Showing posts with label டாக்டர் ராமதாஸின் பதில். Show all posts
Showing posts with label டாக்டர் ராமதாஸின் பதில். Show all posts

Wednesday, April 10, 2013

தமிழருவி மணியனுக்கு டாக்டர் ராமதாஸின் பதில்

கைசால் நண்பர் தமிழருவிமணியன் அவர்களுக்கு, 

வணக்கம். சென்னையில் கடந்த 02.03.2013 அன்று சர்வோதய அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட அகில இந்திய மது ஒழிப்பு மாநாட்டில், நாம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு சந்தித்தோம். மதுவிலக்கு என்ற கோரிக்​கையை வலியுறுத்திப் பாட்டாளி மக்கள் கட்சி எத்தகைய போராட்​டங்களை நடத்தியிருக்கிறது என்பது குறித்த எனது நிலைப்பாட்டை உங்களி​டம் விளக்கினேன். நீங்களும் அந்த முயற்சி​களைப் பாராட்டியதுடன் தங்களது உரையிலும் அதைப்பற்றி குறிப்பிட்​டீர்கள். அந்த வகையில் மதுவிலக்கு கொள்கையில் நமக்குள் கருத்து ஒற்றுமை ஏற்பட்டுவிட்டதாகவே உணர்கிறேன்.

அதே நேரத்தில், பிப்ரவரி 27-ம் தேதியிட்ட ஜுனியர் விகடன் இதழில் 'காதலை எதிர்ப்பவர்களைத் தூக்கி எறியுங்கள்’ என்ற தலைப்பில் தங்களது தலைமையிலான காந்திய மக்கள் இயக்கத்​தின் சாதி, மத நல்லிணக்க மாநாடு குறித்த செய்தி வெளியாகியிருந்தது. அந்த மாநாட்டில் ''சாதிகள் சாகாத வரை, தமிழ்ச் சாதி மேன்மையுறாது. அதனால், முதலில் சாதியைச் சாகடியுங்கள். காதல் கலப்புத் திருமணங்களை ஆதரியுங்கள். காதலை எதிர்ப்பவர்கள் யாராக இருந்​தாலும் தூக்கி எறியுங்கள். உடற்கூறு மருத்துவரான ராமதாஸ் எப்போது காதலை ஆய்வுசெய்யும் மருத்துவராக மாறினார் எனத் தெரியவில்லை. நாடகக் காதல், அந்தக் காதல், இந்தக் காதல் என்றெல்லாம் ஆய்வறிக்கை வாசிக்கிறார். நான் ஊருக்கு உபதேசிப்பவன் அல்ல. என் வீட்டில் எனது மகன் சாதி கலப்புத் திருமணம் செய்தவர். என் மகள் இன்னும் ஒரு படி மேலே போய் மதக் கலப்புத் திருமணம்செய்தவர்'' என்றெல்லாம் பேசியிருக்கிறீர்கள். இந்த விஷயத்​தில் எங்கள் தரப்பு நியாயத்தை உங்களுக்கு விளக்கி கருத்து ஒற்றுமையை ஏற்படுத்துவதே இந்தக் கடிதத்தின் நோக்கம்.
நாடகக் காதல் திருமணம் தொடர்​பான எங்களின் நிலைப்பாட்டை, என்னை எதிர்ப்பதற்கான வாய்ப்​பாக சிலர் விமர்சிப்பதைப் புரிந்து​கொள்ள முடிகிறது. ஆனால், நீங்களும் எங்கள் நிலைப்பாட்டைப் புரிந்துகொள்​ளாததுதான் எங்களுக்கு வியப்பளிக்கிறது. நீங்கள் பேசியதைப் போல காதலை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. சென்னையில் நடைபெற்ற அனைத்து சமுதாயத் தலைவர்கள் கூட்டத்திலும், அதன்பின் மாவட்ட அளவில் நடத்தப்​பட்ட கூட்டங்களிலும் நிறைவேற்றப்படும் தீர்மானங்களில் எங்களின் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவுபடுத்தியுள்ளோம்.
'நாகரிக சமுதாயத்தில் காதல் திருமணங்களுக்கோ அல்லது கலப்புத் திருமணங்களுக்கோ தடை போடுவது சரியானதாக இருக்காது. பள்ளி, கல்லூரி மாணவிகளின் படிப்பைக் கெடுக்காமல் காதல், நாடகம், கட்டப்பஞ்சாயத்து, பணப் பறிப்பு இல்லாமல், சாதி ஒழிப்பு எனும் போலி வேடம் போடாமல் கல்வி, வேலை, வருமானத்துக்கு முன்னுரிமை தந்து, 21 வயதுக்கு மேல் நடக்கும் காதல் திருமணங்களை நாங்கள் எதிர்க்கவில்லை’ என்று அதில் குறிப்பிட்டுள்ளோம். இத்தகைய காதல்களை நாங்கள் ஒருபோதும் எதிர்க்கவில்லை. பல காதல் - கலப்புத் திருமணங்களை நானே முன்னின்று நடத்திவைத்திருக்கிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
படித்து முடித்து வேலைக்குச் சென்று பெண்​ணுக்கு 21 வயது முடிவடைந்த பின்னர் நடக்கும் காதல் திருமணங்களை அனுமதிக்கலாம் என்ற எங்களின் நிலைப்பாட்டை பல்வேறு தரப்பி​னரும் வரவேற்கின்றனர். எங்களுக்கு முன்பே 2011-ம் ஆண்டு மே மாதம் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் இதே கருத்து தெரிவிக்​கப்பட்டிருக்கிறது. 18 வயதுகூட நிறைவடையாத பெண்ணைக் கடத்திச் சென்று திருமணம்செய்தது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் கே.பக்தவத்சலா, கே.கோவிந்தராஜுலு ஆகியோர் அடங்கிய அமர்வு சொன்ன கருத்தை நான் நினைவு​படுத்துகிறேன். 'மைனருக்கு 21 வயது நிறை​வடையும்போதுதான் அவர் மேஜராகிறாரே தவிர, அதற்கு முன்பாக இல்லை. எனவே, எங்களின் கருத்துப்படி, 21 வயதுக்குட்பட்ட சிறுமிகளால் தாங்கள் காதலிக்கும் ஆண் தங்களுக்கு ஏற்ற துணையா என்பதைப் பகுத்தறிந்து தீர்மானிக்க முடியாது. ஹார்மோன் கோளாறுகளால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் ஆண்களின் வலையில் எளிதாக விழுந்து காதல்வயப்பட்டு, திருமணம் முடித்து, அந்த முடிவுக்காக பின்னர்தான் வருத்தப்படுகிறார்கள் என்பதை இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளும்போது, அந்தத் திருமணத்துக்கு அவர்களின் பெற்றோர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற நிபந்தனையைச் சேர்க்கவேண்டும் - இல்லாவிட்டால், அத்தகைய திருமணங்கள் செல்லாதவை அல்லது ரத்துசெய்யத் தகுந்தவை என அறிவிக்கவேண்டும் என்று அரசுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம்’ என்று தீர்ப்பு அளித்தனர். இதை உங்கள் கவனத்துக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
உங்கள் குழந்தைகள் சாதி கலப்புக் காதல் திருமணம் மற்றும் மதக் கலப்புக் காதல் திருமணம் செய்துகொண்டதைப் பெருமை​யுடன் குறிப்பிட்டிருக்கிறீர்கள். மகிழ்ச்சி... நீங்கள் கற்றறிந்தவர். உங்களைப் போலவே உங்கள் குழந்தைகளும் நன்றாகக் கற்றறிந்து இருப்பார்கள். அவர்களைப் போலவே அவர்கள் தேர்வு செய்துகொண்ட துணைகளும் கற்றறிந்து வாழ்க்கையை வெற்றிகரமாக வாழத் தகுதியான நிலையில் இருப்பவர்கள். இத்தகைய திருமணங்களை நீங்களே எதிர்த்திருந்தாலும்கூட நானே செய்துவைத்திருப்பேன். ஆனால், இப்போது நடக்கும் காதல் நாடகத் திருமணங்களைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை.
'ஒரு லட்சம் சாதி இந்துப் பெண்களின் வயிற்றி​லாவது தலித்துகளின் கரு வளர வேண்டும். அப்படி வளர்ந்தால்தான் சாதி ஒழியும்’ என்று, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பேசிவருவது உங்களுக்குத் தெரியுமா? 14 முதல் 18 வயது வரையுள்ள (டீன் ஏஜ்) அப்பாவிப் பெண்களுக்கு காதல் வலை (காம வலை) விரிப்பதையே சிலர் ஒரு தொழிலாக வைத்​திருப்பதும், அவர்களால் ஏராளமான பெண்கள் வாழ்க்கை இழந்ததும் உங்களுக்குத் தெரியுமா? வாழ்க்கை இழந்ததைத் தாங்கிக்கொள்ள முடியாமல் இளம்பெண்களும், அவர்களின் பெற்றோர் மற்றும் குடும்பத்தினரும் தற்கொலை செய்துகொண்டது உங்களுக்குத் தெரியுமா? இது தொடர்பான பட்டியல்களை நீங்கள் கோரும்பட்சத்தில், அனுப்பிவைக்கத் தயாராக இருக்கிறேன்.
வடக்கு மற்றும் மேற்கு மாவட்டங்களில் பொரு​ளாதார அடிப்படையில் வசதியாக இருக்கும் குடும்பத்துப் பெண்களுக்கு வலைவிரிப்பது, அவர்கள் காதல் வலையில் விழுந்த பின் கடத்திச் சென்று பெண்ணை ஒப்படைக்க லட்சம், கோடிகளில் பேரம் பேசுவது, ஏழைப் பெண்களாக இருந்​தால் திருமணம் செய்துகொண்ட சில மாதங்களில், வாழாவெட்டியாகப் பெண்ணை தாய் வீட்டுக்குத் திருப்பி அனுப்பிவைப்பது போன்றவை திட்டமிட்டே நடத்தப்படுகின்றன. இவ்வாறு நடப்​பதை காதல் நாடகங்கள் என்று சொல்லாமல் வேறு எப்படிச் சொல்வது? இதைச் சொல்ல என்னைப் போன்ற மருத்துவர்களே கூடத் தேவை இல்லை. சாதாரண மனிதர்களே போதும். நீங்கள் சொல்வதைப் போல காதல் ஆய்வு மருத்துவர்தான் வேண்டும் என்று நான் கருதவில்லை. இத்தகைய சூழலில் நீங்கள் பெண்ணைப் பெற்றவராக இருந்தால், இதனால் சாதி ஒழிந்துவிடும் என்ற எண்ணத்தில் திருமணத்துக்கு ஒப்புக்கொள்வீர்களா?

காதல் - கலப்புத் திருமணங்கள்தான் சாதியை ஒழிக்கும் ஆயுதங்கள் என்று கூறியிருக்கிறீர்கள். சாதிகள் ஒழிய வேண்டும் என்பதில் தமிழகத்தில் உள்ள அனைவரையும்விட அதிக அக்கறை கொண்​டவன் நான். எனது கீழ்க்கண்ட கேள்விகளுக்கு மட்டும் விடையளியுங்கள் (உங்களை சங்கடப்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த கேள்விகளைக் கேட்கவில்லை. யதார்த்தத்தை உங்களுக்கு உணர்த்த​வேண்டும் என்பதற்காக நட்பின் அடிப்படையில்தான் இதைக் கேட்கிறேன்.)

1. இந்திய விடுதலைக்குப் பிந்தைய 65 ஆண்டுகளில் நடந்த காதல் திருமணங்களால் சாதியற்ற சமுதாயம் எந்த அளவுக்கு உருவாகியிருக்கிறது?

2. காதல் கலப்புத் திருமணம் செய்துகொண்டவர்​களில் எத்தனை பேர் தங்களின் குழந்தைகளை சாதியற்றவர்களாகப் பதிவுசெய்திருக்கிறார்கள்?

3.உங்களது மகனும் மகளும் தங்களின் குழந்தைகளை எத்தகையவர்களாகப் பதிவு​செய்திருக்​கிறார்கள்?

இந்த மூன்று கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்​களே காதல் - கலப்புத் திருமணங்களால் சமுதாயத்​தில் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடவில்லை என்பதை தெளிவுபடுத்தும். அதே நேரத்தில் காதல் நாடகத் திருமணங்கள் சமுதாய நல்லிணக்கத்தை சீர்குலைக்கின்றன. திருக்குறளில் வலி(மை)யறிதல் அதிகாரத்தை நன்கு கற்றறிந்த நீங்கள், காதல் நாடகத் திருமணங்களால் பாதிக்கப்பட்டவர்களின் வலியை அறிந்திருப்பீர்களேயானால், இப்படி ஒரு விமர்சனத்தை முன்வைத்திருக்க மாட்டீர்கள்.

தமிழகத்தில் அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழவேண்டும் என்பதில், யாருக்கும் நான் இரண்டாமவன் அல்ல. அனைத்து சமுதாய நல்லிணக்க மாநாடு, ஒரு தாய் மக்கள் மாநாடு ஆகியவற்றை நான் நடத்தினேன். இதற்கெல்லாம் மேலாக, 1998-ம் ஆண்டில் 14 மாவட்டங்களில் சமய சமுதாய நல்லிணக்க மாநாடுகளை நடத்தினேன். மாநாடுகளில் மதத் தலைவர்கள், சமுதாயத் தலைவர்கள், ஆன்மிகத் தலைவர்கள், காந்தியவாதிகள் ஆகியோரை இந்த மாநாடுகளில் பங்கேற்கச்செய்து சமய, சமுதாய நல்லிணக்கக் கருத்துகளைப் பரப்பச் செய்தேன். தமிழகத்திலேயே அம்பேத்கர் சிலை​களை அதிக அளவில் நான் திறந்து வைத்து இருப்பதையும் அரசியல் அறிந்தவர் என்ற வகையில் நீங்கள் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன். ஒருவேளை இவற்றை நீங்கள் அறிந்திராவிட்டால், இவற்றையெல்லாம் அறிய இந்தக் கடிதம் உங்களுக்கு உதவும்.
மாற்றங்கள் ஏற்படுத்தும் மகத்தான எந்திரம் காலம்​தான் என்பதை நான் அறிவேன். காலப்போக்கில் உங்களின் எண்ணத்திலும் மாற்றம் ஏற்பட்டு யதார்த்தத்தை உணர்வீர்கள் என்று நம்புகிறேன்.

தங்கள் அன்புள்ள
மருத்துவர் ச.ராமதாஸ்

நன்றி - ஜூ.வி.