குற்றவாளி யார்? அவனுக்கு பின்னால் இருக்கும் தீய சக்திகள் என்ன? என்பதை கண்டுபிடித்தப் பிறகு ஐபிஎஸ் அதிகாரியாக பொறுப்பேற்று அவனை வீழ்த்த ஜெயம் ரவி நடத்தும் த்ரில்லர் யுத்தம்தான் ‘தனி ஒருவன்’.
சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று ஐபிஎஸ் பயிற்சி வகுப்பில் இருக்கும் மித்ரன் (ஜெயம் ரவி), உடனிருக்கும் 3 நண்பர்களுடன் சேர்ந்து போலீஸ் அதிகாரியாக பதவி ஏற்பதற்கு முன்பே குற்றங்களுக்கு எதிராக களத்தில் இறங்கி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தருகிறார். குழந்தை கடத்தல், செயின் பறிப்பு என்று ஒவ்வொரு குற்றங்களுக்குப் பின்னாலும் மிகப்பெரிய அள வில் வணிகம் நடப்பது அவர்களுக்குத் தெரிய வருகிறது. அதற்குக் காரணமாக இருக்கும் பல்வேறு குற்றவாளிகளைப் பட்டியலிட்டு, அதில் பெரிய அளவில் குற்றங்களில் ஈடு படும் 3 நபர்களைத் தேர்வு செய்து தண்டனை பெற்றுத்தர திட்டமிடுகிறார், மித்ரன்.
இந்தச் சூழலில் மருத் துவத்துறை வழியாக சமூகத்துக்கு எதிராக பெரிய குற்றங்களை செய்துகொண்டிருக்கும் விஞ்ஞானி சித்தார்த் அபிமன்யூவின் (அரவிந்த்சாமி) செயல்கள் மித்ரனுக்கு தெரிய வருகிறது. தான் குறிவைத்த 3 குற்றவாளிகளுக்கும் அவன்தான் முன்னோடி என்பதையும் கண்டுபிடிக்கிறார். அதன்பிறகு அந்த எதிரியை அவர் வேட்டையாடினாரா என்பதுதான் கதை.
குப்பத்தைச் சேர்ந்த செங்கல் வராயன் (தம்பி ராமையா) எப்படி எம்.எல்.ஏ ஆகிறார் என்ற முன்கதை திருப்பத்தோடு திரைக்கதை விரிகிறது. செங்கல் வராயனின் மகனான பழனிதான் வில்லன் சித்தார்த் என்று அறிமுக மாகும் இடத்திலேயே கைதட்டல் வாங்கத் தொடங்குகிறார் அரவிந்த் சாமி. கிளைமாக்ஸ் காட்சியில் நாயகனிடம், ‘உனக் காக மட்டும் எல்லாத்தையும் சொல்கிறேன்’ என்று அரவிந்த்சாமி கூறும் இடம் வரைக்கும் அந்த கைதட்டல் நீள்கிறது. குறிப்பாக தம்பி ராமையாவுடன் அவர் வரும் காட்சிகளில் இருவருமே ரசிக்க வைக்கிறார்கள்.
நாயகி நயன்தாரா நடிப்பிலும், பார்வையிலும் மிளிர்கிறார். ஹீரோவைப் போலவே சிவில் சர்வீஸ் பயிற்சி, பார்த்ததும் காதல் என்று அறிமுகமாகும் சில காட்சிகள் சினிமாத்தனமாக இருந்தாலும், அடுத்தடுத்து அவர் எடுத்து வைக்கும் அடிகளால் அழகாக மனதில் அமர்ந்துவிடுகிறார். ஜெயம் ரவி, நயன்தாரா இருவரும் முதன்முதலாக காதலை வெளிப் படுத்திக் கொள்ளும் இடம் அழகு!
ஒவ்வொரு காட்சியும் பரபரப் பாக நகர்கிறது. கதாபாத் திரங்களுக்கு இயக்குநர் கொடுத் திருக்கும் முக்கியத்துவம்தான் இதற்குக் காரணம்.
படத்துக்கு வசனமும் பெரிய பலம். இயக்குநர் மோகன் ராஜா, எழுத்தாளர் சுபா எழுதியிருக் கிறார்கள். ‘நல்லது மட்டுமே செய் யணும்னா அது கடவுளாலகூட முடியாது’, ‘நான் செய்ற குற்றத் துல மிச்சம் வைக்கிறத கண்டு பிடிக்கிறதே அவன்தான்’ என்று அரவிந்த்சாமி பேசும் இடம், ‘உனக்காக உயிரைக் கொடுப் பேன்னு ஒரு பேச்சுக்கு சொன் னேன்’ என்று ஜெயம் ரவியிடம் நயன்தாரா பேசும் இடம் என்று பல இடங்களில் வசனங்கள் கைதட்டல்களை அள்ளுகின்றன.
இசை ‘ஹிப் ஆப்’ தமிழா. கச்சிதமான பின்னணி இசை. பாடல்கள் தனி ஆல்பமாகவே ஹிட். ஒளிப்பதிவு ராம்ஜி, படத்தொகுப்பு கோபி கிருஷ்ணா, கலை இயக்குநர் வி.செல்வகுமார் என்று சிறப்பான கூட்டணியை சேர்த்துக்கொண்டு இயக்குநர் பயணித்திருக்கிறார். அறையில் வில்லன் சித்தார்த்தின் கை ரேகையைக் கண்டுபிடிக்கும் இடங்களில் எடிட்டர், கேமராமேன் இருவரும் பெரிய உதவியாக இருந்திருக்கிறார்கள்.
வில்லன் அரவிந்த்சாமி சிறுவனாக இருந்து வளர்வது, படிப்பு, தொழில் என்று அவரது முழு புரொஃபைலை படத்தில் காட்டியிருப்பது வித்தியாசம். தன் உடலில் ‘டிராக்கிங் டிவைஸ்’ கருவி பொருத்தப்பட்டிருப்பதை ஜெயம் ரவி அறியும் இடம் படத்தில் மிரட்டுகிறது. ‘இப்படத்தில் இடம்பெறும் சம்பவங்கள் யாவும் கற்பனையே. நிஜத்தின் அளவுக்கு கொடூரமானவை அல்ல!’ என்று திரைப்படம் தொடங்கும் இடத்தில் வரும் வாசகத்தின் உணர்வை படத்தின் ஒவ்வொரு காட்சியும் உணர்த்துகிறது.
மருத்துவத்துறைக்கு எதிராக சித்தார்த் செய்யும் குற்றத்தை வீடியோ ஆதாரமாக வைத்திருந்த மணிமேகலை (அபிநயா) பேசிய ஆடியோ அடங்கிய ‘மெமரி ஜிப்’பை போலீஸ் பயன்படுத்தும் லத்தியில் வைத்திருப்பது எல்லாம் அப்பப்பா ‘முடியல’ சார்? அழகி சில்பாவாக நடித்திருக்கும் முக்தா கோட்ஸேயின் அப்பாவை திட்டமிட்டுக் கொன்ற விஷயம் ஜெயம் ரவிக்கு எப்படி தெரியும்? இப்படி இங்கும் அங்கும் சின்னச் சின்ன ‘ஏன்? எதற்கு?’ கேள்விகள் கேட்கத் தோன்றினாலும் முழுமையாக மனதை த்ரில்லர் மழையில் நனைய வைக்கிறது படம்.
நன்றி -த இந்து