வழக்கம் போல் நல்லதோர் வெள்ளிக்கிழமையில் வெள்ளித்திரையில் வெளியான - பாபநாசம் என்ற திரைப்படம், எந்தவொரு பிரச்னையும் இல்லாமல், சமுக ஆர்வலர்களின் ஏகோபித்த எதிர்ப்புகள் இல்லாமல், ஏன் எந்த அரசியல் தலைவர்களின் கண்டன அறிக்கைகள் இல்லாமல், சாதிச் சமயச் சங்கங்களின் ஆவேச அறிக்கைகள் இல்லாமல், பாடல் வெளியிடப்பட்ட அன்றே படத்தை போட்டு காட்டச் சொல்லும் தொல்லைகள் இல்லாமல், ஆத்திகர் என்றும், நாத்திகர் என்றும் சச்சரவுகள் இல்லாமல் மூன்று நான்கு முறைகள் வெளியிட்டு தேதியை தள்ளிப் போடப்பட்டது என்றும் இல்லாமல், கடைசியாக தமிழக அரசின் தலையிடே இல்லாமல், அட கமல்ஹாசன் நடித்தப் படம் என்று தெரிந்தும், முன்னரே அறிவித்த தேதியில் (தமிழகத்தில்) படம் வெளியானது, தமிழக மக்கள் பலரையும் மட்டுமல்ல, கமலைக் கூட ஆச்சர்யம் அடைய வைத்திருக்கும்.
படம் வெளிவந்து ஒரு வாரமாகியும், கீழ்கண்டவைகளை காணவில்லை!
நெட்டிசன்ஸ் கலாய் கட்டுரைகள், சினிமா ஆர்வ(கோ)லர்களின் கண்டுபிடித்த கொரிய / ஆங்கில / ஆப்பிரிக்க படங்களின் சாயல் என்று சீன் போடும் சிந்தனை சிற்பிகள், சுயம்பு லிங்கத்திற்கும், ஜார்ஜ் குட்டிக்கும் உள்ள ஆறு வித்தியாசம் கண்டுப்பிடிப்பவர்கள், திரிஷ்யமிடமிருந்து தீயின் திரியைப் பற்றி விடுபவர்கள், அட படத்தக் காமெடி செய்து மீமீ கூட இல்லப்பா என்ற யோசனைகள் எழுந்த வேளையில்.. சுடச்சுட ஒரு செய்தி.
கேளிக்கை வரி விலக்கு அளிப்பதற்குத் தகுதியானது அல்ல பாபநாசம் படம் என தேர்வுக் குழு உறுப்பினர்களால் பரிந்துரைக்கப்பட்டதால், தமிழக அரசு வரி விலக்கு அளிக்க மறுத்து விட்டது.
பரிந்துரைக்கப்பட்ட காரணிகள்:
* தனி மனிதன் தன் குடும்பத்திற்காகச் செய்த கொலையை, பொய்கள் மற்றும் பொய் சாட்சிகள் கூறி, தண்டனையில் இருந்து தப்பிக்க நினைப்பது ஏற்புடையதாக இல்லை.
* போலீஸ் துறையில் பணிபுரியும் உயர் அதிகாரி, தன் மகனுக்காக குற்றத்தைப் பதிவு செய்யாமல், அதிகார துஷ்பிரயோகம் செய்வது, ஏற்புடையதாக இல்லை.
* போலீஸ் அதிகாரிகள், விசாரணை என்ற பெயரில், சிறுமி முதல் குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களையும் அடித்துத் துன்புறுத்துவது, வன்முறையின் உச்சமாக உள்ளது.
* 'ஹீரோ' கை விரல்களை ஒடிப்பது பார்க்க முடியவில்லை.
* குற்றம் செய்தவர், தண்டனை அனுபவிக்க வேண்டும்.
* தவறு செய்த மனிதன், ஆற்றில் குளித்து விட்டால், பாவம் தொலைந்துவிடும் என்ற கருத்தை வலியுறுத்துவது ஏற்புடையதாக இல்லை.
அடடே தமிழக அரசுக்கு மேற்கொண்ட பரிந்துரையில் இவ்வளவு அக்கறையா என்று பூரித்து பொங்க வேண்டாம். முதலில் இந்த பரிந்துரைகளை தமிழக அரசு அவர்களது தற்போதைய அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்தி உள்ளதாயென்று நினைவுக் கூர்ந்து பாருங்கள்.
ஒரு திரைப்படத்திற்காக, எவ்வாறு தமிழக அரசின் செயல்பாடுகளை குறைக் கூற முடியும் என்று வினா எழுப்பிவீர்கள் என்றால், என் கேள்வி இதுதான்!
திரைப்படத்தின் கதையோ, கதாபாத்திரமோ, சம்பவங்களோ, நடிகரோ, நடிகையோ, கொலைகளோ, வன்முறைகளோ எப்படி சமூகத்தையும் சமுதாயத்தையும் சீரழிக்கும் என்ற எண்ணத்தில் திரைப்படத்திற்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கும் தமிழக அரசின் செயல்பாடுகள் சரியென்று நீங்கள் நினைத்தால், என் நேர்மறையான எண்ணங்களுக்கு, உங்கள் நேர்மையான உள்ளம் ஒத்துழைக்கும்.
கவனிக்க:
திரைக்கதையின்படி குடும்பத் தலைவன், செய்த தவறுக்கு பொய் சாட்சிச் சொல்வது நீதிமன்றத்தில் அல்ல என்பதை நினைவில் கொள்க. பொய் சொல்வதும், பொய்ச் சாட்சி சொல்வதும் எற்புடையதாக இல்லையென்றால் திரைப்படம் என்பதே கற்பனைதான்; யாரும் நிகழ்காலத்தை படம் பிடித்து திரைப்படமாய் வெளியிடுவதில்லை.
அப்படியென்றால், 'இக்கதையில் வரும் சம்பவங்களும், கதாபாத்திரங்களும் உண்மை அல்ல, கற்பனைகளே' என்ற முகவரியுடன் திரையிடும் அனைத்துத் திரைப்படங்களும் ஏற்புடையதான படங்கள் இல்லையா?
காவல்துறைகளின் அதிகார துஷ்பிரயோகத்தையும், விசாரணை என்ற பெயரில் நடக்கும் வன்முறைக் காட்சியமைப்புகளையும் ஏற்புடையதாக இல்லை என்று சொல்லும் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு, காவல்துறையில் நடக்கும் மாமூலான நடவடிக்கைகள் பற்றித் தெரியாதா? அண்மையில் ஆம்பூரில் நடந்த காவல்துறை விசாரணைக் கொலையில் நடந்தவை என்ன என்பது அனைவருக்கும் தெரியாதா? திரைமறைவில் நடக்கும் சம்பவங்களை பற்றி இவ்வரசுக்கு கவலையில்லை, ஆனால், அவை திரையில் காட்டினால் மட்டும் ஏற்புடையதாக இல்லையா?
குற்றம் செய்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டுமென்றால், சிறைச்சாலையில் எத்தனையோ கைதிகள், விசாரணைக் கைதிகளாக தண்டனை காலம் முடிந்தும் இரும்பு கம்பிகளின் பின்னால் நின்று கொண்டு இருக்கிறார்கள் என்று தெரியுமா?
பாபநாசம் ஆற்றில் மூழ்கியாவது, தீராப் பாவத்தை கொஞ்சக் கொஞ்சமாய் தீர்க்க முற்படுவேன் என சுயம்புலிங்கம் கதறுவது, படத்தில் வலியுறுத்தும் கருத்தல்ல; அவை அங்குள்ள மக்களின் நம்பிக்கை, அவைகளை தேர்வுக்குழு உறுப்பினர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் 'நீ்... கருப்புச்சட்டையா?' என்றுதான் கேட்கத் தோன்றுகிறது.
பாபநாசம் என்ற பெயர் வந்ததே, அதன் ஆற்றில் குளித்தால் நம் பாவத்தை நாசம் செய்யும் என்ற நம்பிக்கையில்தான், அப்படியென்றால் பல நாற்றாண்டு காலமாய் இருந்துவரும் பெயர் காரணமும் பொய் என்பார்களா? நெல்லை பாபநாசத்தில் வசிக்கும் ஒருவரது, சமூகம் சார்ந்த நம்பிக்கை ஏற்புடையதாக இல்லையா?
வாதம்:
எனக்கு இப்படத்திற்கு ஏன் கேளிக்கை வரி விலக்கு அளிக்கவில்லை என்பது அல்ல, அதற்கு அப்படம் ஏன் தகுதியில்லை என்று தமிழக அரசு விவரிக்கும் தேர்வுக்குழுவினர்களின் கருத்துக்கள்தான் ஏற்கத்தக்கதாக இல்லை. தேர்வுக்குழுவில் ஏழு பேர்களில், ஐந்து திரைப்படத்துறையினர் இருந்தும், அவர்களின் கருத்துக்கள் எனக்கு ஏற்புடையதாக இல்லை.
கமல் அவர்களே, நீங்கள் இப்படத்தில் குடும்பத் தலைவராக, உங்கள் மனைவி, மகள்களைக் காப்பாற்றி சந்தோசமான முடிவுடன் இல்லாமல், அவர்கள் எதிர்ப்பார்த்தது போல குடும்பத் தலைவனின் குடும்பம் நடுத்தெரு வந்து, பாபநாசத்தில் வீழ்ந்திருந்தால் ஏற்புடையதாக இருந்திருக்குமோ என்னவோ?
எனக்கு நன்கு தெரிந்து 'ராஜா ராணி' படத்திற்கும் கேளிக்கை விலக்கு அளித்தது தமிழக அரசு. அப்படம் நல்ல படம்தான். ஆனால், கதையின் நாயகன், டாஸ்மாக் பாரில் குடித்துவிட்டு நடுரோட்டில் ஆடுவதும், மனைவியிடம் ரகளை செய்வதும், உதாசீனம் செய்வதும், மனைவியே கணவனுக்கும், மகளே தன் தந்தைக்கும் பீர் வாங்கி கொடுப்பதும், சகட்டுமேனிக்கு 'பிரதர்... பிரதர்...!' என்று காதலனையும், கணவனையும் கலாய்ப்பதும், கேளிக்கை வரி விலக்குத் தேர்வுக்குழு உறுப்பினர்களுக்கு ஏற்புடையதா என்ன?
என்னதான் டாஸ்மாக், பார், பீர், குடி, கும்மாளம் என்று தமிழக அரசின் கொள்கைகளை படம் முழுக்க விதைத்து இருந்தாலும் ஏற்புடையதுதானா?
இங்கு கமலஹாசன் என்ற கலைஞனின், நடிப்பாற்றலை பற்றியோ, திரைப்பட அறிவாற்றலை பற்றியோ, சமூக அக்கறையை பற்றியோ, மொழிகளில் அவருக்குள்ள நினைவாற்றலை பற்றியோ இல்லவே இல்லை. அரசியலை விரும்பாத ஒரு நடிகனை, இன்றைய அரசியல் எப்படி அவரது ஒவ்வொரு படத்திற்கும் விளையாட்டுக் காட்டுகிறது என்பதை பதியவே இப்பதிவு. இதற்கு பதிலாக கமல் படத்திற்கு எந்த சலுகையும் தர இயலாது - என்று தமிழக அரசு அரசாணை வெளியிட்டால் நன்று.
மக்கள் சமூகத்தை திருப்திப்படுத்தவே கலைத்துறை, அதில் ஒரு கலைஞன் தன் ஆற்றலால் சமூகத்தின் உண்மையை/பிரச்னையை/விழிப்புணர்வை/நிலையை உறக்கச் சொன்னால், சமூகம் செவிச் சாய்த்துக் கேட்கும். ஆனால், இங்கு அரசோ, மக்களின் காதுகளை மூடும் வேலையை செய்கிறது. இல்லை கலைஞனின் குரல்வளையை நெரிக்கிறது.
உண்மையான ஓர் கலைஞன் அவனைச் சார்ந்தச் சமூகத்தின் அவலங்களை படம்பிடித்துக் காட்டுவதுதான் அவன் கடமை, அவை சமூக மாற்றம் ஏற்படக் காரணமாக இருக்குமே தவிர, படத்தில் இடம்பெறும் காட்சிகள் எல்லாம் சமூக அவலங்களாக மாறாது.
பின்குறிப்பு: தமிழக அரசின் அரசாணைப் படி, கேளிக்கை வரி விலக்கு அளிக்கப்பட்ட, அளிக்கப்படாத படங்களுக்கு இருவேறு கட்டண ரசீதுகள் அச்சடிக்கப்பட்டு படம் திரையிடும் பொழுது விநியோகிக்க வேண்டும். ஆனால், இன்றுவரை பல திரையரங்குகளில் இதனை நடைமுறைப்படுத்தவில்லை என்பதே உண்மை நிலவரம். இதனால், திரையரங்குகளில் குவியும் ரசிகர்களுக்கு ஒரு பயனுமில்லை!
- பலராமன்
நன்றி -விகடன்