சமீபத்துல எனக்கு உடம்பு சரியில்லாம, மருத்துவமனையில் அட்மிட் ஆகியிருந் தேன். என்
குழந்தைகளுக்குக்கூட அதைச் சொல்லலை. 'அவங்க வாழ்க்கையை சந்தோஷமா ஆரம்பிக்கிற இந்த நேரத்துல அப்பாவை மருத்துவமனைக்கு அழைச்சுட்டுப் போற மாதிரியான சுமைகள் வேண்டாம். 'இது அவங்க கடமைதானே... எப்படி சுமைகள் ஆகும்?’னு நீங்க கேட்கலாம். இந்த மூணு குழந்தைகளும் என் வாழ்க்கைக்குள் வேணும்னு நான்தான் முடிவுபண்ணினேன். என்னால முடிஞ்சதை எல்லாம் இவங்களுக்குச் செய்தேன்; செய்றேன்; செய்வேன். ஆனா, அதுக்காக அவங்க எனக்கு எதுவும் செய்யணும்னு எதிர்பார்க்க மாட்டேன். எப்போவாச்சும் திரும்பி என்னை இதமா ஒரு பார்வை பார்த்தா போதும். அதுதான் எனக்குச் சொர்க்கம்'' - பார்த்திபன் எது மாதிரி பேசினாலும் புது மாதிரியாக இருக்கும்; அன்று தன் வாரிசுகள் பற்றிப் பேசும்போதும் அப்படியே!
'' 'நானும் ரௌடிதான்’ படத்துல என் நடிப்பை ஊரே பாராட்டுது. ராக்கி முதல் நாள் முதல் காட்சி பார்த்துட்டார். ஆனா, என் நடிப்பு பற்றி ஒரு வார்த்தைகூடச் சொல்லலை. ஒரு மெசேஜ் அனுப்பலாம். அதுவும் இல்லை. அவரோட விமர்சனம் எனக்கு ரொம்ப முக்கியம். ரெண்டு நாள் கழிச்சு, 'படத்தைவிட உங்க நடிப்பைத்தான் என் ஃப்ரெண்ட்ஸ் பாராட்டினாங்க’னு ஒரு மெசேஜ் தட்டியிருந்தார். எனக்கு குட்டியா ஒரு ஆஸ்கர் அவார்டு கிடைச்ச சந்தோஷம். ராக்கி எப்பவும் இப்படித்தான்... சம்திங் ஸ்பெஷல்!
விஷுவல் கம்யூனிகேஷன் முடிச்சுட்டு ஆறு மாசம் வீட்டுலதான் இருந்தார். 'ஏன்?’னு கேட்டேன். 'அது அப்படித்தான். என்னைத் தொந்தரவு பண்ணாதீங்க’னு சொல்லிட்டார். 'இந்த ஆறு மாசமும் சைலன்ட் ஸ்டடிபோல’னு நான் நினைச்சுக்கிட்டேன். திடீர்னு ஒருநாள், 'கேமராமேன் ஏகாம்பரத்திடம் அசிஸ்டென்டா வேலைபார்க்கணும்’னு சேர்ந்துட்டார். அப்புறம் ஒருநாள், 'ஏ.எல்.விஜய்கிட்ட அசிஸ்டென்டா வேலைபார்க்கணும்’னு சொன்னார். விஜய்கிட்ட கேட்டேன், 'நாளைக்கே வரச் சொல்லுங்க சார்’னு சொல்லி, லட்டு மாதிரி சேர்த்துக்கிட்டார்; ராஜா மாதிரி பார்த்துக்கிறார்.
கீர்த்தனா எங்க எல்லோரையும் இலகுவா ஹேண்டில் பண்ணிடுவாங்க. அவங்க அம்மாவுக்கும் எங்க அம்மாவுக்கும் மட்டும் இல்லை... எனக்கும் ராக்கிக்கும்கூட அம்மாவா மாறி அவங்களுக்கு அன்பைப் பரிமாறத் தெரியும். அவங்க இப்ப மணிரத்னம் சாரின் உதவி இயக்குநர். கீர்த்தனாவை 'கடல்’ படத்துல நடிக்கக் கூப்பிட்டார் மணி சார். 'நான் உங்களை ஷூட்டிங்ல பார்ப்பேன். அந்த ஆளுமை, இயக்குநர்ங்கிற அங்கீகாரம், மரியாதை, பெருமை... இதுதான் எனக்கு வேணும். நான் உங்களை மாதிரி இருக்கணும். ஏன் யாரோ சொல்லிக்கொடுத்து நடிக்கணும்... அது மணிரத்னமா இருந்தாலும்கூட? நான் ஏன் மணிரத்னம்போல வரக் கூடாது?’னு சொல்லியிருக்காங்க. 'உன் பதில் ரொம்ப நல்லாருக்கு’னு எப்பவும்போல 35 பைசா அளவுக்கு, ஒரு சிரிப்பு சிரிச்சிட்டுப் போயிருக்கார் மணி சார்.
அபிநயா அவங்க அம்மாகூட இருக்காங்க. ஆனா, என்னை எப்ப சந்திச்சாலும் அஞ்சு வயசுக் குழந்தையாகிடுவாங்க. கட்டிப்பிடிச்சு, முத்தம் கொடுத்து... அப்பிடியே எடைக்கு எடை பாசம். 'கதை திரைக்கதை வசனம் இயக்கம்’ படத்துல என்கூட டிஸ்கஷன்ல இருந்தாங்க. இப்ப என் அடுத்த படத்தோட அசிஸ்டென்ட் டைரக்டர்.
குழந்தைகள் வளர்ந்த பிறகு அவங்களுக்குனு ஒரு வாழ்க்கை இருக்கு; தனியா ஒரு வானம் இருக்கு. எனக்குப் பிறகும் அவங்களுக்கு ஒரு வாழ்க்கை இருக்கு. அந்த வாழ்க்கைக்கு பழக்கணும்னு நினைச்சு எடுத்ததுதான் இந்தப் பிரிவு. வாரத்துல ஒரு நாள், ரெண்டு நாள் சந்திச்சு சந்தோஷிக்கிறோம். கீர்த்தனாவும் நானும் சந்திக்கிறதே அநேகமா முச்சந்தியா இருக்கு. நட்டநடு வீதியில எங்கோ ஒரு சிக்னல்ல வண்டியை ஓரம் நிறுத்திட்டு உச்சிமோந்து அப்படியே கிளம்பிட்டு இருக்கோம்.
சமீபத்துல என் நண்பர் கோபிக்கு, 'கால் மீ சார்’னு மெசேஜ் அனுப்பினேன். அதுக்கு அவர், 'டோன்ட் கால் மீ 'சார்’ ’னு ரிப்ளை பண்ணியிருந்தார். 'ஏன் சார்?’னு கேட்டேன். அப்பதான் 'சார்’ங்கிற வார்த்தைக்கான அர்த்தம் புரிஞ்சது. அதாவது ‘slave i remain - உங்களுக்கு அடிமையாக இருக்கவே விருப்பம்’ என்று அர்த்தமாம். ஆனால், நான் என் மூணு குழந்தைகளுக்கும் எப்பவும் 'சார்’ ஆக இருக்கவே விருப்பம்!'' - பாசம் கண்களில் தளும்புகிறது பார்த்திபனுக்கு!