சென்னையின் கடந்த வாரப் பரபரப்பு... மலிவு விலை உணவகம்.
முதல்வர் ஜெயலலிதா 'கேசரி’ வழங்கித் தொடங்கிவைத்த மலிவு விலை உணவகத்தில்
சாப்பிடுவதற்கு, 'சி.எம். செல் சிபாரிசு’ தேவைப்படும். அந்த அளவுக்கு
அடிதடிக் களேபரம். இட்லி ஒரு ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய், சாம்பார்
சாதம் ஐந்து ரூபாய் என்பதே கலாட்டாவுக்குக் காரணம்!
சாந்தோம் கிளை உணவகத்தை வெகு தூரத்தில் இருந்தே
அடையாளம் காட்டிவிட்டது 'மாண்புமிகு இதயதெய்வம்’ பேனர்கள். உணவக வாசலில்
ரேஷன் கடையைவிட மிகப் பெரிய க்யூ. வாசலில் ஒரு போலீஸ்காரர், 'வாங்க...
வாங்க...’ என்று தோளில் தட்டி உள்ளே அனுப்பு கிறார். ''திபுதிபுனு கூட்டம்
உள்ளே வந்துருதுங்களா... அதான் கன்ட்ரோலுக்கு என்னைப் போட்டிருக்காங்க!''
என்றார்.
வெள்ளைச் சுவரில் பச்சைக் கோடுகள், பச்சை நிற
அறிவிப்புப் பலகை, பச்சை நிற பேனர் என்று உணவகத்தில் பசுமை பூத்துக்
குலுங்கியது. உள்ளே கூட்டத்தைக் கட்டுப்படுத்த, ஐந்து பெண் காவலர்கள். உணவக
நிர்வாகம் மற்றும் பராமரிப்பு, மகளிர் சுய உதவிக் குழுவினர் வசம். இருக்கை
வசதிகள் கிடையாது. அந்த உணவகத்தில் மட்டும் நான்கு ஜெயலலிதா படங்கள்
டாலடித்தன. எந்தக் கோணத்தில் நின்று சாப்பிட்டாலும் முதல்வரின் தரிசனத்தில்
இருந்து தப்ப முடியாது. (இப்படிலாம் ஐடியா கொடுக்கிறது யாருப்பா?)
மதியம் பன்னிரண்டே முக்கால் மணி அளவில் கூட்டம் புது
வெள்ளமாக முண்டியடிக்கத் தொடங்கியது. 'மன்னன்’ படத்தில் ரஜினி
'சின்னத்தம்பி’ படத்துக்கு முதல் டிக்கெட்டை வாங்கியதைப் போல, சட்டை
முழுக்க வியர்வை யில் தொப்பலாக நனையும் அளவுக்குப் போராடி இரண்டு பிளேட்
சாம்பார் சாதத்தைக் கொய்துவந்தார் ஒருவர்.
'இங்கு பார்சல் கட்டித் தரப்பட
மாட்டாது’ என்ற அறிவிப்புக்குக் கட்டுப்படுபவர்களா நம்மவர்கள்? ஒரு காகிதத்
தட்டில் சாம்பார் சாதத்தை வாங்கி, அதை இன்னொரு தட்டால் மூடி வெளியே
எடுத்துச் சென்றனர். அதிகாரபூர்வ லன்ச் நேரமான மதியம் 1 மணிக்குப்
பகீரென்று பாய்ந்து வந்தது அந்த அறிவிப்பு... ''சாப்பாடு காலி!''
அது வரை வரிசையில் காத்திருந்தவர்களுக்குப்
பேரதிர்ச்சி. அவர்களைக் கண்டுகொள்ளாமல் அண்டாக்களைக் கவிழ்த்துவைக்கத்
தொடங்கினார்கள் உணவகப் பணியாளர்கள். ''இப்பிடித்தான் ஜூ காட்டுவாங்கோ...
அப்பாலிக்கா ஒரு பிளேட் ரைஸ் இருபது ரூவானு பிளாக்ல விப்பாங்கோ!'' என்று
கலவரத்துக்குத் திரி பற்றவைத்தார் ஒரு சிட்டிசன். ''அப்படிலாம் இல்லைங்க.
நீங்களே வந்து நல்லாப் பார்த்துக்கங்க... எங்களுக்கே சாப்பிட சாப்பாடு
இல்லை!'' என்று அதட்டினார் ஒரு நிர்வாகி.
''ஏன் இவ்ளோ சீக்கிரம் தீர்ந்துருச்சுனு சொல்றீங்க... கொஞ்சமாத்தான் சமைச்சீங்களா?'' என்று கணக்கு கேட்டார் ஒரு 'அம்பி’.
''ஆயிரம் தயிர் சாதம், ஆயிரம் சாம்பார் சாதம், ஐயாயிரம்
இட்லி செய்யச் சொல்லித்தான் ஆர்டர். அதைவிடவும் அதிகமாத்தான் தயாரிச்சோம்.
ஆனா, ஒரே ஆளே மூணு, நாலு பிளேட்னு வாங்கிட்டுப் போயிட்டதால, சீக்கிரம்
காலியாகிடுச்சு. நாளைக்கு அப்படியே டபுளா சமைக்கணும்!'' என்றார் ஒரு பெண்.
''உங்க பேர் சொல்லுங்க?'' என்று அம்பி கேட்டதும், சட்டெனச் சுதாரித்தவர்,
''அதெல்லாம் ஹெட் ஆபீஸ்ல கேட்டுக்கங்க!'' என்றார் சிரித்தபடி.
''இப்படிலாம் நடக்கும்னு முன்னாடியே தெரியும்ல... அதான்
காலை டிபன் முடிச்சதுமே இங்கேயே செட்டில் ஆகிட்டேன்ல!'' என்று நிறைந்த
வயிற்றைத் தடவியபடி வெற்றிக் குறி காட்டினார் வாட்ச்மேன் ஆரோக்கியசாமி.
''சாப்பாடு சூப்பர்... அஞ்சு ரூபாய்க்கு இந்த டேஸ்ட்
நான் எதிர்பார்க்கவே இல்லை. சும்மா ஒரு வாரத்துக்கு மட்டும் ஷோ காட்டிட்டு
அப்புறம் கடைய மூடிராம, விலை ஏத்தாம இருக்கணும்!'' என்று சீரியஸாக
விவாதித்துக்கொண்டு இருந்தார்கள், சாப்பாடு கிடைக்கப் பெற்றவர்கள்.
கேமராவைப் பார்த்தவுடன் குஷியான சுப்ரமணி, முதல்வர்
பேனரைப் பார்த்து சல்யூட் வைப்பதுபோல் நின்றுகொண்டு, ''சாப்பாடு ஜோரா
இருக்குனு அம்மாகிட்ட சொல்லு... அப்படியே பிரியாணியும் லெக் பீஸும் பத்து
ரூபாய்க்குப் போட்டா, அடுத்த எலெக்ஷன்லயும் ஜெயிக்கலாம்னு சொல்லு!'' என்று
சிரித்தார்.
இது அம்மாவின் கவனத்துக்கு!
நன்றி - விகடன்