Showing posts with label சிக்ஸ் பேக் சிங்கங்கள் @ கோடம்பாக்கம். Show all posts
Showing posts with label சிக்ஸ் பேக் சிங்கங்கள் @ கோடம்பாக்கம். Show all posts

Wednesday, September 24, 2014

சிக்ஸ் பேக் சிங்கங்கள் @ கோடம்பாக்கம்


ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் சென்னை வந்திருக்கும் நேரம் நம் கோடம்பாக்கத்து அர்னால்டுகள் பற்றி நினைத்து பார்க்க வேண்டியதாகிவிட்டது. ஒருவர் செய்வதை பார்த்து மற்றவர்கள் காப்பி அடிக்கிற உலகம் சினிமா உலகம். அப்படித்தான் ஆனது சிக்ஸ் பேக்ஸ் விவகாரமும். அர்னால்ட் மாதிரியான ஹாலிவுட் ஹீரோக்களை பார்த்து இந்தியில் கான், கபூர் நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்து ஒல்லி பிச்சான் நடிகைகளுடன் ஃபேர் பாடியில் டூயட் பாடுவார்கள். தலையை சிலுப்பிக் கொண்டு வில்லன்களை பாய்ந்து பாய்ந்து அடிப்பார்கள். அதை பார்த்து முதன் முறையாக தமிழில் சூர்யா வாரணம் ஆயிரம் படத்துக்கு சிக்ஸ் ஃபேக் வைத்தார். தமிழ்நாடே அவரை ஆச்சர்யத்தோடு பார்த்தது.


அப்புறம் விஷால் சத்யம் படத்தில் போலீஸ் ஆபீசராக நடித்தபோது சிக்ஸ் பேக் வைத்தார், தனுஷ் பொல்லாதவன் படத்தில் ஒல்லி பிச்சானாக நடித்தார். படா படா வில்லன்களை அவர் புரட்டி எடுக்க வேண்டும் அதற்காக சிக்ஸ் பேக் வைத்து லாஜிக்கை காப்பாற்றினார்.

எல்லோரும் சிக்ஸ் பேக் வைக்கிறார்களே நானும் வைக்கிறேன் என்று போடா போடி படத்தில் சிம்பு வைத்தார்.


பரத்திற்கு தொடர் தோல்விகள். பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருந்தவர் திடீரென ஆக்ஷன் ஹீரோவாக... மக்கள் "சற்றே தள்ளி இரும் பிள்ளாய்..." என்று ஒதுக்கி வைத்து விட்டார்கள். தன்னை மீண்டும் நிலைநிறுத்திக் கொள்ள ஏதாவது புதிதாக செய்தாக வேண்டும். அதனால் சசி இயக்கத்தில், நடித்த 555 படத்தில் சிக்ஸ் பேக் வைத்து மிரட்டினார்.


தற்போது கடைசியாக அதர்வா. இரும்பு குதிரை படத்தில் பைக் ரேஸராக நடித்தார். அதற்காக சிக்ஸ்பேக் வைத்தார். செம போஸ்கள் கொடுத்தார். வெளிநாட்டு வில்லனுடன் சிக்ஸ்பேக் காட்டி மோதினார்.


இந்த இடத்தில் மூன்று விஷயங்களை தெளிவாக புரிந்து கொள்ளலாம்

1. சிக்ஸ் பேக் என்பது எல்லோருக்கும் இருக்கிறது. நமது உணவு பழக்கம், உடல் உழைப்பு இல்லாமல் போவது இதன் காரணமாக வயிற்று பகுதியில் கொழுப்பு சேர்ந்து அந்த சிக்ஸ் பேக்கை மறைத்து விடுகிறது. இஷ்டப்பட்டு, கஷ்டப்பட்டு கடுமையான உடற்பயிற்சி, உணவு கட்டுப்பாட்டுடன் இருந்தால் சிக்ஸ் பேக் "உள்ளேன் அய்யா" என்று வெளியில் தெரிய ஆரம்பிக்கும். கொழுப்பை குறைக்க ஊசி போட்டுக் கொள்வதும், மாத்திரை உட் கொள்வதும் குறுக்கு வழி. அதனால் வரும் ஆபத்துக்களும் தனி. சிக்ஸ் பேக் வந்தபிறகு அதை தொடர்ந்து தக்க வைத்துக் கொள்ள அதே டயட்டையும், உடற்பயிற்சியையும் தொடர வேண்டும். இல்லாவிட்டால் இரண்டே மாதத்தில் சிங்கிள் திரும்பிவிடும்.


2. நம் ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வைத்துக் கொள்வது என்னாலும் வைக்க முடியும் என்று காட்டத்தானே தவிர. அவர்கள் சிக்ஸ்பேக் வைத்து நடித்த படங்களுக்கோ, கேரக்டருக்கோ அது கட்டாய தேவையொன்றும் இல்லை.


3. நம் ஹீரோக்கள் சிக்ஸ் பேக் வைத்து நடித்த படங்கள் எதுவும் சிக்ஸ் வீக் கூட ஓடவில்லை. இதிலிருந்து தெரிந்து கொள்வது என்னவென்றால் ரசிகர்கள் விரும்புவது சிக்ஸ் பேக்கை அல்ல. மனதை சிக்கென்று பிடிக்கும் நல்ல கதையை, நல்ல நடிப்பை.



thanx - dinamalar