நாவலில் இருந்து உருவாகும் சினிமா என்பதற்கும், ஒரு இயக்குநர் தானாகவே உருவாக்கும் கதைப் படத்திற்கும் கொஞ்சம் வித்தியாசங்கள் இருக்கிறது. சினிமா, நாவல் எல்லாமே படைப்புகள்தான். நாவல் என்பது எழுத்து வடிவிலான ஒரு படைப்பு. சினிமா என்பது காட்சிகளாலான படைப்பு.
நாவலை வாசிக்கும்போது ஒரு வாசகன் உணர்ந்து கொள்ளும் பிம்பங்கள் முற்றிலும் அவனது கற்பனை உலகத்துக்கு சொந்தமானது. ஒவ்வொரு வாசகரும் ஒரு நாவலில் சொல்லப்பட்டுள்ள காட்சிகளை அவரவர் கற்பனைத் திறனுக்கேற்ப வடிவமைத்துக் கொள்கிறார்கள். நாவலை வாசிக்கும்போது நாம் ஏற்படுத்திக் கொள்ளும் காட்சிப் படிமங்கள், அதை வேறொருவர் படமாக்கும்போது, நாம் உருவாக்கி வைத்திருந்த காட்சிப் படிமங்களில் இருந்து மாறுபடும்போது நாம் “நாவலின் திருப்தி படத்தில் இல்லை” என்கிறோம்.
நாவலை வாசிக்கும்போது, ஒன்றை காட்சிப்படுத்திக் கொள்ள நமக்கு எந்தவித தடைகளும் இல்லை. தவிர, ஒரு நாவலை நாம் குறிப்பிட்ட நேரத்திற்குள் வாசித்து முடிக்க வேண்டும் என்கிற கட்டுப்பாடுகள் ஏதுமில்லை. நாம் நமது வசதிக்கேற்ப ஒரு நாவலை வாசிக்க முடியும். ஆனால் ஒரு திரைப்படம் நிச்சயம் குறிப்பிட்ட நேரத்திற்குள் ஒரு கதையை பார்வையாளனுக்கு அதன் மொழியில் சொல்லியாக வேண்டிய அவசியத்தில் உள்ளது. நாவலில் நாம் கட்டற்ற சுதந்திர வெளியில், நாம் நினைத்தவற்றை கட்டமைத்துக் கொள்ளும் சுதந்திரம் பெற்றுள்ளோம். மேலும் நாம் அத்தகைய தடைகளை ஒருபோதும் பொருட்படுத்துவதில்லை. மாறாக நாம் நமது கற்பனைத் திறனை இன்னமும் அதிகப்படுத்திக் கொண்டே நாவலை வாசிக்க தொடங்குகிறோம்.
உதாரணமாக பொன்னியின் செல்வன் நாவல் நமக்குள் தோற்றுவிக்கும் காட்சிப் படிமங்களை ஒருபோதும் படமாக பார்க்கும்போது நம்மால் பெற முடியாது. நாவலை வாசித்தவர்கள் கட்டற்ற வெளியில் தங்கள் சிந்தனைகளை, கற்பனை வெளிகளை உருவாக்கிக் கொள்கிறார்கள். ஆனால் அந்த நாவலை வாசிக்காதவர்களுக்கு அதுவே படமாக வரும்போது மிகப் பெரிய பிரம்மிப்பை உண்டுபண்ணலாம்.
நாவலை படமாக்க முயற்சிக்கும் இயக்குநர், அந்த நாவலைப் படிக்கும்போது தன்னுள் எழுந்த காட்சிப் படிமங்களை பொருத்திப் பார்த்தே அதை சினிமாவாக கொண்டு வருகிறார். ஆனால் ஒரு படைப்பாளி தன்னுடைய உச்சபட்ச சிந்தனையை, கற்பனைத் திறனை அதில் விதித்தாலும், அதைப் பார்க்கும் பார்வையாளன், நாவலில் இருந்து ஏதோ ஒன்று குறைகிறதே என்று வினவுகிறான். காரணம், நாவலைப் படிக்கும்போது வாசகன் உருவாக்கி வைத்திருக்கும் கற்பனை காட்சிகள் மிக பிரம்மாண்டமானவை. அதை அவரவர் வாசிப்புத் திறனுக்கேற்ப, கற்பனைத் திறனுக்கேற்ப வசதிப்படுத்திக் கொள்ளலாம். ஆனால் படமாக்க முயலும்போது அதில் அந்த இயக்குநருக்கு, தன்னுடைய கற்பனை வெளியை விஸ்தரிக்க பல தடைகள் காத்திருக்கலாம். அதையெல்லாம் தாண்டி அவர் அந்த நாவலை வாசகனின் காட்சிப் படிமங்களோடு குறைந்தபட்சம் ஒத்துப் போய் படமாக எடுத்திருந்தாலே அது பெரிதும் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
ஒரு நாவலை எல்லா வாசகர்களும் ஒரே மாதிரியாகத்தான் புரிந்துக் கொண்டிருப்பார்களா என்பதும், எல்லா வாசகர்களும் ஒரே மாதிரிதான் ஒரு காட்சியை தங்கள் மனதில் படம்பிடித்து பார்த்திருப்பார்களா என்பதும் சந்தேகம்தான். அதற்கான வாய்ப்பும் இல்லை. கற்பனை வெளி வேறு.. நிஜத்தில் கதாபாத்திரங்களாக உலவ விடுவது வேறு. எந்த இடத்திலும், நாவலையும், அதன் காட்சிப்படிமங்களாக வெளிவரும் படங்களையும் நாம் ஒப்பிட்டு பேசுவது கூடாது.
ஒரு நாவலின் ஆத்மா சிதையாமல், அதில் சொல்லப்பட்டிருக்கும் அரசியலை தனக்கேற்றவாறு, தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டுக்கு மாற்றிக் கொள்ளாமல், கருத்தியலை சிதைக்காமல் படமாக்க, ஒரு இயக்குநர் முயன்றால் அது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. மாறாக, நாவலில் அவளும், அவனும் வாழ்ந்தார்கள், ஆனால் திரைப்படத்தில் அவர்களின் வாழ்வே சரியாக படமாக்கப்படவில்லை என்கிற கூற்றெல்லாம் எத்தனை தூரம் சரியாக இருக்க முடியும் என்று தெரியவில்லை. அதெல்லாம் 'நான் ஒரு படிப்பாளி, தொடர் வாசிப்பாளன், எழுத்தாளன்' என்கிற கட்டுக்குள் தன்னை வைத்திருப்பவர்கள், சினிமாவைப் பார்க்கும்போது எழுப்புகிற விவாதமாகவே இருக்கும்.
மேலும் நாவல் என்பது உடனடியாக பல நூற்றாண்டுகளை ஒற்றை வரியில் தாண்டிவிடும் வல்லமை கொண்டது. ஆனால் அதை காட்சிப்படுத்தும்போது அதே மாதிரி ஒற்றை காட்சியில் தாண்டுவதற்கு ஒரு இயக்குநர் உழைக்க வேண்டியதன் அளவு மிகப் பெரியது. அது மிகப் பெரிய கூட்டு முயற்சியால் மட்டுமே சாத்தியம் ஆகும். மேலும், நாவலை வாசிக்கும்போது அதில் நமக்கு பல காட்சிகள், பல கதாபாத்திரங்களை மிக ஆழமாக விளக்கும் காட்சிகளை அதன் ஆசிரியர் எழுதிவிடலாம். ஆனால் அதை இரண்டு மணி நேரம் படமாக்க முயற்சிக்கும் ஒரு இயக்குநருக்கும் அத்தகைய பெரிய சுதந்திரம் திரைப்படத்தில் இல்லை. அதனால்தான் நாவலின் ஆத்மாவை ஒழுங்காக சிதைக்காமல், திரையில் காட்சிகளாக கொண்டு வந்தாலே போதும் என்று சொன்னேன்.
மகேந்திரன் படமாக்கிய நாவல்களையும், அவரது திரைப்படங்களையும் ஒப்பிட்டே இதனை என்னால் நிறுவ முடியும். ஆனால் மகேந்திரன் எந்த நாவலை எல்லாம் படமாக்கியுள்ளார் என்பது கூட தெரியாமல், அந்த நாவல்களைப் படிக்காமல், மகேந்திரன் மாதிரி இப்போது யாரும் நாவல்களை படமாக்குவதில் தேர்ச்சி பெறவில்லை என்று போகிற போக்கில் சொல்லி செல்பவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை.
ஒரு நாவலை குறைந்தபட்ச நேர்மையோடு படமாக்கும் திறன் பெற்ற இயக்குநர்கள் வரும்போது, நாம் நாவல் அளவிற்கு படமில்லை என்று தொடர்ந்து சொல்லிக் கொண்டிருந்தால் நாவலைப் படமாக்க யாரும் முன்வரமாட்டார்கள்.
கி.ராஜநாராயணன் சொல்வது போல் சிறுகதை, நாவல் என்பதெல்லாம் அதனதன் தளத்தில், அதனதன் புனிதத்தை, வீரியத்தை, அழகியலை, அது எழுத்து வடிவத்திலேயே பதிவு செய்துவிட்ட பின்னர், அதை மாற்றி தங்கள் வசதிக்கேற்ப ஒரு இயக்குநர் படமாக்க முயற்சிக்கும்போது, அந்த படைப்பு, எழுத்தின் வடிவத்தில் அது பதிவு செய்த காட்சிகளை, அழகியலை, ஒருபோதும் மறுதளிக்கப்போவதில்லை. எழுத்து வடிவிலான அந்த படைப்பு மறு விசாரணைக்கு உட்படுத்தப் போவதுமில்லை.
எழுத்தும், காட்சியும் இரண்டு வெவ்வேறு வடிவிலான படைப்புகள். ஒரே மாதிரி (காட்சி ரீதியாக) இரண்டும் இருந்துவிட்டால், பிறகு எதற்கு அது இன்னொரு வகையிலான படைப்பிற்கு கொண்டு வரப்பட வேண்டும்.? வாசகனை, அவனது வாசிப்புத் திறனைத் தாண்டியும், வாசிக்கும்போது அவனது கற்பனை வெளியில் தெரிந்த காட்சிகளைத் தாண்டியும், வேறுமாதிரி காட்சிப் படிமங்களோடு, திரை அழகியலோடு சொல்லி புரிய வைத்தாலே, அது அந்த நாவலுக்கு இயக்குநர் செய்யும் மரியாதையாக இருக்கும்.
உமாச்சந்திரனின் நாவல் ஒன்றும் அத்தகைய சிறப்பு வாய்ந்த ஒன்றல்ல, மிக சுமாரான நாவல்தான் அது. ஆனால் அதுவே 'முள்ளும் மலரும்' என்று மிகப் பெரிய காட்சிப் படைப்பாக வெளிவந்துள்ளது. நாவல் கொடுத்த அதே அனுபவத்தை படமும் கொடுத்திருந்தால் இன்று வரை அதை யாரும் கொண்டாடப் போவதில்லை.
எழுத்தாளர்களிடம் இருக்கும் இன்னொரு பிரச்சினை, திரைப்படத்திற்காக சில காட்சிகளையோ, சம்பவங்களையோ மாற்றும்போது கதையில் அப்படி இல்லையே என்ற அவர்களின் வாதம். ஒரு சிறுகதை, நாவல், சம்பவம் நமக்கு பிடித்திருந்தால் அதை அப்படியே கருவாக வைத்துக் கொண்டு நாமே அதற்கு திரைக்கதை அமைப்பதுதான் சிறந்த வழி. தவிர, சிறுகதை, நாவலில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை, சம்பவங்களை அப்படியே திரையில் கொண்டு வர வேண்டிய அவசியமில்லை. கொண்டு வருவதற்கான வாய்ப்புமில்லை.
ஆயிரம் பக்க நாவலை இரண்டரை மணி நேர படமாக சுருக்கும்போது நாம் நிறைய விஷயங்களை விட்டுவிட வேண்டும். எதை விட வேண்டும் என்பது இயக்குநரின் அல்லது திரைக்கதையாசிரியரின் விருப்பமாகவே இருக்க வேண்டும். ஒரு வடிவத்திலிருந்து இன்னொரு வடிவத்திற்கு மாறும்போது, மாற்ற விரும்புபவரின் விருப்பத்திற்கு நாம் அதை விட்டு விட வேண்டும்.
இது சிறுகதை ஆசிரியர் அல்லது நாவல் ஆசிரியருக்கு நாம் செய்யும் அவமரியாதை இல்லையா என்றால், இல்லை என்றே சொல்வேன். அவர் எழுதியது சிறுகதையைதான். நாம் அதில் ஒரு மாற்றத்தையும் செய்துவிடப்போவதில்லை. அப்படி செய்யவும் முடியாது. மேலும் அச்சு வடிவில் அது நிலைபெற்றுவிட்ட ஒன்று.
ஆனால் சிறுகதையில் இருந்து காட்சி எனும் வடிவத்திற்கும் மாறும்போது முழுக்க முழுக்க அது இயக்குநரின் படைப்பு. எப்படி இயக்குனர் சிறுகதை என்கிற வடிவத்தை மாற்ற முடியாதோ, அதே போல், சிறுகதை ஆசிரியரும், காட்சிப் படைப்பை மாற்ற கூடாது. மாற்ற முடியாது. மிக நுட்பமான இந்த வேறுபாடு புரியாமல்தான், இங்கே இலக்கியங்கள் சினிமாவாவதில் நிறைய சிக்கல்களை இரண்டு தரப்பினரும் ஏற்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
முன்னமே சொன்னதுபோல், எழுத்தை வாசிக்கும் வாசகன், நிறைய லாஜிக்கான அல்லது கற்பனைக்குட்பட்ட சில விஷயங்கள் பற்றி கவலைப்படுவதில்லை. அதே நடிப்பு, ஒளிப்பதிவு, சம்பவக் கோர்ப்பு என்று வரும்போது, மிக சுருக்கமாக காட்சி படைப்பாக வெளிவரும்போது, நாம் வாசகனை இங்கே பார்வையாளனாக மாற்ற வேண்டிய மிக நுட்பமான வேலையை செய்ய வேண்டும். வாசகன் பார்வையாளனாக மாறும்போது கேள்விகள் கேட்க பழகிக் கொள்கிறான். அதற்கான வசதிகளும், காட்சி ஊடகத்தில் இருக்கும்போது, நாம் அதை பயன்படுத்திதான் ஆக வேண்டும். மேலும், வாசிக்கும்போது இருக்கும் கற்பனை வெளி அவரவர் கற்பனைத் திறனுக்கேற்றது. ஆனால் காட்சியாக மாறும்போது, எல்லோரையும் ஒரே விளிம்பில் நிறுத்த வேண்டிய கடமை இயக்குநருக்கு உள்ளது.
மூன்று முறை ஆஸ்கர் விருதை வென்றிருக்கும் வால்ட்டர் முர்ச் (Walter Murch) நாவலில் இருந்து எடுக்கப்படும் சினிமா அதே அனுபவத்தை தரவேண்டுமா என்பது குறித்து அளித்த பதில் இங்கே முக்கியமானது.
ஒரு புத்தகம், வாசிப்பவனுக்கு அளிக்கும் சுதந்திரத்தை, பங்கேற்பை ஒரு திரைப்படம் பார்வையாளனுக்கு அளிக்கமுடியுமா?
புத்தகம் வாசிப்பவனை ஒரு விதமான மோன நிலைக்கு ஆட்படுத்துகிறது. ஏனெனில் அது காலத்தால் கட்டுப்படுத்தபடுவதில்லை.
சினிமா மிக பெரிய ஊடகம், என்ற போதிலும் பார்வையாளருடன் தனித்தனியே உரையாடலை நிகழ்த்துகிறது. இதன் கவனிக்கத்தக்க அம்சம் என்னவெனில் பார்வையாளர்கள் சொந்த வாழ்வின் நிகழ்வுகளை திரையின் பிம்பங்களோடு அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். இது எவ்வாறு நிகழ்கிறது? சினிமா அதனளவில் பிரித்தறிய முடியாத பன்முகத் தன்மை உடையது. மேலும், பார்வையாளர்களின் சொந்த அனுபவங்களை வெளிக்கொணர்கிறது. எல்லாரும் நினைத்துக் கொள்கிறார்கள், இந்தப் படம் எனக்காக எடுக்கப்பட்டிருக்கிறது என்று.
ஒரு நல்ல திரைப்படம், பார்வையாளனின் ஐம்புலன்களில் இரண்டை மட்டுமே அனுமதிக்கிறது. பார்ப்பதும், கேட்பதும். மேலும் அது காலத்தால் குறுக்கப்பட்ட ஒன்று. புத்தகத்தைப் போல் அல்லாமல். புத்தகத்தின் ஒருபத்தி புரியவில்லையெனில் அதை திரும்ப வாசிக்க முடியும். நீங்கள் உள்வாங்கி ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகரும் திரைப்படத்தில் அது சாத்தியமில்லை.
ஒரு திரைப்படம் என்பது பிம்பம், வார்த்தைகள் மற்றும் ஒலிகள் இவற்றுக்கிடையேயான நடனம். ஒரு திரைப்படம் பார்வையாளனின் பங்கேற்பைத் தூண்டுகிறது. ஒரு திரைப்படம் குறிப்பிடத் தகுந்த தகவல்களை அளிக்கிறது. அதே வேளையில், பார்வையாளன் படைப்பு சார்ந்து பங்கேற்கும்போது மட்டுமே முழுமையடைகிறது. ஒவ்வொருவரும் தத்தமது அனுபவங்கள் சார்ந்து பிம்பங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு திரைப்படம் மேஜிக்காக மாறுகிறது.
திரைப்படத்தின் ஒவ்வொரு கணமும் முழுமையடைவது தனித்தனியேயான பார்வையாளர்களைப் பொருத்தது. எனவே சினிமா, புரவயத்தில் (கட்டமைப்பில்) பிம்பங்கள் மற்றும் ஒலிகளால் ஆனது என்றபோதிலும், அதன் பார்வையாளர்களை வெவ்வேறு விதத்தில் வித்தியாசமான எதிர்வினைப் புரியத் தூண்டுகிறது.
thanx
the hindu
அருண்.மோ, கட்டுரையாளர் - தொடர்புக்கு
[email protected]