Showing posts with label திருமாவளவன். Show all posts
Showing posts with label திருமாவளவன். Show all posts

Sunday, April 28, 2013

விஜயகாந்த் - திருமாவளவன் - திடீர் சந்திப்பு: பின்னணி என்ன?

சென்னை: தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

மாமல்லபுரத்தில் அண்மையில் நடைபெற்ற வன்னியர் சங்க விழாவிற்கு சென்ற பா.ம.க.வினர் மரக்காணம் அருகே தலித் மக்கள் குடியிருப்புகள் மீது தாக்குதல் நடத்தியதோடு, வீடுகள், பேருந்துகளை தீ வைத்து எரித்தனர்.

இந்த வன்முறைக்கு பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்தான் காரணம் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் குற்றம்சாட்டியிருந்தார்.

மேலும், மரக்காணம் வன்முறை தொடர்பாக அரசியல் கட்சிகள் தங்கள் மவுனத்தை கலைக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இதையடுத்து, தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிக்கை விடுத்ததோடு, வன்முறைக்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இதனிடையே, நேற்று திடீரென கட்சியின் செயற்குழுவை கூட்டிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்திருந்தும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படாதது ஏன் என்று கேள்வி எழுப்பியிருந்தது.

இந்த நிலையில், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த்தை இன்று பகல் 12 மணிக்கு சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் திடீரென சந்தித்து பேசினார். இருவரும் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேசினார்கள்.

இந்த சந்திப்பின்போது பண்ருட்டி ராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பொதுச்செயலாளர்கள் ரவிக்குமார், சிந்தனை செல்வன் பொருளாளர் முகம்மது யூசுப், மற்றும் வன்னிஅரசு
ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்த சந்திப்பில், மரக்காணம் கலவரம் தொடர்பாக இருவரும் ஆலோசனை நடத்தியுள்ளனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், தமிழகத்தில் ஒரு அமைதி சூழ்நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தி்ற்காக எதிர்க்கட்சி தலைவர் விஜயகாந்த்தை சந்தி்த்ததாக  கூறினார்.

படப் பிரச்னை தொடர்பாக ஏற்கனவே ராமதாசுக்கும், விஜயகாந்த்தும் மோதல் ஏற்பட்டது. இதனால் பா.ம.க.வுக்கு எதிராக விஜயகாந்த் செயல்பட்டு வந்தார். இதுவரை அக்கட்சியுடன் மோதல் போக்கைத்தான் விஜயகாந்த் கடைபிடித்து வருகிறார்.

மேலும், வரும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுடன் விஜயகாந்த் கூட்டணி அமைக்கலாம் என்ற பேச்சும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக அடிபட்டு வருகிறது. அதற்கு ஏற்றார் போல் அண்மையில், எதிர்பாராத விதமாக கருணாநிதி- விஜயகாந்த் சந்திப்பு நடந்தது. கருணாநிதியும், விஜயகாந்துக்கும், தே.மு.தி.க.வுக்கும் ஆதரவாகவே பேசி வருகிறார்.


ஒரு கட்டத்தில் விஜயகாந்த்துடன் மோதல் போக்கை கடைபிடித்து வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சித் தொல் திருமாவளவன், தி.மு.க. கூட்டணியில் விஜயகாந்த் சேர்ந்தால் அதனை ஆதரிக்கதான் முடியும். இதனால் தேர்தல் கூட்டணி அமைவதற்கு முன்பாகவே விஜயகாந்த்துடன் சமாதான உடன்படிக்கையை மேற்கொண்டால் நன்றாக இருக்கும் என்று கருதிய திருமாவளவன், இன்று அவரை சந்தித்ததாகவும் கூறப்படுகிறது.

எது எப்படியோ,  மரக்காணம் கலவரம் தொடர்பாக இருவரும் சந்தித்துக் கொண்டதாக கூறப்பட்டாலும் வரும் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம் என்றே அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.  அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.


நன்றி - விகடன்