குடும்பத்தின் ஆதரவு ஏராளமாக உள்ளது: நித்யஸ்ரீ மகாதேவன்
கர்நாடக இசை உலகின் ஜாம்பவான்கள் நிறைந்த இசைக் குடும்பத்தில் பிறந்த
நித்யஸ்ரீ, தனது பதினாறாவது வயதில் செம்மொழி இசை இளைஞர் சங்கத்திற்காக
வாய்ப்பாட்டுக் கச்சேரியை மேடையில் அரங்கேற்றினார். வாய்ப்பாட்டு இசையில்
மிகப் பிரபலமான டி.கே. பட்டம்மாளின் பேத்தி என்பது பாரம்பரியத்திற்கும்
பிரபலமாவ தற்கும் உதவியது என்றாலும், அவரது பெயரைக் காப்பற்றும் வகையில்
பாட வேண்டும் என்ற சவாலும் அவருக்கு இருந்தது.
தன் தாயும் குருவுமான லலிதா
சிவக்குமார் அளித்திருந்த சிட்சையே நித்யஸ்ரீயை இசை உலகில் தடுமாறிவிடாமல்
காப்பாற்றியது. அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி, பிரான்ஸ்,
சிங்கப்பூர், மலேசியா என உலகம் முழுவதும் கச்சேரிகள் நிகழ்த்தி, தமிழ்
இசையின் பெருமையைப் பரப்பியிருக்கிறார். சினிமா ரசிகர்களையும் கவர்ந்த
அவர், இசைக்கு அடையாளமான திருவையாறில் பிறந்தவர்.
மேற்கூறிய அனைத்தும் சிந்தனையில் ஓட, பேட்டிக்காக அவரது இல்லத்திற்குச்
சென்றபோது, பேட்டி கொடுத்துக்கொண்டே அனைத்து வீட்டு வேலைகளையும் சுற்றிச்
சுழன்று தானே செய்தார். மேடையில் காணப்படும் அதே கம்பீரத்துடன், அநாயசமாக
சமையலும் செய்கிறார். அப்படியே நம் கேள்விகளுக்கும் பதில் அளித்தார்:
சுவையான கச்சேரி அனுபவங்கள் பற்றி...
முன்பெல்லாம் குருவோடவே கச்சேரி செய்து, குருகுல வாசம் செய்து தனிக்
கச்சேரி பண்ணிப் பிரபலமான இடத்தைப் பிடிக்க வேண்டும் என்றால் முப்பத்தைந்து
வயதாகிவிடும். சின்ன சின்ன குக்கிராமம் என்றால் கூடக் கார்ல போய்க்
கச்சேரி பண்ணுவோம். ஆந்திராவில பாலக்குல்லு என்ற ஒரு கிராமத்தில தியாகராஜ
உற்சவம். நாள் பூரா கரண்ட் இல்ல. அது மே மாதம் வேறு. சூடு தாங்கலை. இந்தச்
சூழல்ல நன்றாகப் பாட்டுக் கச்சேரி செய்ய வேண்டும். இது போன்ற டிமாண்டிங்
சூழ்நிலையை இந்தக் காலத்துப் பாடகர்களால் தாங்க முடியுமான்னே தெரியலை.
இப்போ தெல்லாம் சின்ன வயசுலேயே ஏசி ரெகார்டிங் தியேட்டர்ல உட்கார்ந்து
கச்சேரி பண்ணினா, டிவியில் ஒளிபரப்பாகிப் பட்டி தொட்டியெல்லாம்
பரவிவிடுகிறது.
நீங்க சின்ன வயதில் நாளொன்றுக்கு எட்டு மணி நேரம் சாதகம் பண்ணுவீர்கள்
என்று சொல்லியிருக்கிறீர்கள். பிரபலமான பிறகும் இதைக் கடைபிடிக்க
முடிந்ததா?
ஓவ்வொரு கச்சேரியும் நூறு முறை பிராக்டீஸ் பண்ணுவதற்குச் சமானம்.
கச்சேரிகளைத் தீமிக்காகப் பண்ணும்பொழுது, அந்தத் தலைப்பை ஒட்டி சில
பாடல்களைத் தேர்ந்தெடுத்து, பாடாந்தரத்தில் பார்த்துக்கொண்டுவிடுவேன். இது
தவிர எந்த ஊருக்குப் போகிறோமோ அந்த ரசிகர்களுக்கு ஏற்பத் தியாகராஜர்
கீர்த்தனைகளையோ, அன்னமையா கிருதிகளையோ அதிகமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது
உண்டு.
சில சமயம் ஸ்தலங்களுக்குக் கச்சேரி பண்ணப் போவோம். அப்பொழுது
முருகன் ஸ்தலமாக இருந்தால் முருகன் பாடல்களை அதிகமாகவும், திருவண்ணாமலை
போன்று சிவ ஸ்தலமாக இருந்தால் சிவனைக் குறித்த பாடல்கள் அதிகமாகவும்
இருக்கும்படி பார்த்துக்கொள்வேன். இப்பொழுதெல்லாம் இந்த வகையான
சாதகங்கள்தான் கை கொடுக்கின்றன.
சொர்ண சங்கீதம் குறித்து...
பொதுவாக டிவிகளில் சினிமா பாடல்களுக்கு என்று ரியாலிட்டி ஷோக்கள் நிறைய
உண்டு. கர்நாடக சங்கீதத்திற்கு என்று மிகக் குறைந்த அளவிலேயே இத்தகைய
ஷோக்கள் உண்டு. அதுல முக்கியமா சொல்லணும்னா ராஜ் டிவியின் சொர்ண சங்கீதம்
தேர்ட் சிஸன். விஜய் டிவில சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கு ஐந்து சீஸனாக
தேர்வாளரா இருந்திருக்கேன். இப்ப சொர்ண சங்கீதத் திற்கும் சென்னையில்
தேர்வாளரா இருக்கேன்.
உங்கள் குழந்தைகள் பாட்டு கற்றுக் கொள்கிறார்களா? உங்களுக்கோ
நிகழ்ச்சிகள், பயணங்கள் என நிறைய இருக்கிறது. குழந்தைகளுக்குப்பாட்டு
சொல்லிக் கொடுக்க எப்படி நேரம் கிடைக்கிறது?
ரொம்ப கஷ்டமான விஷயம். வேலைக்குப் போற அம்மாக்களுக்கே உள்ள கஷ்டம்தான்.
அதுலயும் இந்த மாதிரிக் கர்நாடகக் கச்சேரியைத் தொழிலாக இருந்தால், டூர்
அதிகமாக இருக்கும். அப்போ அனுசரணையான குடும்பத்தின் உதவி ரொம்ப முக்கியம்.
அந்தச் சப்போர்ட் எனக்கு ஏராளமாக இருக்கிறது. எனக்குச் சொல்லிக் கொடுத்த
எங்க அம்மாவே, என் குழந்தைகளுக்கும் கர்நாடக சங்கீதம் சொல்லிக்
கொடுக்கிறார்கள். நான் ஊருக்குப் போனால் என் குழந்தைகளைப்
பார்த்துக்கொள்வதும் எங்க அம்மாதான். அம்மா பிரமாதமான குரு.
அம்மாவுக்குப்
பட்டம்மா பாட்டிதான் குரு. சில கச்சேரிகளில் பாட்டியுடன் பின்பாட்டும்
பாடியிருக்கிறார்கள். பாட்டியுடன் பாடிய அனுபவத்தையெல்லாம் நித்யாவிற்கு
கொடுக்கிறேன்னு சொல்வார்கள். பாட்டி பாடுவதைப் போலவே பாடுவார் அம்மா.
அம்மாவின் அப்பா பிரபல மிருதங்க வித்வான் பாலக்காடு மணி ஐயர். மாமியாரோ
பிரபல பாடகி டி.கே.பட்டம்மாள். இந்த சங்கீதச் சூழ்நிலையில் வளர்ந்ததால்
அம்மா சாகித்திய கர்த்தாவாக சங்கீதத்தில் புதிய கண்டுபிடிப்புகளைப்
பண்ணியிருக்கிறார். அவரது ராகம் தானம் பல்லவியை இன்றும் நான் மேடைக்
கச்சேரிகளில் பாடுகிறேன்.
நன்றி - த இந்து