சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் உள்ள ஜெயலலிதா
மீண்டும் தமிழக முதல்வர் ஆவாரா என்ற கேள்வி நாடு முழுவதும் எழுந்துள்ளது.
உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் லில்லி தாமஸ் தொடுத்த பொதுநல மனுவின் வழக்கில்
உச்ச நீதிமன்றம் கடந்த 2013 ஜூலை 10-ல் அளித்த தீர்ப்பில், ஊழல் தடுப்பு
சட்டத்தின் பிரிவு 8-ல் உட்பிரிவு 4-ஐ நீக்கி உத்தரவிட்டது. இதன்படி,
குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்ட எம்.பி. மற்றும்
எம்.எல்.ஏக்கள் மூன்று மாதங்களுக்குள் மேல்முறையீடு செய்து விட்டால்
தப்பலாம் என்ற நிலைமாறி, உடனடியாக பதவியிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
எனினும், அதே தீர்ப்பின் பத்தி 21-ன் கடைசியில், ‘ஊழல் தடுப்பு தண்டனைச்
சட்டம் பிரிவு 8-ன் உட்பிரிவுகள் 1, 2 மற்றும் 3-ன்படி பதவி இழந்தவர்கள்
மீதான குற்றங்கள் நிரூபணம் செய்யப்பட்டதற்கு தடை விதிக்கப்பட்டால்
அவர்களுக்கு பதவி இழப்பு சட்டம் பொருந்தாது’ என உச்ச நீதிமன்ற நீதிபதிகள்
குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 1995-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் ராம் நரங் மற்றும் ரமேஷ் நரங்
ஆகியோருக்கு இடையிலான ஒரு வழக்கில் மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் அளித்த
தீர்ப்பில் கூறிய ஒரு கருத்தும் கோடிட்டுக் காட்டப் பட்டுள்ளது. அதில்
முன்னாள் தலைமை நீதிபதி ஏ.எம்.அஹமதி, கீழமை நீதிமன்றங்களினால் ஒரு
குற்றவாளி மீதான நிரூபிக்கப்பட்ட குற்றங்களுக்கும் இடைக்கால தடை
விதிக்கலாம் எனக் கூறி இருந்தார்.
இது குறித்து ‘தி இந்து’விடம் உச்ச நீதிமன்ற சட்ட வல்லுநர்கள் கூறியதாவது:
உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி ஜெயலலிதா உடனடியாகப் பதவி இழந்தாலும், அதன்
21-வது பத்தியில் நீதிபதிகள் குறிப்பிட்டபடி அவர் மீண்டும் முதல்வராகலாம்.
இதற்கு, அவர் மீதான தண்டனை மற்றும் நிரூபிக்கப்பட்ட குற்றங் களுக்கும்
இடைக்கால தடை விதிக்கப்பட வேண்டும். இதைத் தான், ஜெத்மலானி தனது மேல்
முறையீட்டு வாதத்தில் முன் வைப்பார் எனக் கருதுகிறோம்.
கொலை வழக்கில் சிக்கிய சித்துவின் மீதான தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் தடை
விதித்ததை ஜெத்மலானி முன்னு தாரணமாக எடுத்துக் கூறுவார் என தெரிவித்தனர்.
லில்லி தாமஸ் கருத்து
இது குறித்து ‘தி இந்து’விடம் லில்லி தாமஸ் கூறும்போது, “ஜெயலலிதா மீதான
தண்ட னைக்கு தடை கிடைக்குமே தவிர, குற்றங்கள் மீதான நிரூபணத்துக்கு
வழக்கமாக தடை அளிப்பதில்லை.இதற்கும் சேர்த்து தடை கேட்டால், அவருக்கு
ஜாமீன் கிடைப்பதே சிக்கலாகிவிடும். ஒருவேளை தடை கிடைத்தால் கூட முதல்வராகப்
பதவி ஏற்க முடியாது’ என்றார்.
எனினும், லில்லி மனு மீதான வழக்கில் அளிக்கப்பட்ட தீர்ப்பின்படி ஜெயலலிதா
மீதான தண்டனை மற்றும் சிறப்பு நீதிமன்றத்தில் குற்றங்களின் மீதான
நிரூபணத்திற்கு தடை கிடைத்தால் அவர், உடனடியாக மீண்டும் புதிதாக பதவி
பிரமாணம் எடுத்து முதல்வராகலாம் எனவும், அடுத்த ஆறுமாத காலத்திற்குள் அவர்
ஏதாவது ஒரு தொகுதியில் மீண்டும் போட்டியிடலாம் எனவும் சட்ட வல்லுநர்கள்
உறுதி செய்கின்றனர்.
சித்து வழக்கின் விவரம்
கடந்த 1988, டிசம்பர் 27-ல், கார் நிறுத்துமிடத்தில் வந்த பிரச்சினையை
வைத்து நடந்த சண்டையில், நவ்ஜோத் சிங் சித்து மற்றும் அவரது நண்பரால்
தாக்கப்பட்ட குர்நாம்சிங் என்பவர் இறந்தார். இதுதொடர்பான வழக்கில், கடந்த
டிசம்பர் 2006-ல் பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றம், சித்துவுக்கு
மூன்று வருடம் தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இத்துடன்
சித்துவுக்கு மறுமாதமான ஜனவரி 31-ம் தேதி வரை ஜாமீன் வழங்கியும்
உத்தரவிட்டது. இதில், அப்போது இருந்த சட்டப்படி அவர் அடுத்த மூன்று
மாதங்களில் மேல்முறையீடு மனு செய்து விட்டால் அவரது எம்பி பதவியை ராஜினாமா
செய்யத் தேவையில்லை என இருந்தது. எனினும், சித்து தனது பதவியை ராஜினாமா
செய்து விட்டு, மேல்முறையீட்டில் தனக்கு அளிக்கப்பட்ட தண்டனையுடன், தன்
மீதான குற்றங்களின் நிரூபணத்துக்கும் தடை உத்தரவு கேட்டு மனு செய்தார். இதை
விசாரித்த உச்ச நீதிமன்றம், சித்துவின் தண்டனை மற்றும் குற்றங்கள் மீதான
நிரூபணம் ஆகிய இரண்டிற்கும் தடை விதித்தனர்.
thanx -thehindu