Showing posts with label சினிமா எக்ஸிரஸ். Show all posts
Showing posts with label சினிமா எக்ஸிரஸ். Show all posts

Thursday, November 22, 2012

மணிரத்னத்தை மறைமுகமாகத்தாக்கிய கே.பாலசந்தர் பேட்டி

யாரும் போகாத பாதையில் போனேன்! - கே.பாலசந்தர்

எண்பதாண்டுகளைக் கடந்துவிட்ட தமிழ்த்திரையுலகில் நூற்றுக்கும் மேற்பட்ட தரமான படைப்புகளைத் தந்திருப்பவர் இயக்குநர் கே.பாலசந்தர். செறிவான கதை, நுட்பமான வசனம், சம்பவப் பொருத்தமான பாடல்கள், அழுத்தமான நடிப்பு, துணிச்சலான முடிவுகள் இவையே இவரது முத்திரைகள். திரையுலக அனுபவத்தில் பொன்விழாவை நெருங்கிக்கொண்டிருக்கும் அவரை நாம் சந்தித்தபோது..






.எம்.ஜி.ஆர் நடித்த "தெய்வத்தாய்' படத்தின் வசனகர்த்தாவாக தொடங்கிய உங்கள் திரைப்பயணம் இப்போது நாற்பத்தெட்டு ஆண்டுகளைக் கடந்திருக்கிறது. இப்பயணம் திருப்தியளிக்கிறதா?







மகிழ்ச்சியளிக்கிறது. நான் எதை எப்படி செய்யவேண்டுமென்று நினைத்தேனோ அதை அப்படியே செய்திருக்கிறேன். மற்றவர்கள் செய்வதை நாம் செய்யக்கூடாது என்று நினைத்தேன். "ரோட் லெஸ் டிராவல்ட்' என்று ஆங்கில்த்தில் கூறுவார்கள். அதுபோல அதிகமாக யாரும் பயணிக்காத பாதையில் பயணிக்க நினைத்தேன். அப்படித்தான் பயணித்திருக்கிறேன். இதற்கு முக்கிய காரணம், ரசிகர்களுடைய ஆதரவுதான். நான் வித்தியாசமாக செய்த எல்லா விஷயங்களையும் ஆதரித்தார்கள்.






 அதனால்தான் தொடர்ந்து என்னால் புதுமையான பல விஷயங்களைச் செய்ய முடிந்தது. அது மட்டுமல்ல, என்னுடைய படங்களின் தயாரிப்பாளர்கள் எனக்குக் கொடுத்த சுதந்திரமும் ஒரு காரணம். அரசாங்கம் எனது படங்களை பாராட்டி விருதுகள் கொடுத்து ஊக்குவித்ததும் நான் தொடர்ந்து வித்தியாசமான படங்களை எடுப்பதற்குக் காரணமாக அமைந்தது. அதுவும் சினிமா துறைக்கு இந்திய அரசாங்கம் தரக்கூடிய மிகப்பெரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது எனக்குக் கிடைத்தது நான் நிச்சயமாக எதிர்பார்க்காத ஒன்று. எனக்கு எல்லாமே மகிழ்ச்சிதான். 







ஆரம்பகால படங்களில் அதிக பாடல்கள், பின்பு செறிவான கதைகள், அடுத்து அலங்கார வசனங்கள், பின்பு நடைமுறை வசனங்கள் இப்போது வசனம்கூட குறைந்துவிட்டது. இந்தச் சூழலில் ஒரு ரைட்டருக்கு சினிமாவில் இடம் இருக்கிறதா? இருக்குமா?







யெஸ். இப்பொழுதெல்லாம் யதார்த்தமாக எடுக்கிறோம் என்று நினைத்துக்கொண்டு நாம் எப்பவும் என்ன பேசுவோமோ அதையே டயலாக் என்று வைக்கிறார்கள். எனக்கு அதில் உடன்பாடில்லை. கலை என்பது எதையுமே அழகுபடுத்தும் விஷயம்தானே? வசனம் என்பது சினிமாவில் முக்கியமான விஷயம். இளங்கோவன், கலைஞர் இவர்களுடைய வசனமெல்லாம் ரொம்பவும் பேசப்பட்டது. வசனங்களுக்காகவே ஓடின படங்களெல்லாம் இருக்கிறது. செயற்கையான நாடகத்தனமான வசனங்கள் வேண்டாம் என்று சொல்வது சரி. ஆனால் வசனம் என்ற ஒன்று வேண்டாம், நினைத்தபடி பேசிக்கொள்ளலாம் என்பது சரியல்ல






. சில காட்சிகளுக்கு வசனம் தேவையில்லாமல்கூட இருக்கலாம். விஷுவலாக காட்சியை விளக்கக்கூடிய இடத்தில் வசனத்திற்கு வேலையில்லை. அது வேறு விஷயம். அப்படி எடுத்தால் வெல் அண்ட் குட். ஆனால் வசனம் என்று வந்துவிட்டால் அது வசனமாகத்தான் இருக்கவேண்டும். கலோக்கியல் என்கிற பெயரில் கண்டபடி பேசிக்கொள்வதில் எனக்கு உடன்பாடு இல்லை.யதார்த்தத்தை வேறு விஷயங்களில் இவர்கள் காட்டலாம். பாட்டுப்பாட ஆரம்பித்ததும் ஹீரோவும் ஹீரோயினும் ஸ்வீடனுக்கும் சுவிட்சர்லாந்துக்கும் போய் ஆடிப்பாடுவதை மாற்றி யதார்த்தமாக இங்கேயே பாடலாம். ஹீரோ சண்டை போட ஆரம்பித்ததுமே மேலே பறந்து அங்கேயே நின்று நான்கு பேரை உதைத்துவிட்டு பின் கீழே இறங்குவதை மாற்றி யதார்த்தமாக சண்டை போடலாம். யதார்த்தம் என்பது எல்லா விஷயத்திலும் வரவேண்டும்.






 மிகையான தொழில்நுட்பம் படைப்புத்திறனை அமுக்கிவிடுகிறது என்பதை ஒப்புக்கொள்கிறீர்களா?






ஆமாம். அமுக்கித்தான் விடுகிறது. ஒரு நடிகரை லண்டனுக்கு கூட்டிக்கொண்டுபோய் அரை நாள் நடிக்க வைத்து அனுப்பிவிட்டால் போதும், நாம் விரும்புகிறபடி அவருடைய காட்சிகளை அமைத்துக்கொள்ளலாம் என்கிற அளவுக்குப் போய்விட்டால் படைப்புத்திறனுக்கு அங்கே என்ன வேலையிருக்கிறது? படைப்புத்திறன் ஒரு பக்கம் இருக்கட்டும், அந்த நடிகருக்குத்தான் அந்தப் படத்திலும் அந்த பாத்திரத்திலும் என்ன ஈடுபாடு இருக்கும்?







இது ஒரு உலகமயமாதல் காலம். இன்றைய தேதியில் "தண்ணீர் தண்ணீர்' படம் போன்ற வட்டார வழக்கு வசனங்களும் "முத்துக்குளிக்க வாரிகளா...?‘ போன்ற பாடல்களும் ரசிக்கப்படுமா? வட்டார வழக்கு படங்களுக்கு எதிர்காலம் உண்டா?






நிச்சயம் உண்டு. நிச்சயம் ரசிக்கப்படும். தமிழ்ப்படங்களுக்கு இப்போது உலகம் முழுக்கவும் மார்கெட் இருக்கிறது. உலகம் முழுவதும் பார்க்கப்படுவதும் உண்மைதான். ஏ.ஆர்.ரஹ்மான், கமல், மணிரத்னம் இவர்களை எல்லா நாட்டினரும் அறிந்துள்ளனர். ஜப்பானில் ரஜினிக்கு பெரிய ரசிகர் கூட்டமே இருப்பதாக பேப்பரில் படிக்கிறோம். ஸோ, இவர்களுடைய தமிழ்ப்படத்தை பார்க்கிறவர்கள் தமிழ் வாழ்க்கையை, தமிழ் கலாசாரத்தைப் பார்க்க விரும்புவார்கள். திருநெல்வேலி பாஷை ஜப்பானில் புரியாது என்று சொல்வது சரியல்ல. ஏனென்றால், அதைப் புரியவைக்க சப்-டைட்டில் என்று ஒன்று இருக்கிறது. அப்படிப் பார்த்தால் திருநெல்வேலி பாஷை தஞ்சாவூர் மக்களுக்கே புரியாதே..






. அவர்கள் ரசிக்காமல் இல்லையே... நன்றாக இருக்கும் எதையும் நிச்சயம் யாரும் ரசிப்பார்கள். என்னுடைய "அனுபவி ராஜா அனுபவி' ஹிந்தியில் ரீமேக் ஆனபோது, தமிழில் நாகேஷ் நடித்த பாத்திரத்தில் மகமூத் நடித்தார். அவர் "முத்துக்குளிக்க வாரீகளா..?‘ பாட்டின் முதல் நான்கு வரிகள் அப்படியே தமிழில் இருக்கட்டும் என்று சொன்னார். 


சங்கர் - ஜெய்கிஷன் இசையமைத்திருந்தார்கள். பல்லவி முழுக்க தமிழில் இருக்க, சரணம் மட்டும் ஹிந்தியில் இருந்தது. அவர்கள் புரியவில்லை என்று சொல்லவில்லையே? நன்றாக இருக்கும் எதையும் எப்பவும் ரசிப்பார்கள். ஐம்பது வருடமாக ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வரும் காட்சிகள் எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கிறது. நாம் ரசிக்காமலா விட்டுவிட்டோம்?






உங்களுடைய படங்களில் மட்டும்தான் பாட்டு என்பது வெறும் பாட்டாக இல்லாமல் கதையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துகிற ஒரு விஷயமாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததைவிட சிறப்பாக அமைந்து இதை எப்படி படமாக்குவது என்று உங்களைத் திணற வைத்த பாடல் ஏதாவது இருக்கிறதா?






பொதுவாக இல்லை என்றுதான் சொல்லவேண்டும். ஏனென்றால் நான் ஒரு பாடல் காட்சியில் என்னென்ன சம்பவங்கள் நடக்க வேண்டும் என்பதை முன்பே முடிவு செய்துவிடுவேன். அதற்கு ஏற்றாற்போல் பாடலையும் இசையையும் வாங்கிவிடுவேன். ஆனால் எனக்குப் சவாலாக அமைந்தது என்று இரண்டு பாடல்களைச் சொல்லலாம்.


 முதலாவது "பட்டணப்பிரவேசம்' படத்தில் வரும் "வான் நிலா நிலா...' என்கிற பாட்டு, பாடலும் இசையும் போட்டி போட்டு சிறப்பாக அமைந்திருந்தன. இரண்டாவது, "சிந்து பைரவி' படத்தில் வரும் "மோகம் எனும் தீயை...' பாட்டு. இதிலும் பாடல், இசை, குரல் எல்லாமே அருமையாக அமைந்திருக்கும். இந்தப் பாட்டைப் படமாக்க பல இடங்களைத் தேடி, கடைசியில் விசாகப்பட்டிணத்தில் கடல் நடுவே இருந்த பாறையில் சிவகுமாரை உட்கார்ந்து பாடவைத்து படமாக்கினேன்







.உங்கள் படங்களில் நீங்களே பெருமைப்படுகிற படம் எது? "இந்தப் படத்தை நாம் எடுத்திருக்க வேண்டாமே..' என்று நினைக்கிற படம் எது?







பெருமைப்படுகிற படம் என்று கேட்டால் நான் "புன்னகை' படத்தைத்தான் சொல்வேன். எத்தனையோ வருடங்களுக்கு முன்பே காந்தியத்தைப் பற்றி பேசிய படம் அது. நான் மதிக்கும் பலபேர் இன்றும் என்னைப் பார்த்ததும் முதலில் பேசுவது "புன்னகை' படத்தைப் பற்றித்தான். ஸோ, அந்தப் படத்தைப் பெருமையாக சொல்லலாம்.எடுத்திருக்க வேண்டாம் என்று நினைக்கிற படம் அப்படியென்று எதைச் சொல்ல முடியும்? என்னுடைய ஒவ்வொரு படத்தையும் நான் விரும்பித்தான் எடுத்தேன்





. சில படங்களை ரசிகர்கள் விரும்பவில்லை. அவ்வளவுதான். ஆனால், ஒரே ஒரு படத்தை மட்டும் என்னுடைய நண்பர்களும் ரசிகர்களும் "இது உங்கள் படம்போல் இல்லை', உங்களிடமிருந்து இப்படியொரு படத்தை நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்றெல்லாம் சொன்னார்கள். அந்தப் படம், "எங்க ஊர் கண்ணகி'. அந்தப் படம் வியாபார ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெறவில்லை.அது வியாபார ரீதியாக வெற்றி பெறவில்லை என்பதனாலேயே அதை நான் எடுத்திருக்க வேண்டாமே என்று இப்போது கூறுவது நியாயமாகாது. அந்தப் படம் பெரிய வெற்றியடைந்திருந்தாலும் அதைப் பெருமையான படம் என்றும் கூறமாட்டேன். அது வெற்றி பெறாததால் எடுத்திருக்ககூடாத படம் என்றும் கூறமாட்டேன். அதுவும் என் படம்தான்.







 "எ பிலிம் பை கே.பாலசந்தர்' எப்போது திரையில் பார்க்கலாம்?





யோசித்துக் கொண்டிருக்கிறேன். பார்க்கலாம்.



நன்றி -  சினிமா எக்ஸிரஸ்