Showing posts with label சாதிக் பாட்சா. Show all posts
Showing posts with label சாதிக் பாட்சா. Show all posts

Wednesday, June 01, 2011

ஆ ராசாவுக்கு அடுத்த ஆப்பு,சாதிக்பாட்சா போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட் கிளப்பும் மர்ம முடிச்சுக்கள் -ஜூ வி கட்டுரை

http://www.vanakkamindia.com/wp-content/uploads/2010/11/a-raja-res.jpg 
 
''சாதிக் பாட்சா சாகடிக்கப்பட்டார்!''

கைதாகும் ஆ.ராசாவின் நண்பர்கள்

'ஸ்பெக்ட்ரம்’ ஆ.ராசாவின் நண்பரும் க்ரீன் ஹவுஸ் புரமோட்​டர்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருமான சாதிக் பாட்சா கடந்த மார்ச் 16-ம் தேதி, யாரும் எதிர்பாராத சூழலில், மர்ம மரணம் அடைந்தார்! 

டெல்லிக்குக் கிளம்பிப் போய்,அப்ரூவர் ஆக இருந்த சாதிக் பாட்சா திடீரென இறந்துபோன பின்னணி என்ன? திட்ட​மிட்டுக் கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்துகொள்ள யாரும் தூண்​டினார்களா? என்று பல்வேறு வினாக்களைத் தொடர்ந்து எழுப்பி வந்தோம். உண்மையைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் இப்போது சி.பி.ஐ. இறங்கிவிட்டது. சாதிக் பாட்சா மரணம் குறித்த மர்மத்தைக் கடந்த இரண்டு மாதங்களாகவே கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் இருக்கிறார்கள் சி.பி.ஐ-யின் எஸ்.பி-யான செங்கதிர் மற்றும் டி.எஸ்.பி. சுரேந்திரன்.

சாதிக்கைக் கடைசியாகச் சந்தித்த நபர்களில் போலீஸ்  உயர் அதிகாரி ஒருவரும் பால்ய கால நண்பர் ஒருவரும் அடக்கம். ஆனால், அவர்களை சி.பி.ஐ. இன்னமும் நெருங்கவில்லை. சாதிக்குடன் நெருக்கமாகப் பழகிய சிலரை நேரில் வரவழைக்கும் சி.பி.ஐ. அதிகாரிகள், முதலில் அன்பாகவும், பிறகு அவர்களுக்கே உரிய ஸ்பெஷல் கவனிப்பும் கொடுத்துத் தகவல் கறந்து வருகிறார்கள். 

இது தவிர, சாதிக் பாட்சாவின் உடலை போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் கொடுத்த இறுதி அறிக்கையில், 'டெத் ட்யூ டு நெக் கம்ப்ரெஷன்' என்று குறிப்பிட்டுள்​ளார். அந்த அறிக்கையை முழுவதும் படித்துப் பார்த்த சி.பி.ஐ. அதிகாரிகளுக்கு நிறையவே கேள்விகள் எழுந்தன.

அதனால், அவர்களுக்கு எழுந்த டெக்னிக்கல் சந்தேகங்களை எல்லாம் கேள்விகளாகக் கேட்டு, டாக்டரிடம் கொடுத்துப் பதில் கேட்டு இருக்கிறார்கள் என்பதும் இந்த விவகாரத்தின் லேட்டஸ்ட் நிலவரம்!

இதுகுறித்து போலீஸ் வட்டாரத்தில் நாம் விசாரித்தோம். ''சாதிக் பாட்சா, திட்டமிட்டுக் கொல்லப்பட்டு இருக்க வேண்டும். சி.பி.ஐ. மற்றும் சென்னை போலீஸ் வட்டாரத்தில் 'நெக் கம்ப்ரஷன்' என்றால் என்ன என்பதுபற்றி பெரிய பட்டிமன்றமே நடக்கிறது. ஏனென்றால், அதற்குப் பல அர்த்தங்கள் உண்டு. எங்களைப் பொறுத்த வரை சம்பவம் நடந்த அன்று, அவரை நேரில் சந்தித்த மர்ம ஆசாமிகள் மிரட்டியோ, சமாதானமோ பேசி இருக்க வேண்டும். 

அப்போது, பேச்சுவார்த்தையில் பிரச்னை ஏற்பட்டு இருக்கலாம். அதனால், சாதிக் முரண்டுபிடிக்க, அவரது கழுத்தில் மர்ம ஆசாமிகளில் ஒருவர் கைகளை வைத்து அழுத்தி இருக்க வேண்டும். அல்லது, துணியால் கழுத்தை இறுக்கியிருந்தாலும் உட்புறம் காயம் ஏற்படும். சாதிக்கின் கழுத்தில் ஏற்பட்டதிடீர் அழுத்தத்தின் காரணமாக, மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டம் பாதிக்கப்பட்டு, உடனே அவர் மயங்கி விழுந்து இருக்க வேண்டும்.

ஆனால், வந்த ஆசாமிகள் சாதிக் இறந்துவிட்டதாக நினைத்துப் பயந்து, மறு நிமிடமே உயிருடன் இருந்தவரை தூக்கில் மாட்டி இருக்க வேண்டும். ஏனென்றால், கழுத்து இறுகி மூச்சுத்திணறல் ஏற்பட்டுத்தான் இறந்துபோயிருக்கிறார் என்பது தெளிவாக அந்தக் குறிப்பில் உள்ளது. இதற்கு மேல் இந்த விவகாரத்தை சி.பி.ஐ. அதிகாரிகள் எப்படி கொண்டுசெல்லப் போகிறார்கள் என்பது இன்னமும் சஸ்பென்ஸாகவே இருக்கிறது...'' என்கிறார்கள்.    

மார்ச் 17-ம் தேதி, சாதிக் உடலைப் பரிசோதனை செய்த ராயப்பேட்டை மருத்துவமனை தடயவியல் பிரிவு டாக்டர் டிகால், 'இறந்தவரின் உடலில், கழுத்தில் கயிறு இறுக்கப்பட்ட
தழும்பு, சிராய்ப்பைத் தவிர, வேறு எந்த காயங்களும் இல்லை. அவர், மூச்சுத் திணறல் ஏற்பட்டுத்தான் இறந்துபோயிருக்கிறார்.

ஆனால், மூச்சுத் திணறலுக்குக் காரணம் தூக்கு போட்டதால்தான் ஏற்பட்டதா என்பதை அறிய, கழுத்துப் பகுதியின் உட்புறத்தில் உள்ள சதைகளை,  நோய்க்கூறு இயல் ஆய்வுக்கு (பேத்தாலஜி) அனுப்பி உள்ளோம். அந்த முடிவு வந்த பின்புதான், தீர்க்கமாக எதையும் சொல்ல முடியும். மைக்ரோஸ்கோப் மூலம் செய்யப்படும் இந்த ஆய்வில், உயிரோடு இருந்தபோது தூக்கில் தொங்கினாரா, அல்லது இறந்த பின் நடந்ததா என்பது தெரியும். இப்போதைக்கு வேறு எதுவும் சொல்ல முடியாது!' என்றார்.

போஸ்ட்மார்ட்டம் செய்த டாக்டர் குழுவினரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் தரப்பில் பல்வேறு கேள்விகள் வைக்கப்பட்டன. அதில் முதல் கேள்வியே திடுக் ரகமாக உள்ளது. 

1. ''போஸ்ட்மார்ட்டம் ஆரம்பிக்கும் முன்பு, அதை உடனே தொடங்காமல் கால தாமதம் செய்யும்படி மருத்துவ இயக்குநரக உயர் அதிகாரி உங்களுக்குச் சொன்னாரா? 'வெளியில் இருந்து வேறு ஒரு டாக்டரை அனுப்புகிறோம். அதுவரை காத்திருக்கவும்’ என்று உத்தரவு வந்ததா?'

 2/ ''பேத்தாலஜி ரிப்போர்ட் உட்பட, பல்வேறு ஆய்வு முடிவுகள் வந்து சேர்ந்து ஒரு மாதத்துக்கு மேல் ஆகிவிட்டது. பிரேதப் பரிசோதனை குறித்த ஃபைனல் ரிப்போர்ட்டை எங்களுக்கு மிகவும் தாமதமாகத் தந்து இருக்கிறீர்கள். இடையில் சட்டசபைத் தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. அந்த நேரத்தில் ரிப்போர்ட் வெளியானால் அது தேர்தலைப் பாதிக்கும் என்று கருதி, ஃபைனல் ரிப்போர்ட்டை முடக்கிவைக்கும்படி யாராவது மிரட்டினார்களா?'' என்று கேட்டதாம் சி.பி.ஐ.

3. ''கழுத்து இறுக்கப்பட்டதால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு அதனால் சாதிக் இறந்திருக்கக்​கூடும் என்று இறுதி அறிக்கையில் சொல்லி இருக்​கிறீர்கள். ஆனால், இறுதி அறிக்கை வெளியிடும் முன்பு, ராயப்பேட்டை மருத்துவமனையின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர், அதாவது முன்னாள்  அமைச்சர் ஒருவரின் மிக நெருங்கிய உறவினர் ஒருவர் உங்களை இது சம்பந்தமாகத் தொடர்புகொண்டு பேசினாரா?''

இதே கோணத்தில் டாக்டர் டிகாலிடமும், பேத்தாலஜி ரிப்போர்ட்டில் குறிப்பிட்டுள்ளது தொடர்பான நுணுக்க​மான விளங்கங்களை, சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை மருத்துவக் கல்லூரியின் பிரபலத் தடய அறிவியல் துறை டாக்டர் சாந்தகுமாரிடமும் கேட்டுத் தெரிந்துகொண்டார்களாம்.

சி.பி.ஐ. கேட்ட கேள்விகள் குறித்துப் பேசும் போலீஸ்​காரர்கள், ''டாக்டர் டிகாலைப் பொறுத்தவரையில், இந்த விவகாரத்தில் பல கசப்பான அனுபவங்களைச் சந்தித்து இருக்கிறார். அதனால், யாருடனும் அவர் இப்போது பேசுவதே இல்லை. மௌனமாகவே நடமாடுகிறார். உயர் அதிகாரி, போன் மூலம் கால தாமதம் செய்யுமாறு டிகாலிடம் கேட்டுக் கொண்டது வாஸ்தவம்​தான் என்று முதல் கேள்விக்கு விடை சொன்னார்கள்.

இரண்டாவது கேள்விக்கு வருவோம். சாதிக்கின் பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தயார் செய்யும் விஷயத்தில், டாக்டர் டிகாலுக்கும் உயர் அதிகாரிகளுக்கும் இடையே பெரிய மோதல் வெடித்தது. 'என்னை மட்டும் ஏன் ஃபைனல் ரிப்போர்ட் தரச் சொல்கிறீர்கள்? குழுவாகத்தானே பிரேதப் பரிசோதனை செய்தோம்? எல்லாரும் கையெழுத்து இட்டுப் பதில் சொல்வோம்' என்று இவர் சொல்லி இருக்கிறார். ஆனால் உயர் அதிகாரிகள் அவர் சொன்னதை ஏற்றுக்கொள்ளாமல், 'நீங்கள் மட்டும்தான் தர வேண்டும். மற்றவர்களைக் கூட்டு சேர்க்காதீர்கள்' என்று கோபமானார்களாம். அதனால், மோதலிலேயே ஒரு மாதம் கழிந்துவிட்டது. கடைசியில், வேறு வழி இல்லாமல், டாக்டர் டிகால் மட்டும் ஃபைனல் ரிப்போர்ட்டைக் கொடுத்தார்.


இந்த விஷயத்தில் டிகால் சந்தித்த டார்ச்சர்கள் அதிகம்தான். ராயப்பேட்டை மருத்துவமனையில், அவர் வேலை செய்வது தற்காலிகப் பணிதான். அதை அவர் வேண்டாம் என்று ராஜினாமா செய்து கடிதம் அனுப்பிவிட்டார். போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும் நிருபர்களுக்குப் பேட்டி கொடுத்தது, மதுரவாயல் சட்டமன்றத் தொகுதியில் வேட்பாளராகப் போட்டியிட முயன்றதுபோன்ற சில காரணங்களைக் காட்டி, அவருக்கு மெமோ கொடுத்து இருக்கிறார்கள்.

அந்த மெமோவைக் காரணம் காட்டியே, அவரது ராஜினாமா கடிதத்தையும் ஏற்றுக்கொள்ளாமல் நிறுத்திவைத்தனர். அதனால், வேறு வேலைக்கும் செல்ல முடியாமல் நட்டாற்றில் நிற்கிறார் டிகால்!'' என்றார்கள்.  

சாதிக் பாட்சா விவகாரம் கொலையாக இருக்கும்பட்​சத்தில், நீதிமன்றத்துக்கு டிகால் வந்து பதில் சொல்ல வேண்டி இருக்கும். கொலைகாரர்கள் தீவிரமாகத் தேடப்பட்டு... சிறைக்குள் தள்ளப்படுவார்கள். ஒருவேளை, தற்கொலை என்று சி.பி.ஐ. முடிவுக்கு வரும் என்றாலும், அதற்குத் தூண்டுதலாக இருந்த வி.ஐ.பி-களைக் கைது செய்து குற்றவாளியாக நிறுத்த முடியும்.''சாதிக் பாட்சா சில மிரட்டல் மனிதர்கள் மூலமாக சாகடிக்கப்பட்டார் என்று சொல்வதற்கான ஆதாரங்களை நோக்கி சி.பி.ஐ. நகர்ந்துவிட்டது.

அது பலமான சாட்சியாக மாறும் போது ஆ.ராசாவின் நண்பர்கள் சுற்றி வளைக்கப்படுவார்கள்!'' என்று தமிழகப் போலீஸ் உயர் அதிகாரிகள் வட்டாரம் சொல்ல ஆரம்பித்துள்ளது.

சி.பி.ஐ. கையில் தான் எல்லாமே இருக்கிறது!