Showing posts with label தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன?. Show all posts
Showing posts with label தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன?. Show all posts

Wednesday, December 16, 2015

தமிழக முதல்வர் ஜெயலலிதா செய்தது என்ன?

வெள்ளம் ஓரளவு வடிந்துவிட்டது. ஆனால், அதன் சுவடுகள் அத்தனை எளிதில் மறைந்துவிடாது. சென்னையும் கடலூரும் வெள்ளத்தின் பாதிப்பில் இருந்து முழுமையாக விடுபட நீண்ட நெடுங்காலம் ஆகும். ஆயிரமாயிரம் மனிதர்கள் உதவிப் பணிகளை மேற்கொண்டுவருகின்றனர். ஆனால், இவை எல்லாம் நிவாரணம்தான். இந்த வரலாறு காணாத பேரழிவில் இருந்து மக்களை மீட்டெடுக்க, நிவாரணம் மட்டுமே போதாது. மறுவாழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். 

லட்சக்கணக்கான மக்கள் தங்களின் வாழ்வாதாரங்கள் அனைத்தையும் இழந்து நிற்கின்றனர். குடிசையில் வசித்தோருக்கு வீடே இல்லை; வீட்டில் வசித்தோருக்கு வீட்டில் எந்தப் பொருளும் இல்லை. முதல் தலைமுறையாக நகரத்துக்கு வந்து, பல ஆண்டுகள் கடுமையாக உழைத்து வாழ்வைத் தொடங்கிய பல்லாயிரக்கணக்கானோர் இப்போது வீதிக்கு வந்துவிட்டனர். அடுத்த நாள் வாழ்க்கைக்குத் தேவையான பொருட்களைக்கூட, இனி மீண்டும் உழைத்துத்தான் ஒவ்வொன்றாகச் சேர்க்க வேண்டும். மக்களின் அகவாழ்வும் புறவாழ்வும் கடும் நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் நிலையில், மக்களுடன் இணைந்து நிற்கவேண்டியது அரசின் கடமை. ஆனால் நடப்பது என்ன?


அடி முதல் நுனி வரை சூறையாடப்பட்டிருக்கும் லட்சக்கணக்கானோரின் வாழ்க்கை குறித்து, முதலமைச்சர் ஜெயலலிதா கொஞ்சமும் கவலைப்பட்டவராகவே தெரியவில்லை. ‘மூன்று மாதங்கள் பெய்யவேண்டிய மழை மூன்றே நாட்களில் பெய்யும்போது இப்படிப்பட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியாது’ என்று சொல்லத்தெரிந்த ‘மக்கள்’ முதல்வருக்கு, ‘இந்தப் பேரிடர் காலத்தில் எப்போதும் நான் மக்களுடன் இருப்பேன்’ எனக் காட்ட முடியவில்லை. யாரோ கொடுக்கும் நிவாரணப் பொருட்களில் தன் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்ளும் ஆற்றல்படைத்த முதல்வரே... ‘பேரிடர் நேரத்தில் எங்களைக் கைவிட்டவர்’ என, மக்கள் மனங்களில் பதிந்திருக்கும் உங்கள் சித்திரத்தை என்ன செய்வீர்கள்? அதை மறைக்க எந்த ஸ்டிக்கரை ஒட்டுவீர்கள்? 

பதில் சொல்ல ஓர் அதிகாரி இல்லை; விளக்கம் கூற ஓர் அமைச்சர் இல்லை. ஊடக கேமராக்களைக் கண்டால் எல்லோரும் ‘அம்மாவின் ஆணைக்கிணங்க’ அலறி ஓடுகின்றனர். வரலாறு காணாத பேரழிவு மாநிலத்தில் நிகழ்ந்திருக்கும் இந்த நேரத்தில், தினம் ஒருமுறையேனும் முதலமைச்சர் மக்களைச் சந்தித்திருக்க வேண்டாமா? குறைந்தபட்சம் ஊடகங்களை அழைத்து ‘இதுதான் உண்மை நிலவரம். இன்னென்ன மீட்புப் பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன’ என நிலைமையை விளக்க வேண்டாமா? ஒரே ஒருமுறை ஹெலிகாப்டரில் பறந்து வான்வழியாக சென்னையின் வெள்ளச் சேதங்களைப் பார்வையிட்டதைத் தவிர, ஜெயலலிதா செய்தது என்ன? 
 
‘ஒரு குடும்பத்துக்கு ஐந்தாயிரம் பணம் தந்துவிட்டால் எல்லாவற்றையும் சரிக்கட்டிவிடலாம்’ என ஜெயலலிதா நினைக்கிறார். அதில் தேர்தல் கணக்கும் இருக்கிறது. ஆனால், அது தப்புக்கணக்கு. ஏனெனில், மக்களிடம் இப்போது இழப்பதற்கு எதுவும் இல்லை. இருந்ததை இழந்தது யாரால் என்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அரசியல், அதிகாரக் கூட்டின் லாபவெறிப் பேராசைக்கு, தங்கள் வாழ்வு பலி கொடுக்கப்பட்டிருக்கும் உண்மையை வீதிக்கு வீதி, வீடுக்கு வீடு  பேசுகின்றனர். அந்த உண்மையின் சூட்டை எதிர்கொள்ள ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் இருந்து இறங்கி வீதிக்கு வர வேண்டும். ஏனெனில், அங்குதான் ‘வாக்காளப் பெருமக்கள்’ எனும் மக்கள் வசிக்கிறார்கள். வீதிக்கு வாருங்கள் தமிழக முதல்வர் அவர்களே!

-விகடன்