Showing posts with label தலைவர். Show all posts
Showing posts with label தலைவர். Show all posts

Thursday, January 31, 2013

எம் ஜி ஆர் VS கலைஞர் நட்பு - மு க ஸ்டாலின் பேட்டி

அ தி.மு.க-வில் தங்களுக்குப் பிடித்த நபர் யார்? மறைக்காமல் சொல்லுங்கள்?''
''எனது மிகுந்த மரியாதைக்கும் அன்புக்கும் உரிய ஒரே ஒருவர் இருந்தார். அவரும் மறைந்துவிட்டார். அவர்தான் அ.தி.மு.க-வைத் தோற்றுவித்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்!''



ச.புவனேந்திரன், தேனி.


 '' 'தி.மு.க-வின் பொருளாளர் என்ற முறை யில் கட்சியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்று உங்களால் கூற முடியுமா?''


''தி.மு.க. எப்போதும் ஒளிவு மறைவற்ற இயக்கம். அதன் வரவு - செலவுக் கணக்குகள் முறையாக வருமான வரித் துறைக்குத் தாக்கல் செய்யப்பட்டுவருவது மட்டுமல்லாமல்; தணிக்கைக் குழுவின் மூலம் முறையாகத் தணிக்கை செய்யப்பட்டு, பொதுக் குழுவில் வைக்கப்படுகிறது. இதற்கும் மேலதிகமான தகவல் உங்களுக்கு வேண்டுமாயின், நீங்கள் கழகத்தின் பொதுக் குழுவில் இடம்பெற வேண்டும்!''



எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


''தங்கள் மனைவி துர்கா கடவுளை வழிபடுவது அரசியலாக்கப்படுகிறதே?''

 ''ஆன்மிக ஈடுபாடு என்பது அவரவர் தனிப்பட்ட நம்பிக்கைகளையும் விருப்பங்களையும் பொறுத்ததுதானே? அதனை அரசியல் ஆக்குவது ஆக்கப்பூர்வமான நடவடிக்கை ஆகாதே. 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்று அறிஞர்அண்ணா அவர்கள் ஏற்றுக்கொண்டு அறிவித்ததை ஏன் மறைக்க வேண்டும்?''


த.சத்தியநாராயணன், அயன்புரம்.


''உங்களை நீங்களே கேட்டுக்கொள்ள நினைக்கும் கேள்வி?''


 ''  'தலைவர் கலைஞர் அவர்க ளும், பொதுச் செயலாளர் பேராசிரி யர் அவர்களும், கழக முன்னணியின ரும், கழகச் செயல்வீரர்களும், கழக உறுப்பினர்களும், இளைஞர் அணி யினரும், மகளிரும், பொதுமக்களும் என் மீது பொழிந்துவரும் பாசத்துக்கும் அன்புக் கும் எந்த வகையில் நன்றிக்கடன் செலுத்தப் போகிறோம்?’ என்ற கேள்விதான்!''


இனியவதி சரவணன், கொட்டாரக்குடி.


''புரட்சித் தலைவர், கலைஞர் இருவரின் நட்பைப் பற்றிச் சொல்லுங்கள்?''


''என் வார்த்தைகளைவிட, புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களே இதைப் பற்றிச் சொல்லிஇருக்கிறார்.


அதை அப்படியே உங்களுக்குத் தருகிறேன்...


'தமிழக முதல்வர் கலைஞர் அவர்களுக்கும் எனக்கும் 20 ஆண்டுகளாகத் தொடர்பு உண்டு. அப்போது நான் கோவையிலே இருந்தேன். ஊருக்குள் பிளேக் நோய் பரவிக்கொண்டு இருந்த காரணத்தால், குடும்பத்தை ஊருக்கு அனுப்பிவிட்டு, கலைஞர் என் வீட்டில் வந்து தங்கினார். நான் இருந்த வீட்டுக்கு அப்போது 12 ரூபாய் வாடகை. இரண்டு பேரும் ஒன்றாக இருந்தோம். அவர் சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்தவராகவும் நான் காங்கிரஸ்காரனாகவும் இருந்தேன்.


அப்போது அவரை என் பக்கம் இழுக்க முயற்சித்தேன். ஆனால், இறுதியில் நான்தான் அவர் பக்கம் ஈர்க்கப்பட்டேன். இன்று அவர் கழகத் தலைவராகவும் நான் கழகத்தின் பொருளாளராக வும் இருக்கும் அளவுக்கு அந்த ஈர்ப்பு வலிமை யானது. கலைஞர் அவர்கள் இன்று முதல்வராக இருக்கிறார் என்பதால்தான் அவருக்குப் பெருமை யும் புகழும் என்று யாராவது நினைத்தால், அது மாபெரும் தவறாகும். இந்தப் பதவிகள் எல்லாம் தேடி வந்து அமைவதற்கு முன்பே, பேருக்கும் புகழுக்கும் உரியவராக இருந்தவர் கலைஞர். நான் முதன்முதலாகப் பெற்ற பட்டம் புரட்சி நடிகர் என்பது. அந்தப் பட்டத்தை எனக்குத் தந்தவர் கலைஞர்’. கலைஞர் - எம்.ஜி.ஆர். நட்பு, சரித்திரத்தில் சான்றாவணமாக நின்று நிலைத்துவிட்ட நட்பு!''


கு.அரவிந்தராஜ், சேலம்-6.


''தி.மு.க. ஆட்சியைத் தோற்கடித்த மக்கள் மீது கோபமே இல்லையா?''


'' 'மக்கள் குரலே மகேசன் குரல்’ என்று மக்களாட்சித் தத்துவத்தை விரும்பி ஏற்றுக்கொண்ட பிறகு, பெரும்பான்மை மக்கள் எடுக்கும் முடிவுக்குக் கட்டுப்பட்டு, கண்ணியமாக நடந்துகொள்ள வேண்டுமே தவிர, யார் மீதும் கோபம்கொள்வதோ, யாரிடமும் குறை காண்பதோ தேவை இல்லாதது. பெரும்பான்மை மக்களின் முடிவுக்கான காரணத்தை ஆராய்ந்து பார்த்து, அதைக் களைய அயராது காரியமாற்ற வேண்டும்!''


மு.சந்தோஷ்குமார், திருவான்மியூர்.


''உங்களைக் கவர்ந்த பேச்சாளர்கள் யார் யார்?''


''தலைவர் கலைஞர், பொதுச் செயலாளர் பேராசிரியர், தமிழர் தலைவர் வீரமணி, அண்ணன் துரைமுருகன், பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தொல்.திருமாவளவன், பீட்டர் அல்போன்ஸ், திருச்சி என்.சிவா, ஆ.ராசா என என்னைக் கவர்ந்த பேச்சாளர்கள் பட்டியல் நீளமானது.''


வா.இரவிச்சந்திரன், கோவிலூர்.


''உங்கள் பிறந்த நாள் அன்று என்ன செய்வீர்கள்?''


''எனது பிறந்த நாளில் காலையில் நானும் எனது மனைவியும் எனது பெற்றோரிடம் சென்று வாழ்த்துக்களைப் பெற்றுக்கொள்வது வழக்கமான முதல் கடமை. அதனைத் தொடர்ந்து இல்லத்தில் குடும்பத்தினருடன் கேக் வெட்டிக் கொண்டாடுதல், கழகத் தோழர்கள் மற்றும் நண்பர்களிடம் வாழ்த்துக்களைப் பெறுவேன்.


அதன்பிறகு, அண்ணா சாலை மேம்பாலம் அருகேயுள்ள பார்வையற்றோர், காது கேளாதோர் பள்ளியில் பயிலும் சிறுமலர் பள்ளிக்குக் குடும் பத்துடன் செல்வேன். அந்தக் குழந்தைகளுக்கு உணவு வழங்கி, அவர்களுடன் சிறிது நேரம் உரையாடுகின்ற மனநிறைவான பணியை ஒவ் வொரு ஆண்டும் தவறாது செய்துவருகிறோம்.''


போஸ்டல் சந்தானம், முத்துப்பேட்டை.


''உங்களுக்குப் பிடித்த விளையாட்டு, விளையாட்டு வீரர் யார்?''


''பிடித்த விளையாட்டு - கிரிக்கெட்.

விளையாட்டு வீரர் - சச்சின் டெண்டுல்கர்.''

ஜி.கருப்பையா, பொள்ளாச்சி.

''பள்ளிப் பருவத் தோழர்கள் இன்றும் உங்களிடம் நட்பு பாராட்டுகிறார்களா?''


''பள்ளிப் பருவத்தில் என்னுடன் சிநேகம் கொண்ட 40-க்கும் மேற்பட்ட நண்பர்களை நான்கு மாதத்துக்கு முன்னர் எனது வீட்டுக்கு அழைத்து, உபசரித்து, கலந்துரையாடி மகிழ்ந்தேன்.


சிறந்த பேச்சாளர் சுகிசிவம், திரைப்பட இயக்குநர் டி.பி.கஜேந்திரன், நடிகர் 'சிறை’ பிரசன்னா உட்பட மேலும் சில பெண் நண்பர் களும் அந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர். இப்படியான சந்திப்புகள் போக கடிதங்கள், தொலைபேசி வாயிலாகவும் அவர்களுடன் தொடர்ந்து தொடர்பில்தான் இருக்கிறேன்.''


மு.தியாகராஜன், ஆழ்வார் திருநகர்.


''நாளுக்கு நாள் இப்படி இலவசங்களை வாரி வழங்குவது நல்லதா?''


''இலவசங்கள் வழங்குவதில் தவறு இல்லை. 'பசி என்று வருபவனுக்கு உண்ணு வதற்கு மீனைக் கொடுப்பதைவிட, மீன் பிடிக்கக் கற்றுக்கொடுப்பதே சிறந்தது’


என்பதை நாங்களும் அறிவோம். அதை ஏற்றுக் கொள்ளவும் செய்கிறோம். எனினும் 'பசி வந்திடப் பத்தும் பறந்துபோகும்’ அல்லவா?பசித்த வனுக்கு உடனடியாக உணவளித்து, அவன் பசி ஆறியதற்குப் பிறகு வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும் வழியைக் கற்பித்துப் பயிற்சி அளிப்பதே தொலைநோக்கில் நன்மை அளிப்ப தாக இருக்கும். எல்லாரும் எல்லாமும் பெற இயலாத இந்தியா போன்ற ஒரு நாட்டில், இல்லா தோர்க்கு அவர்களிடம் இல்லாததை அவர் களாகவே பெற்று நுகரும் நிலை உருவாகிடும் வரை இலவசங்களை வழங்குவதில் தவறு இல்லை.''


சு.அருளாளன், ஆரணி.


''மேயர், அமைச்சர், துணை முதல்வர் ஆகிய மூன்று முக்கியப் பொறுப்புகளில் இருந்தவர் நீங்கள். ஒரு நிர்வாகம் எப்படி இருக்க வேண்டும்?''


''மக்களுக்கான நிர்வாகமாக அது அமைய வேண்டும். எல்லா வகையிலும், எந்த நிலையிலும் எவ்விதப் பாகுபாடும் இல்லாமல் மக்கள் பிரச்னைகளை உடனுக்குடன் தீர்த்துவைப்பதே நல்ல நிர்வாகத்துக்கான அழகு. அத்தகைய நிர்வாக அமைப்புதான் சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கும் உயிரோட்டம் உள்ள அமைப்பாகத் திகழும்.''


சு.இராமஜெயம், ஆற்காடு.


''தனிமையை விரும்பினால் நீங்கள்செல்லும் இடம் எது?''


''மாமல்லபுரம்!

ஒரு பக்கம் பல்லவர் காலத்துச் சிற்பங்கள்... இன்னொரு பக்கம் ஓயாமல் பாடிக்கொண்டு இருக்கும் அலைகள். தனிமையை நாடும் மனம் கலையோடும் அலையோடும் கலந்துவிடும்.''


ப.கணேஷ், சென்னை-8.


''தி.மு.க-வின் எதிர்காலம்?''


''சூரியன் மறையும். ஆனால், உதிக்கும். அதனை யாரும் தடுக்கவும் முடியாது... மறைக்கவும் முடியாது.


காலம் எப்போதும் ஒரே மாதிரியாக நிலைகொண்டு இருப்பது இல்லை. வசந்த காலம், வேனிற் காலம், இலையுதிர் காலம், குளிர் காலம் எனப் பருவங்கள் மாற்றம் அடைந்து கொண்டே இருக்கும். இது தனிமனித வாழ்க்கைக் கும் ஓர் இயக்கத்துக்கும்கூடப் பொருந்தக் கூடியதே. தனி மனித வாழ்க்கையில் ஏற்ற இறக் கங்கள், ஓர் இயக்கத்தில் மேடு பள்ளங்கள் என்பதை இயல்பானது என்ற அளவிலேதான் பார்க்க வேண்டும். தி.மு.க-வின் எதிர்காலம் ஏற்றமானது என்பதைக் காலம் கட்டாயம் நிரூபிக்கும்!''


ஆ.மணி, உத்திரமேரூர்.


''ஜெயலலிதாவை நேருக்கு நேர் நீங்கள் சந்தித்திருக்கிறீர்களா? அப்படிச் சந்தித்திருந்தால், என்ன பேசிக்கொண்டீர்கள்?''


''இரண்டு முறை சந்தித்துள்ளேன்.


2.3.2002 அன்று தமிழக முதல்வராக ஜெயலலிதா அவர்கள் சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா மண்டபத்தில் பதவியேற்றுக்கொண்டார். அப்போது கழகப் பொதுச் செயலா ளர் பேராசிரியருடன் நானும் கலந்துகொண்டேன். பதவியேற்றுக்கொண்டு மேடையில் இருந்து கீழே இறங்கி வந்த முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு வாழ்த்துகள் தெரிவித்தோம்.


10.2.2005 அன்று தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களைச் சந்தித்தேன். தலைவர் கலைஞர் அவர்கள் திரைக்கதை வசனம் எழுதிய 'மண்ணின் மைந்தன்’ படத்தின் மூலம் கிடைத்த ரூபாய் 11 லட்சம், 'கண்ணம்மா’ படத்தின் மூலம் கிடைத்த ரூபாய் 10 லட்சம்... ஆக மொத்தம் ரூபாய் 21 லட்சம் நிதியை சுனாமியால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையாக அப்போது வழங்கி னேன். என்னிடம் இருந்து காசோலை யைப் பெற்றுக்கொண்ட முதலமைச் சர் ஜெயலலிதா, 'அப்பா நலமாக இருக்கிறாரா?’ என்று கேட்டார். 'நலமாக உள்ளார்’ என்று கூறினேன். எங்களுக்குள் நடந்த பேச்சுவார்த்தை அவ்வளவுதான்!''


நன்றி - விகடன்



டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


ிஸ்கி - 3 ிராவிடக்கட்சிகள் நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியா? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 3 http://www.adrasaka.com/2013/01/2016.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html


பாகம் 5 -நான் ஏன் ட்விட்டருக்கு வர்லை?  http://www.adrasaka.com/2013/01/blog-post_635.html 


Monday, January 28, 2013

நான் ஏன் ட்விட்டருக்கு வர்லை? - மு க ஸ்டாலின் பேட்டி

விகடன் மேடை - ஸ்டாலின்




எஸ்.அங்கயற்கண்ணி, காரைக்கால்.


 ''ஒரு சில நண்பர்களைக்கூட அரசியல் பிரிக்கிறதே... இதற்குக் காரணம் என்ன?''


''நட்பை அரசியல் கண்கொண்டு அணுகுவதால்தான்!''


கே.அருண், வந்தவாசி.


''தி.மு.க-வில் இளைஞர் அணிக்கு மட்டும் ஏன் கூடுதல் முக்கியத்துவம்? நீங்கள் அதன் பொறுப்பாளராக இருப்பதால்தானே?''


''அப்படி இல்லை. தி.மு.க-வைப் பொறுத்த வரை இளைஞர் அணியைப் போலவே மகளிர் அணி, தொழிலாளர் அணி, நெசவாளர் அணி, வழக்கறிஞர் அணி என அனைத்து அமைப்புகளுமே சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றன. எந்த ஓர் இயக்கத்திலும் மற்ற பிரிவுகளைவிட, இளைஞர்கள் அதிகமாக இருப்பார்கள். அதனால், அந்த அணிக்கு முக்கியத்துவம் இயல்பாகவே கிடைத்துவிடும்.


இளைஞர் அணியை மதுரை ஜான்சி ராணி பூங்காவிலே தொடக்கிவைக்கும்போது தலைவர் கலைஞர், 'இது தி.மு.கழகத்துக்குத் துணை நிற்குமே தவிர, இணை அமைப்பு அல்ல’ என்று கட்டளை இட்டார். அந்தக் கோட்டைத் தாண்டாமல்தான் இளைஞர் அணி இதுவரை செயல்பட்டு வந்தது... இனியும் அப்படித்தான் செயல்படும்!''


க.மோகன், மங்கலம்.


 ''கல்லூரி நாட்களில் காதல் அனுபவங்கள் உண்டா?''


''அந்தப் பருவத்திலேயே பொதுப்பணி உணர்வுகள் மேலோங்கி இருந்தன. அதனால், அப்போது காதலிக்க நேரம் இல்லை!''



இரா.கமலக்கண்ணன், சித்தோடு.


''விஜயகாந்தின் அரசியல், திரைப்படச் செயல்பாடுகள்பற்றி உங்களது பார்வை..?''


''கடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் அவர் ஒரு வரலாற்றுப் பிழையைச் செய்துவிட்டார். அந்தப் பிழையினால் ஏற்பட்ட பின்னடை வுகளை அவர் கண்கூடாகக் கண்டு வருகிறார். எனவே, அந்தப் பிழையைத் திருத்தும் பரிகாரத்தைத் தேடும் பண்பட்ட மனநிலையிலே அவர் இருந்துவருகிறார்.
திரைத் துறையைப் பொறுத்தவரையில், அவர் நடித்த 'சின்னக்கவுண்டர்’, 'கேப்டன் பிரபாகரன்’, 'ரமணா’ ஆகிய படங்கள் எனக்குப் பிடித்தவை!''


பா.ஜெயப்பிரகாஷ், சர்க்கார்பதி.



''தி.மு.க-வை விமர்சித்து கேலி, கிண்டல், நையாண்டி செய்து விகடனில் விமர்சனங்கள் வருகின்றன. ஆனால், அதிலேயே வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முன்வரும் உங்கள் பண்பு, தமிழக அரசியல் சூழலில் ஆச்சர்யம் அளிக்கிறதே?''



'' 'செவி கைப்பச் சொற்பொறுக்க’ வேண்டும் என்பது அய்யன் வள்ளுவரின் அறிவுரை. உள்நோக்கம் அற்ற யதார்த்தமான அனைத்து விமர்சனங்களும் வரவேற்கப்பட வேண்டியவையே. ஆனால், சிலர் களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற தீய நோக்கத்தோடு செயல்படும்போது கண்டிக்க வேண்டியிருக்கிறது. விகடனில் விமர்சனங்கள் வரும்போது அவற்றின் உண்மைத்தன்மையை ஆராய்ந்து, நம்மை நாமே பார்த்துக்கொள்ள அவை உதவுகின்றன. வாசகர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்வது, அவர்களுடன் நேசத்தை வளர்த்துக்கொள்ளவும் விளக்கம் அளித்து ஒளியேற்றவும் பயன்படுகிறது!''


ஆ.கமலக்கண்ணன், புதுச்சேரி.


''இசைமுரசு நாகூர் ஹனீபா... பெயரைச் சொன்னதும் உங்களுக்கு நினைவு வருவது எது?''


'' 'ஓடி வருகிறான் உதயசூரியன்...’

  'அழைக்கின்றார்... அழைக்கின்றார்... அண்ணா...’

'கல்லக்குடி கொண்ட கருணாநிதி வாழ்கவே...’

'இறைவனிடம் கையேந்துங்கள்... அவன் இல்லையென்று சொல்லுவதில்லை...’

'வளர்த்தகடா மார்பில் பாய்ந்ததடா...’


- என்று கணீர்க் குரலுடனும் கம்பீர வரிகளுடனும் நாகூர் ஹனீபா அவர்கள், திராவிட இயக்கத்தை எட்டுத் திசைக்கும் கொண்டுசேர்த்த 'தனிமனித வானொலி’. அவர் குரலுக்கு மனதைப் பறிகொடுத்த அனைவரும் இயக்கத்துக்குள் இணைந்து இரண்டறக் கலந்துவிட்டார்கள். திராவிட இயக்கம் இருக்கும் வரை அதன் செவிகளில் தூரத்து இடி முழக்கமாக இசைமுரசுவின் எக்காளப் பேரொலி எதிரொலித்துக்கொண்டே இருக்கும்!''


வி.குமரேசன், தூத்துக்குடி.


''நீங்கள் மறக்க முடியாத மனிதர் யார்?''


 ''மறக்க முடியாத என்பதைவிட, மறக்கக் கூடாத மனிதர் ஒருவரைச் சொல்கிறேன். அவர்... சிட்டிபாபு!



என் மீது விழுந்த அடிகள் அனைத்தையும் தன் மீது தாங்கிய மனிதர். அன்று அவர் தோள் கொடுக்காமல் போயிருந்தால், இன்று நான் உங்களின் இந்தக் கேள்விக்குப் பதில் அளித்திருப்பேனா 
 என்பதே சந்தேகம்தான்!



அவசரநிலைப் பிரகடனம் இந்தியாவில் அமலான நேரத்தில் அதனை எதிர்த்துக் குரல் கொடுத்தவர் அன்றைய முதல்வர் கலைஞர். சுமார் 38 ஆண்டுகளுக்கு முன்பு, நெருக்கடி யான அந்தக் காலகட்டத்தில் நடந்த சிறைக் காட்சியை இப்போது நினைத்துப் பார்த்தாலும் அடிவயிற்றில் நெருப்பு பரவும். நான் சொல்வதை விட அண்ணன் சிட்டிபாபு தன்னுடைய சிறை டைரியில் இப்படி எழுதுகிறார்...



'தமிழகத்து முதலமைச்சர் மகன் என்று அறிந்திருந்த அந்த அதிகாரி, தன் பூட்ஸ் காலால் அவன் அழகிய முகத்தைச் சுவை பார்க்க உதைத்தான். அடுத்து கொலைகாரன் ஒருவன் ஓங்கிய கோல் அவனது தோள் பட்டையில். காக்கி உடை அணிந்த வார்டன் ஒருவன் அவனது கன்னத்தில் கைநீட்டினான். கண்டேன் காட்சியை! இவர்கள் இவனை அடித்தே கொன்றுவிடுவர் என்ற உணர்வு எனக்கு ஏற்பட்டது.



 எனக்கென்று ஒரு துணிவு. திடீர் என்று குறுக்கே பாய்ந்தேன். தடிகள் கழுத்தில் விழுந்தன. அவை அடிகள் அல்ல. உலைக்களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பினைத் தட்டிப் பதப்படுத்தி உளியாக மாற்றிவிடும் சம்மட்டி அடிகளாக எனக்கு அமைந்தன. கழுத்தில் அத்தனையையும் தாங்கிக்கொண்டேன்’ என்று கதறக் கதற எழுதி இருப்பார் சிட்டிபாபு. இத்தகைய விழுப்புண்களைத் தாங்கி விண்ணுயர இயக்கத்தை வளர்த்தவர்கள் தி.மு.க-வின் வீரர்கள். அத்தகைய தீரர்களில் ஒருவர் சிட்டிபாபு!''


அ.கணேசன், காஞ்சிபுரம்.


''ஊடகங்களால் (நாடகம், திரைப்படம், இதழ்கள்) வளர்ந்த இயக்கம் தி.மு.க. ஆனால், இந்நாளைய ஊடகங்களான (இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர்) ஆகியவற்றை நீங்கள் சரிவரப் பயன்படுத்திக்கொள்ளவில்லையே?''



''இணையம், ஃபேஸ்புக், ட்விட்டர் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறோம். மேலும், அதை வலுப்படுத்திக்கொள்வது தொடர்பான ஆலோசனையில் இருக் கிறோம். எனினும் இதழ்கள், திரைப் படம், நாடகம் போன்று அனைத்துத் தரப்பு மக்களையும் இவை எளிமை யாகவும் வலிமையாகவும் நெருக்க மாகவும் சென்றடைந்திட முடியுமா என்பது இன்னும் தெளிவுபடுத்தப்பட வில்லை.''



கோ.பகவான்,  பொம்மராஜுபேட்டை.


''நீங்கள் கடைசியாக அழுதது எப்போது? எதற்காக?''
''சேலம் மாவட்டக் கழகச் செயலாளராக இருந்த அண்ணன் வீரபாண்டியார் அவர்கள் மறைந்தபோது ஆற்றாது அழுதேன். சேலம் மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாகக் கழகத்தைக் கட்டிக்காத்தவர். சோதனைகள் பல வந்தபோதும் குன்றென நிமிர்ந்து நின்றவர். சாதனைகள் பலவற்றைச் செய்துகாட்டியவர். அவர் பழக்கத்தில் சேலத்து மாங்கனி. பகையை அழிப்பதில் சினங்கொண்ட சிங்கம்.



'தி.மு.கழகத்தின் தூண்களில் ஒன்று சாய்ந்துவிட்டது. சேலத்துச் சிங்கமான எனது தளபதியை இழந்த துக்கம் என்னை வாட்டி வதைக்கிறது’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் தேம்பித் தேம்பி அழுதபோது, நானும் துக்கம் தாளாமல் கண்ணீர்விட்டு அழுதேன்!''


அடுத்த வாரம்...


திருத்தம்: கடந்த இதழில் குறிப்பிடப்பட்ட 'எங்கள் திராவிடப் பொன்னாடே’ பாடல் கவிஞர் கண்ணதாசனாலும், 'கா... கா... கா... ஆகாரம் உண்ண’ பாடல் கவிஞர் உடுமலை நாராயண கவியாலும் எழுதப்பட்டவை.


- இன்னும் பேசுவோம்...



நன்றி - விகடன் 


டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


ிஸ்கி - 3 ிராவிடக்கட்சிகள் நாட்டை குட்டிச்சுவர் ஆக்கியா? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 3 http://www.adrasaka.com/2013/01/2016.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html



diSki பாகம் 5 -

எம் ஜி ஆர் VS கலைஞர் நட்பு - மு க ஸ்டாலின் பேட்டி

http://www.adrasaka.com/2013/01/vs_31.html


Thursday, January 17, 2013

எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

விகடன் மேடை - மு.க.ஸ்டாலின் பதில்கள் 




https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvYML7yE0zxUeED6eWA_yuDMGHIoCoY352zlsIs3hh_MBD0OeCyvert9X-cnjNagMaaZzEwQsxx2cJCppIqCxc6UQQtqVTHOk3irMrVTIky5_AdmVA-rEHClK7Xpkk93fQWRsABLMxNpdk/s1600/thuglak+dated+14.04.2010.jpgவைகோவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?'' 

 
''வெற்றி - தோல்விகளைப் பற்றிக் கவலைப்படாத அயராத உழைப்பு!''


தங்க.நாகேந்திரன், செம்போடை.


''தங்கள் உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்தி பரவியபடியே உள்ளதே?'' 


''எனது தொடர் சுற்றுப்பயணங்களும் இடையறாது கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகளுமே அந்த வதந்திகளுக்கான பதில். 'உலை வாயை மூடலாம், ஊர் வாயை மூட முடியுமா?’ என்பது முதுமொழி!''



ஊர் வாயை மூட முடியுமா?’ என்பது முதுமொழி!''


கே.ஹரி நாராயணன், மதுரை.


''விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா ஆகியோர் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது?'' 


 ''விஜய் - காதலுக்கு மரியாதை

அஜித் - வரலாறு

விக்ரம் - அந்நியன்

சூர்யா - ஏழாம் அறிவு

சிம்பு - விண்ணைத் தாண்டி வருவாயா?

தனுஷ் - யாரடி நீ மோகினி?

ஆர்யா - மதராஸபட்டினம்

'ஜெயம்’ ரவி - சந்தோஷ் சுப்ரமணியம்

ஜீவா - ராம்.''

தா.சூர்யா, வேதாரண்யம்.


 ''உங்கள் பார்வையில் மு.க.ஸ்டாலினின் அரசியல் நடவடிக்கை எப்படி இருக்கிறது?'' 



 ''தன்னால் கழகத்துக்கு என்ன லாபம் என்பதை மட்டுமே நினைத்து உழைத்திடும் தளராத தி.மு.க. தொண்டன். கழகத்துக்கும் அதன் மூலமாக தமிழ்ச் சமுதா யத்துக்கும் இறுதி வரை சிறந்த பணியாற்ற நினைக்கும் சேவகன். அரசியல் நடவடிக்கைகளில் கடிகாரம்போல் கச்சிதமாகச் சுழல்வதும், கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு போற்றி நடப்பதும் அவருடைய பண்புகள்!''


தங்க.நாகேந்திரன், செம்போடை.


 ''உங்கள் மாணவப் பருவ நினைவொன்றைப் பகிர்ந்துகொள்ளுங்களேன்..?'' 



''அப்போது நான் சேத்துப்பட்டு பகுதியில் இருந்த கிறிஸ்துவக் கல்லூரி மேனிலைப் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்தேன். ஒருநாள், பள்ளி முடிந்து சினிமாவுக்குச் செல்வதற்காக அண்ணா சாலையில் உள்ள தியேட்டருக்குசைக்கிளில் வந்தேன். என் நண்பன் ஒருவன் சைக்கிளை ஓட்டி வந்தான். 


அப்போது எல்லாம் சைக்கிளில் டபுள்ஸ் செல்லக் கூடாது. இன்றைக்கு ஸ்பென்சருக்கு முன் இருக்கும் சிக்னலில் நாங்கள் நின்றுகொண்டு இருந்தோம். அப்போது  டபுள்ஸ் வந்ததற்காக ஒரு போலீஸ்காரர் எங்க ளைப் பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். என் பெயர், வீட்டு விவரம், எந்தப் பள்ளி என்பதை விசாரித்தார்கள். சொன்னேன். குறித்துக்கொண்டார்கள்.

'உங்க அப்பா பெயர் என்ன?’ என்று கேட்டார் கள். 'கருணாநிதி’ என்று சொன்னேன். 'என்ன வேலை பார்க்கிறார்?’ என்று கேட்டார்கள். 'செக்ரட்டரியேட்ல’ என்றேன். 'எந்த டிபார்ட்மென்ட்?’ என்று கேட்டார்கள். 'பொதுப்பணித் துறை மந்திரியாக இருக்கிறார்’ என்றேன். அதற்குப் பிறகுதான் நான் மந்திரியின் மகன் என்பதே அவர்களுக்குத் தெரிந்தது. அதன் பிறகு வீட்டுக்கு அனுப்பிவிட்டார் கள்!''



ப.பிரேம்குமார், தேனி.


''நீங்கள் மனம் விரும்பிக் கேட்கும் பத்து பாடல்களை இங்கு பட்டியலிடுங்களேன்..?'' 


'' 'காகித ஓடம் கடல் அலை மீது...’ - தலைவர் கலைஞர் எழுதியது.


'செந்தமிழ் நாடெனும்போதினிலே...’ என் செல்போனுக்கு அழைத்தால், இந்தப் பாடலைத் தான் நீங்கள் கேட்பீர்கள்.


'நீ இல்லாத உலகத்திலே...’ - கண்ணதாசன் எழுதி பி.சுசீலா பாடியது.


'கா... கா... கா... ஆகாரம் உண்ண’ - கலைஞர் எழுதி சி.எஸ்.ஜெயராமன் பாடியது.


'எங்கள் திராவிடப் பொன்னாடே’ - புரட்சிக் கவிஞரின் எண்ணவோட்டம் எப்போது கேட்டா லும் சிலிர்க்கும்.


'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே’ - இன்றைய காலகட்டத்துக்கு இது தானே பொருத்தமானது.


'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே’ - சி.எஸ்.ஜெயராமன் குரல் இப்போதும் வசியப்படுத்தும்.


'தப்பித்து வந்தானம்மா... காலம் கற்பித்த பாடத்தின் அடி தாங்க முடியாமல்’ - கவிஞர் மாயவநாதன் எழுதி, கே.பி.சுந்தராம்பாள் பாடியது.


'இது ஒரு பொன்மாலைப் பொழுது’- கவிப்பேரரசு வைரமுத்துவின் காவியத் தொடக்கம்.



'எம்மா எம்மா காதல் பொன்னம்மா’- 'ஏழாம் அறிவு’ படத்துக்காக கபிலன் எழுதிய சுந்தர கீதம்.


- இவை நான் விரும்பிக் கேட்கும் பாடல்களில் சில. நீங்கள் பத்துப் பாடல்கள் என்று கேட்டதால் இதனை மட்டும் சொன்னேன். இன்னும் என்னால் சொல்லிக்கொண்டே இருக்க முடியும். செவிச்சுவை மூலமாக இப்புவியை வாழவைப்பது இசைதானே!''



'நீங்கள் இப்போது வாசித்துக்கொண்டு இருக்கும் புத்தகம்?'' 



 ''திராவிடர் கழகத் தலைவர் மானமிகு ஆசிரியர் கி.வீரமணி தொகுத்த 'வடநாட்டில் பெரியார்’ என்ற புத்தகம். பம்பாய், லாகூர், அமிர்தசரஸ், கல்கத்தா, செகந்திராபாத், லக்னோ ஆகிய பகுதிகளுக்குச் சென்று, பெரியார் கொள்கை முழக்கம் இட்டதை நம் மனக்கண் முன் கொண்டுவந்து காட்டுகிறது அந்தப் புத்தகம். இன்றைக்கு பெரியாரின் சீர்திருத்தக் கொள்கைகள் அனைத்து மாநிலங்களிலும் பரவிவிட்டது. அதற்கு அடித்தளம் அமைத்த பயணத்தைப் பற்றிய முழுமையான நூல் இது. அய்யாவின் அடிச்சுவட்டில் பயணிக்கும் ஆசிரியர் தொகுத்த இரண்டு பாகங்களும் இன்றைய தலைமுறை அறிய வேண்டியது!''


ஆதிபகவன், கும்பகோணம்.


 ''தி.மு.க-வை வளர்த்த எழுத்து, பேச்சு எல்லாம் காணாமல் போய்விட்டனவே? இளைய தலைமுறைக்கு அதில் ஆர்வம் இல்லையே? எழுத்தாற்றல், பேச்சாற்றல் உள்ளவர்களை வளர்க்க நீங்கள் முயற்சி எடுக்கவில்லையே?'' 


'' 'எங்களுடைய கால்கள் நடையை நிறுத்தா...
நாங்கள் நடந்துகொண்டே இருப்போம்.
எங்கள் கைகள் எழுத்தை நிறுத்தா...
நாங்கள் எழுதிக்கொண்டே இருப்போம்.


எங்களுடைய உதடுகளும் நாவுகளும் பேசுவதை நிறுத்தா...

நாங்கள் பேசிக்கொண்டே இருப்போம்!’ 


- என்று தலைவர் கலைஞர் அவர்கள் இளைஞர் அணியின் தொடக்க விழாவில் குறிப்பிட்டார்கள். தி.மு.க-வின் அடிப்படைத் தொண்டர் முதல் அனைவருமே எழுத்தாற்றல், பேச்சாற்றல் பெற்ற வர்களே. இன்றைக்கு இளைஞர் அணியின் புதிய அமைப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டவர்கள் தங்கு தடை இல்லாமல் எழுச்சியாகப் பேசுவார் கள்.


வருங்காலத் தலைமுறையினருக்கும் திராவிட இயக்கத்தின் லட்சியத்தில் ஈடுபாடு வேண்டும் என்பதற்காகவே, பள்ளி மாணவ - மாணவியருக்கு மாவட்ட அளவில் பேச்சுப் போட்டிகள் வைத்து பரிசுகள் அளித்துவருகிறோம். சமீபத்தில் தஞ்சா வூரில் அத்தகைய போட்டிகள் நடந்தன. காலை முதல் இரவு வரை நடந்த இந்தப் போட்டிகளில் மாணவ - மாணவியர் பேசியதைக் கேட்டபோது, எதிர்காலத் தலைமுறை மீது எனக்குப் பெரிய நம்பிக்கையே வந்துவிட்டது.


'தமிழகம் அம்மா ஆசையால் ஆட்சி கண்டு, இருளில் மூழ்கி இன்று அமாவாசையாய் இருண்டுகிடக்கிறது’ என்று ஒரு மாணவர் பேசினார்.
'ஏ.எம்., பி.எம். பார்க்காமல் உழைத்த சி.எம். நம் தலைவர் கலைஞர்’ என்று ஒரு மாணவி முழங்கினார்.


அண்ணா, கலைஞரின் வாரிசுகளாக இந்த மாணவச் செல்வங்கள் திகழ்கிறார்கள். இவர்கள் எதிர்கால மேடைகளில் ஒளிவீசுவதை நீங்கள் பார்க்கலாம். எனவே, தி.மு.க. சும்மா இருக்க வில்லை; விதைத்துக்கொண்டு இருக்கிறது. விளைச்சலின் விளைவுகள் வியக்கவைக்கும்!''


அடுத்த வாரம்...
நன்றி - விகடன் 


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhkzaSiRxdl1V75CcipvAidnYobv5_snjFQrVGrcE6pX69TspkiuG9mEBfaEz2HvuuJK_aAtR76qi-BVikkUfU_E8HdFKryIQbDjIlOEcJKiPJqNJdCJrpom1ogcxh-LCZNwP0oU3mShpqz/s1600/Stalin-jayalalitha-.jpg



டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி 

( பாகம் 1) http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி

 பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html



டிஸ்கி 3 - திராவிடக் கட்சிகள்  தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின்  பேட்டி
 பாகம் 3  http://www.adrasaka.com/2013/01/2016.html
 




Thursday, January 10, 2013

திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின் பேட்டி

கி.மனோகரன், பொள்ளாச்சி.


 ''சாதிபற்றிப் பேசியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில், வன் முறையைத் தூண்டும் வகையில் பேசும் ராமதாஸ், மீண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வந்தால் சேர்த்துக்கொள்வீர்களா?''



''சாதி என்பது இரண்டு புறமும் கூர்மையான கத்தி. அந்த ஆயுதத்தை யார் பயன்படுத்தினாலும் அது ஆபத்தில்தான் முடியும். கூட்டணியைப் பொறுத்தவரை அது எப்படி அமைய வேண்டும் 


 என்பதை, தி.மு.க-வின் செயற்குழு, பொதுக் குழு தேர்தல் நேரத்தில் தீர்மானிக்கும்!''


எம்.மேனகா, திருச்செந்தூர்.


''கடந்த ஆட்சியின்போது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அரசியலிலும், சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்தியது உண்மைதானே?''



 ''இது பெரிய அளவில் மிகைப்படுத் தப்பட்ட குற்றச்சாட்டு. அரசியலில் நாங்கள் இருப்பதாலேயே எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தங்களுக்கென்று தொழில் எதையும் செய்யக் கூடாது என்பது நியாய மானதா?
தலைவர் கலைஞரின் வழியைப் பின்பற்றி திரைப்பட ஆர்வம் எங்கள் குடும்பத்து இளைஞர்களுக்கு இயல்பாகவே ஏற்பட்டது. 


தங்களது திறமையால், ஆர்வத்தால், உழைப்பால் அவர்கள் திரைப்படத் தொழிலில் ஈடுபட்டார்கள், படங்களைத் தயாரித்தார்கள், நடித்தார்கள். ஆட்சி மாற்றத்துக்குப் பிறகும்கூட திரைப்படத் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டுவருகிறார்கள். அவரவர் அவரவர் மனதுக்கு ஏற்ற தொழிலைச் செய்வதே தவறு என்று எப்படிச் சொல்ல முடியும்?
வழக்கறிஞர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வழக்கறிஞர்களாகத் தொழில் செய்கிறார்கள். மருத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மருத்துவர்களாகத் தொழில் செய்கிறார்கள். 



அதைஎல்லாம் பார்த்து விமர் சிக்காதவர்கள், அரசி யல் குடும்பங்களை மட்டும் தாக்குவது, அதுவும் கலைஞர் குடும்பத்தை மட்டும் தனிப்பட்ட முறையில் தாக்குவது சரியானதுதானா? ஆதிக்கம் என்று சொல்வதெல்லாம் உள்நோக்கம் கொண்டவை என்பதை உணர முடிகிறது அல்லவா?''


ரேவதிப்ரியன், ஈரோடு-1.


''கலைஞரின் மகனாக இல்லாமல் இருந்தால், நீங்கள் அரசியலுக்குள் நுழைந்திருப்பீர்களா?''



''ஐந்து நிமிடங்களுக்கு முன் நான் பிறந்திருந்தால் அரசாளும் மன்னனாகவே இருந்திருப்பேன் என்ற அனுமானத்தைப் போன்றது இந்தக் கேள்வி. அனுமானத்தைப் பற்றியெல்லாம் அலசி ஆராய்ச்சி செய்துகொண்டு இருக்க முடியாது. நிதர்சனமான நிகழ்வுகளையே நினைத்துப் பார்க்க வேண்டும்!''



நா.கோகிலன், ஜோலார்பேட்டை.



 ''தலைவர் கலைஞருக்கு அரசியலுக்கு அப்பாற்பட்டு யார் மீது பாசம் அதிகம்?''


'' 'படைப்பாளிகள்’ என்றாலே தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பாசம்தான். இலக்கியப் படைப்பாளிகள் மீதும் இசைத் துறை வல்லுநர்கள் மீதும் அதிகப் பாசம் காட்டுவார். அரசியல் வெப்பத்தைத் தணித் திடும் அற்புத மூலிகை இலக்கியம் என்பதும், கனியிடை ஏறிய சுளை போன்று இனிமையானது இசை என்பதும் அவரது கருத்து!''


எஸ்.தீன்முகம்மது, திருவாரூர்.


''கட்சித் தொண்டர்களுக்கு உங்களது அறிவுரை என்ன?''


''கடமை, கண்ணியம், கட்டுப்பாடு... இம்மூன்றும்தான் பேரறிஞர் பெருந்தகை இட்ட கட்டளை. 'கடமை, கண்ணியத்தைவிட முக்கியமானது கட்டுப்பாடுதான்’ என்பது பெரியார் விதைத்த சிந்தனை. இந்த இரண்டையும்தான் தலைவர் கலைஞர் அடிக்கடி வழிமொழிந்து சொல்வார். அதேயே நானும் நினைவுபடுத்த விரும்புகிறேன்!


கடமை, கண்ணியம், கட்டுப்பாடு போற்றிக் கட்சியைக் கண்ணும் கருத்துமாகக் காத்திட வேண்டும்; ஒவ்வொருவரும் அவருக்கான  முறை (tuக்ஷீஸீ)வரும் வரை காத்திருக்கப் பழகிக் கொள்ள வேண்டும். கட்சிப் பணிகளில் ஆத்திரமோ அவசரமோ கூடாது; எந்த நிலையிலும் மாற்றாருக்கு இடம் கொடுத்துவிடக் கூடாது. இவை யாவும் கட்சித் தோழர்கள் அனைவருக்குமான எனது அறிவுரை அல்ல: அன்பு வேண்டு கோள்!''


அ.ராஜா ரஹ்மான், கம்பம்


 ''அரசியல்வாதியாக இருப்பதற்கு நீங்கள் அச்சப்பட்ட தருணம் எது? ஆனந்தம் அடைந்த தருணம் எது?''


''அச்சமுடைய யாரும் அரசியல்வாதியாக இருக்க முடியாது. 'அச்சம் என்பது மடமையடா’ என்பதற்கேற்ப அச்சத்தை அறவே விலக்கியவர்களே, நல்ல அரசியல்வாதிகளாக இருந்திட முடியும்.


ஆனந்தம் அடைந்த தருணங்கள் ஏராளம். நான் செய்த பணியைப் பாராட்டி தலைவர் கலைஞர் அவர்களோ, பொதுச்செயலாளர் பேராசிரியர் அவர்களோ பேசியபோதும், என்னுடைய செயல்பாடுகளுக்கு நான் எதிர்பார்த்த நல்ல விளைவுகள் ஏற்படும்போதும், நான் பேசும் கருத்துக்களை ஏற்றுக்கொண்டு கட்சித் தோழர்களும் பொதுமக்களும் உற்சாகத்துடன் கரவொலி எழுப்பும்போதும்... என நான் ஆனந் தம்கொண்ட தருணங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்!''


ப.சுகுமார், தூத்துக்குடி-1.


''மதுவிலக்கு குறித்து தி.மு.க. எந்தக் கருத்தும் சொல்லவில்லையே?''


''மதுவிலக்கு என்பதைப் பொறுத்தவரை தமிழகம் மட்டும் தனித்து முடிவெடுக்க முடிய£து. அனைத்து மாநிலங்களும் மத்திய அரசாங்கமும் சேர்ந்து ஒட்டுமொத்த மாக ஒரு முடிவுக்கு வர வேண்டும். கலைஞர் அடிக்கடி சொல்லும் உதாரணம்தான் இது, 'நெருப்பு வளையத்தின் நடுவில் வைத்த கற்பூரம் போல் தமிழகம்’! அண்டை மாநிலங்கள் அனைத்திலும் மதுவிலக்கு நடைமுறையில் இல்லாத சூழலில் தமிழகம் மட்டும் மதுவிலக்கை வைத்துக்கொண்டு பாதுகாப்பாக இருப்பது இயலாத காரியம்!''


பரிமளா கென்னடி, புலிவலம். 


''உங்கள் மகன் சினிமாவில் நடிக்கிறார், சினிமா எடுக்கிறார். உங்கள் மகள் செந்தாமரை என்ன செய்கிறார்?''


''மகள் செந்தாமரை, கல்விப் பணியில் ஈடுபாடுகொண்டு பள்ளிகளை நடத்திவருகிறார்!''


ரேவதி ப்ரியன், ஈரோடு.


''நிறைய வெளிநாடுகளுக்குச் சென்று வந்துள்ளீர்கள். அதில் உங்களுக்குப் பிடித்த நாடு எது?''


''லண்டன்!''


ஏ.மூர்த்தி, புல்லரம்பாக்கம்.


''காதல் திருமணங்கள்பற்றி உங்கள் கருத்து என்ன?''


''இரு மனங்கள் இணைவதுதான் திருமணம். அந்த மன இணைவுக்கு அடிப்படையானது காதல். பழங்காலத் தமிழர் வாழ்க்கையும் திருமணமும் காதலை அடிப்படையாக வைத்து தான் அமைந்து இருந்தன என்பதற்கு எத்த னையோ உதாரணங்கள் அகநானூற்றில் உண்டு. இந்த சாதியும், சமயக் கட்டுப்பாடுகளும், பழக்க வழக்கங்களும் பிற்காலத்தில் வந்து தமிழ்ச் சமூகத்தைப் பின்னடையச் செய்துவிட்டன.


'செம்புலப் பெயல் நீர் போல் அன்புடை நெஞ்சம் தாம்கலந்தனவே’ என்கிறது தமிழ் இலக்கியம். அத்தகைய காதல் திருமணங்கள் எத்தகைய அதிகாரத்தையும் உடைத்து நடந்தே தீரும் என்பதைத்தான் நாள்தோறும் நாம் பார்க்கிறோம். காதல் திருமணங்களை எந்தக் காலத்திலும் யாரும் தடுத்து நிறுத்திவிட முடியாது. தடைசெய்துவிடவும் முடியாது என்பதே என் கருத்து!''


ஜெ.முரளி, செம்பனார்கோவில்.


''டெல்லி பேருந்தில் அந்த மாணவிக்கு நடந்த கொடூரம்?''


''இந்தியாவின் தலைநகரத்தில் நடந்த அந்தச் சம்பவத்தின் மூலமாக நாடே தலைகுனிய வேண்டிய நிலைமைக்குத் தள்ளப்பட்டுள்ளது.


'கழுத்தில் நிறைய நகை அணிந்து ஒரு பெண் எப்போது நிம்மதியாக இரவு நேரத்தில் நடக்கிறாளோ, அப்போதுதான் நாடு சுதந்திரம் அடைந்த தாக ஒப்புக்கொள்வேன்’ என்று காந்தியடிகள் சொன்னார். காந்தியின் கனவு நிறைவேறும் நாள் எப்போது?''


எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


 '' 'திராவிடக் கட்சிகள்தான் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டன’ என்று ஒரு குற்றச் சாட்டு நிலவுகிறதே..? கோபப்படாமல் பதில் சொல்லுங்கள்!''


''எனக்குக் கோபம் வரவில்லை. வருத்தம்தான் வருகிறது. திராவிட இயக்கத்தின் சாதனையால் கல்லூரியில் சேர்ந்து, திராவிட இயக்கத்தின் சாதனையால் வேலைவாய்ப்பைப் பெற்று வளர்ந்து வாழும் சிலரே இந்தக் கருத்துக்குப் பலியாவது வேதனைக்கு உரியதுதானே!


சாதியின் பெயரால் அடக்கப்பட்ட பெரும்பான்மை இனத்தவர்க்கு, அதே சாதியின் பெயரால் உரிமையைப் பெற்றுத்தந்து இடஒதுக்கீடு வாங்கித் தந்த இயக்கம் திராவிட இயக்கம். நீதிக் கட்சியின் ஆட்சியால்தான் அதுவரை உயர் கல்வி நிறுவனங்களுக்குள் போக முடியாத ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள் உள்ளே அணி அணியாக நுழைந்தார்கள். உயர் பதவியை அடைந்தார்கள். இன்று அனைத்து இடங்களிலும் இந்த மக்கள் கோலோச்சுவது திராவிட இயக்கத் தின் சாதனை அல்லவா?


80 ஆண்டுகளுக்கு முன்னால் கோயில்களில், தெருக்களில், உணவகங்களில் இருந்த சமூகச் சூழ்நிலையை உங்களது மூத்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள். இன்று சமரசம் உலாவும் பூமியாக இந்தத் தமிழகம் மாறியதற்கு அடிப்படை திராவிட இயக்கம் அல்லவா?


மிகப் பெரிய பணக்காரர்கள், நிலச்சுவான்தார்கள் மட்டுமே அரசியலுக்குள் நுழைய முடியும், பதவிகளை அடைய முடியும் என்ற சூழ்நிலையை மாற்றி சாமான்யன் கையில் அரசியல் அதிகாரம் கிடைக்கவைத்தவர்  பேரறிஞர் அண்ணா. ஜனநாயகத்தை உண்மை யான மக்கள் மயமாக்கியவர் அண்ணா. மக்கள் மனதையும் தேவையையும் அறிந்து மக்கள் நலத் திட்டங்களை மக்கள் முன்னேற்றத்துக்காக நிறை வேற்றுவது மட்டும்தான் ஓர் அரசாங்கத்தின் வேலை என்ற நிலையில்; ஏழை எளியோர், நலிந்த பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், சிறு பான்மையினர் ஆகியோர் சார்ந்த அனைவரையும் உள்ளடக்கிய அரசாங்கமாக அதனை மாற்றி நடத்திக் காட்டியவர் கலைஞர்.




திராவிட இயக்கம் நாட்டைக் குட்டிச்சுவராக்கி விடவில்லை, குட்டிச் சுவராக்கப்பட்டு தலை கவிழ்ந்து, தாழ்ந்துகிடந்தோரைத் தட்டி எழுப்பி தன்மானம் கொள்ளச்செய்து தலை நிமிர்ந்து நடை போடச் செய்தது திராவிட இயக்கமே!''


அடுத்த வாரம்...


 ''வைகோவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம் எது?''


 ''தங்கள் உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்தி பரவியபடியே உள்ளனவே?''


''விஜய், அஜித், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, 'ஜெயம்’ ரவி, ஜீவா ஆகியோர் நடிப்பில் உங்களுக்குப் பிடித்த படம் எது?''


- இன்னும் பேசுவோம்...


நன்றி - விகடன் 


டிஸ்கி - 1 அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html


டிஸ்கி 2 - -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html



 

Thursday, January 03, 2013

கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitf1lIIvaUKl-mWbHf1H3J4FY1l-jH92OjOUdf-tY0XrY3wHrYD3nSQnnsIEuUyPsfprOdBd5wgMY1f7vhx6XRmBS_t7U2UIYVWbfu2vj-Y9QGbCp-FWBFDu-ax0Y7aVLUYz67jkmDyJKH/s1600/2.jpg 

விகடன் மேடை - ஸ்டாலின்


சென்னை: தனக்கு பின்னர் தமது மகன் மு.க. ஸ்டாலின் தனது சமூக பணியை  தலைமை ஏற்று வழிநடத்திச் செல்வார் என்று அதன் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

திமுகவில் மு.க. ஸ்டாலின் மற்றும் மு.க. அழகிரி கோஷ்டிகளுக்கு இடையேயான மோதலால், தனக்குப் பின்னர் கட்சியை தலைமையேற்று நடத்தப்போவது யார் என்பதை அறிவிப்பது பிரச்னைக்கு வழிவகுக்கும் என்பதால், அதுகுறித்து கருணாநிதி வெளிப்படையாக அறிவிக்காமல் இருந்து வந்தார்.

இருப்பினும் கட்சியில் ஸ்டாலினுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வந்தது.



இந்நிலையில் தனக்குப் பின்னால் தமது மகன் மு.க. ஸ்டாலின் திமுகவுக்கு தலைமை ஏற்று கட்சியை வழிநடத்திச் செல்வார் என்று கருணாநிதி இன்று வெளிப்படையாகவே அறிவித்தார்.

அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில்,வேலூர் மேற்கு மாவட்ட பாமக செயலாளர் சாமுவேல் செல்லப்பாண்டியன் தலைமையில் 2 ஆயிரம் பேர், திமுகவில் இன்று இணைந்தனர்.

அவர்களை வரவேற்று பேசிய கருணாநிதி,"நீங்கள் இங்கு வருவதற்கு காரணமாக இருந்த உங்கள் முன்னாள் தலைவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மராட்டிய மாநிலத்தில் அம்பேத்கார் பல்கலைக் கழகம் கொண்டு வருவதற்கு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.ஆனால் 12 ஆண்டுகள் ஆகியும் அதனை கொண்டு வர முடியவில்லை.எனது மூத்த மகன் மு.க. அழகிரி மனைவி காந்தி தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்.அந்த பெண்ணை எனது மருமகளாக மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டேன்.

எனது மனைவியும் மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொண்டார்.அனைவரும் ஒரே சாதி என்ற சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் சாதி மறுப்பு திருமணத்தை நடத்தி வைக்கிறேன்.அம்பேத்கருக்கு மணி மண்டபம் என் ஆட்சியில் கட்டப்பட்டது. சென்னையில் உள்ள சட்டப் பல்கலைக் கழகத்துக்கும் அம்பேத்கர் பெயர் சூட்டப்பட்டது. அம்பேத்கரை திராவிட முன்னேற்ற கழகமே போற்றி வருகிறது.

இந்த சமுதாயம் மேன்மைக்காக எழுச்சிக்காக நான் என் ஆயுள் உள்ளவரை பாடுபடுவேன். அதன் பிறகு என்றால் இங்கு அமர்ந்து இருக்கிற தம்பி ஸ்டாலினை மறந்து விடாதீர்கள்.  தமிழ் இனம், திராவிட இனம், மொழி இனத்தை காக்க தங்களை அர்ப்பணித்து இந்த இயக்கத்தில் இணைந்து இருக்கிறீர்கள்.நல்வாழ்வுக்கு இட்டுச் செல்லும் நம் இனத்தை மேன்மைபடுத்தி செல்வோம்.முன்னேறி செல்வழிவகை காண்போம்" என்றார்.
கருணாநிதியின் இந்த பேச்சு அவருக்கு பின் ஸ்டாலினே திமுகவுக்கு தலைமை ஏற்பார் என்பதை உறுதிப்படுத்தி உள்ளது.

இந்நிலையில் கருணாநிதியின் இந்த அறிவிப்பு திமுகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வி.சரவணன், திருச்சி.


 '' 'கொள்கை... கொள்கை’ என்று பேசுகிறீர்களே... உங்கள்   கட்சிக்கு என்னதான் கொள்கை?''



''தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு, தமிழ்க் கலை, தமிழ்ப் பண்பாடு ஆகியவை பேணிப் பாதுகாக்கப்பட வேண்டும். சாதியின் பெயராலும், மதத்தின் பெயராலும், கடவுளின் பெயராலும், வேறு எதன் பெயராலும் தமிழினம் பிரிக்கப்படவோ, சுரண்டப்படவோ கூடாது. சுயமரியாதையும் பகுத்தறிவும் மிகுந்த சமத்துவ சமதர்ம சமுதாயம்
அமைக்கப்பட வேண்டும்.


தாழ்த்தப்பட்டும் பிற்படுத்தப்பட்டும் கிடக்கும் மக்களின் வாழ்வு வளம்பெறச் செய்ய வேண்டும்.


இந்தியத் துணைக் கண்டத்தில் தமிழ்நாடு யாருடைய மேலாதிக்கமும் இன்றிச் செழித்திட, மாநிலத்தில் சுயாட்சி... மத்தியில் கூட்டாட்சி எனும் தத்துவம் வளம் பெறவும் வேண்டும். இந்த லட்சியங்களை அடையப் பாடுபடுவதே திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொள்கை!''


டி.கே.லட்சுமணன், சிந்தாதிரிப்பேட்டை.


''காலம் கடந்து நடந்த டெசோ மாநாட்டால் என்ன பயன்?''


''எது காலம் கடந்த செயல்? லட்சக்கணக்கான மக்கள் இன்னும் தங்களது எதிர்காலம் என்ன என்று தெரியாமல் கிளிநொச்சியிலும், முள்ளிவாய்க்காலிலும், வன்னியிலும் அவஸ்தைப்பட்டுக்கொண்டு இருக்கிறார்களே... அவர்களது ஏக்கங்களை உலகத்தின் கவனத்துக்குக் கொண்டுசெல்வது எங்களது கடமை அல்லவா?



இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்பது உலகம் முழுவதும் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களது கோரிக்கை. அந்தக் கோரிக்கையை இந்தியாவை ஆளும் பிரதமர் மன்மோகன் சிங் கவனத்துக்குக் கொண்டுசென்று, இந்தியாவின் நிலைப்பாட்டை ஈழத் தமிழருக்கு ஆதரவாக மாற்றியவர் கலைஞர் என்பதை நினைவில்கொள்ளுங்கள். 


ஈழத் தமிழர்களின் பாதுகாப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் கழகம் மேற்கொண்டு வரும் தொடர் நடவடிக்கைகளில் ஒன்றுதான் டெசோ மாநாடு. டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை உலக நாடுகளும் உலக அமைப்புகளும் தற்போதுதான் புரிந்துகொள்ளத் தொடங்கி இருக்கின்றன. டெசோ மாநாடு காலம் கடந்ததல்ல; காலத்தின் கட்டாயத் தேவை.''



பி.மாதவன், வேதாரண்யம்.


''கருணாநிதி தனது மகனைத் தலைவராக நியமனம் செய்யவிருக்கும் கட்சியை, ஜனநாயக இயக்கம் என்று எப்படிச் சொல்ல முடியும்?''



''கிளைக் கழகம், வட்டக் கழகம் முதல் மாவட்டக் கழகம் வரை உண்மையான உறுப்பினர் சேர்க்கையும் நியாயமான நிர்வாகிகள் தேர்வும் நடக்கும் ஒரே இயக்கம் தி.மு.க. இங்கு யாரையும் வானத்தில் இருந்து கொண்டுவந்து தலைவராக்க முடியாது.


'கழகம் ஒன்றும் சங்கர மடம் அல்ல’ என்று தலைவர் கலைஞர் அவர்கள் பல முறை சொல்லி இருக்கிறார். கழகத்தில் எல்லாமே ஜனநாயக முறைப்படியே நடக்கும்.''


சி.தமிழ்வாணன், திருநெல்வேலி.



''2016-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் என்கிறேன் நான்... நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?''



''2016-ல் தி.மு.க-தான் ஆட்சிக்கு வரும் என்ற உங்களது நம்பிக்கைக்கு முதலில் நன்றி சொல்லிக்கொள்கிறேன். அப்போதும் தலைவர் கலைஞர் அவர்களே முதல்வர்.


எனது சுற்றுப்பயணங்களின்போது பொதுமக்களிடம் புதிய பேரார்வத்தைப் பார்க்க முடிகிறது. தற்போதைய ஆட்சி மீதான கோபமும் கொந்தளிப்பும் அவர்களின் முகங்களில் பிரதிபலிப்பதைக் காண முடிகிறது. தி.மு.க-வுக்கான ஆதரவு அனுதினமும் வளர்ந்துவருகிறது!''



இரட்டை ஓடை பஞ்சவண்ண மகன்,கருப்பம்புலம்.


''பேராசிரியர் அன்பழகனை எப்படிப் பார்க்கிறீர்கள். அவர் உங்களை எப்படி வழிநடத்துகிறார்?''



''நான் அவரை என்னுடைய பெரிய தந்தையாராகவே பார்க்கிறேன். என்னுடைய அரசியல் பங்கேற்பைப் பலரும் விமர்சித்த காலத்தில், வெளிப்படையாகவே மனப்பூர்வமாக வரவேற்றவர் பேராசிரியர் அவர்கள். தொடர்ந்து என்னை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி, வழிநடத்திவருகிறார்!''



உ.பாண்டி., மதுரை-2.


''உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வர ஆசைப்பட்டால் சம்மதிப்பீர்களா?''


''அரசியலுக்கு வர வேண்டும் என்றோ, வரக் கூடாது என்றோ சொல்லும் அளவுக்கு இதில் என் விருப்பம் முக்கியமானது அல்ல. தனது எதிர்காலத்தைத் தானே தீர்மானிக்கும் அளவுக்கு பக்குவப்பட்டவர்தான் உதயநிதி!''



எஸ்.கதிரவன், சென்னை-10.


''சமீபத்தில் பார்த்த திரைப்படம்?'' 


''சீனுராமசாமி இயக்கத்தில் வெளிவந்துள்ள 'நீர்ப்பறவை’. கடலில் மிதக்கும் மீனவர்களின் வாழ்க்கைப் படகு, கண்ணீரிலும் எப்படித் தத்தளிக்கிறது என்பதைத் தத்ரூபமாகச் சொல்லும் படம். அந்தப் படம் கலங்கவைக்கும் கண்ணீர்ப் பறவையாகவும் இருந்தது!''



எம்.மேக்னா, நா.முத்தையாபுரம்.


''திருமதி துர்கா ஸ்டாலின்..?''



''வள்ளுவர் கூறும் மனைமாட்சிக்கு உதாரணமானவர் என் வாழ்க்கைத் துணை நலன்.


டி.ராகுல், தாமரைக்குளம்.


''ரஜினியோடு உங்களது நட்புபற்றிப் பகிர்ந்துகொள்ள முடியுமா?''


''சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்களுடனான நட்பு 'அகநக நட்பதாகும்’. அது ஆழமான அன்பையும் பாசத்தையும் அடிப்படையாகக் கொண்டது. நான் நடத்திவந்த 'இளைய சூரியன்’ என்ற இதழின் முதல் வாரமே அவரைத்தான் நேரில் பேட்டி கண்டேன். அந்த அளவுக்கு முக்கிய மனிதர்!''



எஸ்.சிவசங்கர், திருச்சி-3.


 '' 'கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க... புதுசா வந்தவங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறீங்க...’ என்று கட்சிக்காரர்களே புலம்புகிறார்களே..?''



''தி.மு.க-வின் மாவட்டச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், ஆட்சி அமைந்தால் அமைச்சர்களாகப் பொறுப்பேற்பவர்கள் அனைவரும் கட்சிக்காக உழைத்தவர்கள்தான். நகரக் கழகச் செயலாளர்களாகவும், ஒன்றியக் கழகச் செயலாளர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு பொறுப்புக்கு வருபவர்கள் எல்லோருமே கட்சிக்காக இரவு - பகல் பாராமல் பணியாற்றியவர்கள்தான். கழகத்தில் யாரும் வானத்தில் இருந்து குதித்து வந்து வாய்ப்பைத் தட்டிக்கொண்டு போய்விட முடியாது.




கட்சிக்காக உழைத்தவர்களைக் கண்ணெனப் போற்றிக் காக்கும் கட்சி தி.மு.க. என்பதை உண்மை உணர்ந்தவர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்வர்!''


ச.கருணாகரன், காரைக்குடி.


''ஆயிரம் பஞ்சாயத்துகள் இருந்தாலும், அ.தி.மு.க-வில் யாரும் அமைச்சர் ஆகலாம். புதியவர்களுக்குத் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்கும். ஆனால், தி.மு.க-வில் பழைய ஆட்களே அமைச்சர்களாக இருப்பார்கள். அவ்வளவு சீக்கிரத்தில் புதியவர்களுக்குத் தேர்தலில் நிற்க சீட் கிடைத்துவிடாது. இதை எப்படிப் பார்க்கிறீர்கள்?''



''புதியவர்களாகப் பார்த்து அவர்களுக்கு மட்டுமே சீட் கொடுத்தால், 'ஏற்கெனவே கட்சிக்காக உழைத்தவர்களுக்கு என்ன மரியாதை?’ என்று நீங்களே கேட்பீர்கள். முந்தைய கேள்வியில் இன்னொரு நண்பர் கேட்கவும் செய்துள்ளார்.



தி.மு.க-வில் சட்டமன்ற, நாடாளுமன்ற வேட்பாளர் பட்டியலை ஒரு முறை நீங்கள் வாங்கிப் பாருங்கள். தலைவர் கலைஞர் அவர்கள் நுட்பமான ஒரு பங்கீட்டை அதில் பாங்குடன் செய்திருப்பார். கட்சிக்காக உழைத்தவர்கள், கட்சியின் மூத்த முன்னோடிகள், குறிப்பிட்ட தொகுதியில் மக்கள் மத்தியில் செல்வாக்கானவர் கள், இளைஞர்கள், பட்டதாரிகள், பெண்கள், சிறுபான்மையினர் எனப் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையிலும் வேட்பாளர்களை கலைஞர் தேர்வு செய்திருப்பார்.  


லாட்டரிச் சீட்டு குலுக்கலில் பரிசு விழுந்ததைப் போல, அமைச்சர் பதவிகளும் தேர்தலில் நிற்பதற்கான வாய்ப்புகளும் சில கட்சிகளில் வழங்கப்படுகின்றன. தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை அடிப்படையாகக்கொண்ட அவற்றை இலக்கணமாகவோ முன்மாதிரியாகவோ எடுத்துக்கொள்ள முடியாது!''



பி.முத்தையா, சாத்தூர்.


''தந்தை கலைஞர், தலைவர் கலைஞர்... எப்படிப் பார்க்கிறீர்கள்?''


தந்தை கலைஞர் - பாசத் திருவுருவம்.  தலைவர் கலைஞர்-கண்டிப்பானவர், கறாரானவர்!''


வசந்தா காந்த், தோப்புத்துறை.


''இவ்வளவு பெரிய இடத்தில் இருந்தும் தங்களுக்கு என்று ஓர் ஆசை இருக்குமே அது என்ன?''


''எதைப் பற்றியும் எண்ணிக்கொண்டு சாய்ந்திருக்காமல், எந்தவித இடையூறும் இன்றி எல்லாவற்றையும் மறந்து குடும்பத்தாரோடு அளவளாவிக்கொண்டு இருக்க வேண்டும் என்ற ஆசைதான்!''



எஸ்.பவதாரிணி சீனிவாசன், ஆலத்தம்பாடி.


''நீங்கள் சென்னை மாநகர மேயராக இருந்தபோது, தமிழக முதல்வராக ஜெயலலிதா இருந்தார். அப்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?''



''சென்னை மக்களுக்கு எந்த நலத் திட்டங்களையும் வெற்றிகரமாகச் செய்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக ஜெயலலிதா இருந்தார். முடிந்த வரை எங்களைச் செயல்படவிடாமல் தடுத்தார். தன்னுடைய சர்வாதிகாரச் சிந்தனைக்கு ஏற்ப ஒரு சட்டத்தைக் கொண்டுவந்து, என்னைப் பதவி நீக்கம் செய்யத் துடித்தார். சென்னை மாநகர மக்களுக்கு நான் சேவை செய்வதில் ஜெயலலிதா ஏற்படுத்திய தடைகளைத் தாண்ட வேண்டும் என்ற வேகத்துடனேயே அப்போதைய எனது ஒவ்வொரு நாளும் கழிந்தது!''



ஆர்.விஜயராஜன், தூத்துக்குடி.


''செயல் தலைவர் ஆகப்போகிறீர்களாமே?''


''நான் எப்போதுமே செயல்படுபவன்தான்!''


அடுத்த வாரம்...


''சாதி பற்றிப் பேசியே ஆட்சிக்கு வந்துவிடலாம் என்ற எண்ணத்தில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசும் ராமதாஸ், மீண்டும் தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு வந்தால், சேர்த்துக்கொள்வீர்களா?''


''கடந்த ஆட்சியின்போது உங்கள் குடும்ப உறுப்பினர்கள் அரசியலிலும் சினிமாவிலும் ஆதிக்கம் செலுத்தியது உண்மைதானே?''




''கலைஞரின் மகனாக இல்லாமல் இருந்தால், நீங்கள் அரசியலுக்குள் நுழைந்திருப்பீர் களா?''


- இன்னும் பேசுவோம்...


thanx - vikatan 


டிஸ்கி - அழகிரி உங்களுக்குப்போட்டியா ? ஸ்டாலின் பேட்டி ( பாகம் 1)

http://www.adrasaka.com/2012/12/blog-post_27.html

திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின் பேட்டி பாகம் 3 -

http://www.adrasaka.com/2013/01/2016.html

 

Thursday, December 27, 2012

அழகிரி உங்களுக்கு போட்டித் தலைவரா?'' - மு க ஸ்டாலின் சமாளிஃபிகேஷன் பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg4RcqHDJjgAII8Q_sr2yPcFI6mKwxuuiJKTn7quwc3uXc-syYXvq5Gs46PAl9Fg1t_uDVBKeXMe64wsdqGHTksAR4a89zabbKdzJY1Td4mzz5FY2r1P4pkxSMHnkozQhnCDwVuZEJ1OUY/s1600/mkstalininterview.jpgவிகடன் மேடை - ஸ்டாலின்

படங்கள் : சு.குமரேசன்
என்.எஸ்.மாதேஸ்வரன், ஓசூர்.


''நீங்கள் பின்பற்றும் தாரக மந்திரம் எது?''


''கலைஞர்! என் ரத்தத்தில், என் மூச்சில், என் செயலில் கலந்து இயக்கிக்கொண்டிருக்கும் மந்திரச் சொல். என்னை மட்டுமல்ல... லட்சக் கணக்கான உடன்பிறப்புகளை எழுச்சியும் உணர்ச்சியும் கொள்ளச் செய்து, எப்போதும் இயக்கிக்கொண்டு இருக்கும் வார்த்தையும் அதுதான்!''


அம்மா..?''


 
''அவர் பாசத்தின் ஊற்று. அனைவரையும் அரவணைக்கும் தென்றல் காற்று. சோர்ந்து வருகையில் தலை கோதி ஆறுதல் வார்த்தை களால் கவலைகளைக் கரைந்துவிடச் செய்பவர். தெளிவானவர். குழப்பமான நேரங்களில் சிக்க லான பிரச்னைகளைக்கூடத் தனது அனுபவ ஆற்றலால் எளிதில் தீர்க்கும் ஆலோசனைகளைச் சொல்லக்கூடியவர். தயாளு அம்மாவைப் பற்றித் தானே நீங்கள் கேட்டீர்கள்!''




கே.தமிழகன், உளுந்தூர்பேட்டை.


''உங்களது சகோதர, சகோதரிகள்பற்றிய உங்களது அபிப்பிராயம் என்ன?'

'
''முத்து - மூத்தவர். கலை வசமானவர். 'அந்த மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா’ பாட்டை இப்போதும் கேட்கலாம். அந்தக் குரல் வசியப்படுத்தும்.



அழகிரி - அடுத்தவர். துணிச்சலானவர். 'அன்பே துணை’ என்பவர்.



செல்வி - தனது சிரிப்பால் குடும்பத்தை வழிநடத்தும் திறமை சாலி. பலமாகவும் பாலமாகவும் இருப்பவர்.


தமிழரசு - அடக்கமானவர். அதே சமயம் ஆற்றலாளர்.

கனிமொழி - என் அன்பான சகோதரி. கற்பனைத் திறன்மிக்க கவிஞர்!''



ம.கார்த்தி, அவனியாபுரம்.


''எம்.ஜி.ஆருடனான உங்களது அனுபவங்களைப்பகிர்ந்து கொள்ளுங்களேன்?''



''எம்.ஜி.ஆர். தன்னுடைய படங்கள் வெளியாகும்போது எல்லாம் என்னிடம் பார்க்கச் சொல்வார். கருத்துக் கேட்பார். நான் என்ன சொல்கிறேன் என்பதை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருந்தார். அண்ணா அவர்களின் பிறந்த நாள் விழாவை நான் கோபாலபுரம் இளைஞர் தி.மு.க. சார்பில் நடத்தியபோது கலந்துகொண்ட எம்.ஜி.ஆர். அவர்கள், 'இந்த இளைஞர்களைப் பார்த்து நான் பெருமைப்படு கிறேன். இவர்கள் முகத்தில் இருந்த ஆர்வத்தையும் மகிழ்ச்சியையும் பார்த்தபோது, தியாகம் செய்யும் பரம்பரை என்பது தெரிகிறது. இந்தப் பரம்பரை பாதுகாக்கப்பட்டால், நாட்டின் எதிர்காலம் சிறப்பு அடையும்’ என்று சொன்னது இன்றும் என் நினைவில் நிற்கிறது.


1971-ம் ஆண்டில் 'முரசே முழங்கு’ என்ற பிரசார நாடகத்தை நான் நடத்தினேன். அதற்குத் தலைமை தாங்க எம்.ஜி.ஆரை அழைத்தேன். அவரும் வருவதற்கு ஒப்புக்கொண்டார். நாங்கள் அரங்கேற்றம் செய்த இடம் சைதை தேரடித் திடல் திறந்தவெளி அரங்கம். தலைமை தாங்கிப் பாராட்டிய அவர், தரையில் அமர்ந்து இறுதி வரை நாடகத்தைப் பார்த்தார். நாற்காலியில் உட்கார்ந்து பார்த்தால் பின்னால் கீழே உட்கார்ந்து பார்ப்பவர்களுக்கு மறைக்கும் என்பதால், அவர் அப்படித் தரையில் உட்கார்ந்தார்!''



சு.பாஸ்கர், சேலம்-4.


'' 'ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தை எத்தனை தடவை பார்த்தீர்கள்? உதயநிதி நடித்த காட்சி கள் உங்களுக்குப் பிடித்தனவா?''


''திரை அரங்குகளில் வெளியிடுவதற்கு முன்பும் வெளியிட்ட பின்புமாக இரண்டு முறை பார்த்தேன். உதயநிதி மிக நன்றாக நடித்து இருந்தார். அனைவருமே அவரது நடிப்பைப் பாராட்டியது எனக்கு மிகுந்த மகிழ்ச்சி!''



சில்வியா ஜோஸஃபின், ஈரோடு.



''இன்றைய மின்வெட்டுப் பிரச்னைக்கு முந்தைய தி.மு.க. ஆட்சியும்தானே பொறுப்பு ஏற்க வேண்டும்?''



''தலைவர் கலைஞர் அவர்கள் குறிப்பிட்டு இருப்பதைப்போல, 'கழக ஆட்சியில் மின்வெட்டு கடுகளவு; அ.தி.மு.க. ஆட்சியில் கடல் அளவு’! கழகம் ஆட்சியில் இருந்தபோது, வளரும் மின்சாரத் தேவையையும் எதிர்காலத் தேவையை யும் கருத்தில்கொண்டு சுமார் 7,000 மெகாவாட் மின் உற்பத்திக்கான திட்டங்கள் தீட்டப்பட்டுப் பணிகள் தொடங்கப்பட்டன. 


மின்சாரம் என்பது இன்று நினைத்து, நாளையே உற்பத்தி செய்யக் கூடிய பொருள் அல்ல. கழக ஆட்சியில் பணிகள் தொடங்கப்பட்டவை என்ற காழ்ப்பு உணர்ச்சி காரணமாகவே அ.தி.மு.க-வினர் அந்தத் திட்டங் களைக் கவனிப்பாரற்றுக் கிடப்பில் போட்டு விட்டனர். அதனால்தான், இன்றைக்கு வரலாறு காணாத மின்வெட்டு தமிழகத்தை வாட்டி வதைத்துக்கொண்டு இருக்கிறது!''



கே.அன்வர் பாட்ஷா, பெரம்பலூர்.


''அழகிரி உங்களுக்கு போட்டித் தலைவரா?''


''அது சிலரது கற்பனை. சிலர் அமில எண்ணத்தோடு ஊன்றும் நச்சு விதை. சகோதரர்களாகிய எங்களுக்கும் கட்சியில் உள்ள சகல ருக்கும் கலைஞர் ஒருவரே தலைவர்!''



கே.சுரேஷ்பாபு, ஜோலார்பேட்டை.


''உங்கள் நினைவில் நிற்கும் ஒரு கடை நிலைத் தொண்டர் பெயரைச் சொல்லுங்கள். அவர் எதனால் உங்களது மனதில் இடம்பிடித்தார்?''


''இளைஞர் அணி வளர்ச்சி நிதி சேர்த்திடுவதற்காக பல ஆண்டுகளுக்கு முன்னர் கொடிஏற்று விழா, பொதுக்கூட்டங்கள் போன்ற நிகழ்ச்சிகளில் நான் கலந்துகொள்வதற்காக 100 ரூபாய் கட்டணம் நிர்ணயித்து வசூலித்தோம். நாகப்பட்டினத்தில் அப்படி ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டேன். அப்போது நிகழ்ச்சியை நடத்திக்கொண்டு இருந்த ஒரு தோழரிடம், 'கொடிஏற்றுவதற்கான 100 ரூபாய் நிதி எங்கே? கொடுங்கள்!’ என்று கேட்டேன். 




அவர், 'கொடியை ஏற்றுங்கள் தருகிறேன்’ என்று என்னிடம் கூறிக்கொண்டே, 'வட்டச் செயலாளர் எங்கே? வட்டச் செயலாளர் எங்கே?’ என்று கேட்டுக்கொண்டு இருந்தார். கடைசி வரை பணம் வரவில்லை. பின்னர் அங்கிருந்து வேறு நிகழ்ச்சிக்குப் போகும்போது ஒரு நண்பர் சொன்னார், 'கொடி ஏற்றுங்கள்’ என்று உங்களிடம் சொல்லிக்கொண்டே வட்டச் செயலாளரை அழைத்தாரே... அவர்தான் வட்டச் செயலாளர்’ என்று. அவர் நிதி தராமல் ஏமாற்றிவிட்டாரே என்று நான் வருத்தப்படவில்லை. கட்டணம் இல்லாமலேயே எப்படியோ சமாளித்து தனது கட்சிப் பணியைத் திறம்பட நிறைவேற்றிவிட்டாரே என்றுதான் நினைத்தேன். அந்த வட்டச் செயலாளரை என்றுமே என்னால் மறக்க முடியாது!''



ஆர்.ராஜேந்திரன், திருநெல்வேலி.


''நீங்கள் உடல் தானம் செய்துள்ளீர்கள். அதற்கு உங்களைத் தூண்டியது எது? அல்லது யார்?''



''மியாட் மருத்துவமனையில் உடல் உறுப்பு தானம் செய்யும் நிகழ்ச்சியைத் தொடங்கிவைக்க என்னை அழைத்து இருந்தார்கள். அந்த நிகழ்ச்சி யில் பங்கேற்ற எனது துணைவியார், உடல் உறுப்பு தானம் செய்வதாக முடிவு எடுத்து, முன்கூட்டியே அதற்கான விண்ணப்பத்தினை மருத்துவமனையில் பெற்று, பூர்த்தி செய்து அதை நிகழ்ச்சியில் வழங்கினார். அப்போது எனக்கும் அந்த உந்துதல் ஏற்பட்டு, என் உடல் உறுப்புகளைத் தானம் செய்வதற்கான முடிவை அந்த நிகழ்ச்சியிலேயே அறிவித்தேன்!'



கே.ரீகன், உடுமலைப்பேட்டை.



''எப்போதும் ஒல்லியாகவே இருக்கிறீர்களே? குண்டாக மாட்டீர்களா?''


''தலைக்கனம் மட்டுமல்ல, சதைக்கனமும் கூடாது. குண்டாகாத உடல்வாகு இயற்கையாகவே எனக்கு அமைந்தது!''



எஸ்.கஸ்தூரி, ராஜபாளையம்.


''அண்ணாவுடன் உங்களுக்கு நல்ல அறிமுகம் இருந்ததா?''



 ''பேரறிஞர் பெருந்தகையை வைத்து ஒரு விழா நடத்த முயற்சித்தேன். 'கோபாலபுரம் இளைஞர் தி.மு.க.’ என்ற அமைப்பை நான் 1968 காலகட்டத்தில் நடத்திவந்தேன். அப்போது அண்ணா முதல்வராக இருந்தார். அண்ணாவின் பிறந்த நாளுக்கு அண்ணாவை அழைப்பதுதான் எங்களது திட்டம். நாங்கள் ஒரு தேதியைச் சொல்லிக் கேட்டோம். அண்ணா அவர்கள் வேறு தேதி சொன்னார்கள். ஆனால், நாங்கள் குறித்த தேதியில்தான் அண்ணா வர வேண்டும் என்று சொன்னோம். அதற்கு அண்ணா ஒப்புக்கொண்டார்.



'உங்க அப்பாவைப் போலவே அடம்பிடித்துக் காரியத்தைச் சாதித்துவிட்டாயே!’ என்று அண்ணா அவர்கள் அப்போது சொன்னார்கள். அதற்குள் அவரது உடல்நலன் பாதிக்கப்படுகிறது. அமெரிக்கா செல்கிறார். அப்போதும் விழாவுக்கான வாழ்த்துச் சொல்லிவிட்டுத்தான் சென்றார்.


காலம் நம்மிடம் இருந்து அந்தக் காவியத் தலைவரை வெகு சீக்கிரமாகப் பிரித்துவிட்டது!''


ஜே.ஜான் பிரிட்டோ, தஞ்சாவூர்-5.


''ஏன்டா அரசியலுக்கு வந்தோம் என்று நினைத்தது உண்டா?''



''இல்லை. அரசியலை விரும்பி ஏற்றுக்கொண்டு இவ்வளவு தூரம் வந்துவிட்ட பிறகு, ஏன் வந்தோம் என எண்ணுவதில் என்ன பயன்? நான் எதிர்மறை எண்ணங்களுக்கு எப்போதும் இடம்கொடுப்பது இல்லை.''


ஆ.சரவணன், கோவில்பட்டி.


''ஜெயலலிதாவிடம் உங்களுக்குப் பிடித்த விஷயம்?''



 ''பிடிவாத குணம். அது நல்ல விஷயங்களில் இருந்திருந்தால் பாராட்டலாம். பிடிக்காத விஷயங்களே நிறைந்து இருக்கும்போது, பிடித்த விஷயம் இருக்கிறதா எனத் தேடுவதில் என்ன பயன்?''



அடுத்த வாரம்...


'' 'கொள்கை... கொள்கை’ என்று பேசுகிறீர்களே... உங்கள் கட்சிக்கு என்னதான் கொள்கை?'' 


''காலம் கடந்து நடந்த டெசோ மாநாட்டால் என்ன பயன்?''


''கருணாநிதி தனது மகனைத் தலைவராக நியமனம் செய்யவிருக்கும் கட்சியை, ஜனநாயக இயக்கம் என்று எப்படிச் சொல்ல முடியும்?''


- இன்னும் பேசுவோம்...

நன்றி - விகடன்  

 -கட்சிக்காக உழைச்ச யாரையும் மதிக்க மாட்டேங்கிறீங்க...? ஏன்? மு க ஸ்டாலின் பேட்டி பாகம் 2   http://www.adrasaka.com/2013/01/blog-post_1472.html


 திராவிடக் கட்சிகள் தமிழகத்தைக் குட்டிச்சுவராக்கிவிட்டனவா? 2016-ன் தமிழக சி .எம் .மு. க .ஸ்டாலின் பேட்டி பாகம் 3 -

http://www.adrasaka.com/2013/01/2016.html

\
டிஸ்கி - பாகம் 4 - எனது உடல்நிலைகுறித்து ஊகமான விபரீத வதந்திகள் - மு க ஸ்டாலின் பேட்டி @ விகடன்

http://www.adrasaka.com/2013/01/blog-post_17.html


 



டிஸ்கி -இந்த வார விக்டனில் என் ஜோக்ஸ் 2 வந்திருக்கு 

ஜோக்ஸ் 8

ஓவியங்கள் : ஹரன்





ஜோக்ஸ் 7

ஓவியங்கள் : ஹரன்