'பெருந்தொகை சேர காரணமாக காட்டப்பட்ட போலித் திட்டம்'
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், அவரது தோழி சசிகலாவும் ஜெயா பப்ளிகேஷன்ஸ்
நிறுவனத்திற்கு சந்தாக்கள் பெற்றது வாயிலாக ரூ.14 கோடி பெறப்பட்டதாக,
கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னர் போலியாக ஆவணங்களை
உருவாக்கியுள்ளனர்.
சொத்துக் குவிப்பு வழக்கில், பெங்களூர் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான்
மைக்கேல் டி’குன்ஹாவின் இந்த முடிவே ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரை குற்றவாளியாக
அறிவித்து தீர்ப்பு வழங்கக் காரணம்.
தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு தீர்ப்பு நகல் கிடைத்துள்ளது. அதில்
கூறப்பட்டிருப்பதாவது: ஜெயலலிதாவும், சசிகலாவும் 1990-ல் தான் ஜெயா
பப்ளிகேஷன் நிறுவனத்தின் பார்ட்னர்களாக இணைந்துள்ளனர். அவர்களது
வழக்கறிஞர்கள் வாதத்தின்படி, அந்த வருடம்தான், அதிமுகவின் அதிகாரப்பூர்வ
நாளிதழான டாக்டர் நமது எம்.ஜி.ஆர்.-க்கு சந்தாதாரர்களை இணைக்கும் திட்டம்
தொடங்கப்பட்டிருக்கிறது.
சந்தாத் திட்டத்தின் கீழ், ரூ.14 கோடி பணம் ஈட்டப்பட்டதாகவும், ஒரு
தனிநபரிடம் இருந்து சந்தாவாக பெறப்பட்ட ரூ.3000 பணத்திற்கும்
செய்தித்தாளின் ஒரே ஒரு பிரதி மட்டுமே அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
சந்தா திட்டத்தை தீவிரமாக ஆய்வு செய்த நீதிபதி டி’குன்ஹா, சொத்துக்
குவிப்பு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகே, சந்தா
திட்டம் துவக்கப்பட்டிருக்கிறது. கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்படுவதற்கு
முன்னர் இருந்தே சந்தா திட்டம் அமலில் இருந்ததற்கான எவ்வித சாட்சியமும்
இல்லை என சுட்டிக்காட்டியிருக்கிறார்.
சந்தா பெறப்பட்டது தொடர்பான வருமான வரிக் (ஐ.டி.) கணக்குகள் சரியாக உள்ளதாக
டிபென்ஸ் தரப்பு வழக்கறிஞர் வாதிட்டபோதும், அதனை தகர்தெறிந்த நீதிபதி
குன்ஹா, "1998-ல் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தரப்பில் வருமான வரிக் கணக்கு
தாக்கல் செய்யப்பட்டதாக வெளியான செய்திகளே அப்படி ஒரு திட்டம் இருப்பதையே
வெளிச்சத்திற்கு கொண்டுவந்ததாக" கூறியுள்ளார்.
எனவே, சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா தரப்பில் தெரிவிக்கப்பட்ட
வாதங்கள் விசாரணை நீதிமன்ற நீதிபதியை சமரசம் செய்யும் அளவில் அமையவில்லை.
ரூ.14 கோடி பணம், ஜெயா பப்ளிகேஷன் சந்தா வாயிலாக பெறப்பட்டது என்ற வாதத்தை
நீதிபதி முற்றிலுமாக நிராகரித்துள்ளார்.
நீதிபதி குன்ஹா கூற்றின்படி, கிரிமினல் வழக்கு பதிவான பிறகே சந்தா திட்டம்
துவக்கப்பட்டுள்ளது. 1995-ல் அவரது வளர்ப்பு மகன் திருமணத்திற்கு
செலவழிக்கப்பட்ட பல கோடி ரூபாய் பணம் உறவினர்களாலும், கட்சித்
தொண்டர்களாலும் அளிக்கப்பட்டது என்பதையும் நீதிபதி ஏற்கவில்லை.
thanx - thehindu