ஹாலிவுட் இயக்குனர்களில் மிக முக்கியமானவரான மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கத்தில் வெளிவந்த படங்கள் வணிகரீதியான வெற்றிகள், விருதுகளுடன் பெரும் சர்ச்சைகளையும் சம்பாதித்தவை. ராபர்ட் டி நீரோவுடன் இணைந்து அவர் தந்த 'டாக்ஸி டிரைவர்', 'ரேஜிங் புல்' போன்ற படங்கள் வித்தியாசமான காட்சி உருவாக்கத்தின் மூலம் விமர்சனரீதியாகக் கொண்டாடப்பட்டதுடன் வெற்றியும் பெற்றவை.
இயேசுவின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அவரது படமான 'தி லாஸ்ட் டெம்ப்டேஷன் ஆப் கிறிஸ்ட்' பெரிய சர்ச்சைகளைச் சந்தித்தது. ஸ்டீவென் ஸ்பீல்பெர்க் முதல் குவிண்டின் டாரண்டினோ வரை கிட்டத்தட்ட அனைத்து முக்கியமான இயக்குனர்களின் படங்களிலும் நடித்துவிட்ட லியார்னாடோ டி காப்ரியோ, ஸ்கார்சஸியின் ஆஸ்தான நடிகராகிவிட்டார் என்றே சொல்லலாம். அவரது இயக்கத்தில் வெளியான 'கேங்ஸ் ஆப் நியூயார்க்', 'தி ஏவியேட்டர்' தொடங்கி மொத்தம் நான்கு படங்களில் நடித்துவிட்டார். தற்போது அந்த இணை 'தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்' படத்தின் மூலம் மீண்டும் இணைந்திருக்கிறது.
1990-களில் பங்குச்சந்தையில் 1 பில்லியன் டாலருக்கும் மேல் முறைகேடு செய்த ஜோர்டான் பெல்போர்ட்டின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தை உருவாக்கியுள்ளார் மார்ட்டின் ஸ்கார்சஸி. 22 மாதங்கள் சிறையில் இருந்த ஜோர்டான் பெல்போர்ட்,தனது அனுபவங்களைப் புத்தகமாக எழுதிப் புகழ்பெற்றதுடன், தன்னம்பிக்கையை வளர்க்கும் பேச்சாளராக தற்போது பல நாடுகளுக்குச் சுற்றுப்பயணம் செல்கிறார். இவரது பங்குச்சந்தை முறைகேடு குறித்து ஏற்கனவே 'பாய்லர் ரூம்' என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது.
இந்நிலையில் மார்ட்டின் ஸ்கார்சஸி இயக்கியுள்ள இந்தப் படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பெல்போர்ட் பாத்திரத்தில் டி காப்ரியோ நடித்துள்ளார். கிட்டத்தட்ட இதேபோன்ற பாத்திரத்தில், ஸ்பீல்பெர்க் இயக்கத்தில் வெளியான 'கேட்ச் மி இப் யூ கேன்' என்ற படத்திலும் டி காப்ரியோ நடித்திருக்கிறார். 1960-களில் வங்கிக் காசோலை மூலம் மில்லியன் கணக்கான டாலர் முறைகேடு செய்து எப்.பி.ஐ.யி டம் பிடிபட்ட பிராங்க் அபாக்நேல் என்பவரின் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட அப்படத்தில் அநாயசமாக நடித்திருப்பார் டி காப்ரியோ. தற்போது காசோலை முறைகேட்டை தடுப்பதில் எப்.பி.ஐ.க்கே உதவிகரமாக இருந்துவருகிறார் பிராங்க் அபாக்நேல்.
'ஷட்டர் ஐலாண்ட்' படத்துக்குப் பின்னர் டி காப்ரியோ மீண்டும் ஸ்கார்சஸியின் இயக்கத்தில் நடித்திருப்பதால் 'தி வுல்ப் ஆப் வால் ஸ்ட்ரீட்' படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. படம் நவம்பர் 15-ம் தேதி வெளியாகும் என்று திட்டமிடப்பட்டிருந்தாலும், வெளியீட்டுக்கான தேதி தள்ளிப்போடப்படலாம் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன. ஸ்கார்சஸி - டி காப்ரியோ படம் என்பதால் தாராளமாகக் காத்திருக்கலாம்.
நன்றி - த தமிழ் ஹிந்து