Showing posts with label திரைப்பட நகரம்- சினிமா விமர்சனம். Show all posts
Showing posts with label திரைப்பட நகரம்- சினிமா விமர்சனம். Show all posts

Friday, October 30, 2015

திரைப்பட நகரம்- சினிமா விமர்சனம்

நடிகர் : முத்து
நடிகை :ப்ரியா
இயக்குனர் :ஞானமொழி
இசை :நிதின் கார்த்திக்
ஓளிப்பதிவு :நித்யா
முத்து, செந்தில், ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகிய ஆறு பேரும் நண்பர்கள். இவர்கள் சென்னையில் தேவதர்ஷினி வீட்டில் வாடகைக்கு தங்கிக்கொண்டு சினிமா வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். இவர்கள் இயக்குனர், ஒளிப்பதிவாளர், கதாநாயகன், காமெடியன், பாடலாசிரியர், இசையமைப்பாளர் என ஒவ்வொருவரும் ஒவ்வொரு கலைத்திறன் பெற்றவர்கள். 

வாய்ப்புக்காக ஒவ்வொரு கம்பெனியாக ஏறி இறங்கியபோதும் வாய்ப்புகள் கிடைக்காமல் போகிறது. செல்லும் இடங்களில் எல்லாம் இவர்களிடமே பணம் கேட்கிறார்கள். இதனால் மிகவும் நொந்துபோன அவர்களுக்கு, புரோடக்‌ஷன் மேனஜராக இருக்கும் தம்பி ராமையாவின் உதவியால் ஒரு சினிமா வாய்ப்பு கிடைக்கிறது.

இந்த வாய்ப்பை அவர்கள் சரியாகப் பயன்படுத்தி தங்கள் துறைகளில் தடம் பதித்தார்களா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நடித்திருக்கும் முத்து, செந்தில், ஆசிம், முன்னா, குமார், தெனாலி ஆகியோர் திறம்பட நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். சினிமா வாய்ப்புக்காக இவர்கள் அலைவதும், கிடைக்காமல் சோர்ந்து போவதும் என நடிப்பை வெளிப்படுத்த முயன்றிருக்கிறார்கள். நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஒரு பாடல் காட்சிக்கும் ஒரு சில காட்சிகளிலும் மட்டுமே வந்து சென்றிருக்கிறார்.

புரொடக்‌ஷன் மேனஜராக வரும் தம்பி ராமையா சிறப்பாக நடித்திருக்கிறார். காமெடி, நடனம், சென்டிமென்ட் காட்சி என அனைத்திலும் அவருக்கே உரிய பாணியில் அசத்தியிருக்கிறார். இவர் நண்பர்கள் ஆறு பேருக்கும் அறிவுரை கூறும் வசனங்கள் சினிமாவில் முயற்சி செய்பவர்களுக்கு ஒரு எனர்ஜியாக அமைந்திருக்கிறது.

வீட்டு உரிமையாளராக வரும் தேவதர்ஷினி மனதில் நிற்கிறார். வாடகை கூட வாங்காமல் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்று எண்ணுவதுடன் அவர்களுக்கு சாப்பாடு, பணம் என்று உதவுவது, அவர்கள் வெற்றியடைய வேண்டும் என்ற உணர்வு, பாசம் என பார்ப்பவர்களை மெய்சிலிர்க்க வைக்கிறார்.

சினிமா வாய்ப்புக்காக இளைஞர்கள் எவ்வாறு கஷ்டப்படுகிறார்கள் என்பதை மையக்கருவாக எடுத்துக் கொண்டு இயக்கியிருக்கிறார் ஞானமொழி. ஏற்கனவே இந்த மாதிரி கதைகள் பல வந்திருந்தாலும் இதில் சிறிதளவு மட்டும் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். இளைஞர்களின் சினிமா ஆசையை பயன்படுத்தி, பல பட கம்பெனிகள் அவர்களை எவ்வாறு நடத்துகின்றன என்பதை தெளிவாக கூறியிருக்கிறார். படத்தில் சுவாரஸ்யமான காட்சிகள் குறைவு. திரைக்கதை வலுவில்லாமல் நகர்கிறது. தேவையற்ற காட்சிகளை சரி செய்திருந்தால் ரசித்திருக்கலாம்.

நித்யன் கார்த்திக் இசையில் 2 பாடல்கள் ரசிக்க வைக்கிறது. கானா பாலா பாடிய திரைப்பட நகரம் பாடல் தாளம் போட வைத்திருக்கிறது. பின்னணி இசையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். நித்யாவின் ஒளிப்பதிவு படத்திற்கு பலவீனமாக அமைந்திருக்கிறது. ஒரு சில காட்சிகள் டி.வி.சீரியல் பார்ப்பது போல் தோன்றுகிறது.



மொத்தத்தில் ‘திரைப்பட நகரம்’ வளர்ச்சி தேவை.

--மாலைமலர்