Showing posts with label ட்விட்டர் - 140. Show all posts
Showing posts with label ட்விட்டர் - 140. Show all posts

Saturday, March 16, 2013

66ஏ எது சரி... எது தப்பு? -ஃபேஸ்புக், ட்விட்டர் - 140 பேர் மீது வழக்கு

66ஏ எது சரி... எது தப்பு?
பாரதி தம்பி

ஃபேஸ்புக்கில் யாரோ போட்ட ஸ்டேட்டஸுக்கு லைக் போட்டுவிட்டு ஒரு டீ குடிக்க வந்திருக்கிறீர்களா? எச்சரிக்கை... திரும்பிச் செல்லும்போது உங்கள் மீது வழக்குப் பதிவுசெய்யப்பட்டு இருக்கலாம். 'ஒரு லைக் போடுறது குத்தமாய்யா?’ என்று நீங்கள் அலறினாலும், இந்தியாவில் இப்போது இதுவே யதார்த்தம். 

கேரளா-சூரியநெல்லி பெண் பாலியல் பலாத்கார வழக்கில் பி.ஜே.குரியனுக்கு ஆதரவாக இருக்கும் மகளிர் காங்கிரஸ் தலைவி பிந்து கிருஷ்ணாவை விமர்சித்து ஃபேஸ்புக்கில் கருத்து எழுதிய; அதை ஷேர் செய்துகொண்ட 140 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருக்கிறது கேரளக் காவல் துறை. சமூக இணையதளத்தில் சொன்ன கருத்துக்காக இத்தனை அதிகம் பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்படுவது இந்தியாவில் இதுவே முதல்முறை. 


 இந்தியாவில் மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களும், பொதுச் சொத்தைச் சூறையாடியவர்களும் எந்த வம்பு வழக்கும் இல்லாமல் சொகுசாக இருக்க... ஃபேஸ்புக்கில் தனது கருத்தை வெளியிட்ட ஒரே காரணத்துக்காக வழக்குப் போட்டிருப்பது இணைய உலகை அதிரவைத்திருக்கிறது.


''கருத்துச் சுதந்திரத்துக்கு இதைவிட நெருக்கடியான காலம் இருக்க முடியாது'' என்று ஒரு சாரார் சொல்லிவரும் நிலையில், சமூக வலைதளங்களில் சொல்லப்படும் பொறுப்பற்ற கருத்துகள்குறித்த விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. இரண்டையும் இணைத்து இங்கே விவாதிப்போம்...


முதலில் ஃபேஸ்புக் கருத்துக்குச் சட்டப்பூர்வ நடவடிக்கை என்பது இது முதல்முறை அல்ல; சில மாதங்களுக்கு முன்பு தமிழ் சினிமா பின்னணிப் பாடகி சின்மயி, ட்விட்டரில் சில சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டார். அதைத் தொடர்ந்து தகாத வார்த்தைகளால் சிலர் சின்மயியை விமர் சித்தனர். இதற்காக சின்மயி போலீஸில் புகார் கொடுக்க, இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். 


இதன் பிறகு, புதுச்சேரியைச் சேர்ந்த ரவி சீனிவாசன் என்பவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம்பற்றி விமர்சிக்க... அதிரடியாக அவரும் கைது செய்யப்பட்டார். இவை மாநில அளவில் நடந்ததால் தேசிய கவனத்தைப் பெறவில்லை. அதன் பிறகு, பால் தாக்கரே மரணம் அடைந்தார். மும்பையே ஸ்தம்பித்தது. இதை விமர்சித்து, ''ஒருவரின் மரணம்குறித்து நமக்கு எழும் மரியாதை இயல்பானதாக இருக்க வேண்டும். கட்டாயப்படுத்திப் பெறக் கூடாது'' என ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் இட்டார் கள் இரு மாணவிகள். கடும் எதிர்ப்புகள் எழுந்ததும் இருவரும் கைது செய்யப்பட்டனர். 



சம்பவம் நிகழ்ந்தது மும்பை என்பதால், இது தேசியச் செய்தியானது. எக்கச் சக்கக் கண்டனங்கள் எழவே, கைது உத்தரவு பிறப்பித்த மாஜிஸ்திரேட் இடமாற்றம் செய்யப்பட்டார். கைது செய்த இரண்டு போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப் பட்டனர். வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மகாராஷ்டிர அரசைக் கடுமையாகக் கண்டித்ததோடு, இதுவரை இணையதளக் கருத்துகளுக்காக நடவடிக்கை எடுத்திருக்கும் மேற்கு வங்காளம், புதுச்சேரி, தமிழ்நாடு, டெல்லி ஆகிய மாநில அரசுகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. அதன் பிறகு, இந்த வழக்கின் நிலவரம் என்ன ஆனது என்று தெரியவில்லை; இப்போது கேரளாவில் 140 பேர் மீது வழக்கு பாய்ந்து இருக்கிறது.


இந்த வழக்குகள் அனைத்தும் 66ஏ என்ற சட்டப்பிரிவில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இணையதளம் வழியாக வெளியிடப்படும் கருத்து ஒருவரை அச்சுறுத்தினால்; தொந்தரவு செய்தால்; சங்கடம் ஏற்படுத்தினால், புகார் அளிப்பதற்கு இந்தச் சட்டம் இடம் அளிக்கிறது. குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படலாம். இந்தச் சட்டம் அரசியல் சட்டம் வழங்கும் சுதந்திரக் கருத்துரிமைக்கு எதிரானதாக இருப்பதால், இதை சட்டப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்திருக்கிறார் மனித உரிமை செயற்பாட்டாளர் அ.மார்க்ஸ். அந்த வழக்கு நடந்துகொண்டு இருக்கிறது. அரசின் நடவடிக்கைகளும் தொடர்கின்றன.



ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் முன்னெப்போதும் இல்லாத வாசலை மக்களுக்குத் திறந்துவிட்டிருக்கிறது. முன்பெல்லாம் ஒரு சமூகப் பிரச்னைகுறித்த தனது கருத்தை ஒருவர் உலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும் எனில், பத்திரிகைகளும் தொலைக் காட்சிகளும் மட்டுமே ஒரே வழி. அதேபோல 'கருத்து சொல்வதற்கு’ நீங்கள் 'வி.ஐ.பி’-யாக அல்லது குறிப்பிட்ட விஷயத்தில் நிபுணராக இருக்க வேண்டும். சமூக வலைதளங்கள் இந்த இரண்டு எல்லைகளையும் உடைத்துவிட்டன. யாரும், எதைப் பற்றியும் கருத்து வெளியிடலாம். அந்தக் கருத்து சரியானதாகவோ, தவறானதாகவோ, முட்டாள்தனமாகவோ, விஷமத்தனம்கொண்டதாகவோ இருக்கலாம். ஆனால், உங்கள் ஃபேஸ்புக், ட்விட்டர் பக்கங்களில் அதை எழுத முடியும். பல்லாயிரம் பேர் அதைப் படிக்க; பகிர முடியும். புகழுக்கும் அங்கீகாரத்துக்கும் ஏங்கும் மனித மனதின் ஆசைகளுக்கு மேடை அமைத்துத் தந்து 'நீங்களும் வி.ஐ.பி-தான்’ என்று ஒவ்வொருவரையும் திருப்தியடையவைக்கின்றன சமூக இணையதளங்கள்.



குறிப்பாக, அரசியல்வாதிகளின் சந்தர்ப்பவாதமும், காரியவாதமும் ஃபேஸ்புக்கில் தயவுதாட்சண்யம் இன்றி விமர்சிக்கப்படுகிறது. அதை எல்லாம் சம்பந்தப்பட்டவர்கள் படித்தால் வெட்கித் தலைகுனிய வேண்டும். இப்படி செல்வாக்கு மிக்கவர் களைத் துணிவுடன் விமர்சிப்பது, இப்போது உள்ள சூழலில் சமூக இணையதளங்களில் மட்டுமே சாத்தியம். மன்மோகன் சிங் பற்றிய ட்விட்டர், ஃபேஸ்புக் விமர்சனங்களைத் தொகுத்தால், நூற்றுக்கணக்கான புத்தகங்கள் வெளியிடலாம்.



உண்மையில் சமூக வலைதளங்கள் மனிதகுலத்தின் மகத்தான வரம். இவை மாபெரும் அறிவுச் சுரங்கத்தைத் திறந்துவிட்டிருக்கின்றன. ஆனால், இன்னொருபுறம் இந்தக் 'கட்டற்ற வெளி’ பொறுப்பின்மையைப் பொதுப் பண்பாக வளர்க்கிறது. மனதின் வக்கிரங்களுக்கு வடிகால் அமைத்துத் தருகிறது. விலைவாசி உயர்வு முதல் விலைஇல்லா அரிசி வரை; காஷ்மீர் அடக்குமுறை முதல் காவி பயங்கரவாதம் வரை பற்றி எரியும் மக்கள் பிரச்னைகள்குறித்து எந்தத் தெளிவும் அக்கறையும் இல்லாமல் மேலோட்டமாகக் கிண்டல் செய்து நகர்ந்து செல்வதற்கு சமூக இணையதளங்கள் கற்றுத்தருகின்றன.


 இதன் மூலம், ஆளும் சக்திகள் செலுத்தும் அடக்குமுறையை ஏற்றுக்கொள்வதற்கு மக்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பயிற்றுவிக்கின்றன. ஃபேஸ்புக்கில் இரண்டு வரி ஸ்டேட்டஸ் எழுதிவிட்டு, சமூகத்துக்காகப் போராடிவிட்டதாகத் திருப்திப்பட்டுக்கொள்பவர்கள் அநேகம் பேர். இது அரசாங்கத்துக்கு வசதியானது. நாட்டைச் சுரண்டு பவர்களுக்கு எதிராகப் பெரும் எண்ணிக்கையில் திரண்டு போராடாமல், பெயருக்கு நாலு வரி எழுதிவிட்டு ஒதுங்கிக்கொள்வது அரசுக்குத் தொந்தரவு இல்லாத அம்சம்தானே?



''அப்படி முழுக்கவே ஒதுக்கிவிட முடியாது. சமூக இணையதளங்கள் என்ற நவீன தொழில்நுட்பத்தை நியாயம் பெறுவதற்கான கருவியாகவும் பயன்படுத்த முடியும். 'மல்லிகைப் புரட்சி’ என்று அழைக்கப்பட்ட துனிஷிய மக்கள் புரட்சிக்கு ஃபேஸ்புக், ட்விட்டர் மூலமாகவே மக்கள் திரண்டனர். எகிப்து நாட்டின் மக்கள் புரட்சி அரசாங்கத்தால் ஒடுக்கப்பட்டபோது, சமூக இணையதளங்கள்தான் மக்களுக்கான ஒரே ஊடகமாக இருந்தன. இன்றைய நிலையில் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களுக்கு நிறையக் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. அவற்றால் ஓர் அளவுக்கு மேல் அரசுக்கு எதிராகச் செயல்பட முடியாது. சமூக இணையதளங்கள் அப்படி இல்லை. இங்கு சுதந்திரமாகச் செயல்பட முடியும். அதனால்தான் உலகின் பல நாடுகள் சமூக இணையதளங்களைக் கட்டுப்படுத்தத் துடிக்கின்றன!'' என்கிறார் கள் இவற்றின் ஆதரவாளர்கள்.



ஆனால், சமூக இணையதளங்களின் நோக்கம் எல்லோரது கருத்தையும் உலகத்துக்குக் கொண்டு சேர்ப்பது அல்ல. அவை இதை ஒரு வியாபாரமாகவே பார்க்கின்றன என்பதோடு, அந்தந்த நாட்டின் சட்ட வரம்புகளுக்கு உட்பட்டே சமூக இணையதளங்கள் இயங்கு கின்றன. தன்னால் கண்காணிக்க முடியாத எந்த ஒன்றை யும் அரசாங்கம் செயல்பட அனுமதிப்பது இல்லை. ஆகவே, இதை ஒரு நிபந்தனையற்ற சுதந்திரமாகப் புரிந்துகொள்வது சரியானது ஆகாது.



குறிப்பாக, இணையதளக் கருத்துக்காக வழக்கு; கைது என்ற அரசின் நடவடிக்கையை எடுத்துக்கொள்வோம். 'கருத்துக்குக் கைது’ என்பதை யாரும் ஆதரிக்கப்போவது இல்லை. ஆனால், ஃபேஸ்புக்கில் எழுதலாம் என்பதற்காக எதை வேண்டுமானாலும், எப்படி வேண்டுமானாலும் எழுத முடியுமா? அதற்கு என்ன வரம்பு? முதலில், தான் வெளியிடும் கருத்து பெரும் எண்ணிக்கையிலான மக்களுக்குச் சென்று சேரப்போகிறது என்ற பொறுப்பு உணர்ச்சி அதை வெளியிடுபவர்களுக்கு வர வேண்டும். எழுதியதை வெளியிடும் முன்பு சுய தணிக்கை செய்து கொள்ள வேண்டும். துரதிர்ஷ்டவசமாக பெரும்பாலா னோரிடம் அது இல்லை.



இதற்கு முன்பு சீரியஸான கட்டுரைகள் சில இணையதளங்களில் எழுதப்படும். அரட்டைத் தளங்கள் தனியே இருக்கும். புகைப்படங்கள்; வீடியோக்கள் வெளியிடும் தளங்கள் தனியே செயல்படும். ஃபேஸ்புக் வந்து இவை அனைத்தையும் ஒரே இடத்துக்குக் கொண்டுவந்துவிட்டது. இது ஒரு டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர். இங்கு புரட்சியும் கிடைக்கும்; புடலங்காய் கூட்டு செய்முறையும் கிடைக்கும். போர்க் குற்றம்பற்றியும் படிக்கலாம்; போர்னோகிராஃபியும் பார்க்கலாம். 'அனைத்தும் ஒரே இடத்தில்’ என்ற இந்த உத்தி அந்தத் தளத்தின் வியாபார வெற்றிக்கு வழிவகுத்திருக்கலாம். ஆனால், அவற்றைப் பயன்படுத்தும் மக்களின் மனதில் 'அனைத்தும் ஒன்றே’ என்ற மனநிலையை இது உருவாக்குகிறது. தனித்தனியே பிரித்துப் பகுத்துப் பார்க்கும் ஆய்வு மனப்பான்மை பலருக்கும் இல்லாத நிலையில் இதன் ஜிகினாத்தன்மையில் மனதைப் பறிகொடுக்கின்றனர். இதன் உண்மையான ஆபத்து இதுவே.




'அவன் ஒரு பட்டு வேட்டிபற்றிய கனவில் இருந்தபோது, கட்டியிருந்த கோவணமும் களவாடப்பட்டது’ என்று எழுதியிருப்பார் வைரமுத்து. ஃபேஸ்புக் என்ற பட்டு வேட்டிக் கனவில் இருப்பவர்கள் உஷாராக வேண்டிய தருணம் இது!
thanx - vikatan