Showing posts with label ஜனகராஜ். Show all posts
Showing posts with label ஜனகராஜ். Show all posts

Thursday, November 22, 2012

வானத்தைப் போல' விஜய்காந்த்க்குப்பதில் ஜனகராஜ் நடிச்சிருந்தா....இன்னும் ஹிட் ஆகி இருக்கும் - விக்ரமன் பேட்டி

சினிமா மாறி விட்டது! நானும் மாறி விட்டேன்!! - விக்ரமன்



அடர்ந்த தாடி... அன்பான உபசரிப்பு... இரண்டு பக்கமும் பாக்கெட் வைத்த சட்டை... விக்ரமனின் அடையாளம் அப்போதும் இப்போதும் இதுதான். பெரிய தயாரிப்பாளர்கள் தொடங்கி கடலை மிட்டாய் விற்பவர் வரை லாபம் பார்க்க வைத்த இயக்குநர். "இளமை நாள்கள்', "நினைத்தது யாரோ' படங்களின் மூலம் மீண்டும் சினிமாவில் பரபரப்பான நிமிடங்களுக்குள் வந்திருக்கிறார். ""மக்களில் ஒருவனாக சினிமா பார்த்து வளர்ந்தவன் நான். அதனால்தான் எப்போதுமே மக்களுக்கு பிடித்த சினிமாவை எடுத்து வந்திருக்கிறேன். ""ஏன் சார் இனிமே படமே பண்ண மாட்டீங்களா?'' என என்னை துரத்தி துரத்தி வந்த ஒரு கூட்டத்துக்கு மியூசிக்கல் கார்டு மாதிரி ஒரு படம் கொடுக்க போகிறேன் அதுதான் "நினைத்தது யாரோ'. குடும்பம், காதல், சென்டிமெண்ட் இதுதான் எப்போதுமே என் பாணி. ஆனால் இதில் அதை மாற்றியிருக்கிறேன். காதல் மட்டுமே பிரதானம். ஆனால் காதல் கதை இல்லை. காதலைப் பற்றிய கதை.








'' ஒரு சில படங்களை தவிர உங்களின் எல்லாப் படங்களுமே ஹிட். "புது வசந்தம்', "பூவே உனக்காக', "வானத்தைப் போல' காலமெல்லாம் தமிழ் சினிமாவில் மீண்டும் வராதா?







என்னிடம் கேட்க வேண்டிய கேள்விதான். இதற்கான பதில் என்னிடம் இருக்கிறதா என்று தெரியவில்லை. ஒவ்வொரு படமும் செய்யும் போது இது ரசிகர்களுக்குப் பிடிக்குமா என்ற படபடப்பு இருக்கும். ரசிகர்களுக்கு பிடித்திருந்தால் நிம்மதி. இல்லையென்றால் நம் குறி தவறி விட்டது என்று எடுத்துக் கொள்வேன். உண்மையில் எந்த சினிமா ரசிகர்களுக்கு பிடிக்கும் என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் என்னால் கண்டுபிடிக்க முடியும். பட ரிலீசுக்கு முன்பு படத்தை போட்டு காட்டி என்னிடம் கருத்து கேட்டுப் பாருங்கள்.






 பளிச்சென ஒடுமா, ஒடாதா என்று சொல்லிடுவேன். அந்தளவுக்கு சினிமாவின் பல்ஸ் தெரியும். என்னை நம்பியவர்களுக்கு உட்சபட்ச உழைப்பை தந்து லாபம் கொடுக்க வேண்டும். அது மட்டுமேதான் என்னுடைய குறைந்தப் பட்ச சினிமா லட்சியமாக இருக்கிறது. அந்த லட்சியத்தின் பின்னாடிதான் இந்த 21 வருடங்களும் ஓடி வந்திருக்கிறேன்.



 திரும்பிப் பார்த்தால் எனக்கே ஆச்சரியம். எத்தனை சவால் நிறைந்த பயணம். வித்தியாசமான முயற்சி இது என சொல்லி ஒருபோதும் என் சினிமாவை வியாபாரம் செய்யவில்லை. எனக்கு தெரிந்ததை, நான் வாழ்ந்த, நான் பார்த்த வாழ்க்கையில் கொஞ்சம் சினிமாத்தனம் கலந்தேன். அதுதான் என் வெற்றி. சினிமா முற்றிலும் மாறிவிட்டது. 10 தியேட்டர்களில் நூறு நாள்கள் ஓடிய சினிமா, இன்று நூறு தியேட்டர்களில் 10 நாள்கள் ஓடுகிறது. இந்த சினிமாவின் பின் ஓட கொஞ்சம் நிதானம் வேண்டும். சில சமரசங்கள் வேண்டும். அது எனக்கும் வேண்டும். 







நீங்களே இப்படி சொல்லி விட்டால் எப்படி. அப்ப இனி குடும்ப சென்டிமெண்ட் கதைகளுக்கு தமிழ் சினிமாவில் இடம் இல்லையா?







இப்போது இயக்கி வருகிற "இளமை நாள்கள்', "நினைத்தது யாரோ' இரு படங்களுமே என் பாணி சினிமா இல்லை. முழுக்க முழுக்க இளைஞர்கள் கொண்டாடுகிற படங்களாக இருக்கும். ஏனென்றால் இளைஞர்கள்தான் இப்போது தியேட்டருக்கு வந்து படம் பார்க்கிறார்கள். குடும்பத்தோடு வந்து படம் பார்த்த காலம் இப்போது இல்லை. தூங்கி எழுந்தது முதல் படுக்கைக்கு செல்லும் வரை நிறைய பிரச்னைகள். அது இப்போதும் இருக்கிறது. ஆனால் மனதை ஆசுவாசப்படுத்த சினிமா தவிர்த்து இப்போது நிறைய சாதனங்கள் வந்து விட்டது.






அதற்கேற்ப சினிமாவும் மாறி ஆக வேண்டிய கட்டாயம். எனக்கு பிடித்துதான் எல்லாப் படங்களிலும் வேலை பார்த்திருக்கிறேன். ஆனால் நான் கொடுக்க நினைத்த சினிமாவை இன்னும் எடுக்கவே இல்லை. இந்த குற்ற உணர்வுதான் என்னை அடுத்தடுத்த பயணத்துக்கு உந்தி தள்ளுகிறது. புதிது புதிதான சேனல்களின் வருகைதான் சினிமாவின் அழிவுக்கு காரணம். சீரியல்கள் சினிமாவுக்கான நேரத்தை மக்களிடமிருந்து எடுத்து கொண்டன. சீரியல் ஓடாத வீடுகளே இல்லை. சினிமாவில் காட்டப்படாத விஷயங்கள் கூட சீரியல்களில் வந்து விட்டது. நான் சினிமாவுக்கு வரும்போது எனக்கு முன்பு இருந்த காலம் வராதா என்று நினைத்தேன். இப்போது உங்களுக்கு அதே போல்தான் தோன்றுகிறது. அதற்காக முப்பது வருஷத்துக்கு முன்பு வர வேண்டிய படங்களை இப்போது எடுத்துக் கொண்டிருக்க முடியாது. சினிமா நாளுக்கு நாள் மாறும். என் பாணி படங்களை நானே எடுக்க நினைத்தாலும் இப்போது அது முடியாது.







 ஆனால் உங்கள் அக்மார்க் சினிமாவிலிருந்து நீங்கள் விலகி எடுத்த "சென்னை காதல்' படத்தில் நிறையவே தடுமாற்றம் இருந்ததே?






அது இயல்புதான். இப்போது வேறொரு இடத்துக்கு வந்து விட்டேன். இனி தடுமாற்றங்களை பார்க்க முடியாது.







 நட்பு, காதல், குடும்பம், பாசம் என ஒவ்வொரு படத்திலும் ஒரு ஃபீல் இருக்கும். இது தானாகவே அமைந்ததா? இல்லை அதற்காக கதை தேடுவீர்களா?






வித்தியாசமாக இருக்க வேண்டும் என நான் யோசிப்பதே இல்லை. நிறைய விஷயங்கள் தோன்றும். அதைப் பற்றி பேசிக் கொண்டே இருப்போம். அட இது நல்லா இருக்கேன்னு தோன்றினால் அதுதான் அடுத்த படத்துக்கான கதை. அதே மாதிரி படங்கள் முன்பே வந்திருந்தாலும் கவலைப்பட மாட்டேன். என் யோசனை, என் கதையமைப்பு இரண்டையும் அதில் மாற்றிக் காட்டுவேன். சரியாக வராது என தோன்றினால் அதை தொட்டுப் பார்க்கவே மாட்டேன். என் சில படங்கள் ஒரே மாதிரியாகவும் இருந்திருக்கலாம். 






ஆனால் அதை கொடுக்கிற விதத்தில் வித்தியாசம் காட்டியிருப்பேன். சத்யம் தியேட்டர் ரசிகர்களுக்கும் படம் பிடிக்க வேண்டும். அதே சமயம் எங்கேயோ டூரிங் டாக்கீஸீல் இருக்கிற ரசிகனுக்கும் என் படம் பிடிக்க வேண்டும். அது மட்டுமேதான் என் நோக்கம். இத்தனை வருஷம் கழித்தும் "பூவே உனக்காக' பற்றி பேசுகிறார்கள். 'சூர்ய வம்சம்' பற்றி பேசுகிறார்கள். அதை கேட்கும் போது ஆசையாக இருக்கும். சின்னதாக சிலிர்ப்பு வரும். அப்படித்தான் என் ஒவ்வொரு படமும் இருக்க வேண்டும் என்று ஆசை.







உங்களால் முன் வரிசைக்கு வந்த நடிகர்கள் பலர் இருக்கிறார்கள். ஏன் புதுமுகங்களை வைத்து அடுத்தடுத்த படங்களில் ரிஸ்க் எடுக்க வேண்டும்?


 



அப்படியில்லை. அப்படி நினைக்கவும் கூடாது. நான் எல்லோரையும் மரியாதையாக நடத்தியிருக்கிறேன். இருக்கிற இடம் பார்த்து ஒருவரிடமும் பழகும் பழக்கம் என்னிடம் இல்லை. எப்படி சினிமாவுக்கு வந்தேனோ அப்படியே இருக்கிறேன். யாரிடமும் எதையும் கேட்டது இல்லை. இப்போது கூட தயாரிப்பாளர்களுக்கு பஞ்சம் இல்லை. ""அவரை நடிக்க வைக்கலாம்.'' ""இந்த நடிகரை நடிக்க வைக்கலாம்'' என்று சொல்லிக் கொண்டு என்னிடம் வருபவர்களை நான் மதிப்பதில்லை. விஜய், அஜித், சூர்யா எல்லோருமே நட்பாகத்தான் இருக்கிறார்கள். சூர்யாவுக்கு மட்டும் அதீத அன்பு இருக்கிறது. அது போதும் எனக்கு. 







கடந்து வந்த இந்த சினிமா பயணம் எப்படியிருக்கிறது. கனவுப் படமென்று உங்களுக்கும் எதாவது ஒன்று இருக்குமே?






சாதிக்கவில்லை என்ற ஆதங்கம் இருக்கிறது. சினிமாவுக்கு வந்த முதல் நாள் வெறி இன்னும் அடங்கவில்லை. வியாபாரத்துக்காக சில சமரசங்களோடு வாழ வேண்டி வந்தது. எத்தனை கதை, எத்தனை இயக்குநர்கள் வந்து போனாலும், "உதிரிப்பூக்கள்' படத்தை பார்த்து இன்றைக்கும் எத்தனை பரவசம் அடைகிறோம். அங்கேதான் மகேந்திரன் என்ற இயக்குநர் நிற்கிறார். 






எத்தனை மதிப்பு மிக்க படைப்பு அது. அந்த இடம்தான் எனக்கும் வேண்டும். "வானத்தைப் போல' அப்படி வந்திருக்க வேண்டிய படம்தான். ஆனால் நினைத்தை செய்ய முடியவில்லை. விஜயகாந்த் இடத்தில் ஜனகராஜ் இருந்திருக்க வேண்டும். விஜயகாந்தும் இருந்திருக்க வேண்டும். எல்லாமே மாறிவிட்டது. தமிழர்களின் வரலாற்றை முழுமைப்படுத்தும் ஒரு கதை இருக்கிறது. அதுதான் என் பயணத்தின் கடைசி எல்லை. அதற்கு நிறைய அனுபவம் வேண்டும். நிறைய காசும் வேண்டும். இரண்டும் வந்து விட்டால் இறங்கி ஒரு கை பார்த்து விடுவேன். ஒண்ணு மட்டும் நிச்சயம். அந்த படமும் சூப்பர் ஹிட் ஆகும்.



நன்றி - சினிமா எக்ஸ் பிரஸ்