‘ஜிகர்தண்டா’ படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பாபி சிம்ஹா, தற்போது ‘உறுமீன்’, ‘கோ 2’, ‘வீரா’, ‘மெட்ரோ’ உட்பட பல படங்களில் நாயகனாகவும் வில்லனாகவும் நடித்து வருகிறார். தமிழ் சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகராக வளர்ந்துவரும் அவரை சந்தித்தோம்.
‘உறுமீன்’ படத்தின் போஸ்டர்களில் நீங்கள் வித்தியாசமான கெட்-அப்களில் இருக்கிறீர்கள். அப்படத்தின் கதைக்களம் என்ன?
அது ஒரு ஆக் ஷன் த்ரில்லர் படம். கொஞ்சம் ஃபேண்டஸியும் கலந்திருக்கும். இப்படத்தின் இயக்குநர் சக்திவேலும் நானும் 7 வருட நண்பர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைய கதைகளைப் பற்றி பேசிக்கொண்டே இருப்போம். அப்போது உருவான கதைதான் ‘உறுமீன்’. நம் கண்முன் நடக்கும் விஷயங்கள், பேப்பரில் வரும் சம்பவங்கள் ஆகியவற்றையெல்லாம் சேர்த்து இந்தப் படத்தில் ஒரு சமூக கருத்தைச் சொல்லியிருக்கிறோம்.
‘ஜிகர்தண்டா’ படத்துக்கு பிறகு உங்களது படங்கள் வெளியாக ஏன் இத்தனை தாமதம்?
‘உறுமீன்’, ‘பாம்பு சட்டை’, ‘கோ 2’, ‘வீரா’, ‘மெட்ரோ’ என்று நிறைய படங்களில் நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். ஆனால் படங்கள் வெளிவருவது என் கையில் இல்லையே. ஒரு சில காரணங்களால் அவை தள்ளிப்போகிறது. விரைவில் ஒவ்வொரு படமாக வெளியாகும். நான் எதற்காக ஆசைப்பட்டு கோயம்புத்தூரில் இருந்து சென்னை வந்தேனோ, அந்த கனவு நிறைவேறி இருப்பதில் சந்தோஷமாக இருக்கிறேன்.
எந்த மாதிரியான கதைகளில் நடிக்க விரும்புகிறீர்கள்?
அப்படி எந்த ஒரு ஆசையும் எனக்கு கிடையாது. நல்ல கதை, திரைக்கதை இருக்கவேண்டும். கதையைக் கேட்கிறபோதே ஏதோ ஒரு விஷயத்தில் நமக்கு கதை பிடித்துவிட்டால் போதும், எந்த வேடமாக இருந்தாலும் உடனே களத்தில் இறங்கி விடுவேன். மற்றபடி நாயகன், துணை நடிகர், வில்லன் இப்படி எந்த ஒரு வித்தியாசமும் நான் பார்ப்பதில்லை.
‘ஜிகர்தண்டா’ என்ற படம் இல்லாவிட்டால் பாபி சிம்ஹா எந்த இடத்தில் இருந்திருப்பார்?
‘ஜிகர்தண்டா’ படத்தில் கண்டிப்பாக நான் இருந்திருப்பேன். ஏனென்றால் நானும் கார்த்திக் சுப்புராஜும் இணைந்து நிறைய குறும்படங்கள் பண்ணியிருக்கிறோம். அப்போதே எனக்கு ‘ஜிகர்தண்டா’ படத்தின் கதை தெரியும். ஒரு வேளை நான் அந்தப் படத்தில் நடிக்காமல் போயிருந்தால் இந்த வளர்ச்சி இருந்திருக்காது. ஆனால், ஒரு நடிகனாக நல்ல கதைகளை தேடிக்கொண்டு இருந்திருப்பேன்.
எந்த இயக்குநரோடு பணிபுரிய விரும்பு கிறீர்கள்?
அனைத்து இயக்குநர்களோடும் பணிபுரிய வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. என்னை பொறுத்தவரை சினிமா ஒரு பள்ளிக்கூடம். அதில் ஒரு மாணவனாக நான் தினமும் ஏதாவது கற்றுக் கொண்டே இருப்பேன். இயக்குநர்கள்தான் எனக்கு வாத்தியார்கள். அந்த வகையில் எனக்கு ஒவ்வொரு வாத்தியாரின் வகுப்பறையிலும் மாணவனாக இருக்கவே ஆசை.
முன்புபோல உங்களால் சுதந்திரமாக சென்னையை வலம் வர முடிகிறதா?
முன்பு நான் வெளியில் போனால் யாருமே கண்டுக் கொள்ள மாட்டார்கள். ஆனால் இப்போது என்னைப் பார்க்கும் சிலர் என்னுடன் போட்டோ எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். ஒருசில இடத்தில் இப்படி கேட்கும்போது கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். மற்ற இடங்களில் எல்லாம் “இதற்கு தானே ஆசைப்பட்டாய் சிம்ஹா” என்று மனதுக்குள் இருந்து ஒரு குரல் கேட்கும்.
காதலிக்கிறீர்கள், திருமணம் செய்யப் போகிறீர் கள் என்றெல்லாம் செய்திகள் வெளியாகிறதே?
ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன், இப்போதைக்கு எனக்கு திருமணம் செய்துகொள்ளும் யோசனையே இல்லை. இப்போதுதான் ஏதோ நல்ல படங்களில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். இன்னும் சாதிக்க வேண்டியது நிறைய இருக்கிறது. நிச்சயம் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் இப்போதைக்கு இல்லை.
நன்றி - த இந்து