குழந்தைகளும் வயதானவர்களும் இந்தியாவைப் பிரதிபலிக்கிறார்கள்!"
ஆர்.சரண்
'தி இந்து’ நாளிதழின் துணை ஆசிரியரான பரத்வாஜ் ரங்கன், தேசிய விருதுபெற்ற திரை விமர்சகர். சினிமா, இசை, ஓவியம், புத்தகம், பயணம், நகைச்சுவை எனப் பல தளங்களில் எழுதுபவர். பென்குவின் பதிப்பகத்துக்காக இவர் மணிரத்னத்தை எடுத்திருக்கும் நீண்ட பேட்டிதான் 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’ என்ற தலைப்பில் புத்தகமாக வந்திருக்கிறது.
''நான் 50 தடவை அவரைச் சந்தித்து இருப்பேன். ஒவ்வொரு முறையும் வெவ்வேறு இடங்கள், வெவ்வேறு சூழலில் பேசுவோம். எவ்வளவோ முறை அவரை வெறுப்பேற்றும்விதமான கேள்விகளைக் கேட்டு இருக்கிறேன். ஆனால், அவரிடம் சற்றும் முகச்சுளிப்போ, அசௌகர்யமான உடல்மொழியோ வெளிப்பட்டது இல்லை. விமர்சகரை மதிக்கத் தெரிந்த உன்னதமான கலைஞன் மணிரத்னம்!'' என்கிறார் பரத்வாஜ் ரங்கன். புத்தகத்துக்கு அணிந்துரை ஏ.ஆர்.ரஹ்மான். சொல்லவும் வேண்டுமா? விற்பனையில் பரபரப் பைக் கிளப்பி இருக்கிறது 'கான்வெர்சேஷன்ஸ் வித் மணிரத்னம்’. புத்தகத்தில் இருந்து...
''பார்த்த முதல் படம்...''
'' 'உத்தமபுத்திரன்’ என்று நினைவு. நான் கலாஷேத்ரா கேம்பஸில் இருக்கும் பெசன்ட் தியாசெபிகல் ஸ்கூல் ஹாஸ்டலில் தங்கிப் படித்த காலத்தில்தான் நிறையப் படங்கள் பார்த்தேன். அங்கு பக்கத்தில் டூரிங் டாக்கீஸ் ஒன்று இருந்தது. யாருக்கும் தெரியாமல் நண்பர்களோடு லுங்கி, பனியனோடு போய் நிறைய ஆங்கிலப் படங்கள் பார்த்திருக்கிறேன். அங்கு வார்டனும் யாருக்கும் தெரியாமல் வருவார். சில நேரங்களில் ஒருவருக்கு ஒருவர் பார்த்து பம்மிக்கொள்வோம்!''
''முதல் பட அனுபவம்...''
''மும்பை 'பஜாஜ் இன்ஸ்டிட்யூட்’ டில் எம்.பி.ஏ. முடித்த பின், அங்கு ஒரு கன்சல்டன்சி கம்பெனியில் பணியாற்றினேன். அப்போது எல்லாம் இயக்குநர் ஆக வேண்டும் என்ற எண்ணம் எனக்குத் துளியும் இருந்தது இல்லை. ஆனால், நண்பர்கள் பி.ஆர்.பந்துலுவின் மகன் ரவிஷங்கர், வீணை பாலசந்தரின் மகன் ராமன் ஆகியோருடனான சினிமா தொடர்பான விவாதங்களும் திரைக்கதை அமைக்கும் பணி களும்தான் என்னை சினிமா பக்கம் ஈர்த்தன.
ஆனால், அதுவரை நான் சினிமாபற்றித் தெரிந்து வைத்திருந்தது எல்லாம் வெறும் ஆங்கிலப் புத்தகங்கள் வாயிலாக மட்டுமே. இந்தச் சூழலில்தான் பாரதிராஜாவின் '16 வயதினிலே’, மகேந்திரனின் 'உதிரிப்பூக்கள்’ இரண்டும் என்னுள் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தின.
சந்தான பாரதி, பி.வாசு, பி.சி.ஸ்ரீராம் போன்ற நண்பர்களின் அறிமுகம் கிடைத்தபோது, 'உட்லண்ட்ஸ் டிரைவ் இன்’னில்தான் எப்போதும் கிடப்பேன். நாள் முழுக்கக் காபி குடித்துக்கொண்டு சினிமாபற்றிப் பேசுவோம். கிட்டி எம்.பி.ஏ. படிக்கும்போது எனக்கு சீனியர். அவர் அப்போது சோழா ஷெரட்டன் ஹோட்டலில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தார்.
'பல்லவி அனுபல்லவி’ கன்னடப் படத்தின் ஸ்க்ரிப்ட்டை முடித்த பின், கமலிடம் காட்டி ஓ.கே. வாங்குவதற் காக எப்போதும் கிட்டியுடன் கமல் வரும் நேரத்தில் அங்கு இருப்பேன். 'பல்லவி அனுபல்லவி’ படத்தில் அனில் கபூர் நடித்த ரோலில், அப்போது கமலை நடிக்கவைக்க வேண்டும் என்பது என் கனவு. ஆனால், கமலுக்கு நான் ஒரு கதை சொன்னால், அவர் எனக்கு ஐந்து கதைகள் சொன்னார்.
இப்படியே போனது. சாருஹாசன் அறிமுகமானார். நான் யாரிடமாவது உதவி இயக்குநராக சினிமா கற்றுக்கொள்ள வேண்டும் என்று அவர் சொன்னார். என்னுடைய அப்போதைய ஒரே சாய்ஸ்... மகேந்திரன். சாருஹாசனே அப்போது மகேந்திரனிடம் என்னை அழைத்துச் சென்றார். ஆனால், மகேந்திரன் என்னைக் கவனிக்கவே இல்லை. அப்போது வருத்தமாக இருந்தது.
ஆனால், சில வருடங்களில் இயக்குநரான பிறகு இந்தச் சம்பவத்தை அவரிடம் சொன்னபோது சிரித்துக்கொண்டே, 'சந்தோஷப்படுங்க... யாருடைய துணையும் இல்லாமல் நீங்கள் பெரிய ஆளாக வர வேண்டும்னு இருந்திருக்கு. அன்னைக்கு நான் கவனிக்காததுகூட நல்லதுக் குத்தான் பார்த்தீங்களா!’ என்றார்.
என் அண்ணன் ஜீ.வி. மூலம் 'கலாகேந்திரா’வின் இயக்குநரான துரைக்கு ஸ்க்ரிப்ட்டை அனுப்பிவைத்தேன். அது பாலசந்தரின் கைகளுக்குக் கடைசி வரை போய்ச் சேரவில்லை என்பது எனக்கு அப்போது தெரியாது. பாரதிராஜா என் அடுத்த டார்கெட். அவரை நேரில் போய் சந்தித்தேன். பெர்ஃபெக்ட் ஸ்பைரல் பைண்டில் ஆங்கில ஸ்க்ரிப்ட்டோடு போய் நின்றேன். 'நிழல்கள்’ படத்தில் பிஸியாக இருப்பதாகவும் பிறகு சந்திக்கலாம் என்றும் பாஸிட்டிவாகப் பேசி அனுப்பிவைத்தார்.
இயக்குநர் ஆன பிறகுதான் தெரிந்தது என்னு டைய குழப்பமான ஆங்கில நடை அவருக்கு அன்று புரியவில்லை என்பது. பி.சி.ஸ்ரீராமோடு லாம்ப் ரெட்டா ஸ்கூட்டரில் ஒவ்வொரு தயாரிப்பாளர் வீடாக ஏறி இறங்கி இருக்கிறேன். கடைசியில் கிருஷ்ணமூர்த்தி என்ற தயாரிப்பாளரின் அறிமுகம் கிடைத்தது. அதன் பிறகு, அப்போதைய ஹிட் பெர்சனாலிட்டிகளான ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திராவையும் இளையராஜாவையும் சந்தித்து கதையைச் சொன்னேன்.
அதன் பிறகு, அந்தப் படத்தின் ஹீரோயின் கேரக்டருக்காக சுஹாசினியிடம் கேட்டேன். 'நோ’ சொல்லிவிட்டார். (சுஹாசினி என் இரண்டு படங்களை அப்போது நிராகரித்தார்). அப்புறம் அனில் கபூர், லட்சுமி, எடிட்டர் லெனின் வந்தது எல்லாம் பெரிய கதை. படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும், சிறந்த திரைக்கதைக்கான மாநில விருதும், கணவரைப் பிரிந்து வாழும் ஒரு பெண்ணுக்கும் இளைஞனுக்கும் இடையே ஆன உணர்வுகளைப் பேசியதால், தைரியமான முயற்சி என்று பாராட்டுக்களையும் குவித்தது!''
''முதல் தமிழ்ப் படம்...''
''என் முதல் தமிழ்ப் படம் 'பகல் நிலவு’. ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் வசனம் எழுதினேன். பேப்பரில் இருந்து காட்சிகளாக உருவம் கொடுக்கும்போது ஆங்கிலத்தில் இருப்பது வேறு மாதிரி இருந்தது. அது பெரிய தவறு என்பதைப் புரிந்துகொண்டேன். தமிழில் முழு ஸ்க்ரிப்ட்டையும் எழுதினேன். 'மெயின் ஸ்ட்ரீம் கமர்ஷியல் படம் இது’ என்று நிர்ணயித்துக்கொண்டு, நானும் தயாரிப்பாளர் சத்யஜோதி தியாகராஜனும் இணைந்து வேலை பார்த்தோம். சத்யராஜ் - முரளி - இளையராஜா காம்பினேஷனில் அண்ணனே இந்தப் படத்தைத் தயாரித்ததால், நான் கொஞ்சம் கொஞ்சமாக முழுமையான சினிமா கற்றுக்கொண்டே இயக்கிய படம்!''
''முதல் தோல்வி...''
''தயாரிப்பாளர் கோவைத் தம்பி அப்போது உச்சத்தில் இருந்த ராதா, அம்பிகா இருவர் கால்ஷீட்டையும் வைத்திருந்தார். என்னுடன் படம் செய்ய ஆசைப்பட்டு, படத்துக்கான கதையை ஒரு கேசட்டில் பதிவுசெய்து எனக்கு அனுப்பி இருந்தார். 'இது என் டைப் படம் இல்லை. இப்போது என்னால் உங்களுக்குப் படம் செய்ய முடியாது’ என்று அவரிடம் நேரில் சொல்லச் சென்றேன்.
நான் சொன்னதைக் கேட்ட அடுத்த கணமே போனில் ராதா, அம்பிகா இருவரின் கால்ஷீட்டுகளையும் கேன்சல் செய்துவிட்டு, எனக்காகக் காத்திருப்பதாகச் சொன்னார். வேண்டாம் என்று சொல்லச் சென்ற நான், என்னை அறியாமல் 'இதய கோயில்’ படத்தில் சிக்கிக்கொண்ட கதை இது. இளையராஜாவின் இசை படத்தை ஓரளவு காப்பாற்றி யது. குறிப்பாக, 'நான் பாடும் மௌன ராகம்...’ பாடலைக் காட்சிப்படுத்தியபோது 'பியாஷா’ குருதத் துக்கு அஞ்சலி செலுத்துவதாக உணர்ந்தேன். அந்தப் பாடல்தான் 'மௌன ராகம்’ என்ற என் அடுத்த மெகா ஹிட் படத்துக்கான டைட்டிலைத் தந்தது. மற்றபடி என்னுடைய மிக மோசமான படம் 'இதய கோயில்’!''
''முதல் சிறுகதை...''
''திவ்யா என்ற ஒரு சிறுகதையை, எனக்குத் தெரிந்த தமிழில் பள்ளி நாட்களில் எழுதி இருந்தேன். மோசமான பிராமணத் தமிழில் இருக்கும் அது. என் மனைவி அதைப் படிக்கும்போது எல்லாம் சிரிப்பாள். உடையில் கட்டுப்பாடு, ஆண்களோடு பேசக் கட்டுப்பாடு எனக் கட்டுப்பாடுகளால் உருவாக்கப்பட்டு இருக்கும் ஒரு பெண்ணை, திடீரென ஒரு நாளில் ஒரு மனிதனுடன் தனி அறைக்குள் தள்ளிவிட்டு வாழ்ந்துகொள் என்று சொல்வது அபத்தம் இல்லையா என அந்தக் கதை பேசும். முதலிரவை மட்டுமே மையமாக வைத்து அந்தக் கதையை எழுதி இருந்தேன். முதலிரவைத் தாண்டிய என் பார்வைதான் 'மௌன ராகம்’. 'கம்பளிப் பூச்சி மாதிரி இருக்கு’ என்ற டயலாக் அந்த முதல் சிறுகதையில் இருந்து வந்ததுதான்!''
''முதல் மெகா ஹிட்...''
''மும்பையில் எம்.பி.ஏ., படித்தபோது, மும்பை நிழல் உலகில் மிக உச்சத்தில் இருந்தார் வரதராஜ முதலியார். மாதுங்கா பகுதி மக்கள் அவரைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள்.
தமிழ்நாட்டில் இருந்து போன ஒருவ ரால் எப்படி வேற்று மொழி நகரமான மும்பையில் கொடி கட்டி ஆள முடிகிறது என ஆச்சர்யப்பட்டேன். கமலிடம் திருப்பங்கள் நிறைந்த வரதராஜ முதலியார் வாழ்க்கையைப் படம் எடுக்கலாம் என்று சொன்னதும், உடனே சம்மதித் தார். கமல் இந்தப் படத்தில் ஓர் இயக்கு நரின் ஆளுமையோடு என்னை வழி நடத்தினார். சக நடிகர்களுக்கு மேக்கப் போட்டுவிடுவதில் ஆரம்பித்து, ஹேர் ஸ்டைல் வரை அந்தப் படத்தில் கமல் எனக்கு அறிவிக்கப்படாத உதவி இயக்குநராகத்தான் இருந்தார்.
ஒரு காட்சியை விளக்கும்போதே ஏழு விதமான யோசனைகளோடு அந்தக் காட்சிக்குப் பன்முகத்தன்மை கொடுத்து வியக்கவைப்பார். ஒரு நடிகனால் என்னவெல்லாம் செய்ய முடியும் என்ற நடிப்புகுறித்த என் எல்லைகளை விரிவாக்கியதே கமல்தான். ஓர் இயக்குநர் அவரிடம் நிறையக் கற்றுக்கொள்ள முடியும். அதே சமயம், நிறையக் கவன மாகவும் இருக்க வேண்டும்!''
''முதலும் கடைசியுமான சென்டிமென்ட்ஸ்...''
''என் படங்களில் எப்படியும் அதிக அளவில் குழந்தைகளையும் வயதானவர் களையும் பயன்படுத்துவேன். அது சினிமாவுக்குள் இந்தியாவைப் பிரதிபலிக்கும் அம்சம் என்பதால்.
அதுபோலவே ரயில் சம்பந்தப்பட்ட காட்சிகளை எப்படியும் வைத்துவிட மெனக்கெடுவேன். ஃபேர்வெல் உணர் வுக்கு ரயிலைவிடச் சிறந்த கருவி வேறு எதுவும் இருக்க முடியாது!''
நன்றி - விகடன்