Showing posts with label சிகை கதிர். Show all posts
Showing posts with label சிகை கதிர். Show all posts

Tuesday, November 17, 2015

நிஜ வாழ்வுடன் கதாபாத்திரங்கள் பொருந்துவது அவசியம்: நடிகர் கதிர் நேர்காணல்

‘சிகை’ படத்தில் கதிர்
‘சிகை’ படத்தில் கதிர்

‘சிகை’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்திருக்கிறார் கதிர். ‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’ படங்கள் மூலம் தமிழ் திரைஉலகில் தனக்கான ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டவர். ‘என்னோடு விளையாடு’, ‘சிகை’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அவருடன் ஒரு உரையாடல்..


‘சிகை’ படத்தின் வாய்ப்பு எப்படி கிடைத்தது?

படத்தின் இயக்குநர் ஜெகதீசன் சுபுவின் நட்பு கிடைத்தபோது முதலில் ‘சக்கரம்’ என்ற தலைப்பில் வேறொரு கதையை படமாக்கும் முயற்சியில்தான் இருந்தோம். அப்போது ஒருமுறை ‘சிகை’ படத்தின் ஒருவரி கதையை சொன்னார். கேட்டதும் பிடித்துவிட்டது. வித்தியாசமாகவும் இருந்தது. இதை முதலில் ஆரம்பிக்கலாம் என்று இறங்கிவிட்டோம். படம் முதல் நாள் இரவு தொடங்கி அடுத்த நாள் இரவு முடியும். ஹீரோ, ஹீரோயின் இல்லை. மொத்தம் நாங்கள் 9 கதாபாத்திரங்கள். பெண் கேரக்டர், திருநங்கை படம் என்று சிலர் பேசுகின்றனர். இது அப்படி ஒரு கேரக்டரை சார்ந்து இருக்கும் களம் அல்ல. சஸ்பென்ஸ், த்ரில்லர் களம். சிகை கெட்டப் மாற்றம்தான் படத்தின் மையம்.


‘மதயானைக்கூட்டம்’, ‘கிருமி’ மாதிரியான கதைகளை தேர்வு செய்து உங்களுக்கு என்று ஒரு இடத்தை உருவாக்கிக்கொண்டது எப்படி?

கமர்ஷியல் படமானாலும், ஏதாவது ஒரு புதுமை இருக்க வேண்டும் என்று விரும்புபவன் நான். நாம் தேர்ந்தெடுக்கும் கேரக்டர், மக்கள் தங்கள் வாழ்க்கையோடு பொருத்திப் பார்ப்பதுபோல இருக்க வேண்டும். அதனால்தான் நிஜமான, எதார்த்த வாழ்வியல் சார்ந்த கதைக்களத்தையே தேர்வு செய்கிறேன். ‘இது நம் சம்பந்தப்பட்ட விஷயம் இல்லை’ என்று ரசிகர்கள் சிறிதும் அந்நியமாக உணர்ந்துவிடக் கூடாது.


நல்ல கதைக்களம், கதாபாத்திர வடிவமைப்பு இருந்தும் உங்களின் முதல் படமான ‘மதயானைக்கூட்டம்’ அவ்வளவாக போகவில்லையே!

எனக்கும் அதில் வருத்தம்தான். முழுக்க முழுக்க வாழ்க்கையை பிரதிபலிக்கும் விதமாக அது உருவாக்கப்பட்டது. ஆனால், ஒரு சாதியை மட்டுமே அடித்தளமாக வைத்து எடுக்கப்பட்டதாக தவறாக புரிந்துகொள்ளப்பட்டது. தெற்கு பகுதியில் பரவலாக கொண்டாடப்பட்ட இந்த படத்தை கோவை போன்ற நகரங்களில் சற்று அந்நியமாக உணர்ந் தார்கள். மேலும், படம் ரிலீஸாகும் நேரமும் இங்கு முக்கியம். ஒரு படம் கவனிக்கப்பட வேண்டும் என்றால் இங்கு பல விஷயங்கள் தேவை.


‘என்னோடு விளையாடு’ படத்தில் நடித்து வரும் அனுபவம் பற்றி..?

நம்மகிட்ட இருக்கும் காசை, வெளியே சென்று எங்கெங்கோ தேடிக் கொண்டிருக்கும் சூழல்தான் படத்தின் கரு. இயக்குநர் அருண் கிருஷ்ண சாமி. நானும், பரத்தும் நடிக்கிறோம். எனக்கு ஜோடி சஞ்சிதா ஷெட்டி. சினிமா பற்றி பரத் நிறைய தெரிந்து வைத்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. டப்பிங் வேலைகள் நடக்கிறது. ஜனவரியில் ரிலீஸ்!


‘கிருமி’ படத்தில் உங்களுடன் நாயகியாக நடித்த ரேஷ்மி மேனன் - பாபி சிம்ஹா காதல் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்குமே..?

‘கிருமி’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் இருந்தபோதுதான் அவர்கள் இடையே காதல் ஏற்பட்டது. ‘வீட்டில் சொல்லி எப்படியாவது ஓகே வாங்கணும்’ என்று படப்பிடிப்பில் சொல்லிக்கொண்டிருப்பார்கள். இருவருமே எனக்கு நல்ல நண்பர்கள். பரஸ்பரம் நன்கு புரிந்துவைத்திருப்பவர்கள். நல்ல ஜோடி.


சர்வதேச திரைப்பட விழா என்பதை இலக்காகக் கொண்டு ‘சிகை’ திரைப்படம் தயாராகிறதா?

ஆம். அதற்காகவே நுணுக்கமாக பார்த்துப் பார்த்து உருவாக்குகிறோம். 70 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இதன் இயக்குநர் ஜெகதீசன் சுபு, ‘காக்கா முட்டை’ இயக்குநர் மணிகண்டனிடம் உதவியாளராக இருந்தவர். ‘கிருமி’ படத்தை இயக்கிய அனுசரண்தான் எடிட்டர். எடிட்டிங்கில் அதிக அனுபவம் உள்ளவர். இப்படி கூட்டு முயற்சியாக படம் உருவாகிறது. நிச்சயம் நல்ல அடையாளத்தைக் கொடுக்கும்.


உங்களைப் பற்றி..

சொந்த ஊர் கோவை. வீட்டில் நான் ஒரே பையன். நடிக்கலாம் என்ற எண்ணமும் இருந்தது. பொறியியல் பட்டப்படிப்பு படிக்கும்போதே ‘மதயானைக்கூட்டம்’ பட வாய்ப்பு வந்தது. ஊர் நண்பன் ஜெகதீஷ், சினிமாவில் இருக்கிறார். அவர் மூலம், எதிர்பாராத நேரத்தில் அந்த வாய்ப்பு கிடைத்தது. அதற்கு முன்பு 2 மாதம் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி பெற்றேன். அப்புறம், கள அனுபவத்துக்காக ‘மதயானைக்கூட்டம்’ குழுவினருடன் தேனி பக்கம் சென்றுவிட்டேன். வேட்டி கட்டுறது எப்படி, அருவா பிடிக்கிறது எப்படி என்று மக்களோடு மக்களாக இருந்து தெரிந்துகொண்டேன். அதுமுதல் இப்போது வரை தொடர்ந்து நடிப்பை கற்று வருகிறேன்.

thanks the hindu