கர்நாடக மாநிலத்தில் 1948 பிப்ரவரி 24-ம் தேதி பிறந்த ஜெயலலிதா, பெங்களூரு பிஷப் கார்டன் மேல்நிலைப் பள்ளியில் படித்தார். பின்னர் சென்னை சர்ச் பார்க் கான்வென்டில் படிப்பை தொடர்ந்த அவர், 1964-ம் ஆண்டு மெட்ரிக் தேர்வில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
கல்லூரியில் படிக்க மத்திய அரசின் கல்விச் சலுகை கிடைத்தபோதும் அதை மறுத்து திரையுலகில் நுழைந்தார். எம்ஜிஆர், சிவாஜி உள்ளிட்ட பல்வேறு நடிகர்களுடன் 127 படங்களில் நடித்தார். எம்ஜிஆரின் அறிவுரையை ஏற்று 1982-ல் அதிமுகவில் இணைந்தார். அதில் இருந்து அவரது அரசியல் பயணம் தொடங்கியது.
1983-ல் அதிமுக கொள்கை பரப்புச் செயலாளரானார். 1984-ல் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட ஜெயலலிதா, 1989 வரை பதவியில் இருந்தார். 1984-ம் ஆண்டு எம்ஜிஆர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்தபோது நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக வெற்றி பெற ஜெயலலிதாவின் சுற்றுப்பயணம் பெரிதும் உதவியது.
1987 டிசம்பரில் எம்ஜிஆர் இறந்த பிறகு அதிமுக இரண்டாக உடைந்தது. 1989-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் போடிநாயக்கனூர் சட்டப்பேரவைத் தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டப்பேரவையில் முதல் பெண் எதிர்க்கட்சி தலைவராக ஆனார். பின்னர், அதிமுகவை மீண்டும் ஒருங்கிணைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளராக 1989-ல் தேர்வானார். இரட்டை இலை சின்னமும் அதிமுகவுக்கு மீண்டும் கிடைத்தது.
1991-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 234-ல் 225 தொகுதிகளை அதிமுக கைப்பற்ற, முதல்முறை யாக முதல்வராக பதவியேற்றார் ஜெயலலிதா. 1996 சட்டப்பேரவை தேர்தலில் திமுகவிடம் ஆட்சியை பறிகொடுத்தார். 1998, 1999-ல் நடந்த மக்களவை தேர்தல்களில் அதிமுக கூட்டணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக ஜெயலலிதா இருந்தார். தொடர்ந்து 2001-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 132 தொகுதிகளை அதிமுக கைப்பற்றி 2-வது முறையாக முதல்வரானார்.
ஆனால், டான்சி வழக்கில் தண்டனை பெற்றதால் சில மாதங்களில் பதவியை இழந்தார். அந்த வழக்கில் மேல்முறையீடு செய்து விடுதலை ஆனதும், 2002-ல் மீண்டும் முதல்வரானார். அதன்பின் 2006-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் 69 தொகுதிகளை மட்டுமே அதிமுக கைப்பற்றியது. ஆனால், 2011 தேர்தலில் 152 தொகுதிகளில் வெற்றி பெற்று 4-வது முறையாக முதல்வரானார்.
இதற்கிடையே, சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை கிடைத்ததால் கடந்த ஆண்டில் ஜெயலலிதா பதவியை இழக்க நேர்ந்தது. அந்த வழக்கிலும் மேல்முறையீடு செய்து விடுதலையாகி தற்போது 5-வது முறையாக மீண்டும் முதல்வராகி யுள்ளார்
5-வது முறை முதல்வராகி கருணாநிதி சாதனையை சமன் செய்த ஜெயலலிதா
* தமிழகத்தில் 5 முறை முதல்வராக இருந்தவர் திமுக தலைவர் கருணாநிதி. நேற்று 5-வது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, கருணாநிதியின் சாதனையை சமன் செய்துள்ளார்.
* எம்ஜிஆர் மறைவுக்குப் பிறகு இரண்டாக பிளவுபட்ட அதிமுக, 1989-ம் ஆண்டு மீண்டும் ஒன்றிணைந்தது. கட்சியின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து 1991 சட்டப்பேரவை பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. முதல்முறையாக 1991 ஜூன் 24-ம் தேதி முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
* 1996 தேர்தலில் திமுக வசம் ஆட்சி மாறியது. 2001-ல் நடந்த தேர்தலில் மீண்டும் அதிமுக வெற்றி பெற்றது. 2001 மே 14-ம் தேதி ஜெயலலிதா 2-வது முறையாக முதல்வரானார். சில மாதங்களில் டான்சி வழக்கில் தண்டனை பெற்றதால் பதவியை இழந்தார். அப்போது ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். அதன்பிறகு வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட ஜெயலலிதா, ஆண்டிப்பட்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்று 2002 மார்ச் 2-ம் தேதி 3-வது முறையாக முதல்வராக பதவியேற்றார்.
* 2006-ல் ஆட்சியை திமுகவிடம் பறிகொடுத்த நிலையில், 2011-ல் நடந்த சட்டப்பேரவை பொதுத்தேர்தலில் 152 தொகுதிகளில் வென்று தனிப்பெரும்பான்மையுடன், மே 16-ம் தேதி 4-வது முறையாக முதல்வராக ஜெயலலிதா பதவியேற்றார்.
* கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பதவி இழந்த ஜெயலலிதா, மேல்முறையீட்டு வழக்கில் விடுதலை பெற்றார். இதையடுத்து நேற்று 5-வது முறையாக மீண்டும் தமிழக முதல்வர் பதவி ஏற்றுள்ளார்.
நன்றி - த இந்து