Showing posts with label சிறுகதை உமா ஜானகிராமன். Show all posts
Showing posts with label சிறுகதை உமா ஜானகிராமன். Show all posts

Monday, November 12, 2012

ஒரு அம்மாவின் ஆசை! - தீபாவளி சிறப்புச் சிறுகதை : உமா ஜானகிராமன்

ஒரு அம்மாவின் ஆசை!

தீபாவளி சிறப்புச் சிறுகதை : உமா ஜானகிராமன்
ஓவியம் : தமிழ்

பண்டிகை நெருங்க... நெருங்க ஏதோ மனம் பதைத்தது. இந்தத் தீபாவளி சீக்கிரம் வந்துவிடக் கூடாதா...? நிறைய பிளான் பண்ணணுமே!
கடிகார முட்களைப் பிடித்துத் தள்ள வேண்டும் போல் இருந்தது எனக்கு. எங்கு நின்றாலும், பிரபாவின் ஞாபகமாகவே இருக்கிறது. எந்த ஒரு நிகழ்விலும் மகளது நினைவு, மெழுகாய் ஒட்டிக் கொண்டு மனத்தை ஒருசேர சந்தோஷப்படுத்தவும், வேதனைப்படுத்தவும் செய்கிறது.
மெதுவாகப் படியேறிப் போய் தோட்டத்து கடப்பைக் கல்லில் உட்கார்கிறேன். ரோஜாக்கள் மொட்டும், மலருமாய்ச் சிரித்துக் கொண்டிருக்கின்றன.
மலர்களில் மட்டுமில்லை. மொட்டுகளிலும் ஒருவித அழகு மிளிரத்தான் செய்கிறது. பிரபா என்னோடு இந்த வீட்டில் இருந்த நேரங்களில் இங்கே வந்து இப்படி மணிக்கணக்கில் உட்கார்ந்ததில்லைதான்.
நேரத்தைப் பார்த்துப் பார்த்து ஓடிக்கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம்.
மகள் பிரபா கல்லூரியிலிருந்து வந்தவுடன் சூடாய் ஃபில்டர் காப்பி கேட்பாள். கணவர் ரவிக்குமாரின் கோட் - சூட்டை ட்ரைக்ளீனிற்கு எடுத்துப் போய் கொடுத்தாக வேண்டும் - இப்படி, மனத்தில் எண்ணங்கள் வேகமாக ஓடிக் கொண்டேயிருக்க, காலில் சக்கரம் கட்டியது போல் சுழன்று கொண்டேயிருப்பேன்.

அம்மா, இன்னிக்கு மத்தியானம் லஞ்சுக்கு நீ கொடுத்தனுப்பிய அடை - அவியல் பிரமாதம்மா! அடுத்த வாரமும் என் ஃப்ரெண்ட்ஸுக்கு இதே போல செஞ்சு கொடுக்கணுமாம்" என்று கெஞ்சுவாள்.
உனக்கு இல்லாததா கண்ணா?’ என்றபடி மகளை அணைத்துக் கொள்வேன். அந்த மகள் இப்பொழுது கல்யாணமாகி மும்பை பறந்து விட்டாள்.
குழாயைத் திறந்து, வாளியில் நீரைப் பிடித்துச் செடிகளுக்கு ஊற்ற ஆரம்பிக்கிறேன். வாளி நீரைப் போலவே மனமும் தளும்பிக் கொண்டுதான் இருக்கிறது.
பிரபா இங்கிருக்கையில் இந்த வீடே வேறு முகம் கொண்டிருக்கும். காட்டருவி போல் சலசலவென்று பேசிக் கொண்டு, உற்சாகமும், சிரிப்புமாய் எந்நேரமும் சாரலில் நனைந்தாற்போல் இருக்கும்.
பிரபாவின் தேர்வுக் காலங்களில் நானும் அவளோடு கண் விழித்திருந்து டீ போட்டுக் கொடுப்பேன்.
அம்மா! படிச்சதிலே பாதி மறந்துடுச்சும்மா. இனிமேல் மறக்கக் கூடாதுன்னு வேண்டிக்கோம்மா."
என் தோளை அணைத்தபடி அழுவாள். அவளது பேச்சு சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், விடியற்காலையில் எழுந்து ராமாயணத்தை சர்க்கரைப் பொங்கல் மணக்க பாராயணம் செய்திருக்கிறேன்.
மனத்தின் சின்ன உரசல்களைக்கூட, அப்படியே வந்து என்னிடம் கொட்டி விடுவாள்.
தீபாவளி வந்து விட்டால் போதும். பார்த்துப் பார்த்து எனக்குப் பிடித்த மாதிரி அழகாய் சில்க் காட்டன் புடைவை வாங்கி வருவாள். நிறைய பட்டாசுகளை வாங்கிக் குவிப்பாள். இருவருமாய் பியூட்டி பார்லருக்குப் போவோம்.
எம்.ஜி.ரோடுக்குச் சென்று விதவிதமாய் வளையல்களையும், கல் பதித்த மோதிரங்களையும் வாங்கி, பகத்ராமில் பேல்பூரியும், லஸ்ஸியும் சாப்பிடுவோம். எல்லாமே தித்திக்க வைக்கும், மறக்க முடியாத தருணங்கள்.
ஜாதகம் பார்த்து அவளுக்கு ஏற்ற மாப்பிள்ளையைத் தேர்ந்தெடுத்து ஜோடியாய் புருஷனுடன் மும்பைக்கு அனுப்பியாகி விட்டது. இதோ இப்போது வருவது தலைதீபாவளி. அதற்கு இங்கே வருவாளா? இல்லை... வெளி நாட்டுக்கு எங்கேயாவது ஜோடியாக ட்ரிப் போவார்களா தெரியவில்லை.
சடசடவென்று பெரிதாய் மழை தூற ஆரம்பித்தது. மண்ணின் மணம் காற்றில் கலந்து வந்து மனதை நிறைக்க, கொடியில் காய்ந்து கிடந்த துணிகளை எடுக்க ஆரம்பிக்கிறேன். இன்று ஆறு மணிக்கு மேல் டாக்டரிடம் போயாக வேண்டும்.
போன வாரம் முழுவதும் வேலை செய்ய முடியாமல் ஏனோ ஒருவித சோர்வு உடம்பை ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. இதுவரையிலும் நான் அனுபவித்திராத சோர்வு.
சாயங்காலம் குடும்ப டாக்டரிடம் போனபோது, ‘ஷுகர்லெவல் கொஞ்சம் அதிகம்தான்" என்று சொல்லியபடியே மாத்திரைகளை எழுத ஆரம்பித்தார்.
மனத்தில் கொஞ்சமாய் ஏறிய சுமையுடன் வீடு நோக்கி நடந்தபோது, பிரபாசெல்லில் அழைத்தாள்.
எங்கே போய்க்கிட்டிருக்கே? ஒரே சத்தமாய் இருக்கு?" என்றாள்.
அவளிடம் ஏதோ சொல்லிச் சமாளித்தேன். தேவையில்லாததைச் சொல்லி, அவள் மனத்திலும் பாரத்தை ஏற்றுவதில் எனக்கு உடன்பாடு இல்லைதான். மாத்திரைகளை வாங்கிக் கொண்டு நடக்கையில் அம்மாவின் ஞாபகம் வந்தது.

இரண்டு பெண்களைப் பெற்ற அம்மா, இப்பொழுது மைசூரில் முதியோர் இல்லத்தில் வசித்துக் கொண்டிருக்கிறாள்.
அப்பா, இரண்டு வருடங்கள் முன்னால் எதிர்பாராதவிதமாக இறந்து போக, பிள்ளை இல்லாத அம்மாவை எல்லோருமாய்ச் சேர்ந்து முதியோர் இல்லத்தில் சேர்த்து விட்டோம்.
எனக்கும் அந்த நேரத்தில் வீடு கட்டுவது, பிரபாவிற்கு ஜாதகம் பார்ப்பது என்று மிகவும் நெருக்கடியான வேலைகள் இருந்ததால், அம்மாவை வைத்துக் கொள்வதில் கொஞ்சம் யோசனைதான். அக்காவும், பட்டுக் கொள்ளாமல் கொஞ்சமாய் ஒதுங்கிப் போனாள்.
அம்மா, அதிகம் பேசாத, யார் மனத்தையும் புண்படுத்தத் தெரியாத பாவப்பட்ட ஜீவன். அப்பாவின் பதினைந்தாவது நாள் காரியம் முடிந்தவுடன், நாங்கள் கேட்டுக் கொண்டதன் பேரில், கையில் பெரிய சூட்கேஸுடன் முகத்தில் எந்த பாவனையும் இல்லாமல் காப்பகத்திற்குப் புறப்பட்டு விட்டாள்.
அவ்வப்பொழுது தொலைபேசியில் நான்எப்படிம்மா இருக்கே?’ என்று விசாரிக்கையில், ‘சந்தோஷமா இருக்கேன்என்று நிறைவாக பதில் சொல்வாள்.
பிள்ளையைப் பெற்றவளைப் பார்த்துக் கொள்வதை, தம்முடைய கடமையாக நினைக்கும் மகன்கள், பெண்ணைப் பெற்றவளை மட்டும் தந்திரமாக ஒதுக்கி வைத்து விடுகிறார்களேஎன்று நினைத்தபோது, மனம் கனத்துப் போய் வலித்தது.
வீட்டுக்கு வந்து கதவு திறந்து உள்ளே செல்கையில், அம்மாவின் நினைவு உள்ளம் முழுவதும் வியாபித்திருந்தது.
மாத்திரைகளை டேபிளின் மேல் வைத்துவிட்டு அப்படியே சரிந்து உட்கார்ந்தேன். பிரபா தொலைபேசியில் அழைத்தாள்.
என்ன பிரபா?"

உன்கிட்டே சொல்ல வேண்டாம்னு நினைச்சேன். ஆனா முடியலைம்மா. அதான் மறுபடியும் ஃபோன் பண்ணிட்டேன். இரண்டு நாளா எனக்கு ஜுரமாய் இருந்துச்சு. வைரஸ் ஃபீவர்னு சொல்லி மருந்து கொடுத்திருக்காங்க" என்றாள்.
குழந்தை பாவம், தனியாக என்ன செய்வாள்? புது இடம், புது மனிதர்கள், எந்த உதவியை எதிர்பார்க்க முடியும்? மனம் துவண்டு போனது.
இப்போதே ஃபிளைட் பிடித்து மும்பைக்குப் போய்விட வேண்டும் போலிருந்தது. ரவிக்குமார் வந்தவுடன் அவரிடம் இதுபற்றிப் பேசியாக வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டேன்.
அலமாரியில் இருந்த பிரபாவின் கல்யாண ஆல்பத்தை எடுத்து வைத்துக் கொண்டேன். அம்மா ஆங்காங்கே புகைப்படங்களில் நைந்த மாதிரி நின்று கொண்டிருந்தாள். இந்த அம்மாவும், என்னைப் போலவே ஒருகாலத்தில் தன் மகளுக்காக அணுஅணுவாக உருகிப் போயிருந்திருப்பாள்.
இந்த அம்மா பாவம், படித்தவள் கூட இல்லை. ஆனாலும், எல்லா கால கட்டத்திலும் எனக்குத் துணையாக, கைகோத்து வந்திருக்கிறாள். ஆனால் நான்? அவள் வயோதிகப் படிகளில் நிலைதடுமாறி நடக்கும்போது, ஆதரவாகக் கரம் கொடுக்கத் தவறிவிட்டேனே!
ஐயோ! மனசுக்குள் ஒரு சிறு குறுகுறுப்பு விழுந்து, விரிந்து, பெரிதாகி, பூமிக்கோளம் போல உருண்டு, நெஞ்சை அடைத்தது.
அம்மாவுக்கு நான் பரிவு காட்டியே ஆக வேண்டும்.
ஒரு மகளாக... இல்லை, இல்லை ஒரு தாயாக...
விடியற்காலை முதல் பஸ்ஸில் மைசூருக்குச் சென்று அம்மாவை இங்கு அழைத்து வந்துவிட வேண்டும். இந்தத் தீபாவளிக்கு மற்றது எதுவுமே இரண்டாம்பட்சம்தான்! அம்மாதான் வேண்டும் என நினைத்தபடி நிம்மதியுடன் உறங்கத் தொடங்கினேன்.


 நன்றி - கல்கி