ஓ பக்கங்கள்
பதினாறு
வயதினிலே...
ஞாநி
தில்லிப் பேருந்தில் மருத்துவ மாணவி பாலியல் வன்முறையில் கொல்லப்பட்ட நிகழ்ச்சிக்குக் கொதித்தெழுந்து, இனி பாலியல் வல்லுறவுக்கு மரணதண்டனைதான் கொடுக்கவேண்டுமென்று ஆவேசப்பட்டவர்கள் முதல், தொடர்ந்து ஒரு மாத காலம் தில்லி நிகழ்ச்சியைப் பற்றியே இடைவிடாத விவாதம் நடத்திய தொலைக்காட்சிகள் வரை, இந்த வாரம் அரசு நிறைவேற்றி இருக்கும் சட்டத்தை அதே துடிப்புடன் கண்டுகொள்ளவே இல்லை.
மக்களவையில் சோனியா, ராகுல் காந்தி உட்பட வோட்டெடுப்பின்போது இருக்கக்கூட இல்லை. மொத்தமிருந்தவர்கள் 196 பேர்தான். அதிலும் சிலர் கருத்து சொன்ன போது பிரச்னையின் தீவிரத்தை விட்டுவிட்டு மோசமான நகைச்சுவைகளை வேறு உதிர்த்திருக்கிறார்கள். பெண்களைத் தொடர்ந்து பின்பற்றி வந்து தன்னைக் கவனிக்கச் செய்யும் விதத்தில் தொல்லை கொடுக்கும் ஸ்டாக்கிங்கில் ஈடுபடுவதைக் குற்றமாக இந்தச் சட்டம் சொல்வதை ஷரத் யாதவ் கிண்டலடிக்கிறார். அப்படி செய்யாமல் எப்படி காதலிப்பது? நாம் எல்லாரும் சின்ன வயதில் அப்படி செய்தவர்கள்தானே," என்கிறார்.
கட்டாய உடலுறவு குற்றம் செய்வோருக்கு 20 வருடங்களும் அல்லது வாழ்நாள் முழுவதும் கூட சிறைத் தண்டனை விதிக்க சட்டம் வகை செய்திருக்கிறது. இதே குற்றத்தைத் திரும்பத் திரும்பச் செய்தால் மரணதண்டனையும் வழங்கலாம் என்று சொல்கிறது. முதல் குற்றம் செய்து 20 வருடம் தண்டிக்கப்பட்ட ஒருவர் அதன்பின் வெளியே வந்து திரும்ப இதே குற்றம் செய்து பிடிபட்டு மரண தண்டனைக்குரியவராகும் வாய்ப்பு குறைவு என்பதால், பலரும் ஆவேசமாகக் கோரியது போல வல்லுறவு குற்றத்துக்கு ஒரேயடியாக மரண தண்டனை விதிக்கப்படவில்லை என்றே ஆறுதல் அடையலாம். வல்லுறவு பெண்ணின் மரணத்தில் முடிந்தாலோ, வாழ்நாள் முழுவதும் இனி அந்தப் பெண் முழுக்க செயலற்ற நிலையில் இருக்கும் நிலை ஏற்பட்டாலோ அதையும் மரணத்துக்குச் சமமாகக் கருதி கொலைக் குற்றமாகக் கொண்டு மரணதண்டனை வரை வழங்க வகை செய்யப்பட்டிருக்கிறது.
கட்டாய உடலுறவு என்பது என்ன என்று இதற்கு முன் இருந்த வரையறை முதல்முறையாக விரிவு படுத்தப்பட்டுள்ளது. பெண்ணுறுப்பில் பலவந்தமாக ஆணுறுப்பு நுழைக்கப்படுவது மட்டுமே இதுவரை ரேப் என்று கருதப்பட்டது. உடலின் எந்தப் பகுதியில் அவ்வாறு செய்தாலும் செய்ய வைக்கப்பட்டாலும் ரேப் என்று இப்போது விரிவாக வரையறுக்கப்பட்டிருக்கிறது.
முதல்முறையாக பெண் மீது ஆசிட்வீச்சு முதலிய தாக்குதல் நடத்தி அவரைச் சிதைப்போருக்கு, குறைந்தது பத்து வருட சிறைத் தண்டனை என்று ஆக்கப்பட்டிருக்கிறது. வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டோ, ஆசிட் தாக்குதலுக்கு ஆளாகியோ சிகிச்சைக்கு வருவோருக்கு சிகிச்சை தர மறுத்தால் ஓராண்டு சிறைவாசம். பொது இடத்திலோ தனி இடத்திலோ பெண்ணின் உடைகளைக் களைந்து அவமதிக்கும் குற்றத்துக்கு மூன்றிலிருந்து ஏழாண்டு சிறைத் தண்டனை. பெண்ணின் சம்மதத்துடனே அவளுடன் எடுத்துக் கொண்ட அந்தரங்கப் படங்களைக் கூட அவள் சம்மதம் இல்லாமல் இன்னொருவருக்குக் காட்டுவதும் குற்றமாக்கப்பட்டிருக்கிறது.
இவையெல்லாம் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட மாற்றங்கள்தான். ஆனால் தில்லி நிகழ்ச்சி எழுப்பிய ஒரு கேள்விக்கு சட்டப்பூர்வமான தீர்வு இந்தச் சட்டத்திலும் இல்லை. பாலியல் வன்முறையில் ஈடுபட்ட ஒரு குற்றவாளி 18 வயது நிரம்பாத மைனராக இருந்தால், அவரை இதர குற்றவாளிகள் போல தண்டிக்க முடியாது. இளங்குற்றவாளிகளுக்கான சீர்திருத்த விடுதிக்கே அனுப்ப முடியும். குற்றவாளியின் வயது 15 என்றால் அவர் அங்கே மூன்று வருடங்கள் இருந்தபின் விடுதலையாகி விடுவார். அதே குற்றத்தில் ஈடுபட்ட அவருடன் இருந்த சக குற்றவாளிகள் 18 வயதைக் கடந்த மேஜர்களாக இருந்தால் அவர்களெல்லாரும் 20 வருடச் சிறையை அனுபவிப்பார்கள். இந்த முரண்பாட்டை எப்படித் தீர்ப்பது என்ற விவாதம் தில்லி சம்பவத்தில் ஒரு குற்றவாளியின் வயது மைனர் வயது என்பதால் எழுப்பப்பட்டது. இதற்கு இன்னும் தீர்வு வரவில்லை.
நம் உடனடி விவாதத்துக்கும் தொடர்ந்து மேலும் பல சட்டப்பூர்வமான மாற்றங்கள் தேவை என்று குரலெழுப்பவும் வேண்டிய வேறொரு முக்கியமான சட்டத்திருத்தம் இப்போது வந்திருக்கிறது.
ஆண்-பெண் இருவரும் தாமே விரும்பி உடலுறவு கொள்வதற்குக் குறைந்தபட்ச வயது எது என்ற வரையறைதான் அது. பல வருடங்களாக இந்தியாவில் இது 16 வயது என்றே இருந்து வருகிறது என்பதே பலரும் அறியாத ஆச்சர்யமான செய்தியாக இருக்கலாம். திருமணம் செய்வதற்கான வயது பெண்ணுக்கு 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் இருக்கிறது. ஆனால் உடலுறவுக்கான பரஸ்பர சம்மத வயது 16 ஆகவே இருக்கிறது. இதுதான் உலகத்தின் பெரும்பாலான நாடுகளிலும் இருக்கும் வயது விதியாகும்.
ஆனால் கடந்த பிப்ரவரியில் இந்திய அரசு கொண்டு வந்த அவசரச் சட்டத்தில் இது 18 என்று மாற்றப்பட்டது. இப்போதைய சட்டத்தில் மறுபடியும் இதை 16 என்று ஆக்க அரசு விரும்பியது. ஆனால் பல கட்சிகள், அமைப்புகள் எதிர்த்தன. எனவே இந்த உடலுறவுக்கான பரஸ்பர சம்மத வயது 18 ஆகவே புதிய சட்டத்திலும் வைக்கப்பட்டுவிட்டது.
இது தொடர்பான சில விசித்திர நிலைமைகளைப் பார்க்கலாம். இந்த வயது விதி 16 என்று இருந்தவரை ஆண், பெண் இருவருமே திருமணமாகாமலே உறவு கொள்ளலாம் என்பதே நிலைமை. இப்போது பெண்ணின் திருமண வயதும் உடலுறவு விருப்ப வயதும் ஒன்றாகிவிட்டன. ஆனால் ஆண் மட்டும் திருமணத்துக்கான தகுதி வயது 21 என்பதால் திருமணம் செய்யாமலே மூன்றாண்டுகள் முன்பிலிருந்தே 18 லேயே விருப்ப உடலுறவு வைத்துக் கொள்ளலாம்! ஆனால் 18ல் திருமணம் செய்ய முடியாது.
உண்மையில் சமூக யதார்த்தம் என்பது என்ன? இதைப் பற்றி விவாதிக்க சில நண்பர்கள் இந்த வாரம் கூடிப் பேசினோம். இதில் மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், பெண்கள் - இளைஞர்கள் சார்ந்த உடல், மன நலத்துறைகளில் பணிபுரிந்த அனுபவம் உடையவர்கள், கல்வியாளர்கள் என்று பலதரப்பட்டவர்கள் இருந்தனர். எல்லாரும் சுட்டிக் காட்டிய முக்கியமான செய்தி என்பது, சட்டம் என்னவாக இருந்தாலும், பரஸ்பர சம்மதத்துடன் இளைஞர்கள் உடலுறவில் ஈடுபடுவது 15 வயதிலிருந்தே பரவலாக நடைபெறுகிறது என்பதுதான். சிறுமிகள் பூப்பெதும் வயது சராசரியாக 11 என்றாகிவிட்ட நிலையிலும், மீடியா, சினிமா ஆகியவற்றின் காமம் சார்ந்த தாக்கம் இளம் மனங்கள் மீது மிகக் கடுமையாக உள்ள நிலையிலும், உடலுறவுக்கான வேட்கையும் வாய்ப்பும் சாத்தியமும் 13,14 வயதிலேயே தொடங்கிவிடுகின்றன.
இப்போது பரஸ்பர சம்மத வயதை 18 என்று வைத்திருப்பதால், கணிசமான இளைஞர்கள் சட்டப்படி குற்றவாளிகளாகிவிடுவார்கள். இந்தியாவில் கடந்த பத்தாண்டுகளில் எடுக்கப்பட்ட வெவ்வேறு ஆய்வுகளில், முதல் செக்ஸ் அனுபவம் என்பது 14 வயதிலேயே ஏற்பட்டுவிட்டதாக சுமார் 20 சத விகிதம் இளைஞர்கள் தெரிவித்திருக்கிறார்கள். 16,17 வயது என்பது ப்ளஸ் டூ முடிக்கும் பருவம். இந்த வயதில் பரஸ்பர செக்ஸ் அனுபவம் உடையவர்கள் சதவிகிதம் இன்னும் சற்றே அதிகமாக இருக்கலாம். சதவிகித அளவில் இதெல்லாம் குறைவென்றே தோன்றினாலும், மொத்த இளைஞர்களின் எண்ணிக்கையில் இந்த சதவிகிதமே லட்சோப லட்சங்களாகும்.
அவர்களை எல்லாம் 18 என்ற வயது விதி குற்றவாளிகளாக ஆக்குகிறது. பல காலமாக 16 என்றே இருந்த சட்ட சம்மத வயதை இப்போது அரசு 18 என்று மாற்றியது ஏன்? இது 18 ஆகத்தான் இருக்க வேண்டும் என்று வலியுறுத்துபவர்கள் பெரும்பாலும், திருமணத்தையும் செக்ஸையும் பிரிக்கக்கூடாது என்று கருதும் அரசியல் கட்சிகளும் சமூக அமைப்புகளுமேயாகும். அதாவது திருமணம் செய்யாமல் செக்சில் ஈடுபடுவது தவறு என்ற பார்வைதான் காரணம். அந்தத் ‘தவறை’க் கூட ஆண்கள் செய்யலாம். பெண்கள் செய்யக்கூடாது என்பதே இப்போதைய சட்ட விதி காட்டும் பார்வையாக இருக்கிறது.
ஆனால் நடைமுறையில் இந்த 18 வயது என்ற சட்டவிதி கணிசமானவர்களால் மீறப்பட்டுக் கொண்டேதான் இருக்கும். இந்தியாவில் எப்படி திருமணத்துக்கான தகுதி வயது விதி கணிசமான மக்களால் எப்போதுமே மீறப்பட்டு வருகிறதோ அதே நிலைதான் இதிலும்.
திருமணம் செய்து குடும்பம் நடத்த மன முதிர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் தேவைப்படுவதாக எல்லாருமே கருதுகிறார்கள். பெண்ணுக்கு 18 வயதிலும் ஆணுக்கு 21வயதிலும் அது வந்துவிடுவதாக சட்டம் நம்புகிறது. உண்மையில் இருவருக்கும் அது முப்பது வயதுக்கு முன்னால் வருவதாக யதார்த்தத்தில் இல்லை. விதிவிலக்காக ஒரு சிலரே 25 வயதில் அப்படி இருக்கிறார்கள்.
மன முதிர்ச்சியும் பொறுப்புணர்ச்சியும் இருந்தால்தான் செக்சில் ஈடுபட வேண்டும் என்றே நான் கருதுகிறேன். ஆனால் அதற்கான உடல் தேவையை 30 வயது வரை தள்ளிப் போடச் சொல்வது சாத்தியமானதோ யதார்த்தமானதோ அல்ல. இந்த விஷயத்தின் அடிப்படையான சிக்கல் என்னவென்றால், இதில் எல்லாருக்கும் பொதுவான தீர்வு என்று ஒன்றைச் சட்டத்தால் ஏற்படுத்திவிட முடியாது. அவரவருக்கான தீர்வை அவரவர்கள்தான் உருவாக்கிக் கொள்ள முடியும்.
அதற்குத் தேவைப்படும் கல்வி எல்லோருக்கும் தரப்படுவதை மட்டுமே அரசும் அமைப்பும் சமூகமும் செய்ய முடியும். 11,12 வயதிலிருந்து உடலிலும் மனத்திலும் மாற்றங்கள் வரத் தொடங்கும் போது அதைப் புரிந்து கொள்ள முறையான வழிகள் இன்று எதுவும் நம் சிறுவர்களுக்கும் சிறுமியர்களுக்கும் இல்லை. மீடியாவும் நண்பர்களும் தரும் அரைகுறை ஆலோசனைகளே உள்ளன. எனவே ஆறாம் வகுப்பிலிருந்து கட்டாயமான நலக் கல்வி தனிப்பாடமாக வருடம் முழுவதும் நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் நண்பர்கள் விவாதத்தின் ஒருமித்த ஒற்றைக் கருத்தாக இருந்தது. நலக்கல்வி என்றால் தன் உடலைப் புரிந்து கொள்வது, உள்ளத்தைப் புரிந்து கொள்வது இரண்டுமாகும். ஒவ்வொரு வகுப்பிலும் அந்தந்த வயதுக்கேற்ப இந்தக் கல்வி படிப்படியாகச் செய்யப்பட வேண்டும்.
ஏனென்றால், இத்தனை வருட காலமாக அரசு உடலுறவுக்கான பரஸ்பர சம்மத வயதை 16 என்று வைத்திருந்ததை இப்போது செயற்கையாக 18 என்று நிச்சயம் சட்டமீறல் செய்யப்படக்கூடிய ஒரு விதியாக மாற்றியிருக்கிறது. ஆனால் உடலைப் பற்றியோ உறவைப் பற்றியோ எந்தக் கல்வியும் தன் குழந்தைகளுக்குத் தராமல் விட்டுவிட்ட அவலம்தான் இருந்து வந்திருக்கிறது. இனி அது உதவாது. விழித்துக் கொண்டு மாற்றங்களுக்கான கல்வியை நாம் செய்யத் தொடங்காவிட்டால், வரும் நூற்றாண்டுகளில் இளைஞர்களின் தேசம் என்ற பெயர் தாங்கப் போகும் இந்தியா பலவீனமான இளைஞர்களின் விடுதியாகி விடும்.
நன்றி - கல்கி