இலக்கிய உலகில் பல சர்ச்சைகளில் சிக்கியவரும் , லட்சக்கணக்கான வாசகர்களைக்கொண்டவருமான சாரு நிவேதிதா பேட்டி த சண்டே இந்தியன் வார இதழில் வந்திருந்தது.. பேட்டி கண்டவர்கள் சுந்தரபுத்தன், ஷங்கர்ராமசுப்ரமணியன்
1. தமிழின் முக்கியமான சிறுகதைகளைத் தொகுத்தால் அதில் உங்கள் கதைகளும் இடம்பெறும்..ஆனால் தற்போது சிறுகதைகள் எழுதுவதில்லையே?
சமீபத்தில் மொராக்கோ எழுத்தாளர் Tahar ben jelloun எழுதிய Leaving tangier என்ற அருமையான நாவலைப் படித்துக் கொண்டிருந்தேன். அதில் உள்ள பல அத்தியாயங்கள் நான் எழுதும் கட்டுரைகளைப் போலவே இருப்பதை எண்ணி ஆச்சரியம் அடைந்தேன். மற்ற எழுத்தாளர்களுக்கும் எனக்கும் ஒரு வித்தியாசம் இருக்கிறது. நான் எழுதும் பெரும்பாலான எழுத்துக்கள் புனைகதை, கட்டுரை என்ற இரண்டுக்கும் நடுவில் இருப்பதாகவே கருதுகிறேன்.
என் வாழ்வில் நடக்கும் சம்பவங்கள் அனைத்துமே ஏதோ மாயாஜாலக் கதைகளில் வருவதைப் போல் என்னாலேயே நம்ப முடியாத அளவுக்கு இருக்கின்றன. கட்டுரை, கதை என்று எல்லாமே சேர்ந்து மலையிலிருந்து விழும் அருவியைப் போல் கொட்டுகிறது. ஒரு சமயத்தில் மூன்று மலையாள வார இதழ்களில் எழுதி வந்தேன். ஒன்றில் ராஸ லீலா. இன்னொன்றில், உலக இசை. மூன்றாவதில், இலக்கியம், அரசியல், சினிமா என்று பொது விஷயங்கள். இந்த மூன்றையும் படித்த என் மலையாள நண்பர் ஒருவர் “மூன்றுமே ஒன்று போல் இருக்கிறது. அனுப்பும் போது மாற்றி அனுப்பி விடாதீர்கள்” என்று நகைச்சுவையாகச் சொன்னார்.
அமெரிக்க எழுத்தாளர் சார்லஸ் ப்யூகோவ்ஸ்கி பற்றியும் இப்படித்தான் சொல்வார்கள். என் எழுத்து புனைவுக்கும் நிஜத்துக்கும் இடையே ஊடாடிக் கொண்டிருப்பதால் என்னைப் பொறுத்தவரை சிறுகதை, நாவல் என்ற பாகுபாடுகள் எதுவும் இல்லை. என் நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தையுமே ஒருவர் சிறுகதைகளாக வாசிக்க முடியும். ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் கருணாநிதிக்கு நான் எழுதி மலையாள இதழ்களில் பரவலாக விவாதிக்கப்பட்ட என் கடிதமே மரியோ பர்கஸ் யோசாவின் நாவலில் ஒரு அத்தியாயமாக எழுதப் பட்டிருக்கும். இருந்தாலும் உங்கள் கேள்விக்கு நேரடியாக பதில் சொல்வதாக இருந்தால், இப்போது என் மனம் ஒரு பரந்து விரிந்த கேன்வாஸில்தான் யோசிக்கிறது. 200 பக்கங்களுக்குக் குறைவாக என்னால் ஒரு புனைகதையை இனிமேல் உருவாக்க முடியும் என்று தோன்றவில்லை. காரணம் எனக்குத் தெரியவில்லை.
2. எக்சிஸ்டென்சியலிசமும், ஜீரோ டிகிரியும் கூர்மையும், அங்கதமும், புதிய வடிவமும் கொண்ட நாவல்கள்..ஆனால் அவற்றைத் தொடர்ந்து நீங்கள் எழுதிய நாவல்கள் வெறும் செய்திக்குறிப்புகள் மற்றும் டைரிக்குறிப்புகளைப் போல் உள்ளதே?
டைரிக் குறிப்புகள் அல்ல. ஆட்டோ பிக்ஷன் சர்வதேச அளவிலேயே ஆட்டோஃபிக்ஷனை இதுவரை எழுதிப் பார்த்தவர்கள் என்று இரண்டு மூன்று பேரை மட்டுமே குறிப்பிட முடியும். செர்கி டெப்ரோவ்ஸ்கி என்ற ஃப்ரெஞ்ச் எழுத்தாளர் அவர்களில் ஒருவர். ஆனால் அவருடைய நாவல்கள் எதுவும் பிற மொழிகளில் மொழியாக்கம் செய்யப்படவில்லை. மொழிபெயர்க்கப்பட முடியாத ஒரு ஃப்ரெஞ்சை அவர் எழுதுவதாகச் சொல்கிறார்கள். என்னுடைய ஸீரோ டிகிரியைப் படித்து விட்டு அது அவருடைய எழுத்துக்கு மிக நெருக்கமாக இருப்பதாக எனக்குக் கடிதம் எழுதியிருந்தார்.
ஆட்டோஃபிக்ஷன் என்ற இலக்கிய வகையே சர்வதேச இலக்கியத்துக்குத் தமிழ் கொடுத்த கொடை என்று சொல்ல முடியும். அப்படிப்பட்ட இலக்கிய வகைமை என் மூலமாகவே வெளியே சென்றது. இது ஏதோ சுயம்புவாக என் மூளைக்குள் உதித்தது அல்ல. இந்த வகைமைக்காக நான் இரண்டு பேருக்கு நன்றி சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன். ஒருவர் நகுலன். இன்னொருவர், ஃப்ரெஞ்ச் இயக்குனர் கொதார்.
மேலும், தமிழில் ஒரு பழக்கம் உண்டு. எல்லா எழுத்தாளர்களிடமுமே இப்படி ஒரு கேள்வி கேட்கப் படுகிறது. “உங்களுடைய முந்தைய கவிதைத் தொகுப்பு நன்றாக இருந்ததே? இப்போது வந்திருப்பது அப்படி இல்லையே?” உண்மையில் இப்படிப்பட்ட கேள்வி ஒரு எழுத்தாளனை அவமானப்படுத்தவே செய்கிறது. இதன் பொருள் ஒன்றுதான். தமிழ்ச் சமூகம் எழுத்தாளர்களை தீண்டத் தகாதவர்களைப் போல் கருதுகிறது. அந்த அவமதிப்பின் அடையாளமே இப்படிப்பட்ட கேள்விகள். இன்னும் குறிப்பாகச் சொன்னால், ஸீரோ டிகிரி வந்த காலத்தில் அதை என் சக எழுத்தாளர்களில் இந்திரா பார்த்தசாரதி தவிர வேறு ஒருத்தர் கூட அதை சிலாகித்து ஒரு வார்த்தை சொன்னதில்லை. இப்போது அந்த நாவலுக்கு ஒரு கல்ட் ஸ்டேட்டஸ் வந்து விட்டதால் தவிர்க்க முடியாமல் அதைத் தங்களின் பட்டியலில் சேர்க்கிறார்கள். என்னுடைய மற்ற நாவல்களுக்கும் இது நடக்கும்; ஆனால் 20 ஆண்டுகள் ஆகும்
3. கேரளச்சூழலை சுந்தர ராமசாமி தொடங்கி நீங்கள் வரை தொடர்ந்து புகழ்ந்து வருகிறீர்கள். அங்கு பரந்த வாசகத்தளம் இருக்கிறார்கள். ஆனால் தமிழளவுக்கு ஆழமாக இலக்கிய, விமர்சனச் செயல்பாடுகளும் விவாதங்களும் நடந்திருக்கிறதா...தமிழுடன் ஒப்பிடத்தகுந்த அளவில் சமகால எழுத்தாளர்கள் மலையாளத்தில் உள்ளார்களா?
இல்லை. மலையாளத்தில் மட்டும் அல்ல; இந்தியாவிலேயே இல்லை. அருந்ததி ராயை விட சிறப்பாக எழுதக் கூடிய எழுத்தாளர்கள் தமிழில் 50 பேர் இருப்பார்கள். ஆனால், தமிழ்நாட்டில் சினிமாக்காரர்களும், அரசியல்வாதிகளும் மட்டுமே மதிக்கப்படுகிறார்கள். கேரளத்தில் எழுத்தாளர்களுக்குத்தான் முதல் மரியாதை. அங்கே ஒரு டஜன் இலக்கியப் பத்திரிகைகள் ஒரு லட்சம் பிரதிகள் விற்பனை ஆகின்றன. அதுவும் அவை வாரப் பத்திரிகைகள். இங்கே வாசகர் எண்ணிக்கை கம்மி. இதுவே வித்தியாசம்.
4. இணையம் சார்ந்த வாசகர்களை ஏராளமாக வைத்திருப்பவர் நீங்கள். அவர்கள் ஆழமான வாசகர்கள் என்று கருதுகிறீர்களா?
இல்லை. ஆனால் இணையம் இல்லாவிட்டால் அவர்கள் தங்கள் குடும்பத்தை கவனித்துக் கொண்டு ஒரு மிடில் க்ளாஸ் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். அதைவிட இது பரவாயில்லை. ஆனால் எல்லோரையும் அப்படிச் சொல்லி விட முடியாது. எனக்குத் தெரிந்து பல்வேறு சீரியஸான விஷயங்கள் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன. முன்பு சிறுபத்திரிகைகள் இருந்த இடத்தை இன்று இணையம் எடுத்துக் கொண்டிருக்கிறது. இணையத்தைப் பற்றிய சரியான பரிச்சயம் இல்லாதவர்களே இணைய எழுத்தாளர்களைக் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். பதர்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் நெல்மணிகளும் இங்கே ஏராளம் என்பதை மறந்து விடக் கூடாது.
5. தமிழில் இணையம் வழியாக முதலில் அதிக வாசகர்களை எட்டியவர் நீங்கள்.. ஆனால் தொடர்ந்து சுயதம்பட்டமும் சுயபெருமையும் அதிகமாக உங்கள் எழுத்துகளில் தொடர்கிறது..ஒரு மொழியில் இயங்கும் முக்கியமான எழுத்தாளன் இந்தளவு தனது ஆளுமையை பெரிதாக்கிக் காட்ட அலட்டிக்கொள்ள வேண்டுமா?
ஒரு கதை சொல்கிறேன். வெளியுலகத் தொடர்பே இல்லாத ஒரு பட்டிக்காடு. அங்கே பிறந்து வளர்ந்த ஒருவன் வெளியே போய் படித்து விளையாடி ஒரு ஒலிம்பிக் மெடலையும் வாங்கினான். அதை எடுத்துக் கொண்டு தன்னுடைய பட்டிக்காட்டுக்கு வந்தான். தன் தாய்க் கிழவியிடம் காண்பித்துப் பெருமை கொண்டாடினான். ஒரு நாணயத்தைப் போல் இருந்த அந்த மெடலை எடுத்துக் கொண்டு போய் பெட்டிக்கடையில் கொடுத்துக் கொஞ்சம் புகையிலை கேட்டாள் கிழவி. கடைக்காரனோ அதை செல்லாத காசு என்று திருப்பி கொடுத்து விட்டான். அந்த ஒலிம்பிக் மெடல் வாங்கியவனின் நிலையில் நான் இருக்கிறேன். அந்த கிராமம்தான் தமிழ்நாடு. நான் வாங்கிய மெடல்களின் பெருமையை அறியாத இந்த ஊரில் நான் தானே அதைப் பற்றிப் பேச வேண்டும்?
உலக ஆட்டோஃபிக்ஷனை அறிமுகப் படுத்தியதால் ஒரு ஆங்கில தினசரி அதன் அகில இந்தியப் பதிப்பின் முதல் பக்கத்தில் என் பேட்டியைப் போட்டது. பிரதம மந்திரி போன்றவர்களின் பேட்டிதான் அப்படி வரும் என்று சொன்னார்கள். பிறகு, கடந்த பத்தாண்டுகளின் சிறந்த பத்து சாதனையாளர்கள் என்ற பட்டியலில் ஒருவனாக வெளியிட்டது. அந்தப் பட்டியலில் தமிழ்நாட்டிலிருந்து இடம் பெற்ற இருவரில் நானும் ஒருவன். இன்னொருவர், ரஜினிகாந்த். கலிஃபோர்னியா மாநிலப் பல்கலைக்கழகத்தில் ஸீரோ டிகிரியை மாடர்ன் ஏசியன் க்ளாசிக்ஸ் என்ற பிரிவில் பாடமாக வைத்திருக்கிறது. இதையெல்லாம் நான் யாரிடம் போய் சொல்ல? ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சினிமாக்காரர் தும்மினால் கூட அது தலைப்புச் செய்தியாக வருகிறது.
எழுத்தாளனைப் பற்றி எதுவுமே தெரியவில்லை. அதனால்தான் இதையெல்லாம் நானே சொல்லித் தீர வேண்டியிருக்கிறது. மேலும், எனக்குப் போலிப் பணிவு பிடிக்காது. ஒரு மருத்துவர் தான் வாங்கிய பட்டங்களைப் போட்டுக் கொண்டுதானே மருத்துவம் பார்க்கிறார்? அதைப் போலவேதான் நானும் செய்கிறேன். மேலும், நான் என்னைப் பற்றி எதையும் பெரிதாக்கிக் காட்டவில்லை. உள்ளது எதுவோ அதை மட்டுமே சொல்கிறேன். எழுத்தாளர்களைக் கொண்டாடும் கேரளத்தில் இப்படி நானே என் பெருமையைச் சொல்லிக் கொள்ள வேண்டிய அவசியம் நேர்ந்ததில்லை.
6. தமிழ் சினிமா தொடர்பாக தொடர்ந்து தீவிரமாக எழுதியும் விவாதித்தும் வருபவர் நீங்கள் . இன்றைய தமிழ்சினிமா பற்றிய உங்கள் மதிப்பீடு என்ன?
தமிழ் சினிமாவில் மிக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டுக் கொண்டிருக்கின்றன. ஆனால் கருணாநிதியின் குடும்பத்தினர் சினிமாத் துறையில் செய்த அராஜகத்தினால் கடந்த ஐந்து ஆண்டுகளாக அது முடங்கிக் கிடந்தது. இனிமேல் நிலைமை திருந்தி விடும். இது ஒருபுறம் இருக்க, விஷ விருட்சத்தைப் போல் பரந்து விரிந்து கிடக்கும் வணிக சினிமாதான் தமிழ் சினிமாவின் மிகப் பெரிய ஆபத்து. நல்ல சினிமா எடுப்பவர்கள் கூட வணிக சினிமாவின் நிர்ப்பந்தங்களுக்கு ஆளாகி சில பல சமரசங்களைச் செய்ய வேண்டியிருக்கிறது. இன்னொரு பிரச்சினை, தணிக்கைத் துறை. சினிமா பற்றி எதுவுமே தெரியாத ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு சினிமாவை மதிப்பீடு செய்ய என்ன தகுதி இருக்கிறது? இவர்கள் இருக்கும் வரை தமிழ் சினிமாவை யாராலும் காப்பாற்ற முடியாது. உடனடியாக இந்த அதிகாரிகள் தணிக்கைத் துறையிலிருந்து விரட்டப்பட்டு அங்கே கலைஞர்களும், புத்திஜீவிகளும், எழுத்தாளர்களும் நியமிக்கப்பட வேண்டும். இது உடனடியாக செய்யப்பட வேண்டிய ஆரம்ப கட்ட வேலை.
7.ஒரு ஆளுமையை திடீரென்று தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதும், தூற்றுவதும் உங்களுடைய செயல்பாடுகளில் தொடர்வதாக உள்ளது. இதற்கு காரணம் என்ன?
என்னிடம் அடிக்கடி கேட்கப்படும் கேள்வி இது. நகுலன், ஆதவன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, கோபி கிருஷ்ணன், எம்.வி. வெங்கட்ராம், ஞானக்கூத்தன், ஆத்மாநாம், தர்மு சிவராமு என்று என் முன்னோடி எழுத்தாளர்களை கடந்த 38 ஆண்டுகளாகத் தொடர்ந்து பாராட்டி வந்திருக்கிறேன். யாரையும் தூற்றியதில்லை. கருணாநிதி போன்ற அரசியல்வாதிகளைத் தொடர்ந்து பல ஆண்டுகளாக விமர்சித்து வருகிறேன். என்றைக்குமே பாராட்டியதில்லை. ஆனால் ஒரு சாமியாரைப் பாராட்டினேன். அவர் ஒரு போலிச் சாமியார் என்று பிறகுதான் தெரிந்தது. அப்படித் தெரிந்த பிறகும் நான் ஏற்கனவே பாராட்டியவர் ஆயிற்றே என்பதற்காகத் தொடர்ந்து பாராட்டிக் கொண்டிருக்க முடியுமா? இன்று என் மனதுக்கு உகந்தவனாக இருக்கும் ஒரு கவிஞன் நாளையே நடிகர் விஜய்யைப் பாராட்டி கவிதை எழுதினால் அவனைத் தூற்றத்தானே வேண்டியிருக்கும்?
8. உங்களது எழுத்துவாழ்க்கை உங்களுக்கு தந்தது என்ன?
இழந்தைதைச் சொன்னால்தானே பெற்றதைச் சொல்ல முடியும்? இழந்தவை: எழுத்துலக நண்பர்கள், குடும்பம், அன்றாட வாழ்வின் கொண்டாட்டங்களும் சுக துக்கங்களும், பணம், செக்ஸ். பெற்றது ஒன்றே ஒன்று: வாசக நண்பர்கள். மைக்கேல் ஜாக்ஸனைப் போன்ற ஒரு பாப் ஸ்டாரின் ரசிகர்களைப் போல் என் மீது உயிரையே வைத்திருக்கும் வாசகர்களும் அவர்களோடு நான் கொண்டுள்ள உறவும்தான் இந்த எழுத்து எனக்குத் தந்தது.
9. இளைஞர்கள் தான் உங்கள் வாசகர்கள் என்கிறீர்கள். ஆனால் உங்கள் எழுத்துகளுக்குள் நவீன வாழ்க்கையின் வேகமயமான மாற்றங்கள் சார்ந்து குறிப்பாக பாலியல் பண்பாடு சார்ந்து ஒரு அசூயை தொடர்ந்து வெளிப்படுகிறதே..இதுபற்றி என்ன நினைக்கிறீர்கள்?
அசூயை வெளிப்படுவது உண்மைதான். ஆனால் இது பாலியல் ஒழுக்கம் சார்ந்தது அல்ல. அன்பும், அறிவார்த்தத் தேடலும் இல்லாமல் வெறும் உடல் கவர்ச்சி ஒன்றையே ஆதாரமாகக் கொண்ட இன்றைய ஆண்/பெண் உறவையே நான் கடுமையாக விமர்சிக்கிறேன். இருந்தும் ஏன் இளைஞர்கள் என் எழுத்தைப் படிக்கிறார்கள் என்றால் நான் அவர்களின் உலகில் இருந்து கொண்டு இந்த விமர்சனத்தைச் செய்கிறேன். வெளியில் இருந்து அல்ல. அதன் காரணமாகவே அவர்கள் என் விமர்சனத்தை ஆர்வத்தோடும் பதற்றத்தோடும் எதிர்கொள்கிறார்கள். காமரூப கதைகள் மற்றும் ராஸ லீலா ஆகிய இரண்டு நாவல்களும் இளைஞர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட நாவல்கள். இதை அவர்கள் ஒரு உரையாடலாகவே எடுத்துக் கொண்டார்கள். மற்ற எழுத்தாளர்கள் இத்தகைய உரையாடல்களை நிகழ்த்தாமல் வெளியே நின்று கொண்டு போதனைகளும் அறிவுரைகளும் செய்வதால் இந்த இளைஞர்கள் அவர்களிடமிருந்து ஒதுங்கிச் செல்கிறார்கள்.
10. ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே கனிமொழி பெயர் சர்ச்சிக்கப்பட்டு வருகிறது. ஆனால் அவரை உங்கள் புத்தக வெளியீடுக்கு அழைத்துவிட்டு பின்னர் அவரை ஊழல்வாதி என்று விமர்சிக்க வேண்டிய அவசியம் என்ன?
உங்கள் கேள்வியில் ஒரு சிறிய தகவல் பிழை உள்ளது. கனிமொழியையும் ராசாவையும் ஸ்பெக்ட்ரம் ஊழல் வெளியே தெரிய ஆரம்பித்த நாளிலிருந்து நான் கடுமையான மொழியில் விமர்சித்து வருகிறேன். கனிமொழி என்னுடைய புத்தக வெளியீட்டில் கலந்து கொண்டு பேசிய அன்றுதான் ஒரு பிரபல பத்திரிகையில் ’இப்படிப்பட்ட ஊழல் செய்பவர்கள் தேசத் துரோகிகள்; இவர்களுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்’ என்று எழுதினேன். அதையும் படித்து விட்டுத்தான் அந்த நிகழ்ச்சிக்கு அவர் வந்தார்.
ஆனால் இப்பேர்ப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானவரை என் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்கு அழைக்க வேண்டாம் என்றே நான் விரும்பினேன். தனிப்பட்ட முறையில் அது என் கொள்கைக்கும் வாழ்வியலுக்கும் முரணானது. ஆனால் நான் இந்த விஷயத்தில் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது. என்னுடைய புத்தக வெளியீட்டாளரின் விருப்பத்தின் பேரிலேயே கனிமொழி அழைக்கப்பட்டார். இனிமேல் இது போன்ற பிழைகள் நடக்காது. இனிமேல் என்னுடைய புத்தக வெளியீட்டு விழாக்கள் என்னுடைய வாசகர் வட்ட நண்பர்களால் மட்டுமே நடத்தப்படும். இனிமேல் என்னுடைய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்பவர்களைப் பற்றிய முடிவுகளை நான் மட்டுமே எடுப்பேன்.
11. ஜெயலலிதா சுயநலமில்லாதவர் என்று சமீபத்தில் துக்ளக்கில் எழுதியிருந்தீர்கள்..அது மிகையான கூற்றாக உங்களுக்குப் படவில்லையா?
இல்லை. ஜெயலலிதா சுயநலம் இல்லாதவர் என்றே நான் நினைக்கிறேன். கருணாநிதியின் குடும்பத்தில் சுமார் 500 பேர் இருப்பார்கள். தமிழகத்தின் அத்தனை துறைகளும் அவர்கள் கையில்தான் இருந்தன; இருக்கின்றன. ஜெயலலிதா ஒரே ஆள். உலகில் தனித்து வாழும் மனிதர்கள் சுயநலம் கருத வேண்டிய அவசியமே இல்லை.