பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராமிடம் கே.வி. ஆனந்த் உதவியாள ராய்ச் சேர்ந்திருந்த நாட்கள். அவரு டைய வீட்டுக்கு அடுத்த காம்பவுண்டில் எங்கள் குடும்பம் குடியிருந்தது.
ஓர் இரவு ஆனந்த் கதவைத் தட்டி னார். எழுதிக்கொண்டிருந்ததை நிறுத்தி விட்டுப் போனேன். உள்ளூர்ப் படப் பிடிப்பில் இருந்து திரும்பி, அவசரக் குளியல் போட்டிருந்தார். கையில் ஒரு பயணப் பெட்டி.
“அர்ஜென்ட்டா சென்ட்ரல் ஸ்டேஷன் போகணும். கொஞ்சம் வர்றீங்களா..?”
“நானா..?”
“ஆமா, அரை மணில ரயில் கிளம் பிடும். ஆட்டோ பிடிச்சுப் போனா, ரயிலை மிஸ் பண்ணிடுவேன். பைக்ல போலாம்...”
எச்சிலைக் கூட்டி விழுங்கினேன். நான் நிதானமாக வண்டி ஓட்டுபவன். பரபரப்பாக பைக் ஓட்டிப் பழக்கமில்லை. என் தயக்கத்தைப் பார்த்தார்.
“வண்டிய ஓட்டப் போறது நான். பின்னாடி உக்காந்து பெட்டியப் பிடிச் சிட்டு வாங்க. ஸ்டேஷன்ல நான் இறங் கினதும், நிதானமா திரும்பி வந்துக் குங்க...” என்றார்.
பேன்ட் அணிய உள்ளே போனேன். என் அம்மா ஆனந்திடம் “எங்கப்பா ஷூட்டிங்?” என்று கேட்க, “கேரளா போறோம்...” என்று அவர் சொன்னது காதில் விழுந்தது.
பைக்கில் பெட்டியை இருவருக்கும் நடுவில் வைத்துக்கொண்டு உட்கார்ந் தேன். பெட்டியை மட்டுமல்ல; உயிரை யும் கையில் பிடித்துக்கொள்ள வேண்டி யிருந்தது. ஆனந்த் பைக்கை ஓட்டிய வேகம் அப்படி.
பஸ்கள், கார்கள், ஆட்டோக்கள் எல்லாவற்றையும் முந்திக்கொண்டு வாகனங்களுக்கு இடையில் புகுந்து புறப்பட்டு பைக் பறந்தது. ராணி மேரி கல்லூரி அருகில் இருந்த இரட்டை ஸ்பீடு பிரேக்கர்களிலும் வேகம் குறைக் காததில் சற்று மேலே எகிறி, (ஹெல்மெட் கள் கிடையாது) குதிரை சவாரி போல் முழங்கால்களால் பைக்கை இறுக்கிக்கொண்டு, கோணல் மாணலாக சீட்டில் விழுந்து ஒட்டிக்கொண்டேன்.
“பார்த்துப்பா...” என்று முணுமுணுத் தேன். அவர் காதில் ஏன் விழுகிறது? அத்தனை அவசரத்திலும் போக்குவரத்து விதிகளை மீறவில்லை. ஒரு வழியாக சென்ட்ரல் ஸ்டேஷன் கடிகாரம் கண்ணில்பட்டதும், ஆனந்த் இன்னும் பரபரப்பானார்.
“வண்டி கிளம்ப மூணு நிமிஷம்தான் இருக்கு...”
ஆட்டோக்கள் நுழையும் வாசலருகே பைக்கைக் கொண்டு நிறுத்தினார். ஸைடு ஸ்டேன்ட் போட்டார். பெட்டியைக் கவர்ந்துகொண்டு, ஓட்ட மாக ஓடி கூட்டத்தில் கலந்தார்.
பெருமூச்சுடன் ஆசுவாசப்படுத் திக்கொண்டேன்.
“பாதையை மறிச்சு, இப்படிலாம் வண்டியை நிறுத்தக் கூடாது.. எடுங்க சார்...” என்று ஆட்டோ டிரைவர்கள் குரல் கொடுத்தனர்.
“இதோ…” என்று பைக்கில் ஆரோ கணித்து, வண்டியை நிமிர்த்தினேன். ஹேண்டில்பாரைத் திருப்ப முடிய வில்லை. லாக் ஆகியிருந்தது. இக்னிஷ னில் சாவியைக் காணவில்லை. கீழே எங்காவது விழுந்திருக்கிறதா? தேடியதில் சில கணங்கள் வீணாயின. சாவி கிடைக்கவில்லை. ஒருவேளை வண்டியை நிறுத்திய வேகத்தில் ஆனந்த் சாவியை உருவி, கையோடு எடுத்துப் போய்விட்டாரா?
செல்போன்கள் இல்லாத காலம். அவர் எந்த ரயிலில் போகிறார் என்றுகூட தெரியாது. என் அம்மாவிடம் அவர் உரையாடியபோது ‘கேரளா’ என்ற வார்த்தை காதில் தற்செயலாக விழுந்தது நினைவில் இடறியது.
என்னை அதட்டிய ஆட்டோ டிரைவ ரிடமே, “வண்டியக் கொஞ்சம் பாத்துக் குங்க...” என்று கோரிக்கை வைத்து விட்டு, ஸ்டேஷனுக்குள் ஓடினேன். அந்த டிரைவர் என் வம்சத்தையே முதுகுக்குப் பின்னால் திட்டிக்கொண்டிருந்தார்.
கலைந்த எறும்புப் புற்று போல் ஆயிரக்கணக்கானவர்கள் அலைமோத, ஆனந்தை எப்படி கண்டுபிடிப்பேன்? ஒரு போர்ட்டரை நிறுத்தினேன்.
“கேரளாவுக்கு எந்த ரயில் கிளம்புது..?”
“அலப்பி எக்ஸ்பிரஸா? வண்டி மூவ் ஆயிருச்சேப்பா...”
“எந்த பிளாட்பார்ம்..?”
“எட்டு…”
பிடரியில் பாதம் மோதவோ, இதயம் தொண்டைக்கு எகிறவோ, உங்களுக்குப் பிடித்த உவமானத்தைப் போட்டுக்கொள்ளுங்கள் ஓடினேன்.
ரயில், பிரசவ காலத்துப் பெண் போல பெருமூச்சுடன் மெல்ல நகர்ந்துகொண்டிருந்தது.
ஆனந்த் எந்த கம்பார்ட்மென்ட் என்றும் தெரியாது. ஜன்னல் சதுரங்கள் வழியே அவரைத் தேடிக்கொண்டு ரயிலுக்கு இணையாக, அதை விட வேகமாக ஓடினேன். எதிரில் மோதியவர்களின் சாபங்கள் காற்றில் கலந்தன. என்னைப் பயணி என்று எண்ணி, வண்டிக்குள் இழுக்க கதவருகே நின்ற நல்லவர்களின் கரங்கள் நீண்டன.
ஆறாவது பெட்டியில் ஜன்னல் வழியே ஆனந்தின் உருவம் தென்பட்டது. பெட்டியைத் தூக்கிக்கொண்டு, பரபர வென்று நகர்ந்து கொண்டிருந்தார்.
“ஆனந்த்… ஆனந்த்...” என்ற என்னுடைய கூக்குரல்கள் சுற்றியிருந்த ஏராள ஓசைகளில் அவரை எட் டவே இல்லை. ரயிலோ வேகம் எடுத்துக்கொண்டிருந்தது. ஜன்னலோரம் அமர்ந்திருந்த பயணி ஒருவர் அவரை எட்டிப் பிடித்து என்னைச் சுட்டிக்காட்டவில்லை என்றால், ஆனந்த் திரும்பிப் பார்த்திருக்கவே மாட்டார்.
“சாவி... பைக் சாவி..?” என்று கூவினேன். சைகைகளிலும் காட்டினேன். புரிந்து, பேன்ட் பாக்கெட்டில் துழாவி எடுத்தார். ஜன்னல் வழியே வீசினார். பிளாட்பாரத்தில் சாவியைக் கண் டெடுத்து நான் நிமிர்வதற்குள் ரயிலின் கடைசிப் பெட்டி என்னைக் கடந்திருந்தது.
வண்டியை சைடு ஸ்டேண்டில் போட்ட வேகத்தில், பழக்க தோஷத்தில் சாவியை உருவிப் பாக்கெட்டில் போட்டுக்கொண்டிருந்தார்.
வெளியே வந்து, (ஆட்டோக்காரர் களால் நகர்த்தப்பட்ட) பைக்கை வேறோரு மூலையில் கண்டெடுத்து வீடு திரும்பினேன்.
சில சமயம் பின்னணியில் ஒலிக்கும் வார்த்தைகள் எவ்வளவு உதவிகரமாக இருக்கின்றன!
‘மாற்றான்’ திரைப்படம்...
ஒட்டிப் பிறந்த இரட்டையரில் உடன்பிறந்தவனைக் கொன்றவனைப் பிற்பாடு அடையாளம் கண்டு சண்டையிடுவான் அகிலன் (சூர்யா). சண்டையில் எதிரியின் போன் அகிலனிடம் கிடைக்கும். கொலைக்கு ஏற்பாடு செய்தவன் அதே போனில் அழைக்க… பின்னணியில், லிஃப்ட் குரல், “LOCUS LACTO PRODUCTS. ஐந்தாவது மாடி” என்று அறிவிக்கும்.
அந்தப் பின்னணிக் குரலை வைத்து, அவனைத் தேடி தன் கம்பெனியின் ஐந்தாவது மாடிக்கு விரைவான், அகிலன். அந்த போனைப் பயன்படுத்தி குற்றவாளியைக் கண்டுபிடிப்பான். வெகு பரபரப்பான காட்சியாக அது அமைந்திருக்கும்.
- வாசம் வீசும்…
எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: [email protected]
நன்றி - த இந்து