தமிழக முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்
குவிப்பு வழக்கில் சனிக்கிழமை காலை 11 மணிக்கு பெங்களூர் சிறப்பு
நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
இந்த வழக்கில் இணைக்கப்பட்டுள்ள நமது எம்ஜிஆர், ஜெயா என்டர்பிரைசஸ்
உள்ளிட்ட 32 தனியார் நிறுவனங்கள் மீதும் தீர்ப்பு வெளியாக இருக்கின்றன.
சுப்பிரமணியன் சுவாமி வழக்கு:
கடந்த 1991-96 காலக்கட்டத்தில் தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா தனது
வருமானத்திற்கு அதிகமாக ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59
சொத்து குவித்ததாக அப்போதைய ஜனதா கட்சி தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடந்த
14-6-1996 அன்று சென்னை மாநகர அமர்வு நீதிமன்றத்தில் புகார் அளித்தார்.
27-6-1996 அன்று அவரது புகாரை விசாரிக்குமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு
சென்னை மாநாகர அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இவ்வழக்கை விசாரிக்க தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி நல்லம்ம நாயுடு
தலைமையில் 15 காவல் ஆய்வாளர்கள் விசாரணை அதிகாரிகளாக நியமிக்கப்பட்டனர்.
அதனைத் தொடர்ந்து ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் ஆகியோர் இவ்வழக்கில்
குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டனர்.
சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இவ்வழக்கில் முதல்கட்ட
விசாரணை, குற்றப்பத்திரிகை தாக்கல், சாட்சிகள் விசாரணை ஆகியவை 2003-ம்
ஆண்டு வரை நடைபெற்றது.
திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகனின் மனுவைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம்
கடந்த 2003-ம் ஆண்டு நவம்பர் 18-ம் தேதி இவ்வழக்கை பெங்களூருக்கு மாற்றி
உத்தரவிட்டது. அதனைத் தொடர்ந்து தமிழில் இருந்த ஆவணங்களை ஆங்கிலத்தில்
மொழிபெயர்த்தல், பிறழ் சாட்சிகளின் விசாரணை, குறுக்கு விசாரணை,
குற்றம்சாட்டப்பட்டவர்களின் வாக்குமூலம் பதிவு செய்தல் மற்றும் இறுதிவாதம்
ஆகியவை கடந்த 11 ஆண்டுகளாக நடைபெற்று வந்தன.
வழக்கு குறித்த அனைத்து விசாரணைகளும் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி
நிறைவடைந்ததால், செப்டம்பர் 20-ம் தேதி தீர்ப்பு வெளியாகும் என சிறப்பு
நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா உத்தர விட்டார்.
இதனிடையே இசட் பிளஸ் பாதுகாப்பு பிரிவில் இருக்கும் ஜெயலலிதா தனக்கு உரிய
பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரியதால் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம்
பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள காந்தி பவனுக்கு
மாற்றப்பட்டது. மேலும் தீர்ப்பின் தேதி செப்டம்பர் 27-ம் தேதிக்கு (இன்று)
ஒத்திவைக்கப்பட்டது.
எந்தெந்த பிரிவுகளில் வழக்கு:
சொத்து குவிப்பு வழக்கில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா
அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் முதல்வர் ஆவதற்கு முன்பாக (1-7-1991-க்கு
முன்பு) அவருடைய சொத்து மதிப்பு ரூ.2 கோடியே 1 லட்சத்து 83 ஆயிரத்து 956.53
ஆகும். ஆனால் வழக்கு காலத்திற்கு பிறகு (1-7-1991 முதல் 30-4-1996 வரை)
ரூ.66 கோடியே 65 லட்சத்து 20 ஆயிரத்து 395.59 ஆக சொத்து அதிகரித்துள்ளது.
எனவே ஜெயலலிதா தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி வருமானத்துக்கு அதிகமாக
சொத்து குவித்துள்ளார். மேலும் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் சொத்து
குவிக்க உடந்தையாக இருந்துள்ளார்.
எனவே அவர் மீது ஊழல் தடுப்பு சட்டம் 13(1) ( ஈ) பிரிவில் வருமானத்துக்கு
அதிகமாக சொத்து குவித்தது மற்றும் 13(2) அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த
குற்றத்துக்கு உடந்தையாக இருந்தது மற்றும் ஊழல் தடுப்பு சட்டம் 120(பி)
கூட்டு சதி தீட்டியது ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இரு தரப்பு வாதம்:
ஜெயலலிதாவின் வருமானத்தை விவரித்து அவரது வழக்கறிஞர் பி.குமாரும், அதனை
மறுத்து அரசு வழக்கறிஞர் பவானிசிங்கும் சுமார் 100 மணி நேரம்
வாதிட்டுள்ளனர். இதே போல சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோரின்
வழக்கறிஞர்கள், 'ஜெயலலிதாவிற்கும் இவ்வழக் கிற்கும் தொடர்பில்லை. திமுகவின்
அரசியல் பழிவாங்கும் வழக்கு' என சுமார் 90 மணி நேரம் வாதிட்டுள்ளனர்.
சுமார் 5 ஆயிரம் பக்கத்துக்கு எழுத்துப்பூர்வ அறிக் கையும் தாக்கல்
செய்துள்ளனர்.
சொத்து குவிப்பு வழக்கில் மூன்றாம் தரப்பான அன்பழகன் தனது வாதமாக 445 பக்கங்களில் எழுத்துப்பூர்வமான ஆதாரங்களை அடுக்கியுள்ளார்.
மூன்று தரப்பு வாதங்களையும், வழக்கு சம்பந்தமான சுமார் 25 ஆயிரம் பக்க
ஆவணங்களையும் 29 நாட்கள் நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா ஆராய்ந்து சுமார்
1200 பக்க தீர்ப்பை தயாரித்துள்ளதாக நீதிமன்ற வட்டாரங்கள்
தெரிவிக்கின்றனர். மூல வழக்கில் தீர்ப்பு வெளியாகும் இன்றே, வழக்கில்
இணைக்கப்பட்டுள்ள 32 தனியார் நிறுவனங்கள் தொடர்பாகவும், ஜெயலலிதா மீதான
கூட்டுசதி குற்றச்சாட்டு தொடர்பாகவும் தீர்ப்பு வெளியாகிறது.
thanx - the hindu
thanx - the hindu