்தையும் தானம் பண்ணிட்டு வந்திருக்கே.., உன்னையெல்லாம்....




அப்பாவை திட்டாதேம்மா...,

வாணிக்கண்ணு தூங்கலியாமா!ன்னு வாரி அனைத்துக்கொண்டான் சிவசாமி..,



நீ வரும்போதே முழிச்சுக்கிட்டேன். நீ வாங்கி வந்ததெல்லாம் உன் கையால தரட்டும்ன்னுதான் தூங்குற மாதிரி நடிச்சுக்கிட்டு இருந்தேன். நீங்க ரெண்டு பேரும் பேசுறதை கேட்டுக்கிட்டுதான் இருந்தேன்.


கண்ணு அப்பா மேல கோவமில்லையா?

இல்லப்பா. பட்டாசு.., சொக்காதானே ?! அடுத்த வருசம் போட்டுக்கலாம்.., ஆனா, பாதிக்கப்பட்ட்வங்களுக்கு உதவுறதுதான் முக்கியம். தேவைப்படுறவங்களுக்கு உதவுனா.., கடவுளுக்கு சேவை செய்யுற மாதிரின்னு எங்க வாத்தியார் சொல்லுவாருப்பா. அதனால எனக்கொன்னும் வருத்தமில்லை.

பாட்டாசு வெடிச்சு கொண்டாடுறதைவிட இதுதான் திருப்தியா இருக்குப்பா..., மனசு நிறைஞ்சு போச்சுப்பா. வாங்க போய் தூங்கலாம்...,


வாணி! வாணி எழுந்திரு.., யாரு வந்திருக்காங்க பாரு..

.,

யாரும்மா?



பக்கத்து பிளாட்ல இருந்து நான் வேலை செய்யுற வூட்டுல இருந்து பாய் அங்கிளும், அவங்க பையனும் வந்திருக்காங்க..,



இவன் ஏன் இங்க வந்திருக்கான்.. கிண்டல் பண்ணாவா? னு மன்சுக்குள நினைத்தப்படியே வந்து சிவசாமிக்கு அருகில் நின்று கொண்டாள்...,


 வீட்டில் இருந்த ஒரே ஒரு சேரில் முஸ்லீம் பெரியவர் அமர்ந்திருக்க.., அவருக்கு பக்கத்தில் அவர் மகன் உசேன் தலை குனிந்து நின்றிருந்தான்.



ஐயா! வாணிதான் வந்துட்டாளே இப்பவாவது சொல்லுங்களேன்.., பிளீஸ்..., என் பொண்னு எதாவது தப்பு பண்ணிட்டாளா?!



ஐயோ இல்லை சிவசாமி, என் பையந்தான் தப்பு பண்ணிட்டான். அவனுக்கு ஏழைன்னாலே வெறுப்பு.  அவங்க திருடுவாங்க, அழுக்கானவங்க, யாரை பத்தியும் கவலைப்பட மாட்டாங்கன்னு அவனுக்குள் ஒரு எண்ணாம்.. எவ்வளவோ சொல்லியும் அவன் மாறலை. ஆனா, இன்னிக்கு காலைல உங்க சம்சாரம் நேத்து உங்க வீட்டுல நடந்த நிகழ்ச்சிலாம் சொன்னப்பின்.., அவனுக்கு தன்ன்னோட கருத்து தப்புன்னு உணர்ந்துட்டான்.




ஆமா அங்கிள், தங்கம் ஆண்டி எங்கம்மா கிட்ட..., வாணி சேர்ட்த்துவெச்ச காசை பட்டாசு ஆலை விபத்துல பாதிக்கப்பட்டவங்களுக்கு குடுத்து உதவுனதையும்.., அதை வாணி மனம் கோணாம ஏத்துக்கிட்டதையும் சொல்லிக்கிட்டிருந்தாங்க. மகளோட ஒரு வருட கனவையும், எதிர்பார்ப்பையும் தூக்கி எறிஞ்சுட்டு பாதிக்கப்பட்டவங்களுக்கு உதவுன உங்க குணத்துக்கும்..., தன் ஆசைலாம் நிராசையானாலும், தான் சேர்த்து வெச்ச பணம் மத்தவங்களுக்கு உதவுச்சேன்னு சந்தோசப்பட்ட வாணிக்கும் முன் நான்லாம் தூசு அங்கிள். என்னை மன்னிச்சிடுங்க அங்கிள்.., வாணி உன்னை நிறைய கஷ்டப்படுத்திட்டேன். சாரி வாணி.



ஐயோ என்ன பெரிய பெரிய வார்த்தைலாம் சொல்லிக்கிட்டு.., விடுங்க தம்பி..,ன்னு உசேனை அணைத்துகொண்ட சிவசாமியை நெருங்கிய பெரியவர்...,



சிவசாமி, எனக்கொரு ஆசை நிறைவேத்துவியா?



சொல்லுங்க ஐயா! செய்யுறேன்.



நான் பொறப்பாலயும், வளர்ப்பாலயும் முஸ்லீம். இதுவரை ஒரு இந்து பண்டிகைலயும் நான் கலந்துக்கிட்டதில்லை. நானும் என் குடும்பத்தாரும் இந்த தீபவளியை உங்க வீட்டில் கொண்டாடலாம்ன்னு வந்திருக்கோம்.., என்ன சொல்றே?!



எந்த மதமானாலும், சொந்த, பந்தம்லாம் கொண்டாடத்தான் பண்டிகைகளை உருவாக்கியிருக்கு. அதனால நீங்க வர்றதுல எனக்கொன்னுமில்லை.. ஆனா, நாங்க ஏழைங்க எங்க வீட்டுக்கு நீங்க போய்...,



நாங்க பணத்தாலதான் உயர்ந்தவங்க ..., ஆனா, நீங்கலாம் மனசால உயர்ந்தவங்க.., அதனால, இங்க கொண்டாடுறதுல எங்களுக்கு சந்தோசமே .., வாங்க கடைத்தெருவுக்கு போய், தீபாவளி பண்டிகைக்கு  என்ன வேணுமோ அதை வாங்கி வருவோம்..


சார் , ஒரு நிமிஷம்..


 சொல்லும்மா..


 இந்த வருஷம் தீபாவளியே கொண்டாட வேணாம்னு தோணுது. பட்டாசு வாங்கறதாலதானே சிவகாசில  அத்தனை குழந்தைத்தொழிலாளர்கள் பாதிக்கப்படறாங்க? மக்கள் மேலும் மேலும் பட்டாசு வாங்கிக் குவிக்கறதாலதானே பட்டாசுக்கான தேவை அதிகமாகி ஓ டி பார்க்க வெச்சு குழந்தைகளை கொடுமைப்படுத்தறாங்க? பட்டாசு வாங்கறவங்க எண்ணிக்கை படிப்படியா குறைஞ்சா பட்டாசு தயாரிப்பும் குறைஞ்சுடும். முழுக்க முழுக்க பட்டாசை ஒழிக்கறது சாத்தியம் இல்லை, ஆனா முடிஞ்ச வரை குறைக்கலாம். பட்டாசு மட்டும் தான் தீபாவளியா? புது டிரஸ் போட்டுக்கிட்டு  ஸ்வீட் சாப்பிட்டுட்டு சினிமாவுக்கு போவோம், பார்க் போய் விளையாடுவோம்.பண்டிகை என்பது சொந்தங்களுடன் கொண்டாடுவதே, சந்தோஷமாய் இருப்பதே...



அவளை இழுத்து அரவணைத்துக்கொள்கிறாள் அவள் அம்மா

ஒரு அம்மாவின் ஆசை! - தீபாவளி சிறப்புச் சிறுகதை : உமா ஜானகிராமன்

ஒரு அம்மாவின் ஆசை!

தீபாவளி சிறப்புச் சிறுகதை : உமா ஜானகிராமன்
ஓவியம் : தமிழ்

பண்டிகை நெருங்க... நெருங்க ஏதோ மனம் பதைத்தது. இந்தத் தீபாவளி சீக்கிரம் வந்துவிடக் கூடாதா...? நிறைய பிளான் பண்ணணுமே!
கடிகார முட்களைப் பிடித்துத் தள்ள வேண்டும் போல் இருந்தது எனக்கு. எங்கு நின்றாலும், பிரபாவின் ஞாபகமாகவே இருக்கிறது. எந்த ஒரு நிகழ்விலும் மகளது நினைவு, மெழுகாய் ஒட்டிக் கொண்டு மனத்தை ஒருசேர சந்தோஷப்படுத்தவும், வேதனைப்படுத்தவும் செய்கிறது.
மெதுவாகப் படியேறிப் போய் தோட்டத்து கடப்பைக் கல்லில் உட்கார்கிறேன். ரோஜாக்கள் மொட்டும், மலருமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கின்றன.
மலர்களில் மட்டுமில்லை. மொட்டுகளிலும் ஒருவித அழகு மிளிரத்தான் செய்கிறது. பிரபா என்னோடு இந்த வீட்டில் இருந்த நேரங்களில் இங்கே வந்து இப்படி மணிக்கணக்கில் உட்கார்ந்ததில்லைதான்.
நேரத்தைப் பார்த்துப் பார்த்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம்.
மகள் பிரபா கல்லூரியிலிருந்து வந்தவுடன் சூடாய் ஃபில்டர் காப்பி கேட்பாள். கணவர் ரவிக்குமாரின் கோட் - சூட்டை ட்ரைக்ளீனிற்கு எடுத்துப் போய் கொடுத்தாக வேண்டும் - இப்படி, மனத்தில் எண்ணங்கள் வேகமாக ஓடிக் கொண்டேயிருக்க, காலில் சக்கரம் கட்டியது போல் சுழன்று கொண்டேயிருப்பேன்.

அம்மா, இன்னிக்கு மத்தியானம் லஞ்சுக்கு நீ கொடுத்தனுப்பிய அடை - அவியல் பிரமாதம்மா! அடுத்த வாரமும் என் ஃப்ரெண்ட்ஸுக்கு இதே போல செஞ்சு கொடுக்கணுமாம்" என்று கெஞ்சுவாள்.
உனக்கு இல்லாததா கண்ணா?’ என்றபடி மகளை அணைத்துக் கொள்வேன். அந்த மகள் இப்பொழுது கல்யாணமாகி மும்பை பறந்து விட்டாள்.
குழாயைத் திறந்து, வாளியில் நீரைப் பிடித்துச் செடிகளுக்கு ஊற்ற ஆரம்பிக்கிறேன். வாளி நீரைப் போலவே மனமும் தளும்பிக் கொண்டுதான் இருக்கிறது.
பிரபா இங்கிருக்கையில் இந்த வீடே வேறு முகம் கொண்டிருக்கும். காட்டருவி போல் சலசலவென்று பேசிக் கொண்டு, உற்சாகமும், சிரிப்புமாய் எந்நேரமும் சாரலில் நனைந்தாற்போல் இருக்கும்.
பிரபாவின் தேர்வுக் காலங்களில் நானும் அவளோடு கண் விழித்திருந்து டீ போட்டுக் கொடுப்பேன்.
அம்மா! படிச்சதிலே பாதி மறந்துடுச்சும்மா. இனிமேல் மறக்கக் கூடாதுன்னு வேண்டிக்கோம்மா."
என் தோளை அணைத்தபடி அழுவாள். அவளது பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், விடியற்காலையில் எழுந்து ராமாயணத்தை சர்க்கரைப் பொங்கல் மணக்க பாராயணம் செய்திருக்கிறேன்.
மனத்தின் சின்ன உரசல்களைக்கூட, அப்படியே வந்து என்னிடம் கொட்டி விடுவாள்.
தீபாவளி வந்து விட்டால் போதும். பார்த்துப் பார்த்து எனக்குப் பிடித்த மாதிரி அழகாய் சில்க் காட்டன் புடைவை வாங்கி வருவாள். நிறைய பட்டாசுகளை வாங்கிக் குவிப்பாள். இருவருமாய் பியூட்டி பார்லருக்குப் போவோம்.
எம்.ஜி.ரோடுக்குச் சென்று விதவிதமாய் வளையல்களையும், கல் பதித்த மோதிரங்களையும் வாங்கி, பகத்ராமில் பேல்பூரியும், லஸ்ஸியும் சாப்பிடுவோம். எல்லாமே தித்திக்க வைக்கும், மறக்க முடியாத தருணங்கள்.
ஜாதகம் பார்த்து அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்து ஜோடியாய் புருஷனுடன் மும்பைக்கு அனுப்பியாகி விட்டது. இதோ இப்போது வருவது தலைதீபாவளி. அதற்கு இங்கே வருவாளா? இல்லை... வெளி நாட்டுக்கு எங்கேயாவது ஜோடியாக ட்ரிப் போவார்களா தெரியவில்லை.
சடசடவென்று பெரிதாய் மழை தூற ஆரம்பித்தது. மண்ணின் மணம் காற்றில் கலந்து வந்து மனதை நிறைக்க, கொடியில் காய்ந்து கிடந்த துணிகளை எடுக்க ஆரம்பிக்கிறேன். இன்று ஆறு மணிக்கு மேல் டாக்டரிடம் போயாக வேண்டும்.
போன வாரம் முழுவதும் வேலை செய்ய முடியாமல் ஏனோ ஒருவித சோர்வு உடம்பை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. இதுவரையிலும் நான் அனுபவித்திராத சோர்வு.
சாயங்காலம் குடும்ப டாக்டரிடம் போனபோது, ‘ஷுகர்லெவல் கொஞ்சம் அதிகம்தான்" என்று சொல்லியபடியே மாத்திரைகளை எழுத ஆரம்பித்தார்.
மனத்தில் கொஞ்சமாய் ஏறிய சுமையுடன் வீடு நோக்கி நடந்தபோது, பிரபாசெல்லில் அழைத்தாள்.
எங்கே போய்க்கிட்டிருக்கே? ஒரே சத்தமாய் இருக்கு?" என்றாள்.
அவளிடம் ஏதோ சொல்லிச் சமாளித்தேன். தேவையில்லாததைச் சொல்லி, அவள் மனத்திலும் பாரத்தை ஏற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். மாத்திரைகளை வாங்கிக் கொண்டு நடக்கையில் அம்மாவின் ஞாபகம் வந்தது.

இரண்டு பெண்களைப் பெற்ற அம்மா, இப்பொழுது மைசூரில் முதியோர் இல்லத்தில் வசித்துக் கொண்டிருக்கிறாள்.
அப்பா, இரண்டு வருடங்கள் முன்னால் எதிர்பாராதவிதமாக இறந்து போக, பிள்ளை இல்லாத அம்மாவை எல்லோருமாய்ச் சேர்ந்து முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டோம்.
எனக்கும் அந்த நேரத்தில் வீடு கட்டுவது, பிரபாவிற்கு ஜாதகம் பார்ப்பது என்று மிகவும் நெருக்கடியான வேலைகள் இருந்ததால், அம்மாவை வைத்துக் கொள்வதில் கொஞ்சம் யோசனைதான். அக்காவும், பட்டுக் கொள்ளாமல் கொஞ்சமாய் ஒதுங்கிப் போனாள்.
அம்மா, அதிகம் பேசாத, யார் மனத்தையும் புண்படுத்தத் தெரியாத பாவப்பட்ட ஜீவன். அப்பாவின் பதினைந்தாவது நாள் காரியம் முடிந்தவுடன், நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், கையில் பெரிய சூட்கேஸுடன் முகத்தில் எந்த பாவனையும் இல்லாமல் காப்பகத்திற்குப் புறப்பட்டு விட்டாள்.
அவ்வப்பொழுது தொலைபேசியில் நான்எப்படிம்மா இருக்கே?’ என்று விசாரிக்கையில், ‘சந்தோஷமா இருக்கேன்என்று நிறைவாக பதில் சொல்வாள்.
பிள்ளையைப் பெற்றவளைப் பார்த்துக் கொள்வதை, தம்முடைய கடமையாக நினைக்கும் மகன்கள், பெண்ணைப் பெற்றவளை மட்டும் தந்திரமாக ஒதுக்கி வைத்து விடுகிறார்களேஎன்று நினைத்தபோது, மனம் கனத்துப் போய் வலித்தது.
வீட்டுக்கு வந்து கதவு திறந்து உள்ளே செல்கையில், அம்மாவின் நினைவு உள்ளம் முழுவதும் வியாபித்திருந்தது.
மாத்திரைகளை டேபிளின் மேல் வைத்துவிட்டு அப்படியே சரிந்து உட்கார்ந்தேன். பிரபா தொலைபேசியில் அழைத்தாள்.
என்ன பிரபா?"

உன்கிட்டே சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். ஆனா முடியலைம்மா. அதான் மறுபடியும் ஃபோன் பண்ணிட்டேன். இரண்டு நாளா எனக்கு ஜுரமாய் இருந்துச்சு. வைரஸ் ஃபீவர்னு சொல்லி மருந்து கொடுத்திருக்காங்க" என்றாள்.
குழந்தை பாவம், தனியாக என்ன செய்வாள்? புது இடம், புது மனிதர்கள், எந்த உதவியை எதிர்பார்க்க முடியும்? மனம் துவண்டு போனது.
இப்போதே ஃபிளைட் பிடித்து மும்பைக்குப் போய்விட வேண்டும் போலிருந்தது. ரவிக்குமார் வந்தவுடன் அவரிடம் இதுபற்றிப் பேசியாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
அலமாரியில் இருந்த பிரபாவின் கல்யாண ஆல்பத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். அம்மா ஆங்காங்கே புகைப்படங்களில் நைந்த மாதிரி நின்று கொண்டிருந்தாள். இந்த அம்மாவும், என்னைப் போலவே ஒருகாலத்தில் தன் மகளுக்காக அணுஅணுவாக உருகிப் போயிருந்திருப்பாள்.
இந்த அம்மா பாவம், படித்தவள் கூட இல்லை. ஆனாலும், எல்லா கால கட்டத்திலும் எனக்குத் துணையாக, கைகோத்து வந்திருக்கிறாள். ஆனால் நான்? அவள் வயோதிகப் படிகளில் நிலைதடுமாறி நடக்கும்போது, ஆதரவாகக் கரம் கொடுக்கத் தவறிவிட்டேனே!
ஐயோ! மனசுக்குள் ஒரு சிறு குறுகுறுப்பு விழுந்து, விரிந்து, பெரிதாகி, பூமிக்கோளம் போல உருண்டு, நெஞ்சை அடைத்தது.
அம்மாவுக்கு நான் பரிவு காட்டியே ஆக வேண்டும்.
ஒரு மகளாக... இல்லை, இல்லை ஒரு தாயாக...
விடியற்காலை முதல் பஸ்ஸில் மைசூருக்குச் சென்று அம்மாவை இங்கு அழைத்து வந்துவிட வேண்டும். இந்தத் தீபாவளிக்கு மற்றது எதுவுமே இரண்டாம்பட்சம்தான்! அம்மாதான் வேண்டும் என நினைத்தபடி நிம்மதியுடன் உறங்கத் தொடங்கினேன்.


 நன்றி - கல்கி

Sunday, November 11, 2012

சுகி சிவம் -தீபாவளி சிறப்புக் கட்டுரை @ கல்கி

தீபாவளி சிறப்புக் கட்டுரை

மனசெல்லாம் மத்தாப்பூ!


நம் எல்லோருக்குமே மகிழ்ச்சியாக இருக்கத்தான் ஆசை. ஆனால், மகிழ்ச்சியாக இருப்பவர்கள் எத்தனை பேர்? பலர் மகிழ்ச்சியாக இருப்பதாகக் காட்டிக் கொள்கிறார்களே தவிர, நிஜமாகவே அப்படி இருப்பதாகத் தோன்றவில்லை.

மகிழ்ச்சிக்கு நாம் சில நிபந்தனைகள் விதிக்கிறோம். இது நடந்தால், இப்படி இப்படி சூழ்நிலைகள் அமைந்தால் மட்டுமே நான் மகிழ்ச்சியாக இருக்கமுடியும் என்கிறோம். அதனால்தான் நாம் மகிழ்ச்சியாக இருக்க முடிவதில்லை. எது நடந்தாலும் அதை மகிழ்ச்சியாக்கிக் கொள்கிறவர்களே வெற்றியாளர்கள்.


தொலைக்காட்சியில் சுவாரஸ்யமான தொடரைப் பார்க்க இடையிடையே விளம்பரங்களையும் சகித்துத்தான் ஆகவேண்டும். வாழ்க்கையும் அப்படித்தான். சந்தோஷம் மட்டுமே தனியாகக் கிடைக்காது. இடையிடையே சங்கடங்களும் கலந்துதான் வரும். அந்தச் சங்கடங்களின் போது மனதை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்வதுதான் வாழ்வின் விசேஷமே!


வானொலியில் பாட்டு கேட்பதற்கும் ஆடியோ ப்ளேயரில் பதிவுசெய்யப்பட்ட பாட்டுக் கேட்பதற்கும் வேறுபாடு உள்ளது. மியூஸிக் பிளேயரில் பிடித்ததாக மட்டுமே தேர்வு செய்து கொள்ள முடியும். வாழ்க்கை வானொலி மாதிரி. வருவதில் பிடித்ததும் உண்டு. பிடிக்காததும் உண்டு. பிடிக்காதது வரும்போது வருத்தப்படுவதில்லை என்று உறுதி எடுத்துக் கொண்டு வேதனையின்றி வாழ்வது மிகப்பெரிய கலை.


மனிதர்கள், சங்கடங்களே வரக்கூடாது என்று எதிர்பார்க்கிறார்கள். பிரச்னை இல்லாத வாழ்க்கை எந்த மனிதனுக்காவது கிடைக்குமா என்ன? தலை உள்ள காலம் வரை தலைவலி இருக்கத்தானே செய்யும்


 மனிதர்கள் இருக்கும் வரை பிரச்னைகளும் இருக்கத்தான் செய்யும். ஒவ்வொரு பிரச்னைக்கும் தீர்வும் இருக்கிறது என்ற புரிதலே மனமகிழ்ச்சி தருகிற விஷயம். அதே பழமொழி புத்தகத்தில் சுறுசுறுப்பாக உள்ளவனுக்கு ஒவ்வொரு மரத்தின் பின்னாலும் ஒரு ரொட்டி இருக்கிறது... ஒவ்வொரு கல்லின் கீழும் ஒரு கதை இருக்கிறது" என்று படித்தேன். ஆம், ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒரு தீர்வு இருக்கிறது என்ற புரிதல் அவசியம்.



‘நம்மால் தீர்க்க முடியாத பிரச்னைகள் வராதா?’ என்று கேள்வி எழுந்தால் அதற்கும் ஒரு பிரிட்டிஷ் பழமொழி வைத்திருக்கிறேன். வீட்டை விடப் பெரிய கதவுகள் இருக்க முடியாது" என்பதே அது. நம் சக்திக்கேற்ப நம் பிரச்னைகளும் உள்ளன. நமக்கு மீறியது என்றால் நிச்சயம் அவை நமக்குரிய பிரச்னையே அல்ல என்று விலகி நிற்கும் துணிவு அவசியம். இந்த விவேகம் மிக மிக முக்கியம்.


ஒரு பட்டிமன்றத்துக்கு நான் நடுவராக இருந்தேன். அப்போது அங்கே பேசிய ஒரு பெண் பேச்சாளர், இன்னொரு பெண் பேச்சாளரின் கணவர் அட்டைக் கரி, அமாவாசைக் கரி என்று கிண்டலடித்தார். அடுத்துப் பேசிய கவிதா ஜவஹர் என்கிற அந்தப் பெண் பேச்சாளர் சிறிதும் கவலையடையாது, அவுங்க கறுப்புதான் ஆன மனசு தங்கம்ல. கறுப்புன்னா என்ன நஷ்டமா? இப்ப அடிக்கடி கரண்ட் போகுதில்ல. அன்னிக்குச் சாயங்காலம் ஏழு மணிக்கு கரண்ட் போச்சு. நான் என்ன செஞ்சேன்? அத்தான்... லேசா ஒரு சிரிப்பு சிரிங்கன்னேன். அந்த வெளிச்சத்துல தீப்பெட்டி எடுத்தேன். தீக்குச்சி வெளிச்சத்துல மெழுகுவத்தி எடுத்தேன். பிரச்னை தீந்திடுச்சுல்ல" என்று ஒரு போடு போட்டார்.


கொஞ்சம் மிகையான கற்பனை என்றாலும் அவரது தன்னம்பிக்கையான குரலும் நேர் வளமான மனமும் என்னை அசர வைத்தன.


ஒரு வேடிக்கையான கதை. ஓர் அலுவலகத்தில் மதிய உணவு வேளையின் போது மூன்று பேர் ஒன்றாகச் சாப்பிடுவது வழக்கம். தினமும் ஒரே வகையான உணவே அவர்களது டிபன் பாக்ஸில் இருக்கும். ஒருவருக்கு இட்லி மற்றவருக்குப் புட்டு, இன்னொருவருக்குச் சப்பாத்தி. இதே சிற்றுண்டிதான் தினமும். ஒருநாள் இட்லிக்காரர் எரிச்சலுடன், இன்னிக்கு மனைவிகிட்ட சொல்லப் போறேன். நாளைக்கும் இட்லியே கொடுத்தனுப்பினா இந்த 8வது மாடியிலிருந்து விழுந்து செத்துடுவேன்" என்று கத்தினார்



 புட்டுக்காரரும் ரோஷமுடன் அதையே வழிமொழிய சப்பாத்திக்காரரும் அதை வழிமொழிந்தார். ஆனால், மறுநாள் டிபன் பாக்ஸ் திறந்ததும் மூவருக்கும் வருத்தம். அதே இட்டிலி... அதே புட்டு... அதே சப்பாத்தி. ரோஷக்கார இட்லிக்காரர் சொன்னால் சொன்னபடி மாடியிலிருந்து விழுந்து விட்டார். புட்டுக்கும் வேறுவழியில்லை. அவரும் பாய்ந்தார். சப்பாத்தியும் அதையே பின்பற்றி விட்டார்.



கீழே விழுந்த மூவரையும் அள்ளிப் போட்டுக் கொண்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்கள். அவர்களது மனைவிமாருக்கும் தகவல் தரப்பட்டது. பதறி அடித்துக் கொண்டு ஓடி வந்த மனைவிமார் மூவரும் தங்கள் தலையிலடித்துக் கொண்டார்கள். இட்லிக் காரர் மனைவி சொன்னார். இவர் இப்படிச் சொல்லுவாரே ஒழிய, செய்ய மாட்டார்ன்னு இட்டிலியே வைச்சேன்" என்றார். இது நிறைய விளையாட்டுக்குச் சொல்லும். அப்படி நெனச்சுடுதான் புட்டு வைச்சேன்" என்றார் அடுத்தவர். சப்பாத்திக்காரர் மனைவியோ, எனக்கு ஒண்ணு புரியவே இல்லை. சப்பாத்தி போட்டதும் அவர்தான், எடுத்து வச்சிக்கிட்டதும் அவர்தான்; அவரும் ஏன் விழுந்தார்னு புரியவே இல்லை" என்றார்.



மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். இதைச் செய்யாவிட்டால் மற்றவர்கள் தவறாக நினைப்பார்களோ என்கிற கவலையிலேயே வாழ்வைத் தொலைத்து விடுகிறார்கள். பிறரது நினைப்பு... பிறரது விமர்சனம்... இவற்றாலேயே அளவுக்கு அதிகமாகத் துன்பப்படுகிறார்கள். இந்த வட்டத்திலிருந்து வெளியே வந்து விட வேண்டும். பிறர் என்ன நினைப்பார்களோ என்கிற கவலை நம்மை மகிழ்ச்சியாக வாழவே விடாது.


நாம் துக்கப்படுவதற்கும் மகிழ்ச்சியாக இருப்பதற்கும் எப்போதுமே பிறர் காரணம் என்று ஏமாந்து போகிறோம். நம் மனமே தான் உண்மைக் காரணம். நம் மனத்தை நாம் விரும்பியபடி மாற்றியமைக்க நம்மால் முடியும். நம்புவது சிரமம் என்றாலும் அது தான் உண்மை.


நமக்கு உடல்நலம் சரியில்லை என்று மனம் நம்பி விட்டால் காரணமே இன்றி நாம் நோய்வாய்ப் படுகிறோம். அதேபோல நிஜமாகவே உடல்நலக் குறைவு ஏற்படும் போதும், இல்லை எனக்கு ஒரு குறையும் இல்லை... என்னை இது எதுவும் செய்யாது" என்று திடமனத்துடன் நம்பி நோயில்லாத போது எப்படி இருப்போமோ அப்படியே இருக்கத் தொடங்கினால் நோயே ஓடி விடுகிறது என்கிறது உளவியல். மறக்கின்ற ஞானம் என்று இதனைக் குறிப் பிட்டு நோயைமனதிலிருந்து முழுமை யாகத் துடைத்து எடுத்து விட்டால் உடம் பால் அதைத் தாங்கிப்பிடிக்க ஆகாதுஎன்று எழுதுகிறார் நாகூர்ரூமி.


சுருக்கமாகச் சொன்னால், எப்போதும் நமது மனம் நம்மை உபயோகப்படுத்திக் கொள்கிறது. ஆனால் மனத்தை நாம் உப யோகப்படுத்திக் கொள்ள பழகிக் கொண் டால் வாழ்க் கையை ஜெயித்து விடலாம். கலை வாணர் என்.எஸ். கிருஷ்ணன் காரை ஏலம் போட வந்து விட் டார்கள். துணைவியார் மதுரம் பதறியபடி மாடிக்கு ஓடி வந்தார்.


 தமது வழக்கமான ஹெஹ்ஹே சிரிப்பைக் கலைவாணர் உதித் ததும் மதுரம், இப்ப என்ன சிரிப்பு வேண் டிக் கிடக்கு?" என்று சீறினார். நம்ம காரை வித்துடலாமான்னு நான் கேட்டப்ப இதை எந்த மடையன் வாங்குவான்னு கேட்டியே... இப்ப போயி எத்தனை பேரு மடையன்னு எண்ணிக்கோ" என்றபடி வருத்தமின்றி இருந்தாராம் என்.எஸ்.கே.



சந்தோஷமானவை நடந்தால்தான் நான் மகிழ்ச்சியாக இருப்பேன் என்று சாதிக்காதீர் கள். அது குழந்தை மனம். சங்கடமானவை நடந்தாலும் சந்தோஷமாகவே இருங்கள். அதுதான் மனமுதிர்ச்சி. சில வருடங்களுக்கு முன்பாக கொல்கத்தா வானொலி நிலையத்துக்கு குரல் தேர்வுக்கு நெடுநெடுவென்று ஓர் இளைஞர் வந்தார். குரல் சரியில்லை என்று தோல்வியுடன் வெளியேறினார். இன்று அவர் விளம்பரப் படங்களில் நடிக்கவே கோடி கோடியாகத் தருகிறார்கள். அவர்தான் அமிதாப்பச்சன்.


பிரதமரின் விஞ்ஞான ஆலோசகர் பதவி முடிந்த பின் பல்கலைக்கழகப் பேராசிரியர் பதவிக்கு விண்ணப்பித்தார் அப்துல்கலாம். எதனாலோ பணி தரப்படவில்லை. அதனால்தான் அவர் ஜனாதிபதியானார்.


சங்கடங்கள் வந்தாலும் சந்தோஷமாகவே இருங்கள். தீபாவளி மத்தாப்பூவைப் பார்த்தீர்களா? அதன் தலையில் நெருப்பையே வைத்தாலும் வண்ண வண்ணமாய் பொங்கிப் பொங்கி எப்படி எல்லாம் சிரிக்கிறது பார்த்தீங்களா?


அப்படி இருக்க முயற்சிப்போமா?

நன்றி - கல்கி