பல்வேறு சிக்கல்களுக்கிடையே கடந்த 2015-ம் ஆண்டு தமிழ் திரையுலகம் இயங்கிவந்தது. அந்தப் பிரச்சினைகள் அனைத்துமே 2016லும் தொடர்கின்றன. அதற்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டால், 2016-ம் ஆண்டு தமிழ் திரையுலகம் நல்ல லாபத்தில் இயங்கத் தொடங்கும் என்கிறார்கள் திரையுலக வட்டாரத்தினர். அவர்கள் குறிப்பிட்ட சில பிரச்சினைகளின் பட்டியல்:
தொலைக்காட்சி உரிமை
அனைவருமே முக்கியப் பிரச்சினையாகக் கருதுவது இதைத்தான். பெரிய நடிகர்களின் படங்களைப் போட்டிபோட்டுக்கொண்டு வாங்கிய தொலைக்காட்சி நிறுவனங்கள், அப்படங்களின் படுதோல்வியால் தாங்கள் கொடுத்த பணத்தை எண்ணிப் பதறின. அதற்குச் சான்றாக ‘மாஸு', ‘புலி' ஆகியவற்றைச் சொல்லலாம், ஏனென்றால் இரண்டு படங்களின் தொலைக்காட்சி உரிமையும் 20 கோடிக்கும் அதிகம் என்கிறார்கள்.
இந்த ஆண்டும் இந்தப் பிரச்சினை தொடர்கிறது. தொலைக்காட்சி உரிமம் விற்காத படங்களை வாங்க வைக்கத் தயாரிப்பாளர் சங்கம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. மேலும், சிறு முதலீட்டுப் படங்களைக் கண்டிப்பாக வாங்க வேண்டும் என்று கெடுபிடி செய்ததில், சில தொலைக்காட்சி நிறுவனங்கள் சிறு முதலீட்டுப் படங்களை வாங்கியிருக்கிறார்கள். ஆனால், இந்தப் பிரச்சினை இன்னும் முடிந்தபாடில்லை.
சம்பள உயர்வு
நடிகர்களின் சம்பளம் உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு படம் வெற்றியடைந்துவிட்டால், சம்பளத்தை உடனடியாக உயர்த்திவிடுகிறார்கள். ஆனால் அடுத்த வெற்றி என்பது எப்படி என்றால், ஒரு ஏரியா விநியோகம் 8 கோடிக்கு வாங்கப்பட்டு 8.08 கோடி வசூலித்தால் போதும் உடனே வெற்றி என்று நினைத்துவிடுகிறார்கள். அந்த நடிகரோ அடுத்த படத்துக்கு சம்பளத்தைக் கணிசமாக உயர்த்திவிடுகிறார்.
இப்போது இந்தப் பட்டியலில் இயக்குநர்களும் சேர்த்திருக்கிறார்கள். வளர்ந்துவரும் இயக்குநர் ஒருவர் முதல் படத்தின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இவ்வளவு குறைந்த முதலீட்டில் ஒரு படமா என்று வியக்கவும் வைத்தார். அடுத்த படத்தில் தயாரிப்புச் செலவு அதிகமானதால், தயாரிப்பாளருக்கும் இயக்குநருக்கும் சண்டை ஏற்பட்டது. இப்போதும் ஒரு படத்தை இயக்கி வெளியீட்டுக்குக் காத்துக்கொண்டிருக்கிறார். அவர் அடுத்து இயக்கவிருக்கும் படத்துக்குக் கேட்ட சம்பளம் சுமார் 6 கோடி. நடிகர்கள், இயக்குநர்கள் என்றில்லை, தொழில்நுட்பக் கலைஞர்களும் தங்கள் திறமை மற்றும் முந்தைய வெற்றிகளை எடுத்துக் கூறி சம்பளத்தை உயர்த்திவிட்டதால், படத்தின் வியாபாரச் செலவு என்பது எங்கேயோ போய்விடுகிறது என்ற புலம்பல் முன்பைவிட கோலிவுட்டில் அதிகமாகக் கேட்கிறது. இந்தப் பிரச்சினைக்குத் தயாரிப்பாளர் சங்கம் முடிவுகட்ட வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துவருகிறார்கள்.
தணிக்கை மற்றும் வணிக வரி
படத்துக்கு 'யு' சான்றிதழ் இருந்தால் மட்டுமே தமிழக அரசு வரிவிலக்கு அளித்துவருகிறது. இதனால் இயக்குநர்கள் கடும் நெருக்கடியில் இருக்கிறார்கள். படத்தை முடித்து தணிக்கைக் குழுவிடம் கண்டிப்பாக 'யு' சான்றிதழ் வாங்கியாக வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதனால் பல படங்களில் தயாரிப்பாளர்கள் இயக்குநர்கள் ஆகிய இரு தரப்பினருக்கும் இடையே மனஸ்தாபம் ஏற்பட்டது.
கடந்த ஆண்டு ‘ஸ்பெக்டர்’ என்ற ஜேம்ஸ்பாண்ட் படத்தில் சில காட்சிகள் நீக்கப்பட்டது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. சென்சார் அதிகாரிகளுக்கு எதிராகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்திய அளவில் வெடித்தன. இந்நிலையில் தணிக்கைக் குழுவைச் சீரமைக்கப் பிரபல இயக்குநர் ஷியாம் பெனகல் தலைமையில் 6 பேர் கொண்ட சிறப்புக் குழுவை மத்திய அரசு நியமித்திருக்கிறது. இந்தக் குழு ஆராய்ந்து தரும் அறிக்கைக்கு ஏற்ப தணிக்கைக் குழு சீரமைக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம்.
விநியோகஸ்தர்களின் குழப்பம்
ஆண்டுதோறும் இப்பிரச்சினைக்கு மட்டும் ஒரு முற்றுப்புள்ளி என்பதே கிடையாது. தமிழகத்தில் சுமார் 1,050 திரையரங்குகள் இருக்கின்றன. ஆனால், வாரம்தோறும் சுமார் நான்கு படங்கள் வெளியாகின்றன. ஏதாவது ஓரிரு வாரங்கள் மட்டுமே ஒன்று அல்லது இரண்டு படங்கள் வெளியாகின்றன. முன்பே பேசி வைத்து, நாங்கள் இந்த தேதியில் வெளியிடவிருக்கிறோம் என்ற கலாசாரம் தமிழ்த் திரையுலகில் தற்போதுதான் தோன்றியிருக்கிறது. ஆனால், ஒரே வாரத்தில் பல படங்கள் வெளியாவதால், விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்களிடையே எந்தப் படத்துக்கு முன்னுரிமை அளிப்பது என்பதில் குழப்பம் நீடித்துவருகிறது.
தற்போது பொங்கல் வெளியீடாக ‘ரஜினி முருகன்', ‘கதகளி', ‘கெத்து' மற்றும் ‘தாரை தப்பட்டை' ஆகிய படங்கள் திரையரங்க ஒப்பந்தத்தில் போட்டியிட்டுவருகின்றன. ‘ரஜினி முருகன்' பலமுறை வெளியீடு என்று திட்டமிடப்பட்டு ஒத்தி வைக்கப்பட்டிருப்பதால், இந்த முறை வெளியிட்டே ஆக வேண்டும் என்ற முனைப்பில் களம் இறங்கியிருக்கிறார்கள். சரியாகத் திட்டமிட்டுத் தயாரிப்பாளர்களுக்குள் ஒரு இணக்கமான சூழ்நிலை உருவாகாத வரை இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்கவே முடியாது என்கிறார்கள் திரையுலக வட்டாரத்தினர்.
thanx - the hindu