Showing posts with label சங்கர் விலாஸ். Show all posts
Showing posts with label சங்கர் விலாஸ். Show all posts

Sunday, May 01, 2011

திருச்சி சாப்பாட்டுக்கடை


''டியர் மிஸ்டர் பிஸினஸ்மேன்...''

சங்கரன் போட்ட தப்புக் கணக்கு!
சங்கரன் முடிவு செய்து விட்டார். 'இனிமேல் சமையல் கான்ட்ராக்ட் எடுப்பதில்லை'' என்று.  கடந்த ஒரு வருடமாக அவருக்கு கடுமையான டயாபட்டீஸ். சமையற்கட்டில் நிற்க முடியாத அளவுக்கு உடல் சோர்வு. இனி உட்கார்ந்த இடத்தில் உட்கார்ந்தபடி எந்த வேலையும் செய்ய அவர் தயார். அதனால்தான் இந்த முடிவு.



திருச்சி ஏரியாவில் முப்பது ஆண்டுகளாக சங்கரன் ஃபேமஸ். 1980-களில் திருச்சி பக்கம் பொடி தோசையும், பொடி மசாலாவும் இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நிறைவு பெறாது. லிச்சி பாசந்தி, பிஸ்தா கேக், அனார்கலி ஸ்வீட் ஆகிய படைப்புகள் சங்கரனுக்கு ரசிகர் படையையே தேடித் தந்திருந்தன. சங்கரன் போடும் காப்பிக்கு முன்னால் ஒரிஜினல் கும்பகோணம் டிகிரி காப்பியே தோற்றுப் போகும்.


சமையலில் மட்டுமல்ல, யாராருக்கு எது பிடிக்கும் என்று தெரிந்து ஐட்டங்கள் போடுவதிலும், உபசாரம் செய்வதிலும் சங்கரன் கில்லாடி. கேரளக்காரர்களா? காளன், ஓலன், எரிசேரி என்று அசத்துவார். மணவாடுகளா?  ஹைதராபாத்தை இலைக்குக் கொண்டு வருவார். வங்காள ரசகுல்லாவும், சந்தேஷ§ம் அவர் சொன்னபடி கேட்கும். செலவைக் கட்டுப்படுத்துவதிலும் சங்கரன் கில்லாடி.

 என்ன ரேட் சொல்கிறாரோ, அதற்குமேல் ஒரு பைசா அதிகம் கேட்க மாட்டார். சங்கரனின் சமையல் கான்ட்ராக்ட் கல்யாணத்தில் யாரும் அரை வயிறோடு திரும்பியதில்லை. கூட்டத்தை ஒருமுறை நோட்டம் விட்டால் போதும், எல்லோரும் வெளுத்துக் கட்டுமளவுக்கு சாப்பாடு ரெடி பண்ணிவிடுவார்.

சங்கரனுக்கு வயது ஐம்பத்து மூன்று. முதல் பையன் கண்ணன், கம்ப்யூட்டர் சயின்ஸ் படிக்கிறான். அடுத்து அமெரிக்காவில் எம்.எஸ். படிக்க ஆசை. இரண்டாம் மகன் குமார் பிளஸ் டூ. அவனுக்கு டாக்டராகும் கனவு. வாரிசுகளின் இந்த கனவுகளை நிறைவேற்ற வேண்டும்.

 அத்தோடு தன் சமையல், நிர்வாகத் திறமை களை வீணாக்கவும் அவர் விரும்பவில்லை. ஹோட்டல் தொடங்க முடிவு செய்தார். எதையும் பக்காவாகத் திட்டமிட்டுத்தான் அவர் செய்வார். அதுவும் ஹோட்டல் தொடங்குவது என்றால் சின்ன விஷயமா?

திருவெறும்பூர் பகுதியில் ஹோட்டல் திறக்க முடிவு செய்தார். கையில் பணம் புரளும் பி.எச்.இ.எல் ஊழியர்கள், பாரதிதாசன் மேனேஜ்மென்ட் இன்ஸ்டிடியூட் ஆசிரியர்கள், மாணவர்கள் போன்றோர் வருவார்கள் என்பது அவருடைய கணிப்பு.



தான் தேர்ந்தெடுத்த பகுதியில் எந்த மாதிரியான உணவு விடுதிகள் இருக்கின்றன, எப்படிப்பட்ட கஸ்டமர்கள் வருகிறார்கள் போன்ற விவரங்களை நேரடியாகத் தெரிந்துகொள்ள விரும்பினார். எந்த பிஸினஸ் தொடங்கும் முன்னாலும், முதல் நடவடிக்கையாக வாடிக்கையாளர்களையும் போட்டியாளர்களையும் நாடி பிடித்துப் பார்க்க வேண்டும் என்பது மேனேஜ்மென்ட் கொள்கையின் பாலபாடம். இதை மார்க்கெட் சர்வே என்று சொல்வார்கள்.  


எம்.பி.ஏ படிப்பில் மழைக்குக் கூட ஒதுங்காத, மார்க்கெட்டிங் என்பதையே கேள்விப்பட்டிராத சங்கரனுக்கு இந்த சூட்சுமம் எப்படித் தெரிந்திருந்தது? சரவண பவன் அண்ணாச்சி, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மகாதேவ ஐயர், அடையாறு ஆனந்த பவன் திருப்பதி ராஜா, 'அறுசுவை அரசு’ நடராஜன் ஆகியோர் எம்.பி.ஏ படித்தா வெற்றி சாம்ராஜ்ஜியம் அமைத்தார்கள்? பல படிக்காத மேதைகளுக்கு பிஸினஸ் நிர்வாகத் திறமை ஒரு உள்ளுணர்வு, ரத்தத்தில் ஊறிய குணம்!

சங்கரன் தன் நண்பர்களோடு ஹோட்டல் தொடங்கப் போகும் தெருவுக்கு அடிக்கடி போனார். அங்கே முருகன் கஃபே, கிருஷ்ண நிவாஸ் என்ற இரண்டு ஹோட்டல்கள் இருந்தன. காலை, மதியம், மாலை, இரவு என வேறுபட்ட நேரங்களில் இரண்டு ஹோட்டல்களுக்கும் போனார். என்ன மெனு கொடுக்கிறார்கள், விலை விவரங்கள், எப்படிப்பட்ட மக்கள் வருகிறார்கள், என்ன மாதிரியான ஐட்டங்கள் ஆர்டர் செய்கிறார்கள் என்று உன்னிப் பாகக் கவனித்து மூளையில் பதிவு செய்துகொண்டார்.   
     
சங்கரன் பதிவு செய்துகொண்ட உண்மைகள்:

முருகன் கஃபே, கிருஷ்ண நிவாஸ் ஆகிய இரண்டு ஹோட்டல் களிலும் 25 மேசைகளும் 100 நாற்காலிகளும் இருந்தன.

 இரண்டு ஹோட்டல்களும் தரமானவை. இவர்களுடைய மெனு: காலையில் இட்லி, வடை, பொங்கல், தோசை, கேசரி. மதியம் சப்பாத்தி அல்லது பூரி, குருமா, சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், அப்பளம், சிப்ஸ், குலோப் ஜாமூன். மாலையில் பஜ்ஜி அல்லது போண்டா, இட்லி, தோசை, பாதாம் அல்வா. இரவில் மாலையின் டிபன் ஐட்டங்களோடு மீல்ஸ், விரும்புபவர்களுக்காக சப்பாத்தி அல்லது பூரி, குருமா, சாதம், கூட்டு, பொரியல், சாம்பார், ரசம், அப்பளம், சிப்ஸ், பாதாம் அல்வா அல்லது குலோப் ஜாமூன் அல்லது ஐஸ்க்ரீம்.

காலை உணவுக்கு ஏழு மணி முதல் பத்து மணிவரை ஆட்கள் வருகிறார்கள். மதியம் 12.30 முதல் 3 வரை ஆட்கள் வருகை. மாலை 4 முதல் 8 வரை ஆட்கள் வருகிறார்கள். அதற்குப் பின் ஆட்கள் வரத்து மிகக் குறைவு.

காலை, மதியத்தைவிட மாலை, இரவு வேளைகளில்தான் அதிகக் கூட்டம் வருகிறது. வெள்ளி, சனி, ஞாயிறு மாலைகளிலும் இரவுகளிலும்தான் மிக அதிகமான கூட்டம். இந்த வேளைகளில் குடும்பமாக வந்தார்கள். குடும்பம் என்றால் பெரும்பாலும் கணவன், மனைவி ஒரு குழந்தை. பிற நேரங்களில் தனியாக அல்லது இருவராக வந்தார்கள்.

பீக் நேரங்களில்கூட எல்லா நாற்காலிகளும் நிரம்பவில்லை. அதிகபட்சம் 80 பேரே இருந்தார்கள். சில மேசைகளில் இருவர், ஏன் ஒருவர்கூட உட்கார்ந்திருந்தார்கள். உபசரிப்பு சரியாக இல்லை. முதலாளி கல்லாவிலேயே உட்கார்ந் திருந்தார். கஸ்டமர்களிடம் ஏதும் விசாரிக்கவேயில்லை.  

ஒரு நல்ல நாளில் சங்கர விலாஸ் தொடங்கியது. முருகன் கஃபே, கிருஷ்ண நிவாஸ் ஆகிய இரண்டு ஹோட்டல்களிலும் அதிகபட்சம் 80 பேர்தானே இருந்தார்கள்? எதற்காக 25 மேசைகளும் 100 நாற்காலிகளும் போட வேண்டும்? சங்கரன் புத்திசாலித்தனமாக 20 மேசைகளும் 80 நாற்காலிகளும் மட்டுமே போட்டார். ''இப்படி வீண் செலவுகளைத் தவிர்த்தால்தானே அதிக லாபம் வரும்!''

முருகன் கஃபே, கிருஷ்ண நிவாஸ் ஆகியோரின் மெனுவோடு தன் ஸ்பெஷல் ஐட்டங்களையும் சேர்த்தார் சங்கரன். டிபன், சாப்பாட்டுக்கு அவர்கள் போட்ட அதே விலை. ஸ்பெஷல் ஸ்வீட்ஸுக்கு அதிக விலை. கல்யாண வீட்டு விருந்தாளி கள்போல் எல்லோரையும் அன்போடு உபசரித்தார்.

டிகிரி காப்பிக்கும், வெள்ளி, சனி, ஞாயிறு மாலைகளில் தயாரித்த ஸ்பெஷல் ஸ்வீட்ஸ் லிச்சி பாசந்தி, பிஸ்தா கேக், அனார்கலி, ரசகுல்லா, சந்தேஷ் ஆகியவற்றுக்கும் அமோக மக்கள் ஆதரவு.

நான்கு வாரங்கள் ஓடின. சங்கரன் கணக்குப் போட்டுப் பார்த்தார். எதிர்பார்த்த லாபம் வரவில்லை. என்ன காரணம் என்று மனத்தில் ஃபிளாஷ்பேக் ஓட்டினார். ஒரேஒரு விஷயம் அவருக்கு நெருடியது. சங்கர விலாஸிலும் பீக் நேரங்களில் 12 மேசைகளில் நான்கில் மட்டுமே நான்குபேர் உட்கார்ந்திருந்தார்கள். பாக்கி 8 மேசைகளில் இருவர், ஏன், ஒருவர்கூட உட்கார்ந்திருந்தார்கள்.

 அதேசமயம் ஹோட்டல் வாசலில் சுமார் 20, 25 பேர் காத்திருந்தார்கள். பதினைந்து நிமிடங்கள்வரை காத்திருந்த பலர் முணுமுணுத்தபடி பக்கத்து ஹோட்டல்களுக்குப் போனார்கள்.

சங்கரன் தன் ஆடிட்டர் ரெங்கராஜனிடம் இந்தப் பிரச்னையை விவாதித்தார். அவர் உடனேயே ஒரு கணக்குப் போட்டார். 20 பேர் திரும்பிப் போகிறார்கள் என்று வைத்துக் கொண்டால், நபருக்கு 50 ரூபாய் பில் வீதம் 20 பேருக்கு ஒரு நாள் பிஸினஸ் இழப்பு 1,000 ரூபாய். ஒரு வாரத்துக்கு (வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்களில்) இழப்பு 3,000 ரூபாய். ஒரு மாதத்துக்கு பிஸினஸ் இழப்பு 12,000 ரூபாய். அடுத்து ரெங்கராஜன் சொன்ன பதில் நெத்தியடி!

''சங்கரன், பிரமாதமா பிளான் பண்ணி பிஸினஸ் ஆரம்பிச்சிருக்கீங்க. உங்க கணக்குலே ஒரே ஒரு சின்னத் தப்பு. ஹோட்டல்லே குடும்பமாச் சாப்பிட வர்றவங்கதான் அதிகம். இவங்க ரெண்டு பேரோ, மூணு பேரோ, தனி டேபிள்லேதான் உட்கார்ந்து சாப்பிடுவாங்க. அவங்களுக்கு சாப்பாடு நல்லா இருக்கோ இல்லையோ, 'பிரைவசி’ ரொம்ப முக்கியம். அவங்க குடும்ப சகிதமாக உக்கார்ந்து சாப்பிட இடம் கிடைச்சா மட்டுமே காத்திருப்பாங்க. இல்லாட்டி, அடுத்த ஹோட்டல்ல டேஸ்ட் கம்மியா இருந்தாலும் அங்கே போயிடுவாங்க!''  

சங்கரன் தன் மொபைலை எடுத்தார்.

'அமுதா ஃபர்னிச்சர் கடையா? சங்கர விலாஸிலிருந்து பேசறேன். ஜனவரி மாசம் சப்ளை பண்ணின மாதிரியே 5 மேசையும் 20 நாற்காலியும் தேவைப்படுது. அர்ஜென்ட். இன்னிக்கே டெலிவரி பண்ணிடுங்க.


 தொடரும்

நன்றி - நாணயம் விகடன்