Showing posts with label சுவாமி மலை. Show all posts
Showing posts with label சுவாமி மலை. Show all posts

Monday, March 11, 2013

பாரம்பரிய நெல் ரகங்கள்.


நெல்லின் நேசர்

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

சிவப்புக் குடவாழை. வெள்ளையான், பனங்காட்டுக் குடவாழை, ஒசுவக்குத்தாலை, குருவிகார், கல்லுருண்டை, சிவப்புக் கவுனி, கருடன் சம்பா, வரப்புக் குடைஞ்சான், குழியடிச்சம்பா, நவரா, காட்டுயானம், சிறுமணி, கரிமுண்டு, ஒட்டடையான், சூரக் குறுவை..."
போதும்... நிறுத்துங்க! இதெல்லாம் என்னங்க?"
இதெல்லாம் நம்மளோட பாரம்பரிய நெல் ரகங்கள். இதுபோன்று நம்ம மண்ணுல வெளைஞ்சிட்டு இருந்த ஆயிரக்கணக்கான பாரம்பரிய நெல் ரகங்களை பிலிப்பைன்ஸுக்கும், அமெரிக்காவுக்கும் பல வெளிநாடுகளுக்கும் கொண்டு போய்ட்டாங்க. இன்னைக்கு நம்ம சமகால விவசாயிகளுக்கு இதோட பெருமையும் தெரியலை. அருமையும் புரியலை. கடந்த ஏழெட்டு வருஷமாய்ப் போராடி சுமார் 63 வகையான நம்ம பாரம்பரிய நெல் ரகங்களைக் கண்டுபிடிச்சு பரவலாக்கியிருக்கோம்!" என்கிறார்நெல்லின் நேசர்ஆன ஜெயராமன்.
நமது நெல்லைக் காப்போம்என்கிற பிரசார இயக்கத்தின் தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் அவர். பாரம்பரிய நெல் வகைகள் குறித்தும் இயற்கை வேளாண்மை பற்றியும் ஆய்வாளருக்குரிய தகவல்களுடன் படபடவெனப் பேசும் அவர் அதிகம் படித்தவரில்லை. திருத்துறைப்பூண்டி அருகே ஆதிரெங்கம் கிராமம். பூர்விக விவசாயக் குடும்பம். அப்பா விவசாயி. கடனாளியானதுதான் மிச்சம். அவர் தம் காலத்திலேயே நிலங்களை விற்று விட, பத்தாம் வகுப்பு வரை படித்திருந்த ஜெயராமன், அச்சாபீஸ் வேலைக்குப் போய் விட்டார்.
அந்த நேரத்துல சுவாமி மலைக்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் வந்திருந்தாரு. அவரோட பேச்சு என்னில ரொம்பவே ஈர்த்துச்சு. அப்புறம் என்ன? அச்சக வேலைக்கு குட்பை சொல்லிட்டு, வேளாண் தொழிலுக்கு நேரா வந்துட்டேன். 2005 கேரளாவின் வயநாடு மாவட்டத்துல கும்பளங்கி கிராமத்துலதணல்அமைப்பு சார்பாநமது நெல்லைக் காப்போம்கருத்தரங்கு.
மலையாளிங்க தங்களோட பாரம்பரிய நெல் ரகங்களைப் பத்தி ரொம்பவே பேசினாங்க. எனக்கு அப்பத்தான் பொடனியில யாரோ பொடேர்னு அடிச்ச மாதிரி இருந்திச்சு. அப்ப... தமிழ்நாட்டுல நம்பளோட பாரம்பரிய நெல் ரகங்கள்லாம் என்னாச்சு? எங்கே போச்சுன்னு ஒரு தேடல் எனக்கு அன்னையிலேர்ந்தே தொடங்கிடிச்சு!" கதிரிலிருந்து உதிரும் நெல்மணிகளைப் போல சொற்களை உதிர்க்கிறார் ஜெயராமன்.

தமிழ்நாடு முழுவதும் சுத்தித் திரிஞ்சேன். பாரம்பரிய நெல் ரகங்களை விளைவிக்கிற விவசாயிகளைத் தேடிக் கண்டுபிடிச்சேன். அவுங்கள்ட்ட கையேந்தினேன். அவுங்க தர்ற நெல்லைக் கொண்டாந்து எங்க ஆராய்ச்சி மைய வயல்ல விதைப்பேன். அதைக் கொஞ்சம் கொஞ்சமாகப் பெருக்கி கோட்டை போலக் குவிச்சி வெச்சுக்குவேன்!" என்பவரை ரொம்பவே சிரமப்பட்டிருக்கீங்க போல..." என இடைமறித்தோம்.
நெல்லுல பலவகை இருக்கு இல்லே. அதுபோல அந்தந்த மண்ணுக்கு அந்தந்த நெல்லுனு இருக்கு. ஒரு தபா பனங்காட்டுக் குடவாழை நெல் தேடி அலைஞ்சேன். அது கடலோரப் பகுதி நிலத்துல விளையுற நெல். வேதாரண்யம் ஏரியாவுல அது விதைச்சிருந்த விவசாயியைக் கண்டுபுடிச்சிட்டேன். வெவரம் சொல்லி நெல்லு கேட்டேன். அவுரு தர மாட்டேன்னுட்டாரு. நான் சளைக்கலை. தொடர்ந்து அஞ்சாறு தபா அவுர்ட்ட அலைஞ்சேன். நெல்லெல்லாம் கிடையாதுன்னுட்டு ரெண்டு பிடி நாத்து மட்டும் தந்தாரு. அதை நட்டு பனங்காட்டுக் குடவாழை நெல் விதையினைச் சேர்க்கத் தொடங்கினேன். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகம் கொண்ட நெல் ரகம்ங்க அது. காய்ச்சல் கண்டவங்களுக்கு பனங்காட்டுக் குடவாழை அரிசியில் கஞ்சி வெச்சுத் தொடர்ந்து குடுத்து வந்தா மளமளன்னு காய்ச்சல் கொறைஞ்சுடும்ங்க!" என்று திடீரென உணவு முறை வைத்தியராக மாறுகிறார் ஜெயராமன்.
பாரம்பரிய நெல் ரகங்கள்ல ஒவ்வொண்ணும் பலவித நோய்களுக்கான அருமருந்து. மாப்பிள்ளைச் சம்பானு ஒரு ரகம். அந்த அரிசிச் சோறு தின்னா சர்க்கரை வியாதிக்காரங்க இன்சுலின் போடவே தேவையில்லை. சிவப்புக் கவுனி அரிசி நாள்பட்ட புண்ணையெல்லாம் ஆத்திடும். கருங்குறுவை அரிசி யானைக்கால் நோயைக் குணப்படுத்தும். பால்குட வாழை அரிசி சமைச்சி சாப்பிட்டா குழந்தை பெத்த பெண்களுக்கு பால் நல்லா ஊறும். தங்கச் சம்பா நெல்லுனு ஒண்ணு இருந்திச்சு. அதனை தங்க பஸ்பம்னே சொல்வாங்க. இதையெல்லாம் பறி கொடுத்துவிட்டு வெறும் சக்கையை விளைவிச்சுட்டு இருக்கோம்!" என்று ஆதங்கப்படுகிறார். அவர் சொல்லிச் செல்லும் நெல் ரகங்களின் பெயர்ப் பட்டியல் மேன்மேலும் நீள்கிறது.

அறுபது நாள் சாகுபடியிலிருந்து நூற்றியெண்பது நாள் சாகுபடி வரைக்குமாக சுமார் நூற்றுக்குட்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களின் விதைகளை இவர் சேமித்து வைத்திருக்கிறார். அதற்கென ஒரு வங்கியும் இயங்கி வருகிறது.
செம்மை நெல் சாகுபடி (ஒற்றை நாற்று முறை)யில் ஒரே ஒரு தூரில் விளைந்த நெல் மணிகளை மட்டும் அதற்கான கதிருடன் தூக்கிப் பிடித்துக் காட்டுகிறார் நம்மிடம். தூயமல்லி நெல் ரகம் அது. ஒரு தூரில் 113 கதிர்கள்! சீரக சம்பா, வாசனை சீரக சம்பானு ரெண்டு வகை நெல்.
இதுல வாசனை சீரக சம்பா நெல் வயல்ல பூக்கும் போதும் சரி, அந்த அரிசியை வீட்டில் சமைக்கும் போதும் சரி, சும்மா சீரக வாசனை கும்முனு தூக்கியடிக்குமாம்!
திருத்துறைப்பூண்டி, ஆதிரெங்கம் கிராம ஆய்வுப் பண்ணையில் ஆண்டுதோறும் மே மாதம் கடைசி சனி, ஞாயிறு இரண்டு நாட்கள்நெல் திருவிழாநடத்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதுமாக சுமார் இரண்டாயிரம் விவசாயிகள் வந்து செல்கின்றனர். எந்தப் பாரம்பரிய விதை நெல்லினை இங்கு வந்து பெற்றுச் சென்றாலும், அந்த விவசாயி அதன் அறுவடைக்குப் பின்னர் இரண்டு மடங்கு விதை நெல்லினை சமூகக் கடமையாக இங்கு கொண்டு வந்து திருப்பிச் செலுத்த வேண்டும்.


THANX - KALKI