Showing posts with label டாப் 8 கமர்ஷியல் கலக்கல்ஸ் - 2014 தமிழ் சினிமா. Show all posts
Showing posts with label டாப் 8 கமர்ஷியல் கலக்கல்ஸ் - 2014 தமிழ் சினிமா. Show all posts

Thursday, January 01, 2015

டாப் 8 கமர்ஷியல் கலக்கல்ஸ் - 2014 தமிழ் சினிமா


தமிழ் சினிமா ரசிகர்களுக்கு நிறைவை மட்டுமின்றி, முதலீடு செய்தவர்களையும் முகம் மலரச் செய்த 2014-ன் படைப்புகள் இவை. படத்தின் தலைப்பு - ஆங்கில அகரவரிசை அடிப்படையில் இங்கே பட்டியலிட்டுள்ளேன். உங்களிடம் ஒரு பட்டியல் இருக்கலாம். அதை கீழே கருத்துப் பகுதியில் பதியலாம். 


 
அரண்மனை:
'சந்திரமுகி', 'முனி', 'காஞ்சனா' வரிசையில் திகிலும், நகைச்சுவையும் கலந்த படம் 'அரண்மனை'. சந்திரமுகியும் காஞ்சனாவும் காமெடியாகத் தொடங்கி அங்கும் இங்கும் திகிலூட்டி, இறுதியில் முழு திகிலாக மாறின. அரண்மனையில் படம் முழுவதும் நகைச்சுவைக்கு தான் முக்கியத்துவம். திகில் அம்சம் குறைவாகவே இருந்தது. 'அரண்மனை' திரைப்படத்திற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 



ஜில்லா
ஆண்டு தொடக்கத்தில் வெளியான இப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் கிடைத்தாலும், விஜய் ரசிகர்களால் தில்லாக தப்பித்தது இந்த 'ஜில்லா'. விஜய்யுடன் மோகன்லால் இணைந்து நடித்ததால் படத்தில் வித்தியாசமான கதையம்சம் இருக்கும் என்று நம்பி சென்றவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்த படம். படத்தின் அடிப்படை லாஜிக்குகளை இன்னும் வலுவாக்கியிருந்தால், ஜில்லா, விஜய்க்கு இன்னொரு கில்லியாக இருந்திருக்கும். 



கத்தி
விவசாயத்தையும் விவசாயிகளையும் ஊக்குவித்தால் தான் இந்தியாவில் நிஜமான வளர்ச்சி சாத்தியமாகும் என்று சொல்லும் கதையில் விஜய் நடிக்க முன்வந்தது தான் இப்படத்தின் ஹைலைட். கார்ப்பரேட் சூழ்ச்சிகள் பற்றிய சிவப்புச் சிந்தனைக் கோபங்களையும் தெறித்து, ஆக்‌ஷன் அரிவாளால் பொழுதுபோக்குக் கதிர் அறுத்தது. இப்படத்தின் கதை தன்னுடையது என்று கோபி தொடர்ந்த வழக்கு, தயாரிப்பாளர் ராஜபக்சேவின் உறவினர் என பல்வேறு சர்ச்சைகள் தாண்டி இப்படம் வெளியாகி 100 கோடி வசூலைத் தாண்டியது. வசனங்களில் கூர்மையாக இருந்தாலும், திரைக்கதை இன்னும் கூர்மையாக இருந்திருந்தால் இன்னும் வசூலை வாரியிருக்கும். 


நாய்கள் ஜாக்கிரதை
ஒரு நாயைக் களத்தில் இறக்கி நாயகன் ஆடும் ஆட்டம்தான் ‘நாய்கள் ஜாக்கிரதை’. திரைக்கதை முழுவதும் நாயை மையமாக வைத்து எழுதப்பட்டிருப்பது படத்துக்கு பலம். ‘இதோ’ என்னும் பெல்ஜிய ஷெப்பர்டு நாயை மட்டுமே நம்பி வெளியான இப்படத்திற்கு மக்களிடையே வரவேற்பு கிடைத்தது. நாய்க்கும் நாயகனுக்கும் இடையே நெருக்கம் உருவாகும் விதமும் நாயை நடிக்கவைத்த விதமும் இதை வித்தியாசமான படமாக ஆக்கியது. 


சலீம்
சாது நாயகன் வீர அவதாரம் எடுக்கும்போது சூர சம்ஹாரம் செய்யும் பராக்கிரமசாலியாகக் காட்டாமல் புத்திசாலித்தனத்தையும் சேர்த்த விதத்தில் 'சலீம்'க்கு வரவேற்பு கிடைத்தது. முன் பாதியில் காட்டப்பட்ட பிரச்சினையை இரண்டாம் பாதியில் கவனமாகக் கோர்த்திருப்பது பாராட்டுக்குரியது. முதல் பாதி திரைக்கதை அமைப்பில் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் இப்படம் இன்னும் அழுத்தமாக தனது முத்திரையை பதித்திருக்கும். 



வீரம்
வெள்ளை வேட்டி, வீச்சருவா, ஆட்டம்பாட்டம், அடிதடி என வீரமுள்ள இளைஞனாக அஜித். அழகு தேவதையாக தமன்னா. சிரிக்க வைக்க சந்தானம். வீரம், கச்சிதமான மசாலா பொங்கலாக அமைந்தது. எப்போதுமே வசூலில் அஜித் படங்கள் முன்னிலையில் இருக்கும். முதல் முறையாக படம் முழுவதும் வேஷ்டியில் அஜித் என ரசிகர்கள் பார்க்காத விருந்தை அளித்தார் இயக்குநர் சிவா. மசாலா படப் பிரியர்களைக் குறிவைத்து படத்தின் கலவை சரியாக இருந்ததால் பார்வையாளர்களுக்கு நிஜ விருந்தாக அமைந்தது. 



வேலையில்லா பட்டதாரி
கிடைத்த வேலையைச் செய்யாமல் படித்த/பிடித்த வேலைக்காகக் காத்திருந்து வெற்றி காணும் ஒரு இளம் பொறியாளனின் கதைதான் வேலையில்லா பட்டதாரி. '3', 'மரியான்' என தொடர்ச்சியாக சறுக்கிய தனுஷ், அத்தனை சறுக்கல்களையும் ஒரே படத்தில் தாவ வைத்தது. ஒரு கமர்ஷியல் படம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு 'வேலையில்லா பட்டதாரி' ஒரு உதாரணம் என்று சொல்லலாம். பாடல்கள், காட்சியமைப்பு, எதார்த்தமான நடிப்பு என அனைத்து தரப்பிலும் கவனம் ஈர்க்கப்பட்டது. 



யாமிருக்க பயமே
'கோச்சடையான்' வெளியாவதில் சிக்கல் நீடித்ததால், அவசரமாக களமிறக்கப்பட்ட படம் 'யாமிருக்க பயமே'. யாருமே எதிர்பாராத விதமாக பேய் படத்தில் காமெடி காட்சிகளை இணைத்து அனைவராலும் கொண்டாடப்பட்ட படம். காமெடியும் த்ரில்லரும் கலந்த ஒரு கதையை லாஜிக் இல்லாமல் மேஜிக்காகக் காட்டியது. யு/ஏ சான்றிதழுடன் கிடைத்ததால் 30% வரி போக 2014-ல் அனைவருக்கும் லாபம் சம்பாதித்து கொடுத்த படம் 'யாமிருக்க பயமே'.


thanx -the  hindu