சித்த மருத்துவத்தின் அருமை பெருமை டிப்ஸ்!
சித்த மருத்துவர் கோலப்ப பிள்ளை
தொகுப்பு: ஜி.எஸ்.எஸ்.
இஞ்சித் தேனூறல்
இஞ்சியை நன்றாகக் கழுவி, தோல் நீக்கியபின் சிறுசிறு வில்லைகளாக நறுக்கி, கண்ணாடி அல்லது பீங்கான் பாத்திரத்தில் இடவும். இஞ்சித் துண்டுகள் மூழ்கும் அளவுக்கு தேன் விட்டு, 45 நாட்கள் ஊறவிட்டு வைத்துக் கொள்ளவும். தினமும் தேனில் ஊறிய இஞ்சித் துண்டை தேனுடன் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர பித்தம், சீரணக் கோளாறுகள், வயிறு உப்புசம், சுவையின்மை, பசியின்மை போன்ற கோளாறுகள் நீங்கும்.
உடல் துர்நாற்றம் போக
எலுமிச்சைத் தோலை உலர்த்தி அரைத்த பொடியை சந்தனத்துடன் கலந்து உடலில் பூசிவர, உடல் துர்நாற்றம் தீரும்.
இருமலுக்கு அதிமதுரக் குடிநீர்
சுக்கு, மிளகு, திப்பிலி, அதிமதுரம், சித்தரத்தை இவற்றை தலா ஐந்து கிராம் அளவு எடுத்து ஒன்றிரண்டாக இடித்துக் கொள்ளவும். இரண்டு தம்ளர் (300 மிலி) தண்ணீர் விட்டு, கொதிக்க வைத்து, அரை தம்ளராக வற்ற வைக்கவும். இறக்கும் வேளையில் ஒரு கைப்பிடி துளசி இலையைப் போட்டு வடிகட்டி, காலை - மாலை இருவேளையும் (ஒவ்வொரு முறையும் புதிதாகவே தயாரித்து) குடித்துவர, இருமல், சளி போய்விடும்.
சைனஸிற்கு ஆவி (வேது) பிடித்தல்
பீநிசம் எனப்படும் சைனஸ் தலைவலிபடுத்தி எடுக்கிறதா? நொச்சி இலை நான்கு கைப்பிடி அளவுடன், மஞ்சள் 10 கிராம் அளவு சேர்த்து இடித்து, ஒரு மண்பானையிலிட்டு தண்ணீர் சேர்த்து கஷாயம் போல கொதிக்க விடவும். நன்றாகச் சூடானதும், செங்கல் துண்டுகளை அடுப்பில் சூடாக்கி, இந்த கொதிக்கின்ற தண்ணீரில் போடவும். அப்போது எழுகின்ற ஆவியை முகத்தில் பிடிக்க, நன்றாக வியர்த்து தலைவலி தீரும்.
பெரும்பாடு (அதிக இரத்தப் போக்கு) நிற்க
சில பெண்களுக்கு மாதவிடாய் வேளையில் அதிகமான இரத்தப் போக்கு இருக்கும். முருங்கைப் பூவை தேங்காய்ப் பால் விட்டு அரைத்து, அதே தேங்காய்ப் பாலில் கலக்கி மூன்று நாட்கள் சாப்பிட, உதிரப் போக்கு குறைந்துவிடும். தேகம் சுகம் காணும்.
இரத்தக் கொதிப்புக்கு அசைச் சூரணம்
நூறு கிராம் சீரகத்தை ஒரு அகன்ற பாத்திரத்தில் போட்டு, அதன்மீது எலுமிச்சம் பழச்சாறை, சீரகம் மூழ்கும் அளவிற்கு விடவும், எலுமிச்சம் பழச்சாறு வற்றும் வரை வெயிலில் காய விடவும். நன்றாக உலரக் காய்ந்த பின், சீரகத்தைப் பொடித்து வைத்துக் கொண்டு, தினமும் காலையில் வெறும் வயிற்றில் அரை ஸ்பூன் அளவு பொடியை, ஒரு தம்ளர் வெந்நீரில் கலந்து குடிக்க, ரத்தக் கொதிப்பு கட்டுப்படும்.
அரிப்பு நீக்கும் அருகம்புல்
தீராத சரும நோய்களால் அரிப்பா? ஒரு கைப்பிடி அருகம்புல்லுடன், பத்து மிளகு, இரண்டு வெற்றிலையைக் காம்புடன் சேர்த்து, ஒன்றிரண்டாக இடித்து இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, அது அரை தம்ளராகும் வரை கொதிக்க விடவும். காலை - மாலை குடித்துவர சரும அரிப்பு, ஊறல் நீங்கும்.
மலச்சிக்கலுக்கு திரிபலா சூரணம்
கடுக்காய் தோல் 100 கிராம், விதை நீக்கிய நெல்லிக்காய் வற்றல் 100 கிராம், தான்றிக்காய் தோல் 100 கிராம், இவற்றை தனித்தனியே இடித்து, சலித்து ஒன்று சேர்த்துக் கலக்கி வைக்கவும். இரவு உணவிற்குப்பின் இரண்டு கிராம் அளவு சூடான வெந்நீரில் கலந்து குடிக்க, மலச்சிக்கல் தீரும்.
தலைமுடி வளர தைலம்
நெல்லிக்காய் சாறு 100 மி.லி, கரிசலாங்கண்ணி இலைச்சாறு 100 மி.லி, பொடுதலைச் சாறு 100 மி.லி, தேங்காய் எண்ணெய் 100 மி.லி, ஒன்றாகக் கலந்து கொதிக்க வைக்கவும். கடைசியில் 100 மி.லி, அளவு வரும் வரை சுண்ட வைத்து வடிகட்டி தலையில் தேய்த்துவர, தலைமுடி போஷாக்காக வளரும்.
குழந்தைகளுக்கு குடற் பூச்சி, புழு நீங்க
வாய்விடங்கம் பத்து, மிளகு இரண்டு, ஓமம் அரை ஸ்பூன் அளவு எடுத்து, ஒரு கைப்பிடி அளவு வேப்பங் கொழுந்துடன் அரைத்துக் கொள்ளவும். இதை ஒரு சுண்டைக்காய் அளவு எடுத்து, மோரில் கலக்கி காலை வெறும் வயிற்றில் மூன்று நாட்களுக்குக் கொடுக்க, வயிற்றுப் பூச்சிகள் அழியும். ஆறு மாதத்திற்கு ஒருமுறை கொடுக்கலாம்.
பல் கூச்சம் போக பல்பொடி
கடையில் கிடைக்கும் காவிக்கல் பொடி 50 கிராமுடன், கடுக்காய் தூள் 100 கிராம், கிராம்புத் தூள் 10 கிராம், பொரித்த படிக்காரத் தூள் 10 கிராம் சேர்த்து கலந்து நன்றாக, நைசாக அரைத்து, பட்டு போல் சலித்துக் கொள்ளவும். அதைக் கொண்டு காலை - இரவு இருவேளையும் பல் துலக்கிவர, பல் வலி, பல் கூச்சம், ஈறு நோய்கள் தீரும்.
பசிக்கு பஞ்ச தீபாக்னி சூரணம்
சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் வகைக்கு ஒவ்வொன்றும் 100 கிராம் அளவு எடுத்து, இலேசாக வறுத்து இடித்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியே பொடித்து சலித்து எல்லாவற்றையும் நன்கு கலந்து வைக்கவும். தினசரி இரண்டு கிராம் அளவு காலை - மாலை, நெய் அல்லது தேனில் கலந்து சாப்பிட, நன்கு பசி உண்டாகும். உணவு செரிக்கும்.
கர்ப்ப காலத்தில் மாதுளை மணப்பாகு
மாதுளம் பழச்சாறு 500 மி.லியுடன், கற்கண்டு 500 கிராம், தேன் 500 மி.லி, சேர்த்துக் காய்ச்சி, சர்பத் பதத்தில் இறக்கி வைக்கவும், தினமும் இரண்டு ஸ்பூன் அளவு மூன்று மடங்கு தண்ணீர் கலந்து குடிக்க கர்ப்ப கால வாந்தி, செரியாமை நீங்கும். குழந்தை பேற்றிற்குப் பின்னரும், உடலைத் தேற்ற குடிக்கலாம்.
மூலம் தீர்க்கும் மூலகுபோரா எண்ணெய்
இருநூறு கிராம் கடுக்காய் பிஞ்சுகளை சிறிது ஆமணக்கெண்ணெய் விட்டு பழுப்பு நிறமாக வறுத்தெடுத்து தூள் செய்து கொள்ளவும். அதன் பிறகு, 800 கிராம் விளக்கெண்ணெயில் கலந்து வைக்கவும். இரவு படுக்கப் போகும்முன் தினமும் ஒரு ஸ்பூன் அளவு இந்தக் கலவையைச் சாப்பிட்டுவர, மூலக் கடுப்பு, ரத்த மூலம் தீரும்.
உடல் வலுவுக்கு அமுக்கரா சூரணம்
நாட்டு அமுக்கரா (அஸ்வகந்தா) 100 கிராம், சுக்கு 50 கிராம், திப்பிலி 25 கிராம், மிளகு 10 கிராம், ஏலம் 5 கிராம், சிறு நாகப்பூ 2 கிராம், கிராம்பு 1 கிராம் அளவு எடுத்து, தனித்தனியே பொடித்து சலித்துக் கொள்ளவும். சர்க்கரையைத் தனியே பொடித்து சலித்து கலந்து வைத்து, தினமும் 2 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட, உடல்வலு உண்டாகும்.
நீர் எரிச்சல், கடுப்பிற்கு
இளநீரைத் துளை செய்து, அதனுள் 10 கிராம் பனங்கற்கண்டைப் பொடித்து போட்டு, இளநீர் துளையை மூடி, இரவு முழுவதும் வைத்திருக்கவும். காலையில் அந்த இளநீரைக் குடிக்க சிறு நீர் எரிச்சல், கல்லடைப்பு போகும். வயிற்றுக்கு சுகம் தரும்.
இதயம் காக்கும் செம்பருத்தி
செம்பருத்திப் பூ இதழ்களைப் பறித்து தேனில் கலந்து, கற்கண்டு சம அளவு கலந்து, சூடாக்கி மணப்பாகு பதத்தில் இறக்கி வைத்து தினமும் இருவேளை, ஒரு ஸ்பூன் பாகுடன் தண்ணீர் கலந்து குடித்துவர, இரத்தம் விருத்தியாகும். இரத்த ஓட்டம் மேம்பட்டு, இருதயம் பலப்படும்
.
தேமல் குணமாக
நீரடி முத்து, சந்தனம் இரண்டையும் அரைத்து, உடலில் பூசி அரைமணி நேரம் கழித்துக் குளிக்க, தேமல் நீங்கி விடும்.
ஆவாரம்பூ தேநீர்
ஆவாரம் பூவைச் சேகரித்து, நிழலில் உலர்த்தி, பொடித்து வைத்துக் கொள்ளவும். தேயிலைக்குப் பதிலாக சேர்த்து வடிநீராகப் பயன்படுத்திவர, உடல் வலுப்பெறும். ரத்தம் நன்கு சுத்தமாகும்.
வயிற்று உப்பு சத்திற்கு ஓமக் கருக்கு குடிநீர்
குழந்தைகள் வயிறு பொருமலால் அழுகின்றனவா? ஓமத்தைச் சட்டியிலிட்டு கறுக வறுத்து, இரண்டு தம்ளர் தண்ணீர் விட்டு, அரை தம்ளராக வற்ற விடவும். அதில் 10 மிலி அளவு எடுத்து, சிறிது தேன் சேர்த்து கொடுக்க, வயிற்று உப்புசம் தீரும். வலியும் நீங்கும்.
நரம்புகளை நலமாக்கும் வல்லாரை
வல்லாரைக் கீரையை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டுவர, நரம்பு மண்டலத்தை வலுவாக்கி, நினைவாற்றலைப் பெருக்கும். இரத்த ஒட்டத்தைச் சீராக்கி கை, கால் நரம்புகளுக்கு வலு தரும்.
கண் பார்வை பலப்பட
பொன்னாங்கண்ணிக் கீரையை நெய்யில் வதக்கி, அடிக்கடி சாப்பிட்டுவர, கண் நரம்புகள் பலப்பட்டு, பார்வைத் தெளிவு உண்டாகும். மேனி அழகாகும்.
மஞ்சள் காமாலைக்கு கீழா நெல்லி
கீழா நெல்லி இலையை நன்கு சுத்தம் செய்து, நன்றாக அரைத்து மோரில் கலக்கி காலையில் வெறும் வயிற்றில் மூன்று நாட்கள் தொடர்ந்து குடித்தால், ஈரல் நோய்கள் குறையும். காமாலை கட்டுப்படும்.
உதிரப் போக்கைக் கட்டுப்படுத்த
மாதுளைப் பிஞ்சை, பால் விட்டரைத்து கலக்கி, வெறும் வயிற்றில் குடித்துவர, மெனோபாஸ் காலத்தில் ஏற்படும் குருதிப் பெருக்கு மட்டுப்படும். மாதுளையின் துவர்ப்பு கருப்பைக்கு நல்லது.
கால் வெடிப்புக்கு
மருதாணி இலையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூச, பித்த வெடிப்பு, சேற்றுப்புண் ஆறும்.
மூட்டு வலி தைலம்
வேப்பெண்ணெய் 100 மில்லி, நல்லெண்ணெய் 100 மில்லி, தேங்காய் எண்ணெய் 100 மில்லி சேர்த்து கொதிக்க விட்டு, அதில் 100 கிராம் வெள்ளைப் பூண்டைத் தட்டிப் போட்டு கொதிக்க விடவும். ஒரு வாயகன்ற பாத்திரத்தில் 100 கிராம் கற்பூரத்தைப் பொடித்து போடவும். கொதிக்கின்ற எண்ணெயை அடுப்பிலிருந்து இறக்கி, கற்பூரம் வைத்திருக்கின்ற பாத்திரத்தில் வடித்துச் சேர்க்கவும். ஆறியவுடன் எடுத்துவைத்து முட்டிகளில் பூசிவர வாதம், வலி குறையும்.
உறக்கம் வர
சூடான பசும் பாலில் ஒரு பல் வேகவைத்த பூண்டு, ஒரு சிட்டிகை கசகசா பொடி, பனங் கற்கண்டு சேர்த்து இரவில் குடித்தால், நல்ல தூக்கம் வரும்.
வண்ணான் படை நீங்க
சீமை அகத்தி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து இரவில் பூசி, காலையில் வேப்பிலை கலந்த நீரில் குளித்துவர, கால் இடுக்கு, அரையில் வருகின்ற படை நீங்கும்.
சொறி, சிரங்கு படை நீங்க
குப்பை மேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து, சிறிது சந்தனம் சேர்த்து பூசி வர சொறி, சிரங்கு, படை நீங்கும்.
புழு வெட்டு நீங்க
தலையில் திட்டுத் திட்டாக முடி கொட்டுகிறதா? தும்மட்டிக் காயை தணலில் வாட்டி, அதனை தேங்காய் எண்ணெயில் குழைத்துப் பூச, புழு வெட்டு நீங்கி, முடி வளரும்.
அஷ்ட பெருங்காயப் பொடி - ருசியின்மை, செரியாமை நீங்க
சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், ஓமம், ஏலரிசி, பெருங்காயம், இந்துப்பு - இவற்றை தனித்தனியே சம அளவு பொடி செய்து கலந்து வைத்து சுடு சோற்றில் அரைக்கரண்டி கலந்து பசு நெய்விட்டு பிசைந்து சாப்பிட, அரோசகம் (ருசியின்மை), செரியாமை நீங்கும்.
விக்கல் தீர
நீண்ட நாள் விக்கல் தீர மருந்துக் கடைகளில் கிடைக்கும் மயிலிறகாதி சூரணத்தைத் தேனில் குழைத்து இருவேளை தொடர்ந்து சாப்பிட விக்கல் குணமாகும்.
கரப்பான் நோய், சரும நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்
சோளம், கம்பு, வரகு, கார் அரிசி, வாழைக்காய், பாகற்காய், கெளிற்று மீன் இவற்றை உணவில் தவிர்த்தால், சரும நோய்கள் எளிதில் குணமாகும்.
வாய் துர்நாற்றம் குறைய
மணத்தக்காளிக் கீரை ஒரு கைப்பிடி, வெங்காயம் இரண்டு, வெந்தயம் அரை ஸ்பூன், ஏலரிசி கால் ஸ்பூன் எடுத்துக் கொள்ளவும். வெந்தயம், ஏலரிசியைப் பொடி செய்து, வெங்காயத்தை நன்றாக வதக்கி, மணத்தக்காளி கீரையையும் கலந்து வதக்கவும். இரண்டு தம்ளர் தண்ணீர்விட்டு நன்றாக சுண்டக் காய்ச்சி, காலை - மாலை இருவேளை 30 மிலி அளவு சாப்பிட்டுவர, வாய் துர்நாற்றம் நீங்கும்.
பாலுண்ணி, மரு நீங்க
அம்மான் பச்சரிசி செடியின் பாலை மருவின் மீது தொட்டு வைத்துவர நாள் பட, நாள் பட மரு சுருங்கி குணமாகிவிடும்.
கண் சிவப்பு, எரிச்சலுக்கு
ஒரு சுத்தமான வெள்ளைப் பருத்தித் துணியை எடுத்து, விரலி மஞ்சளை நன்றாக அரைத்து தண்ணீரில் கலக்கி, அந்த நீரில் துணியை அலசவும். நிழலில் உலர்த்தி வைத்து, அதைக் கொண்டு அவ்வப்போது கண்களைத் துடைத்துவர, கண் வலி, எரிச்சல் போகும்.
பாலூட்டும் தாய்க்கு பால் சுரக்க
(சதாவேரி) தண்ணீர் விட்டான் கிழங்கை பாலில் வேக வைத்து, சர்க்கரை கலந்த கரைசலில் சேர்த்து பாகுபதத்தில் இறக்கி, தேன் கலந்து வைத்து தினமும் காலை - மாலை சாப்பிட்டுவர, பாலூட்டும் தாய்மார்களுக்கு நன்றாகப் பால் சுரக்கும்.
இருமலில் ஏற்படும் நெஞ்சு வலி தீர
நொச்சி இலையை துணியில் கிளி கட்டி, சூடான அகலில், ஒற்றி, சூட்டுடன் ஒற்றடம் கொடுக்க, தொடர்ந்த இருமலில் வருகின்ற நெஞ்செலும்பு வலி தீரும்.
கல்லடைப்பு தீர
சிறுநீரகத்தில் உண்டாகும் கற்கள் கரைய, சிறு நெருஞ்சில், நீர்முள்ளி, சிறுகண் பீளை இவற்றை கஷாயமாக செய்து, இருவேளை குடிக்க, கல் கரைந்து விடும்.
வண்டுக்கடி, பூச்சிக்கடி விஷம் நீங்க
ஒரு வெற்றிலையில், பத்து மிளகை வைத்துக் கடித்து சாறை விழுங்கி விட்டால், உடனடியாக விஷம் கட்டுப்படும். மிளகை யூனிவர்சல் ஆன்டிடோட் (Universal
Antidote) என புகழ்வர். ‘பத்து மிளகிருந்தால் பகைவன் வீட்டிலும் சாப்பிடலாம்’ என்பது பழமொழி.
ஒற்றைத் தலைவலி தீர
மருந்துக் கடைகளில் கிடைக்கும் நீர்க்கோர்வை மாத்திரையை வெந்நீரில் இழைத்து நெற்றியில், பிடரியில் பற்றுப் போட, தலைவலி தீரும்.
வாய்ப்புண் குறைய
நன்றாகப் பழுத்த நாவல் பழத்தை, உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் ஆறும்.
இரும்புச் சத்து கூட, சோகை குணமாக
முருங்கைக் கீரையை வாரம் இருமுறை சாப்பிட்டுவர, உடலில் ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியாகி, சோகை நோய் குணமாகும்.
முதுகு வலி குறைய
வாத நாராயணன் இலைகளை, விளக்கெண்ணெயில் வதக்கி ஒத்தடம் கொடுத்து வந்தால், முதுகுத் தசைகள் தளர்வுற்று வலி குறையும்.
பேதி, வயிற்றுளைச்சல் தீர
தயிர், சுண்டி சூரணம் - 1 கிராம் அளவு தேனில் குழைத்துச் சாப்பிட பேதி, வயிற்றுப் போக்கு உடனே தீரும்.
முகம் பொலிவடைய
பச்சை கேரட்டின் மேல் புறம் உள்ள மெல்லிய தோலை எடுத்து மை போல அரைத்து முகத்தில் பூச, கேரட்டில் உள்ள பீட்டா கரோடின் முகப் பொலிவை உண்டாக்கும்.
கண் பார்வை பலப்பட
கேரட், மல்லித்தழை, தேங்காய்ப் பால் சேர்த்து தினமும் குடித்துவர, கண் நரம்புகள் பலப்படும்.
மலச்சிக்கலுக்கு ரோஜாப்பூ
ரோஜாப்பூ இதழ்களை தண்ணீரில் கொதிக்க வைத்து, கற்கண்டு சேர்த்து, பாகு பதத்தில் இறக்கி தேன் சேர்த்து வைத்துக் கொண்டு, தினமும் இரவில் ஒரு ஸ்பூன் சாப்பிட்டுவர, மலச்சிக்கல் தீரும்.
எலும்புகளை வலுவாக்கும் பிரண்டை
பிரண்டையைத் துவையலாகவோ, வடகமாகவோ செது தினமும் சாப்பிட்டுவர ஆஸ்டியோபொராசிஸ் என்கிற எலும்புக் குறைபாடு நோ தீரும். பிரண்டையில் இருக்கும் பக்க வாட்டு நரம்புகளை நீக்கி, தணலில் சுட்டுப் பயன்படுத்த வேண்டும்.
கால் ஆணி தொந்தரவா?
அத்திக்காயை எடுத்து அரைத்து சாறெடுத்து அதனை வடிகட்டி, கால் ஆணி மீது தடவி வந்தால், வலி குறையும். பாதம் மிருதுவாகும்.
சர்க்கரைக்கு சிறுகுறிஞ்சான்
சிறுகுறிஞ்சான் பொடியை தினமும் இருவேளை உணவுக்கு முன் இரண்டு கிராம் அளவு சாப்பிட்டுவர, சர்க்கரை நோய் கட்டுப்படும்.
நோய் அண்டாது இருக்க...
மோரை நிறைய நீர் விட்டு, பெருக்கி சாப்பிட வேண்டும். நீரை நன்றாகக் காய்ச்சி சுண்ட வைத்து (சுருக்கி) குடிக்க வேண்டும். வெண்ணெயை உருக்கி, புத்துருக்கு நெய்யாக தினமும் புதிதாக உருக்கிச் சாப்பிட வேண்டும்.
நோய் எதிர்ப்பு சக்தி உண்டாக
முளைவிட்ட கோதுமையை நன்றாகக் காயவைத்து பொன்னிறமாக வறுத்துப் பொடி செய்யவும். அதனுடன் அதிமதுரம், நாட்டுச் சர்க்கரை, தேன் கலந்து, குழந்தைகளுக்குச் சாப்பிடக் கொடுத்து வந்தால், நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும்.
அடிபட்ட வீக்கம் நீங்க
மஞ்சணத்தி இலையில் (நுணா இலை) விளக்கெண்ணெய் தடவி தணலில் வாட்டி, வீக்கத்தின் மேல் வைத்து, சுத்தமான துணி வைத்து இறுக்கமில்லாமல் கட்டிவர வீக்கம் நீங்கும்.
விந்தணுக்கள் பெருக
அமுக்கரா கிழங்கு, பூனைக்காலி விதை, நிலப்பனைக் கிழங்கு இவற்றைப் பொடி செய்து, சம அளவு பொடி செய்த சர்க்கரை கலந்து தினமும் காலை - மாலை, இருவேளை 2 கிராம் அளவு, பாலில் கலந்து சாப்பிட, ஆண்களுக்கு விந்தணுக்கள் நன்கு உற்பத்தியாகும்.
தொண்டை வலி தீர
பூண்டை, தேன் விட்டு அரைத்துப் பூச, தொண்டைப் புண் ஆறும்.
வயிற்றுப்புண் குணமாக
சீரகத்தை இலேசாக வறுத்துப் பொடி செய்யவும். பொடித்த பனங்கற்கண்டுடன் கலந்து காலை - மாலை ஆகாரத்திற்கு முன் இளஞ்சூடான வெந்நீரில் சாப்பிட்டுவர, வயிற்றுப்புண், அல்சர் குணமாகும்.
தொப்பை குறைய
உணவில் அடிக்கடி சுரைக்காயைச் சேர்த்து சாப்பிட்டுவர, உடலில் தேவையற்ற கொழுப்பு குறைந்து, தொப்பை குறையும்.
வெள்ளைப் படுதல்
பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப் படுதல் நோய்க்கு கடைகளில் கிடைக்கும் வெண்பூசணி லேகியத்தை தினமும் சாப்பிட, நல்ல குணம் தெரியும்.
நாவறட்சி
அதிகமான நாவறட்சி, அதிக தாகம் குறைய, அக்கரகாரத்தைப் பாலில் காய்ச்சிக் குடிக்கலாம். நன்னாரி வேரைத் துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் கொதிக்க வைத்துக் குடிக்கலாம்.
முக்குற்றம் தீர்க்கும் நெல்லிக்காய்
நெல்லிக்காயில் ஆறு சுவைகளும் உண்டு. எனவே, தினமும் ஒரு நெல்லிக்காயை மென்று சாப்பிட்டுவர, வாதம், பித்தம், கபம் என்கின்ற மூன்று அடிப்படைகளிலும் வரும் அனைத்து நோய்களும் வராமல் பாதுகாக்கும்.
மூலமுளை கரைய
துத்தி இலையை மண்பாண்டத்தில் போட்டு விளக்கெண்ணெய் ஊற்றி வதக்கவும். மிதமான சூட்டில் எடுத்து, பெரிய வெற்றிலை ஒன்றின் மேல் வைத்து மூல முளையின் மீது வைத்துக் கட்டிக் கொள்ளவும். இதை தொடர்ந்து செய்து வரும் போது, மூலம் கரைந்து வலி குறையும்.
உடல் தேற
இளைத்த உடல் தேறணுமா? மருந்துக் கடைகளில் கிடைக்கும் தேற்றான் கொட்டை லேகியத்தை தினமும் இருவேளை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டு வர, உடல் தேறி வலு உண்டாகும்.
குரல் கம்மலுக்கு ஆடாதோடை
‘ஆடாதோடை ஐந்து மிளகும்
பாடாதெல்லாம் பாடுமென்பார்’
- ஆடாதோடை இலை (ஆடு தீண்டா பாலை இலை அல்ல) இரண்டுடன், எட்டு மிளகு சேர்த்து அரைத்து காலை, மாலை சாப்பிட்டுவர, குரல் கம்மல் குணமாகும்.
நன்றி - கல்கி