Showing posts with label ஜி நியூஸ். Show all posts
Showing posts with label ஜி நியூஸ். Show all posts

Tuesday, January 08, 2013

டெல்லி மாணவியின் தோழர் ஜி நியூஸ் டி வி பேட்டியின் தமிழாக்கம்

டெல்லி மாணவி கற்பழிப்பு: ரோட்டோரத்தில் தவித்தபோது யாரும் உதவிக்கு வரவில்லை- நண்பர் பரபரப்பு பேட்டி


புதுடெல்லி,ஜன.5-

டெல்லியில் கற்பழித்து கொல்லப்பட்ட மாணவியின் நண்பர் 'ஜீ நியூஸ்' தொலைக்காட்சிக்கு சிறப்பு பேட்டி அளித்தார். அந்த பேட்டி நேற்றிரவு ஒளிபரப்பானது. அந்த பேட்டியில் மாணவர் கூறியதாவது:-

மரணம் அடைந்த மாணவியும் நானும் உயிருக்கு உயிராக பழகி வந்தோம். டிசம்பர் 16-ந்தேதி ஞாயிற்றுக்கிழமை தெற்கு டெல்லியில் உள்ள ஷாப்பிங் மாலுக்கு சென்றோம். பொருட்கள் வாங்கிவிட்டு திரும்பும்போது இரவு 9.30 மணி ஆகி விட்டதால் எங்களுக்கு வீடு திரும்ப பஸ் கிடைக்கவில்லை. ஆட்டோ பிடிக்க நாங்கள் முயன்று கொண்டிருந்த போதுதான் அந்த பஸ் வந்தது. அதில் இருந்த ஒருவன் நாங்கள் வசிக்கும் பகுதி வழியாகத்தான் பஸ் போகிறது. வந்து ஏறி கொள்ளுங்கள் என்று பேசி அழைத்தான். நாங்கள் இருவரும் ஏமாந்து ஏறி அமர்ந்துவிட்டோம்.

அப்போதுதான் பஸ்சில் வேறு யாருமே இல்லாதது தெரியவந்தது. கருப்பு பிலிமாலும் துணியாலும் மூடப்பட்டிருந்ததால் அந்த பஸ்சில் இருந்து வெளியில் எதுவும் தெரியவில்லை. பஸ் புறப்பட்டதும் 3 பேர் வந்து என் தோழியை கிண்டல் செய்தனர். நான் அதை கண்டித்தேன். உடனே எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

என்னையும் என் தோழியையும் அவர்கள் கடுமையாக திட்டினார்கள். இதனால் தகராறு முற்றியது. அப்போது மேலும் 2 பேர் வந்தனர். அவர்கள் இருவரும் கையில் இரும்பு கம்பி வைத்திருந்தனர். கண் மூடித்தனமாக என் மீது தாக்குதல் நடத்தினார்கள். அதை தடுத்த என் தோழிக்கும் இரும்பு கம்பியால் அடி விழுந்தது. அதன் பிறகுதான் அந்த பாவிகள் என்னை அடித்து தள்ளிவிட்டு என் தோழியை பலாத்காரம் செய்தனர். அவள் துணிச்சலாக போராடினாள். 3 வாலிபர்கள் சரமாரியாக மீண்டும் தாக்கியதில் அவள் நிலை குலைந்து போனாள்.

சுமார் 2 மணி நேரம் ஓடும் பஸ்சில் அவர்கள் என் தோழியை வேட்டையாடி விட்டனர். அதன் பிறகும் 6 பேருக்கும் எங்கள் மீது வெறி அடங்கவில்லை. எங்களை அடித்து நிர்வாணப் படுத்தினார்கள். நாங்கள் உதவி கேட்டு கதறியது வெளியில் கேட்கவில்லை. பிறகு பஸ்சை திடீரென ஒரு இடத்தில் நிறுத்தி ரோட்டோரத்தில் எங்களை தள்ளிவிட்டனர்.

அந்த சமயத்திலும் என் தோழி துணிச்சலை இழக் காமல் அவர்களை எச்சரித்தாள். இதனால் அந்த 6 பேரும் மேலும் ஆத்திரம் அடைந்தனர். எங்களை பஸ் ஏற்றி கொல்ல முயன்றனர். நான் என் தோழியுடன் விலகிக் கொண்டதால் தப்பினோம். இரவு 11.30 மணி அளவில் நிர்வாண நிலையில் நாங்கள் தவித்தோம். என் தோழி ரத்த வெள்ளத்திலும் தரையில் சாய்ந்து விட்டாள். நான் அந்த வழியாக காரில் வந்தவர்களிடம் கையை காட்டி உதவி கேட்டேன்.

கார்கள், ஆட்டோக்கள், இரு சக்கரங்களில் அந்த வழியாக வந்த எல்லாரும் நான் கை காட்டியதும் வேகத்தை குறைத்தனர். நாங்கள் ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்ததை பார்த்து, பக்கத்தில் கூட வராமல் ஒதுங்கி சென்றுவிட்டனர். சிலர் என்ன நடந்தது என்று கேட்டு விட்டு எங்களுக்கு உதவி செய்யாமல் சென்றனர். இப்படி ரோட்டோரத்தில் சுமார் 2 மணி நேரம் தவித்தோம்.

கடைசியில் யாரோ ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் 3 வேன்களில் போலீசார் வந்தனர். ஆனால் அவர்களுக்குள் எல்லைத் தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இடத்துக்கு போலீசாருக்கும் நாங்கள் தள்ளப்பட்டு கிடந்த போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் நடந்தது. நிர்வாணமாக கிடந்த எங்களை கண்டு கொள்ளாமல் அவர்கள் சுமார் 45 நிமிடம் எல்லை பற்றி பேசிக்கொண்டிருந்தனர்.

அவர்களில் இரக்க குணம் கொண்ட ஒரு போலீஸ்காரர் மட்டும் எங்கிருந்தோ ஒரு துணி எடுத்து வந்து என் தோழி மீது போர்த்தி விட் டார். பிறகு எல்லை பிரச்சினை ஓய்ந்து எங்களை போலீஸ் வேனில் ஏற்றி ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது கூட அவர்கள் என் தோழிக்கு உதவ வில்லை. நான்தான் அவளை தூக்கி போலீஸ் வேனில் ஏற்றினேன்.

எங்களை போலீசார் அருகில் உள்ள ஏதாவது ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்து இருக்கலாம். நீண்ட தூரத்தில் உள்ள சப்தர்ஜங் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். மயங்கிய நிலையில் இருந்த என் தோழிக்கு உடனடி சிகிச்சை கொடுக்க தீவிர சிகிச்சை பிரிவுக்கு அழைத்து சென்றனர். அப்போதும் நான் நிர்வாண நிலையில் வெளியில் தரையில் கிடந்தேன். அன்றே என் தோழி செத்து இருக்கலாம். அவர் மிகவும் சித்ர வதையை அனுபவித்து விட்டாள். அடுத்த 4 நாட்கள் நான் ஸ்டெச்சரில்தான் கிடந்தேன். தனியார் மருத்துவமனைக்கு சென்று நான் சிகிச்சை பெற்றதால் பிழைத்தேன். என்தோழி மிகவும் துணிச்சல் கொண்டவள். எந்த பெண்ணுக்கும் நடக்க கூடாதது அவளுக்கு நடந்து விட்டது. அவ்வளவு நடந்த பிறகும் அவள் நம்பிக்கையுடன் உயிர் வாழ ஆசைப்பட்டாள்.

அவளைப் பார்க்க நான் ஆஸ்பத்திரிக்கு சென்றபோது, என்னை பார்த்ததும் லேசாக சிரித்தாள். அவ்வளவு வலி, வேதனையிலும் அவள் என்னை பார்த்து சிரித்ததும் நான் துடித்துப் போனேன். ஆஸ்பத்திரிக்கு எவ்வளவு செலவாகிறது என்று அடிக்கடி கேட்டாள். தன் தாய்க்கு அவள் தைரியம் கொடுத்தாள். அவள் நிலையில் வேறு எந்த பெண்ணாலும் அப்படி இருந்திருக்க முடியாது.

தன்னை நாசம் செய்த குற்றவாளிகள் தப்பி விடக்கூடாது என்பதில் அவள் உறுதியாக இருந்தாள். குற்றவாளிகள் பிடிபட்டு விட்டார்களா? என்று அடிக்கடி கேட்டாள். 6 குற்றவாளிகளையும் உயிரோடு தீ வைத்து எரிக்க வேண்டும் என்று என்னிடம் கூறினாள். அவளிடம் பெண் மாஜிஸ்திரேட் 2 தடவை வாக்குமூலம் வாங்கினார். அந்த 2 தடவையும் அவள் துணிச்சலாக எல்லா தகவல்களையும் தெரிவித்தாள். வேறு எந்த பெண்ணாலும் இப்படி சொல்ல இயலாது.

என் தோழிக்கு முதலில் அளிக்கப்பட்ட சிகிச்சைகள் சிறப்பாக இருந்தன. முதல் அறுவை சிகிச்சைக்கு பிறகு அவள் தெளிவாக பேசினாள். ஆனால் போராட்டம் உச்சத்தை எட்டியதும் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. அதன்பிறகுதான் அரசு தலையிட்ட பிறகு குளறுபடிகள் உண்டாகிவிட்டன. முதலில் செய்யப்பட்ட மாதிரி என் தோழிக்கு சிகிச்சை கொடுத்திருந்தால் அவள் உயிர் பிழைத்து இருப்பாள். அரசு இதில் இருந்து தப்பிக்கவே என் தோழியை சிங்கப்பூருக்கு அழைத்து சென்றது. அதுதான் அவள் மரணத்துக்கு காரணமாகி விட்டது. அவள் இறந்து விடுவாள் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை.

என் தோழி சாவில் என்ன நடந்தது என்பது போலீசார், டாக்டர்களுக்கு நன்கு தெரியும். அவர்கள் மன சாட்சியுடன் நடந்து கொண்டாலே போதும். என் தோழி மரணத்துக்கு மெழுகு வர்த்தி ஏற்றுவதால் எந்த புண்ணியமும் இல்லை. அதுபோல சட்டத்துக்கு என் தோழி பெயர் சூட்டப்படுவதால் என்ன நடந்து விடும்? நம்மிடம் போதுமான சட்டங்கள் உள்ளது. ஆனால் அவை சரியாக பயன்படுத்தப்பட வேண்டும். அந்த சட்டங்கள் பற்றி மக்களுக்கு நன்கு தெரிந்திருக்க வேண்டும்.

இவ்வாறு மாணவியின் நண்பர் கூறினார்.

ஜீ நியூஸ் டி.வி.யில் இந்த பேட்டி ஒளிபரப்பானது டெல்லி போலீசாருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மாணவி நண்பர்தான் இந்த வழக்கில் முக்கிய சாட்சி ஆவார். அவர் வெளியிட்ட தகவல்களை இதுவரை டெல்லி போலீசார் ரகசியமாக வைத்திருந்தனர். அது அம்பலமாக்கப்பட்டு விட்டதற்காக ஜீ நியூஸ் தொலைக்காட்சி மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.