Showing posts with label தமிழ் நாடு. Show all posts
Showing posts with label தமிழ் நாடு. Show all posts

Wednesday, January 02, 2013

பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் - ஜெ அதிரடி அறிவுப்புகள்

டில்லியில் மருத்துவ மாணவி மீதான பாலியல் பலாத்கார சம்பவத்தைத் தொடர்ந்து, இத்தகைய குற்றங்களை தடுக்க, கடுமையான சட்டங்களை கொண்டுவர வேண்டும் என, நாடு முழுவதும் குரல் எழுந்து வருகிறது.



இந்நிலையில், முதல்வர் ஜெயலலிதா, பாலியல் பலாத்காரத்தில் ஈடுபடுவோர் மீது, குண்டர் சட்டம் பாய வழி செய்யப்படும் என்பது உட்பட, பல்வேறு நடவடிக்கைகளை அறிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.



தலைநகர் டில்லியில், கடந்த மாதம், மருத்துவ மாணவி ஒருவர், பஸ்சில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கி வீசப்பட்டார். மருத்துவ சிகிச்சை பலனின்றி, மாணவி இறந்ததையடுத்து, பாலியல் வன்முறைக்கெதிராக, நாடு முழுவதும் பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன."இத்தகைய குற்றங்களை புரிவோர் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தும், போராட்டங்கள் கட்டுக்குள் வரவில்லை. 



இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று, பொதுமக்கள் தரப்பில் இருந்து குரல் ஓங்கியுள்ளது. பல மாநில முதல்வர்களும், இக்கருத்தை ஆமோதித்து, ஆதரவளித்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, நேற்று, பாலியல் வன்முறையில் ஈடுபடுவோர் மீதான அரசு நடவடிக்கை குறித்த, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.


நடவடிக்கை


இதன்படி, பாலியல் வன்முறை வழக்குகள், கொடுங்குற்றங்களாக கருதப்பட்டு, இன்ஸ்பெக்டர்கள் புலன் விசாரணை செய்வர்; டி.எஸ்.பி.,க்கள் நேரடியாக மேற்பார்வையில் ஈடுபடுவர். முடிந்தவரை, இவ்வழக்குகளை, பெண் இன்ஸ்பெக்டர்கள், இல்லாவிட்டால், பெண் எஸ்.ஐ.,க்கள் விசாரிப்பர்.மேலும், மாவட்ட எஸ்.பி., சரக டி.ஐ.ஜி.,க்கள், வழக்கு முடியும் வரை, ஆய்வு செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது.தற்போது, நிலுவையில் இருக்கும் அனைத்து, பாலியல் வன்முறை வழக்குகளையும், மண்டல ஐ.ஜி.,க்கள் ஆய்வு செய்து, சட்டம் - ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி.,க்கு, 15 நாட்களுக்குள் அறிக்கை அனுப்பவும், 



இவ்வழக்குகளை விரைவாக முடிக்கவும், நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சட்ட திருத்தம்

இது போன்ற குற்றங்கள் மூலம், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், நடவடிக்கை எடுக்க வழி செய்யும் வகையில், குண்டர்தடுப்புச் சட்டத்தை திருத்தவும், முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

பாலியல் வன்முறை, பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க, மாவட்டம் தோறும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்கப்படுவதுடன், அந்த கோர்ட்களில், அரசு பெண் வழக்கறிஞர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.இது தவிர, 30 நாட்கள் காவல், ஜாமின், பிணையில் விடப்படுவதை தடை செய்தல், பாலியல் வன்முறையில் ஈடுபடுபவர்களுக்கு, ரசாயன முறையில் ஆண்மை நீக்கம் செய்வது, அதிகபட்சமாக, மரணதண்டனை அளிப்பது ஆகியவை குறித்த சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள, மத்திய அரசை வலியுறுத்தப் போவதாகவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். வழக்கு விசாரணை, பாதிக்கப்பட்டவர்களை, கண்ணியத்துடன் நடத்துவது குறித்தும் போலீசாருக்கு பயிற்சியளிக்கவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும், பாலியல் வன்முறையால் பாதிக்கப்படும், பெண்களுக்கு, மருத்துவ செலவிற்கான மொத்த செலவையும், அரசே ஏற்பதுடன், மறுவாழ்விற்கான உதவிகளும் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.குழந்தைகள் உதவி மையங்கள் செயல்படுவதைப் போல்,  



ஆங்காங்கே தனித்தனியாக இயங்கும் பெண்கள் உதவி தொலைபேசி சேவைகள் ஒருங்கிணைக்கப்படுகின்றன.

பொதுக்கட்டடங்கள் அனைத்திலும், கண்காணிப்பு கேமராக்கள், நிறுவப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகளவில் நடமாடும் வணிக மையங்கள்,பெண்கள் கல்வி நிறுவனங்கள் போன்ற இடங்களில், பெண்களுக்கு தொல்லை கொடுப்பவர்கள் நடமாட்டத்தை, "மப்டி' போலீசார் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு, ஏற்கனவே தண்டனை, ஆண்மை நீக்கம் உள்ளிட்டவை குறித்து தெரிவித்துள்ள நிலையில், முதல்வர் ஜெயலலிதா ஒரு படி மேலே போய், "பாலியல் பலாத்காரம் இல்லாத மாநிலமாக, தமிழகம் மாற வேண்டும் என்பதற்காக, இத்தகைய குற்றங்களுக்கு, மரணதண்டனை வழங்க சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்' என, வலியுறுத்தியுள்ளார்.

முதல்வரின் இந்த அறிவிப்பு தெடர்பாக, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், கூறும்போது, ""ஒவ்வொரு மாவட்டத்திலும் மகளிர் விரைவு கோர்ட்டுகள் அமைக்க நடவடிக்க எடுக்கப்படும் போன்ற அறிவிப்புகளை வரவேற்கிறேன். பாலியல் குற்றங்களை தடுக்க, ஆபாச சினிமாக்களுக்குமுற்றுப்புள்ளிவைக்க வேண்டும்,'' என்றார்.


 கேரளா செய்தி 


திருவனந்தபுரம்: கேரளாவில், பஸ்களில் பெண்கள் இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்கப்பட உள்ளது.கேரளாவில் ஓடும், அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ்களிலும், மொத்த இருக்கைகளில், 25 சதவீத இருக்கைகள், மகளிர், உடல் ஊனமுற்றோர், முதியவர்கள் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளன.ஆனால், பல பஸ்களில், கூட்ட நெரிசல் நேரத்தில், பெண்கள் மற்றும் சிறப்பு பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட இருக்கைகளில், ஆண்கள் பயணிக்கின்றனர். அவர்களை எழுந்திருக்கும்படி, பஸ் கண்டக்டர்களும் கேட்டுக் கொள்வதில்லை.



இதுகுறித்து புகார்கள் தெரிவிக்கப்பட்டதால், மோட்டார் வாகன சட்டம், 1988 பிரிவு, 111ல் திருத்தம் செய்ய, கேரள மாநில அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அனைத்து பஸ்களிலும் பெண்கள், உடல் ஊனமுற்றோர், முதியோர் மற்றும் பார்வையற்றோருக்காக ஒதுக்கப்பட்டுள்ள இருக்கைகளில், ஆண்கள் அமர்ந்து பயணித்தால், அவர்களிடம், 100 ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும்.இதுதொடர்பான, சட்ட திருத்த மசோதா, கேரள சட்டசபையில், விரைவில் நிறைவேற்றப்பட உள்ளது.



நன்றி - தினமலர்




Thursday, July 05, 2012

சிங்கள வீரர்களுக்கு தமிழகத்தில் பயிற்சியா ? பொங்கி எழுந்த ஜெ. + கலைஞர் குடும்பத்துக்கு 2 ஜி ஊழலில் ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?? ,

http://rajkanss.files.wordpress.com/2008/09/pg2a1.jpg 

இலங்கை தமிழர்களை கொன்று குவித்த இலங்கை ராணுவ வீரர்களுக்கு தமிழ் மண்ணில் பயிற்சி அளிப்பதை ஏற்க முடியாது என்றும் இந்த பயிற்சிக்கு வந்த இலங்கை வீரர்களை இலங்கைக்கு திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் முதல்வர் ஜெ., மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளார்.


இலங்கையில் புலிகள் ஆதிக்கத்தை ஒழிப்பதாக தமிழர்களை கொன்று குவித்த இலங்கைக்கு தமிழக கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் கூட இலங்கைக்கு எதிராக ஐ.நா.,வில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என்றும் தமிழக முதல்வர் ஜெ., மற்றும் தி.மு.க., ம.தி.மு.க., உள்ளிட்ட கட்சியினர் வலியுறுத்தி வந்தனர். பார்லி.,யிலும் எம்.பி.,க்கள் ஒட்டுமொத்தமாக பெரும் அமளியில் ஈடுபட்டனர். சட்டசபையிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு மத்திய அரசு பணிந்து இலங்கை எதிர் தீர்மானத்தை இந்தியா ஆதரித்தது.



இந்நிலையில் இலங்கை ராணுவ வீரர்களுக்கு ( விமானப்படை) இந்திய ராணுவ தரப்பில் பயிற்சி அளிக்கிறது. சென்னை அருகே தாம்பரத்தில் உள்ள விமான பயிற்சி முகாமுக்கு வீரர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். இதற்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.



இலங்கைக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் ஜெ., இன்று இது தொடர்பாக மத்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டார். இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:



நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது: இலங்கை வீரர்களுக்கு பயிற்சி அளிப்பது என்பது தமிழகத்திற்கும் , தமிழ் இனத்திற்கும் எதிரான செயல். சர்வேதச அளவில் இலங்கைக்கு எதிராக குரல் ஒலித்து வரும் போது இது போன்று பயிற்சிக்கு இந்தியா முன்வந்திருப்பது பொருத்தமற்றது. இலங்கை மீது பொருளாதார தடை விதி்க்க வேண்டும் என தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

இதற்கு மவுனம் சாதித்து வருமு் மத்திய அரசு பயிற்சி அளிப்பது தமிழர்களை அவமானப்படுத்தும் செயல் ஆகும். இந்திய அரசின் இந்த நடவடிக்கை தமிழர்களின் நெஞ்சில் வேல் பாய்ச்சுவது போல் உள்ளது. இது தமிழக மக்களின் சார்பில் எனது கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன். பன்னாட்டு போர் விதிமுறைகளை மீறி எடுக்கப்பட்ட தொடர்பானவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் இந்த நிலை கண்டிக்கத்தக்கது. இலங்கை வீரர்களை அவர்களது நாட்டிற்கு திருப்பி அனுப்பிட மத்திய அரசு முடிவு எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



கருணாநிதி கண்டனம் : இது தொடர்பாக தி.மு.க., தலைவர் கருணாநிதியும் கண்டனம் தெரிவித்துள்ளார். கருணாநிதி சார்பில் வெளியிடப்பட்ட செய்தியில்; இலங்கை ராணுவத்தினருக்கு பயிற்சி அளிப்பது கண்டிக்கத்தக்கது என்றும், உடனடியாக திரும்ப அனுப்ப வேண்டும் என்றும் கூறியுள்ளார்.


பிரதமர் கருணாநிதிக்கு கடிதம் : இலங்கை தமிழர் சீரமைப்பு மற்றும் அந்நாட்டு அமைச்சர் பேச்சு குறித்தும் சமீபத்திய ரியோடி ஜெனீரோ மாநாட்டின்போது இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஆலோசித்ததாக பிரதமர் மன்மோகன்சிங் கருணாநிதிக்கு கடிதம் ஒன்றும் அனுப்பியுள்ளார்.


http://athikalai.files.wordpress.com/2011/02/2g-cartoon.jpg


 2. கருணாநிதி குடும்பத்துக்கு ரூ.773 கோடி "கை'மாறியது எப்படி?ஆதாரம் தாக்கல்

2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு விவகாரத்தில், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்துக்கு, 773 கோடி ரூபாய் எப்படி கைமாறியது என்பதற்கான ஆதாரங்கள் தங்களிடம் உள்ளதாக, பார்லிமென்ட் கூட்டுக் குழுவிடம், மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதற்கான ஆதாரங்களையும் தாக்கல் செய்துள்ளனர்.



தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜா, தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் முறைகேடு நடந்ததாக, புகார் எழுந்தது. இதுகுறித்த வழக்கை பார்லிமென்ட் கூட்டுக் குழுவும் விசாரித்து வருகிறது. இந்நிலையில், ஸ்பெக்ட்ரம் முறைகேடு குறித்து விசாரிக்கும் மத்திய அமலாக்கப் பிரிவு அதிகாரிகள், பார்லிமென்ட் கூட்டுக் குழு முன், நேற்று முன்தினம் ஆஜராகி, சாட்சியம் அளித்தனர்.


அப்போது, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், ஆதாயம் பெற்ற நிறுவனங்கள், தி.மு.க., தலைவர் கருணாநிதி குடும்பத்தினருக்கு, 223 கோடி மற்றும் 550 கோடி ரூபாய் என, தனித் தனியாக அளித்ததற்கான ஆதாரங்கள், தங்களிடம் உள்ளதாகக் கூறினர். அந்த ஆதாரங்களையும் தாக்கல் செய்தனர்.



223 கோடி:கூட்டுக் குழுவிடம், அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாக வெளியான செய்தி:அப்போதைய தொலைத்தொடர்பு அமைச்சர் ராஜாவிடம் இருந்து, "2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு பெற்ற டி.பி., குழும நிறுவனம், அதற்கு பிரதிபலனாக 223.55 கோடி ரூபாயை, தி.மு.க., தலைவர் கருணாநிதியின் மனைவி மற்றும் மகள் பங்குதாரர்களாக உள்ள கலைஞர் "டிவி'க்கு வழங்கியது. இது தொடர்பாக, சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.டி.பி., குழுமத்திடம் இருந்து, கலைஞர்"டிவி'க்கு இந்த பணம், எந்த வழியில், எப்படி கைமாறியது என்பதற்கான பட்டியலையும் தாக்கல் செய்துள்ளோம்.



ஏர்செல் விவகாரம்:அடுத்ததாக, ஏர்செல் நிறுவனம், மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனத்துக்கு கைமாறியது. இதற்காக, மேக்சிஸ் நிறுவனம், கருணாநிதியின் உறவினர் குடும்பத்துக்குச் சொந்தமான சன் டைரக்ட் "டிவி' லிட்., நிறுவனத்தில், 549.96 கோடி ரூபாய் முதலீடு செய்தது. இது தொடர்பாகவும், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணை நடந்து வருகிறது. 


கடந்த மே மாதம், இது தொடர்பாக சி.பி.ஐ.,யுடன் இணைந்து, மலேசியாவில் விசாரணை நடத்தினோம். இன்னும் சிலமுக்கியமான தகவல்கள், மலேசிய அதிகாரிகளிடம் இருந்து வர வேண்டியுள்ளது. அதற்காக காத்திருக்கிறோம்.இவ்வாறு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgvtwsqNWE6NDerOtPlFj37dlMW7JyoLhTBcIgiMVRI1cE1MJRwRcXBwHDOWa8-KCIjD-yU78MmL7FLhX7ZmUxdrYk5wR31E0g9SMH2siGTnQaAZrP-MP6Fdimy3EEcsrqQPlnc4Whp4pnN/s1600/tamilmakkalkural_blogspot_madan_cartoon.jpg


நன்றி - தினமணி , மதி , தின மலர்