"சகுந்தலாவின் காதலன்' என்ற தலைப்பே வித்தியாசமாக இருக்கிறதே?
படத்தலைப்பு மட்டுமல்ல படமும் வித்தியாசமாக இருக்கும் என்று உறுதி கூறுகிறேன். படத்தின் தலைப்பில்தான் காதல் இருக்கிறதே தவிர படத்தில் காதலே இல்லை. ஹிட்லரும் காந்தியும் ஒரே வீட்டில் வசித்தால் எப்படி இருக்கும்? யாரை யார் தன் பக்கம் இழுத்துக் கொள்வார்கள்? நான் ஹிட்லர் குணம் கொண்டவன் வேடத்தில் நடிக்க, "தாமிரபரணி' பானு காந்தி குணம் கொண்ட கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். பானுவுக்கு இந்தப் படம் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்பதை இப்போதே நிச்சயாகச் சொல்கிறேன். நடிப்பில் இவர் அடுத்த ரேவதி என்று கண்டிப்பாக பேசப்படுவார்.
"சகுந்தலாவின் காதலன்' படத்தில் சமூகத்தில் நடக்கும் அவலங்களை நகைச்சுவை ஆக்ஷன் கலந்து சொல்லியிருக்கிறேன். நான்தான் படத்தின் கதாநாயகன் என்றாலும் கதையின் நாயகன் பசுபதிதான். அந்த அளவுக்கு ஒரு வலுவான பாத்திரத்தில் அசத்தலான நடிப்பை வழங்கியிருக்கிறார் பசுபதி. "சிவாஜி' படத்தைவிட பிரமாதமான வில்லன் வேடத்தில் அசத்தியிருக்கிறார் சுமன். கருணாஸ், நண்டு ஜெகன், மொட்டை ராஜேந்தரன் ஆகியோர் இணைந்து காமெடி காட்சிகளில் கலக்கியிருக்கின்றனர். "சக்கரைக்கட்டி', "சிந்து பிளஸ் 2' ஆகிய படங்களுக்கு கேமராமேனாகப் பணியாற்றிய ராசாமதியின் ஒளிப்பதிவும் இந்தப் படத்துக்கு மிகப் பெரிய பிளஸ் பாயிண்ட்டாக இருக்கும்.