செவன்த் டே: மலையாளத்தில் ஒரு 'மங்காத்தா'
மலையாள படங்களிலிருந்து நல்ல திரைக்கதை அமைக்கும் முறையை நாம் தாராளமாக
கற்றுக் கொள்ளலாம். ஒரு சிறிய நூல் போன்ற கதை கிடைத்தால்கூட அதற்கு ரசிக்க
வைக்கும் முடிச்சுகள் போட்டு ஈர்க்கத் தக்க படம் அமைப்பது மலையாள
சினிமாவின் யுக்தி.
பொதுவாக நம் படங்கள் பலவற்றில் மையக் கதையை சுற்றி பல தேவையற்ற அம்சங்களும்
அமையப்படுகிறது அல்லவா? அந்த தேவையற்ற பகுதிகளை நீக்கி நிகழ்வுகளை கதையோடு
பிரயாணிக்க விட்டு பொட்டில் அடித்து கதை சொல்வது தான் தற்போதைய நியு ஏஜ்
மலையாளப் படங்களின் ட்ரெண்ட்.
'கருப்பு ஒரு மனிதனின் உண்மை நிறத்தை வெளிச்சப்படுத்தும் ஒரு நிறம். பயம்,
இச்சை, பேராசை, சூது இப்படி பலவும் பிறக்கச் செய்யும் ஒரு நிறமும் இது
தான். அதனால்தான் எனக்கு இந்த நிறத்தின் மீது காதல்.' ப்ளாக் ஜாக்கெட்
அணிந்து கொண்டு சிகார் எனப்படும் சுருட்டினை பிடித்து பப்பில் புகைவிடும்
ஒரு நடுத்தர வயது மனிதரிடமிருந்து வரும் குரல் இது.
'ஆனால் எனக்கு இந்த கிறிஸ்துமஸ் பிடிக்காது. இதனால் இந்த கருப்பு முழுதும்
வெளிச்சம். இது நான் பார்க்கும் உண்மை நிறத்தை மறைத்து விடுகிறது' என்று
கூறிக் கொண்டே அந்த நடுத்தரவயதினர் தன் இருக்கையிலிருந்து எழுந்து
கொள்கிறார். சுருட்டிலிருந்து வெளிவந்த புகையும் நகர்கிறது. முன்புறம்
நரைத்த முடி, கருப்பு நிறத்தில் முழு ப்ரேம் கண்ணாடியுடன் ப்ரித்வி ராஜ்
எழுந்து அந்த பப்பிலிருந்து புறப்படுகிறார்.
ஒற்றை வழிச் சாலையில் நள்ளிரவில் பயணம் கொள்கிறார்; சாலை நீண்டு கொண்டே
போகிறது. காரின் பின்னே ஒரு வேன். அதை பார்த்துக் கொண்டே பயணிக்கும்
ப்ரித்வி முன்னே இருந்த பைக்கினை பார்க்காமல் மோதுகிறார். பைக்கிலிருந்த
இருவரும் கீழே விழுகின்றனர்.
வண்டியை நிறுத்தும் ப்ரித்வி "பின்னாடி வந்த வண்டியை பார்த்து, முன்னால்
பார்க்காமல் உங்க மேல ஏத்திட்டேன், சாரி. வாங்க.. ஹாஸ்பிட்டலுக்கு போகலாம்.
நான் கூட்டிட்டு போறேன்" என்கிறார். பேசும் ப்ரித்வி ராஜ்ஜிடம்
கள்ளத்தனமான ஒரு பார்வை; இடிக்கப்பட்ட இருவரிடம் திருட்டுத் தனமான முழி.
மூவரின் முகத்திலும் புதைக்கப்பட்ட பல குழப்பங்கள்.
"வினு உனக்கு எதுவும் ஆகலையே?" என்று பைக் ஓட்டிய நண்பன் கேட்க, வினுவின்
நெற்றியிலிருந்து ரத்தம் வழிகிறது. "அய்யோ.. என்னடா ரத்தம் வருது,
விழுந்ததில் வண்டி கூட ரிப்பேர் போல" என்று அந்த நண்பன் சொல்கிறான்.
"ஒண்ணும் பிரச்சினை இல்லை.. என் வண்டி இருக்கு வாங்க ஹாஸ்பிடல் போகலாம்
இங்கிருந்து பக்கம் தான்" என்று கூறி அவர்களை ப்ரித்வி காரினில்
ஏற்றுகிறார்.
ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டு வினு வார்டிற்கு அழைத்துச் செல்லப்படுகிறான்.
ப்ரித்வி: நான் டேவிட் அப்ரஹாம், நீங்க?
பைக் ஒட்டிய நபர்: நான் ஷான்.
ப்ரித்வி: ஓ.. என்ன தொழில் உங்களுக்கு?
'நான் ஒரு பத்திரிகைகாரன்' என்று வண்டி ஒட்டி வந்த நபர் தன்னை அறிமுகம்
செய்து கொள்கிறான். இவர்கள் உரையாடிக் கொண்டே இருக்கும் போது டாக்டர்
'நீங்க அழைத்து வந்தவருக்கு கட்டு போட்டிருக்கேன்' என்று கூறுகிறார்.
சிறிது நேரம் கழித்து வினு தப்பித்து விட்டான் என்று செய்தி இவர்களுக்கு
வருகிறது. ஷான் ஓடி சென்று ஹாஸ்பிடல் முழுதும் பார்க்கிறான். "வினு..
எங்கடா போன?" என்று கத்துகிறான்.
ப்ரித்வி: எதாவது பிரச்சினையா?
ஷான்: (ஆவேசத்துடன்) எதுவா இருந்தா உங்களுக்கு என்ன? சொன்னா உங்களால என்ன செய்ய முடியும்? போய் உங்க வேலையை பாருங்க
ப்ரித்வி: நான் அப்போ சொன்ன மாதிரி என் பெயர் டேவிட் அப்ரஹாம், ஐ.பி.எஸ்..
க்ரைம் பிரான்ச். இப்போ சஸ்பென்ஷன்ல இருக்கேன். (ஆதிக்கத்துடன்) சொல்லு,
என்ன பிரச்சினை உங்களுக்கு?
இதை கேட்டவுடன் ஷானுக்கு வெடவெடுத்து போகிறது. முன்பு ப்ரித்வியிடம்
வெறுப்பை காட்டிய அதே முகத்தில் இப்போது வெறுப்பிற்கு பதிலாக மரியாதை.
'நாங்க பிரச்சினையில இருக்கோம் சார், பெரிய பிரச்சனையில இருக்கோம். எல்லாம்
இந்த காசால'
ப்ரித்வி: காசுன்னா.. எவ்வளவு?
ஷான்: ரொம்ப பெரிய தொகை சார். ஒரு கோடி எழுவத்தஞ்சு லட்சம்.
ப்ரித்வி: (வார்த்தைகளின்றி ஓர் ஆச்சர்யப் பார்வை).
படம் இப்படித் தான் துவங்குகிறது. முதல் இருபது நிமிடத்திலே இது சூது
பற்றிய படம். பணம் களவாடப்பட்டிருக்கிறத், ஒரு மனிதன் தொலைந்து போய்
இருக்கிறான், யார் இவர்கள், என்ன நிகழ்வு இப்படி பல எதிர்பார்ப்புகள்
துவக்கத்திலேயே வைக்கப்படுகிறது.
விசாரணை நடைபெறுகையில் கொடுக்கப்படுகின்ற வாக்கு மூலம் போலத் திரைக்கதை
அமைந்துள்ளது. கதையின் ஒரு புறத்தில் சொல்லப்படுகின்ற நிகழ்வே முன்னுக்கு
பின்னாக வேறு வடிவத்தில் பின் பாகத்தில் நடக்கின்றது. நான்கு நண்பர்கள்.
இவர்களைச் சுற்றி அமையப்பட்ட ஒரு சூது. இதில் பயணிக்கும் இக்கதையில் காதல்,
ஏமாற்றம், துரோகம், நட்பு, கொலை, தேடல் இப்படிப் பல நிகழ்வுகள் தோதாக
அமைந்துள்ளது.
கடைசியில் ரசிகர் முன்வைத்த கேள்விகள் அனைத்திற்கும் விடை கூறும் தடம் தான் கிளைமாக்ஸ்.
கதையின் கட்டமைப்பு அழகாக அமையப்பட்டு, நிகழ்வுகள் எதிர்பார்ப்பை தூண்டச்
செய்கையில், கிளைமாக்ஸ் தூக்கி வாரி போடச் செய்தால் தான் ஒரு படம் நம்மை
பிரமிக்க வைக்கும். அவ்வகையில் படம் முழுதும் சஸ்பென்ஸ்சினை பயணிக்கச்
செய்த இயக்குனர், கடைசியில் சப்பென்று ஒரு கிளைமாக்ஸ் வைக்கிறார்.
எதிர்பாராத விதத்தில் பயணித்து எதிர்பார்த்தபடியே முடிந்தது இந்த
ஏமாற்றத்திற்கு காரணம்.
படத்தில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரத்துக்கும் சம அளவில் ரோல்
கொடுக்கப்பட்டுள்ளதால் ப்ரித்வி ராஜ் உட்பட எந்த கதாபாத்திரமும் தனித்து
ஜொலிக்கவில்லை. ஒவ்வொருவரும் தன் கதாபாத்திரத்திற்குரிய மரியாதையை
கச்சிதமாக செய்திருக்கின்றனர்.
இரவில் பயணிக்கும் இக்கதைக்கு போலித்தனமான நிறத்தினை படரச் செய்யாமல்
இயற்கை ஒளியில் அழகாகச் சித்தரித்த சுஜித் வாசுதேவின் ஒளிப்பதிவு படத்தை
மிரள வைத்துள்ளது. தீபக் தேவ்'வின் தனித்துவமான பின்னணி கதைக்கு
சஸ்பென்சினை கூட்டிவிட்டுள்ளது.
தமிழில் 2010-ல் வெளிவந்த, அஜித் நடித்த படத்திற்கு புதிதாக கோட்டிங்
கொடுத்து த்ரில்லர் வடிவத்தில், டெலிவர் செய்யப்பட்ட படம் போல இந்த
'செவன்த் டே' அமைந்துள்ளது.
சாதாரண கதை, தெளிவான திரைக்கதை ரசிக்கக் கூடிய த்ரில்லர் தான்
இப்படம்.
சினிமா பித்தனின் ஃபேஸ்புக் பக்கம் https://www.facebook.com/CinemaPithan
நன்றி - த ஹிந்து