Showing posts with label சாக்லேட் கிருஷ்ணா’ -கமலும் கிரேசி மோகனும். Show all posts
Showing posts with label சாக்லேட் கிருஷ்ணா’ -கமலும் கிரேசி மோகனும். Show all posts

Saturday, December 06, 2014

சாக்லேட் கிருஷ்ணா’ -கமலும் கிரேசி மோகனும் -கிரேசியைக் கேளுங்கள் 11

‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தை பாராட்டி கமல்ஹாசன், ரமேஷ் ரங்கராஜன் முன்னிலையில் கிரேசி மோகனுக்கு ‘கண்ணன்’ ஓவியத்தை பரிசளிக்கும் ‘ஹிண்டு’ கேசவ். உடன் நித்யஸ்ரீ, அனுஹாசன்,
‘சாக்லேட் கிருஷ்ணா’ நாடகத்தை பாராட்டி கமல்ஹாசன், ரமேஷ் ரங்கராஜன் முன்னிலையில் கிரேசி மோகனுக்கு ‘கண்ணன்’ ஓவியத்தை பரிசளிக்கும் ‘ஹிண்டு’ கேசவ். உடன் நித்யஸ்ரீ, அனுஹாசன், 
 
 
க.குமரேசன், திருவாரூர்.
உங்களுக்குக் கிடைத்த பரிசுகளில் நீங்கள் பொக்கிஷமாகக் கருதுவது எது, ஏன்?


 
என்னுடைய நாடகமான ‘சாக்லேட் கிருஷ்ணா’ 150-வது காட்சியின்போது ‘ஹிண்டு’கேசவ் எனக்கு மேடையில் அளித்த ‘சாக்லேட் கிருஷ்ணா’ ஓவியம்தான் அது. கடந்த ஆறு வருஷங்களாக, தின மும் காலை எழுந்தவுடன் எனது காலை வேலை கேசவ் கணினியில் அனுப்பும் ‘கண்ணன்’ஓவியத்துக்கு வெண்பா எழுதுவதுதான். இந்தப் பக்திப் பரிச்சயத்தால், எனது 


150-வது நாடகத்துக்கு வரும்படி அந்த ஓவிய மேதையை நான் அழைத் தேன். அவர் ‘ரெண்டரைக்கு ரெண்டு’ பிரம்மாண்டமான சைஸில், கண்ணனின் பாலபிஷேகம் ‘காரமெல்’ சாக்லேட் ஆவது போல், ஓவியம் தீட்டி கமல் சார் முன்னிலையில் பலத்த கரகோஷத் துக்கு இடையே எனக்குக் கொடுத்தார். என் நாடகத்துக்குக் கூட அவ்வளவு கைத்தட்டல் இல்லை. ஆனந்தத்தில் என் கண்களில் ‘ஆயில் பெயின்ட்’வழிந்தது. 


ஓவிய மேதை ‘கோபுலு சார்’ கேசவ்க்கு ‘கிருஷ்ணப் பிரேமி’என்கிற பட்டத்தைக் கொடுத்தார். என்னைப் பொறுத்தவரை கேசவ் ‘Breshனப் பிரேமி’. கேட்டவுடன் கவிதை தந்தால் ‘ஆசுகவி’ என்பார்கள். சீக்கிரம் சித்திரம் வரைவதில் கேசவ் ஒரு ‘ஆசுகவி ஓவியன்’! 


ஏழைக்கேத்த எள்ளுருண்டையாய் என்னால் முடிந்தது, ரெண்டரை அடி ஓவியத்துக்கு நாலடியில் வெண்பா எழுதிக் கொடுத்ததுதான். 



கண்ணனுக்கு வெண்(ணெய்)பா!
‘வாக்கிலெட்டா கண்ணனை வண்ணக் குளிப்பாட்டி
சாக்லேட் ஆக்கினாய் கேசவ்நீ - பாக்குளிட்டு
பாலா பிஷேகப் பரவசத்தை சொன்னயிது
நாலா யிரத்தி லொண்ணு’ 


 
கோமதி நமச்சிவாயம், திருநெல்வேலி.
நெருக்கடி, கொசுக்கடி… என்ன வித்தியாசம்?
கொசுக்கடின்னா… மலேரியா. நெருக்கடின்னா… நம்ம ஏரியா! 



டாக்டரிடம் நீங்கள் பொய் சொன்னது உண்டா?
எனக்கு இளமை ஊஞ்சலாடிய 35 வருடங்களுக்கு முன்பு, பெங்களூரில் நாடகம் போடச் செல்லும்போதெல்லாம், சவுடையா ஹாலில் மாலை 4 மணியில் இருந்து ஒரு டாக்டர், நான் வரும் வரையில் பேஷண்டாக (பொறுமையாக) காத்திருப்பார்.‘பொய் சொன்ன வாய்க்கு போஜனம் கிடையாது’ என் பார்கள். இந்த டாக்டர் போஜனம் போட்டு, போஜனம் சாப்பிட்ட என் வாயால் பொய்யும் சொல்ல வைத்தவர். 



ஒருமுறை அவர் வீட்டுக்கு என்னை சாப்பிடக் கூப்பிட்டிருந்தார். அங்கு போனவுடன்தான் தெரிந்தது. ஐஸ்வர்யா ராய், தீபிகா படுகோன், ஹன்சிகா ரேஞ்சில் டாக்டருக்கு ஐந்து பெண்கள் என்று. அப்போது எனக்கு விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் பொய் சொல்லும் வயசு. 



‘‘நீங்க மெட்ராஸ் பாடியில் உள்ள சுந்தரம் கிளேட்டன் வேலைக்கு எப்படி போவீங்க’ என்று கேட்டு, அவருடைய பெண்களைப் பார்த்து பிளந்தபடி இருந்த என் வாயைக் கிண்டினார் டாக்டர். சைக்கிளில் குரங்கு பெடல் கூட போடத் தெரியாத அடியேன், அந்த தேவதைகளின் எதிரில் ‘நான் ஒரு ஹீரோ’என்று காட்டிக் கொள்ளும் அல்ப ஆசையில் ‘என்கிட்ட ஒரு புல்லட் மோட்டார் சைக்கிள் இருக்கு சார். அதை உதைச்சு ஸ்டார்ட் பண்ண அஞ்சாவது நிமிஷம்… நான் பாடியில இருப்பேன்’ என்று அள்ளிவிட்டேன். 



இது நான் அந்த ‘பஞ்ச பாண்டவி’களுக்காகச் சொன்ன பொய். அதற்கு அந்த டாக்டர், ‘ரொம்ப நல்லதாப் போச்சு. நான் என் பொண்ணுங்களோட காரில் சவுடையா ஹாலுக்குப் போறேன். நீங்க என் புல்லட்ல வந்துடுங்க’என்று என் கையில் தன்னுடைய புல்லட் சாவியைக் கொடுத்தார். கிக் ஸ்டார்ட், ஹேங் ஓவர் ஸ்டார்ட் எல்லாம் செய்து அதை கிளப்புவதற்குள், எனக்கு நுரை தள்ளிவிட்டது. ஸ்டார்ட் செய்த பிறகுதான் ‘எனக்கு புல்லட் ஓட்டத் தெரியாது’ என்கிற உண்மை என் பொய் சொன்ன மூளைக்கு எட்டியது. அப்புறம் டாக்டர் வீட்டில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் சவுடையா ஹாலுக்கு, அந்த பாழாய்ப் போன 250 கிலோ புல்லட்டை தள்ளிக் கொண்டே போனேன். 



‘பாடிக்கு அஞ்சே நிமிஷத்துல போவேன்னீங்க, பக்கத்துல இருக்குற இந்த சவுடையா ஹாலுக்கு வர… ஏன் ஒரு மணி நேரமாச்சு?’ என்று புல்லட் சைலன்ஸரால் காலில் ஏற்பட்ட என் வெந்த புண்ணில் டாக்டரின் ஐந்து பெண்களும் நக்கலாக சிரித்து தங்கள் விழி வேலைப் பாய்ச்சினார்கள். ‘என் ஃப்ரெண்ட் ஒருத்தனைப் பார்க்க மல்லேஸ்வரம் போனேன்’ என்றவுடன், கோரஸாக அந்தத் தேவதைகள் ‘இதானே சார்… மல்லேஸ்வரம்’ என்று சொல்லி, மேற்கொண்டும் என்னை படுத்தினார்கள். அன்று புரிந்து கொண்டேன், நூறாவது பொய்யை முதலிலேயே முடிவு செய்த பிறகே, முதல் பொய்யை சொல்ல வேண்டும் என்கிற பாடத்தை! 



திருமலை, பஹரைன்.
ஒரு குட்டிக் கதை சொல்லுங்களேன்?
இது ஜென் கதையல்ல... என் கதை. ஆன்மிக அனுபவம் பெற ஒருவன் இமயமலைக்குச் சென்றான். அங்கு ஒரு ஜென் துறவியைப் பார்த்தான். ‘குருவே எனக்கு வழி காட்டுங்கள்’என்று சிஷ்யன் வேண்ட ‘என்னைத் தொடர்ந்து வா’ என்றார் ஜென் குரு. ரொம்ப நேரம் நடந்த பிறகு, சிஷ்யன் நரகத்தைக் கண்டு திடுக்கிட்டு ‘குருவே! நீங்க ஜென் குரு இல்லையா?’ என்று கேட்க, பதிலுக்கு அந்த குரு பயங்கரமாக சிரித்துவிட்டு ‘முட்டாள்… நான் ZEN இல்லை. YAMAHAA என்றார். 




கே.சாந்தகுமாரி, காளியக்கவிளை.
சங்குக்கும் ஸாங்குக்கும் என்ன சார் வித்தியாசம்?
ஒப்பாரிக்கும் தாலாட்டுக்கும் உள்ள வித்தியாசம்தான்.
தாலாட்டு ஸாங்குன்னா… உறக்கம். ஆள் LATE சங்குன்னா… மீளா உறக்கம். வலம்புரி சங்கு, வேணுகான ஸாங்கு இரண்டையும் வித்தியாசம் பாராமல் ஏந்தியவன் யாதவ கண்ணன்! 



ராஜேஸ்வரி, விழுப்புரம்
பளிச் என்று புதுக்கவிதை ஒன்று?
‘ஆழாக்கு’ அரிசியில்லை
படி தாண்டினாள்
பத்தினி
மரக்காலோடு!



 
மா.கா.சிவகுமார், தஞ்சாவூர்.
தாய் தன் குழந்தைக்குப் பாடினால் தாலாட்டு. அதையே நாய் தன் குட்டிக்குப் பாடினால்?
‘வாலாட்டு’. ஆங்கிலத்தில் சொல்வதென்றால்… தாய் பாடினால் ‘லல்லபி’. அதையே நாய் பாடினால் ‘லொள்ளபி’. 



சியாமளா, சென்னை.
நீங்கள் ரசித்த ‘புத்திசாலி’த்தனமான ஒரு ஜோக்?
தண்டபாணி என்கிற ‘மக்கு’ பைய னிடம் ஆசிரியர் ‘BOOK’ என்பதற்கு ஸ்பெல்லிங் கேட்டார். தண்டபாணி
‘B... O... O... க்’ என்றான். அவன்தான் ‘தமிங்கிலீஷ்’ மொழியை முதன்முதலில் கண்டுபிடித்த ‘தமிங்கிலீஷ்’ அறிஞன்! 



ஜெய கல்யாணி, தூத்துக்குடி
கடவுள் முதலில் உலகைப் படைத்தபோது இருட்டாக இருந்ததா, வெளிச்சமாக இருந்ததா?
அது அந்த ‘இருட்டாம் போக்கு’ இறைவனுக்கே வெளிச்சம்! 



thanx- the hindu