Showing posts with label சாம்ப்ளிங் முறை. Show all posts
Showing posts with label சாம்ப்ளிங் முறை. Show all posts

Wednesday, February 19, 2014

குத்துமதிப்பு குருசாமிகள் கவனத்திற்கு

கருத்துக் கணிப்புகள் பொய்யாவது ஏன்?

வாக்காளர்கள் மத்தியில் ஒரு கருத்தைத் திணிக்கவே கருத்துக் கணிப்புகள் பயன்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளைச் சமீப காலமாக அதிக அளவில் கேட்கிறோம். பொதுமக்களுக்கு இந்தத் தேர்தல் கணிப்புகளெல்லாம் பரபரப்புச் செய்திகள்தானே தவிர, வேறெதுவும் இல்லை. ஏனெனில், பெரும்பாலான கருத்துக் கணிப்புகள் உண்மை நிலையைப் படம்பிடிப்பதில்லை. 


கருத்துக் கணிப்புக்கும் தேர்தல் முடிவுகளுக்கும் பல சமயங்களில் சம்பந்தம் இல்லாமல் இருப்பதுதான் மக்களின் ஈடுபாட்டின்மைக்குக் காரணம். இதெல்லாம் ஒருபுறம் இருக்கட்டும்... இந்தக் கருத்துக் கணிப்புகளுக்குப் பின்னுள்ள கணிதம் என்ன என்பதையும், கருத்துக் கணிப்புகள் நம்புவதற்கு ஏன் சிரமமாக இருக்கின்றன என்பதையும் கொஞ்சம் பார்க்கலாமா? 


ஒரு சோறு பதம்

 
கருத்துக் கணிப்பு என்பது ஒரு கணிப்பு மட்டும்தான். ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களில் ஒருசிலரிடம் மட்டும் கருத்துகளைக் கேட்டு, அந்தத் தொகுதியில் யார் வெற்றிபெறக்கூடும் என்று கணக்கிடுவதுதான் இதன் அடிப்படை. ஒருசிலரிடம் மட்டும் கருத்து கேட்கும் இந்த சாம்பிளிங் முறைதான் முதல் பிரச்சினை. ‘ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்’ என்பது சாம்பிளிங் தத்துவத்தின் அடிப்படை. 


அதாவது, ஒரு பானையில் உள்ள எல்லாச் சோற்றையும் எடுத்துப் பார்த்து, சோறு வெந்திருக்கிறதா என்று பார்க்க வேண்டிய அவசியமில்லை. நல்லது. ஆனால், பானையில் உள்ளது எல்லாம் ஒரே விதமான தானியமாக இருந்தால் ‘ஒரு சோறு பதம் பார்ப்பது’ சரியே. பானையில் அரிசி, கோதுமை, உளுந்து, கம்பு, கேழ்வரகு என்று பலவாக இருந்தால், ஒரு சோற்றைப் பார்த்துப் பதம் சொல்ல முடியுமா? இதுதான் தேர்தல் கருத்துக் கணிப்பிலும் உள்ள சாம்பிளிங் பிரச்சினை. 


ஒரு தொகுதியில் உள்ள வாக்காளர்களின் வயது, வேலை, சாதி, சமூகச் சூழல், இருப்பிடம், கல்வி, அரசியல் சிந்தனை, அரசியல் சார்பு நிலை என்ற பல விஷயங்கள் அவர்களுடைய வாக்குகளைத் தீர்மானிக்கும். எனவே, ஒரு தொகுதியில் ஒரு சாம்பிள் எடுக்க வேண்டும் என்றால், மேலே சொன்ன வகைகளில் ஒவ்வொன்றிலும் ஒரு சிலரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். 


இதில் ஒவ்வொரு வகையிலும் எல்லோரும் வாக்களிக்க மாட்டார்கள். மேல்தட்டு மக்கள் வாக்களிக்கும் சதவீதம் குறைவாக இருந்தால், சாம்பிளில் அவர்கள் குறைவான எண்ணிக்கையில் இருக்க வேண்டும். இதுபோன்ற நடைமுறைகளையெல்லாம் பின்பற்றாமல், கண்ணில் படுபவர்களிடம் எல்லாம் கருத்து கேட்டால், அது சரியான சாம்பிளாக இருக்காது. எனவே, கருத்துக் கணிப்பில் முதல் கோணல், சாம்பிளிங் தவறுகள்தான். 


உண்மையும் பொய்யும்

 
இரண்டாவது பிரச்சினை, கருத்து கேட்பது. நாம் கேட்பது ஒன்றாகவும், அதனைப் புரிந்துகொண்டு பதில் அளிப்பது வேறாகவும் இருப்பது மற்றுமொரு பிரச்சினை. நீங்கள் யாருக்கு வாக்களிப்பீர்கள் என்று கேட்டால், அதற்கு எல்லோரும் உண்மையைக் கூறுவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. இதில் கணிசமானவர்கள் பொய் கூறினால், கருத்துக் கணிப்பே தவறாகிவிடும். 


சில நேரங்களில் கேட்கப்படும் கேள்வியே தவறாகப் புரிந்துகொள்ளப்படும். உதாரணமாக, ‘யார் வெற்றிபெறக்கூடும்?’ என்ற கேள்விக்கு, தங்களுடைய அபிமான வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளது என்று அவர்கள் பதிலளித்தால், கருத்துக் கணிப்பு தவறாகிவிடும். இதுபோன்ற தவறுகளை ‘நான்சாம்பிளிங்’ தவறுகள் என்பார்கள். 


சிக்கலான கணிதம்

 
அடுத்த பிரச்சினை, கருத்துக் கணிப்பில் ஒவ்வொரு கட்சிக்கும் கிடைத்த வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றுவது. பொதுவாக, ஒரு மாநிலம் முழுக்கக் கருத்துக் கணிப்பு நடத்தப்படும். இதில் சாம்பிளிங் அளவு குறைவாக இருப்பதால், ஒவ்வொரு தொகுதியிலிருந்தும் எடுக்கப்பட்ட சாம்பிள் அளவு மிகமிகக் குறைவாக இருக்கும். 


எனவே, ஒவ்வொரு தொகுதியிலும் யார் வெற்றிபெறுவார்கள் என்பதைக் கணிப்பதற்குப் பதில், மாநிலத்தில் எந்தக் கட்சிக்கு அல்லது கூட்டணிக்கு அதிக இடங்கள் கிடைக்கும் என்று கணிப்பதுதான் வழக்கம். 



ஒவ்வொரு கட்சிக்கும் கிடைக்கும் வாக்குகளை எப்படி மக்களவை அல்லது சட்டமன்றச் சீட்டுகளாகக் கணக்கிடுவது? ஒரு தேர்தலில் இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே இருந்தால், எவரொருவர் 50%-க்கும் அதிகமாக வாக்குகளை வாங்குகிறாரோ, அவரே தேர்ந்தெடுக்கப்படுவார். இரண்டுக்கும் மேல் வேட்பாளர்கள் இருந்தால், வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றுவது கடினமாகிறது. 


மூன்று வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் உள்ளனர் என்று வைத்துக்கொள்வோம், மூவருமே சமமான பலத்துடன் இருந்தால், எவரொருவர் 33.3% மேல் வாக்குகளைப் பெறுகிறார்களோ, அவரே வெற்றி பெறுவார். ஆனால், ஒருவர் 10% வாக்குகளைப் பெற்றால் மற்ற இருவரில் யார் 45%விட அதிகமாகப் பெறுகிறாரோ அவர் வெற்றிபெறுவார். எனவே, ஒருவருடைய பலம் மாறமாற யார் எவ்வளவு வாக்குகளைப் பெறுவார், யார் வெற்றிபெறுவார் என்று கணிப்பது கடினம்தான். 


இதுவே, வேட்பாளரின் எண்ணிக்கை அல்லது கூட்டணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றும் கணிதம் கடினமாகிறது. 


ஒரு தேர்தலில் பல வேட்பாளர்கள் இருக்கும்போது, அதில் முனைப்பாக எவ்வளவு வேட்பாளர்கள் உள்ளனர் என்பதைக் கண்டறிய வேண்டும். இதற்கு ஒரு கணித சூத்திரம் உண்டு. உதாரணமாக, 10 வேட்பாளர்கள் உள்ள தொகுதியில், இருவர் 45%, மற்றும் 40% வாக்குகளையும் மற்ற எட்டு வேட்பாளர்களும் சேர்ந்து 5% வாக்குகளையும் பெற்றால், இதில் இரண்டு அல்லது மும்முனைப் போட்டி உள்ளது. 


இதுபோல் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போதும், அதில் ஒரு சிலர் மட்டும் அதிக வாக்குகளையும், வேறு பலர் குறைந்த வாக்குகளையும் வாங்கும்போது, எத்தனை முனைப் போட்டி என்று கணிப்பது சற்று சிரமம்தான். இது உறுதியாகத் தெரிந்தால்தான், கருத்துக் கணிப்பில் கிடைத்த வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றிப் பார்க்க முடியும். 



அதேபோல் மற்றொரு சிரமமும் உண்டு. ஒரு தொகுதியில் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, வெற்றி பெறுவதற்குத் தேவைப்படும் வாக்குகளின் எண்ணிக்கை குறையும். ஆனால், எவ்வளவு குறையும் என்பது தெரியாது. மேலே உள்ள உதாரணத்தில், மும்முனைப் போட்டியில், மூவரும் சமமான பலத்துடன் இருந்தால் 33.3% விடச் சற்று அதிக வாக்குகள் பெற்றால் போதும்; ஒருவர் சற்றுக் குறைந்த பலத்துடனும், மற்ற இருவர் சமமான பலத்துடனும் இருந்தால், வெற்றிபெற 33.3% விட மிக அதிகமான வாக்குகள் தேவை. 



ஒவ்வொரு தொகுதியிலும் பலர் போட்டியிட்டாலும், ஒவ்வொரு மாநிலத்திலும் ஒரு சில கூட்டணிகள் மட்டுமே பிரதானமாக இருப்பதால், சில அனுமானங்கள் அடிப்படையில் கருத்துக் கணிப்பில் பெற்ற வாக்குகளை ஒவ்வொரு கூட்டணியும் பெறும் பிரதிநிதித்துவ இடங்களாகக் கணக்கிட முடியும். ஆனால், பிரதானக் கூட்டணிகளைக் கண்டறிந்தாலும், ஒவ்வொரு தொகுதியிலும் கூட்டணியில் இல்லாத சில சிறிய வேட்பாளர்கள் மற்ற பெரிய வேட்பாளர்களைவிட அதிக வாக்குகள் வாங்கி, நமது கணக்குகளை எல்லாம் பொய்யாக்கிவிட முடியும். 



2009-ம் ஆண்டு பொதுத்தேர்தலில், தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கூட்டணிகளில் இருந்த கட்சிகளைவிடச் சிறிய கட்சியாக இருந்தாலும், தே.மு.தி.க. தமிழக அரசியலில் குறிப்பிடத் தக்க மாற்றங்களுக்கு வழிவகுத்ததை நாம் நினைவில் கொள்ள வேண்டும். 


ஆக, சாம்பிளிங் குழப்பங்கள், நான்சாம்பிளிங் தவறுகள், வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றும் கணிதக் குழப்பங்கள் எல்லாம் சேர்ந்து, கருத்துக் கணிப்பின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும். இதையெல்லாம் மீறிக் கருத்துக் கணிப்பின்படியே தேர்தல் முடிவுகளும் இருந்தால், அது மகா அதிசயம்தான்! 


- இராம. சீனுவாசன், இணை பேராசிரியர்,

சென்னைப் பல்கலைக்கழகம்,

தொடர்புக்கு: [email protected]
 
 
நன்றி - த ஹிந்து
 
 
Thillai Arasu Professor&Head/Chemistry at Kalasalingam University
சாம்பிளிங் குழப்பங்கள், நான்சாம்பிளிங் தவறுகள், வாக்குகளைச் சீட்டுகளாக மாற்றும் கணிதக் குழப்பங்கள் எல்லாம் சேர்ந்து, கருத்துக் கணிப்பின் நம்பகத்தன்மையைக் குறைத்துவிடும். இதையெல்லாம் மீறிக் கருத்துக் கணிப்பின்படியே தேர்தல் முடிவுகளும் இருந்தால், அது மகா அதிசயம்தான்! -- முற்றிலும் உண்மையா
a day ago ·   (2) ·   (1) ·  reply (0) Prassannasundhar
கருத்துக் கணிப்பு... எனக்கு வந்தா ரத்தம்... உனக்கு வந்தா தக்காளிச் சட்னி...