Showing posts with label சமுத்திரகனி. Show all posts
Showing posts with label சமுத்திரகனி. Show all posts

Wednesday, November 12, 2014

சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’ படத்தின் வில்லன் இயக்குநர் சமுத்திரகனி பேட்டி

சமுத்திரகனி | படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி
சமுத்திரகனி | படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி 
புழுதி பறக்க உழுதுகொண்டிருக்கும் வயல், அதன் அருகே மலையடிவாரத்தில் ஒரு குடிசை. கண்களில் கோபம் கொப்பளிக்க தன் அடியாட்களுடன் வயலில் இறங்கி அந்தக் குடிசையை நோக்கி வீறுநடை போடுகிறார், சமுத்திரகனி. ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியெம் கேமராவுக்குள் பதிவாகும் இந்தக் காட்சியை, தானும் ஒரு ரசிகனாக மாறி இயக்கிக்கொண்டிருக்கிறார் இயக்குநர் பொன்ராம். 


மதுரை அழகர்கோயில் மலைச்சாரல் பகுதி யில் சமுத்திரகனி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சூரி நடிப்பில் உருவாகி வரும் ‘ரஜினி முருகன்’ படப்பிடிப்பில் பரபரப்பாக இருந்த சமுத்திரகனியை சந்தித்தோம்

.
சிவகார்த்திகேயனின் ‘ரஜினி முருகன்’, வெற்றிமாறன் இயக்கத்தில் ‘விசாரணை’ என்று 2 படங்களில் வில்லனாக நடித்துக்கொண்டிருக்கிறீர்களே? 


எல்லா கதாபாத்திரங்களுமே நல்ல கதாபாத்திரங்கள்தான். நாம அதை எப்படி எடுத்துக்கொள்கிறோம் என்பதுதான் முக்கி யம். ‘ரஜினி முருகன்’ படம் மாதிரி எனக்கு இன்னொரு கதை அமைவது கஷ்டம். அதே போல ‘விசாரணை’ கதையின் கோணமும் ரொம்பவே புதியது. இதுமாதிரியான வேடங் கள் வரும்போது நான் எதைப்பற்றியும் யோசிக் காமல் சம்மதித்து விடுகிறேன். 


உங்கள் இயக்கத்தில் உருவாகிவரும் ‘கிட்ணா’ படத்தில் நீங்கள் 5 விதமான மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாகக் கேள்விப்பட்டோம். இது உண்மையா? 


 
‘கிட்ணா’ படத்தில் நாயகனின் பெயர் கிருஷ்ணா. ஊர்ப்பக்கமெல்லாம் கிருஷ்ணாவை ‘கிட்ணா’ என்றுதான் அழைப்பார்கள். இது ஆடு மேய்ப்பவனின் கதை. மழைக்காலம், வெயில்காலம் என்று சூழலுக்கு தகுந்தமாதிரி இடம் விட்டு இடம் மாற வேண்டிய தொழில் அது. கிட்டத்தட்ட 40 ஆண்டுகால பயணம் இந்தப்படம். 1975ல் தொடங்கி 2010 ல் முடியும். இந்தப்படத்தில் நாயகனின் 28 வயதில் தொடங்கி 68 வயது வரைக்குமான காலகட்டம் வரைக்கும் காட்சியாக்கப்போகிறேன். 


இந்தக் கதாபாத்திரத்தில் நானே நடிக்கிறேன். இதற்காக வயதான கதாபாத்திரம் வரைக்கும் படமாக்க வேண்டும் என்பதால் ஐந்து விதமான கதாபாத்திரம் கதைக்கு அவசியமாகப்படுகிறது. இந்த காலகட்டத்துக்கு காத்திருந்து மற்ற நாயகர்கள் நடிக்க தயாராக இல்லை. அதனால் நானே நடிக்க முடிவெடுத்திருக்கிறேன். பிப்ரவரி முதல் தொடர்ந்து படப்பிடிப்பு இருக் கும். 2015 ம் ஆண்டின் இறுதி வரைக்கும் படப்பிடிப்பு நகரும். 



தனுஷ், சிவகார்த்திகேயன், தினேஷ் என்று இளம் நாயகர்களோடு எளிதாக ஒன்றிவிடுகிறீர்களே? 


 
அட்டகாசமான இளைஞர்கள் இன்று தமிழ் சினிமாவுக்குள் படை எடுத்து வருகிறார்கள். அப்படி வரும் புதியவர்களை நாம்தான் இருகரங்களை நீட்டி மனதார வர வேற்க வேண்டும். அவர்களோடு இணைந்து பயணிக்கவேண்டும். ‘அந்த காலத்தில் எல்லாம் அப்படி, இப்படி!’ என்று பேசிக் கொண்டிருப்பதில் எந்த பயனும் இல்லையே. 



தற்போதைய சினிமாக்களில் கதை திருட்டு அதிகமாக இருப்பதாக கூறப்படுகிறதே? 


 
என் விஷயத்தில் அதுமாதிரி எந்த நிகழ்வும் நடந்ததில்லை. அதனால் கதைத் திருட்டு பற்றி நான் ஏதும் கூற விரும்பவில்லை. 



இயக்குநர் சமுத்திரகனியை இனி அதிகம் பார்க்கமுடியாதா? 

 
தவிர்க்க முடியாத நண்பர்களுக்காக செய்யும் விஷயம், நடிப்பு. அதேநேரத்தில் இயக்குநராகவும் எனக்கு பல கனவுகள் இருக்கின்றன. ‘கிட்ணா’ படத்தைப்போல இன்னும் நான்கு, ஐந்து விஷயங்களை இங்கே சொல்ல வேண்டும் என்று மனதில் வைத்திருக்கிறேன். தொடர்ந்து அதன் வேலைகளும் நடந்துகொண்டே இருக்கும். 



நன்றி- த இந்து