Showing posts with label கைத்தறி. Show all posts
Showing posts with label கைத்தறி. Show all posts

Wednesday, March 06, 2013

தஞ்சை பட்டு கைத்தறி நெசவாளரின் பேட்டி


கோர்வை மீது புதிய பார்வை!

ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

கைத்தறி நெசவு மீது பெருங்காதல் அந்த இளைஞருக்கு. நெசவாளர்களின் வாழ்வு நிலை, கைத்தறி நெசவுத்தொழிலின் இறங்குமுகம் குறித்தெல்லாம் மிகவும் நொந்து போனவர். கடந்த சில ஆண்டுகளாகவே அத்தொழிலின் மேன்மைக்கென பல புதிய சிந்தனைகளுடன் போராடி கைத்தறிப் பட்டுச் சேலை நெசவில் கோர்வை எனப்படும் பாரம்பரியமான கைவேலைப்பாடு முறையை மீண்டும் உயிர்ப்பித்துள் ளார். அந்த இளைஞர் விஜய் கணேஷ். வயது இருபத்தியெட்டு.
தஞ்சாவூர், மானம்புச்சாவடி பகுதியில் பூர்விகமாக வாழ்ந்து வருகிறது அந்த இளைஞரின் குடும்பம்.
என் தாத்தா காலத்தில் எங்களிடம் சுமார் எழுநூறு தறிகள் இருந்துள்ளன. தற்போது எங்களிடம் இருப்பது எழுபது தறிகள் மட்டுமே. காரணம், தொழில் முறையில் பெரும் வீழ்ச்சி. கோர்வை ரக கைத்தறிப் பட்டுச் சேலைகள் உற்பத்தி 1960 வரைக்கும் நடைமுறையில் இருந்து வந்துள்ளது. அதுவும் அப்போதெல்லாம் ஒரு பட்டுச் சேலைக்கு இருபுறக் கோர்வை. அதன் பின்னர் அதுவே ஒருபுறக் கோர்வையாக மாறிப்போனது. 2005க்குப் பின்னர் அந்த ஒருபுறக் கோர்வையும் ஒரேயடியாக ஒழிந்து போயிற்று. மீண்டும் அந்தக் கோர்வையை புதிய முயற்சிகளில் எளிதாக்கி, செயல்பாட்டுக்குக் கொண்டு வந்துள்ளான் என் இளைய மகன் விஜய் கணேஷ்!" எனக் கூறிய ராஜரத்தினத்திடம், அது என்ன சார் கோர்வை? அதிலும் ஒருபுறக் கோர்வை... இருபுறக் கோர்வை?" என்றோம்.

கைராட்டை மூலமாக நாடா தார்க்குச்சியில் நூல் சுத்திக் கொண்டிருந்த இளைஞர் விஜய் கணேஷ் எழுந்து வந்தார் நம்மிடம். தினசரி ஒரு மணி நேரமாவது கைராட்டையில் நூல் சுத்திடுவேன்" என்றவர், வெண்பட்டுப் போல புன்னகைத்தார். கைத்தறிப் பட்டுச் சேலையின் கரைக்கும் (பார்டருக்கும்), முந்திக்கும் (பெட்னி எனப்படும் முந்திக்கும்) இரு வேறு வண்ண நூல்களை ஒவ்வொரு இழையாகக் கைகளால் கோத்து நெய்வதே கோர்வை. இதில் ஒரு கைத்தறிப் பட்டுச் சேலையின் இருபுற பார்டர்களிலும் (சேலையின் மேலும் கீழும்) இடம்பெறுவது இருபுறக் கோர்வை. சேலையின் கீழ்ப்பகுதியில் மட்டும் இடம்பெறுவது ஒருபுறக் கோர்வை. 1960 மற்றும் 2005க்குப் பின்னர் மேற்கண்ட இரண்டு வகை வேலைப்பாடுகளுமே நெசவிலிருந்து விடைபெற்றுப் போய்விட்டன!" என்றார் விஜய் கணேஷ்.
உலகிலேயே இந்தியாவில்தான் மிக அதிக அளவில் கைத்தறிப் பட்டு நெசவு நடைமுறையில் இருப்பதாகச் சொல்கிறார்கள். உத்தரபிரதேசம், குஜராத், ஆந்திரம், கர்நாடகம், தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தொழில் வளர்ச்சியில் இறங்கு முகமே என்றாலும் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம், கும்பகோணம், தஞ்சாவூர், சேலம், பரமக்குடி போன்ற நகரங்களில் கைத்தறிப் பட்டுச் சேலை நெசவு நிகழ்ந்து கொண்டிருந்தாலும், பெரும்பாலான இடங்களில் கோர்வை கை வேலைப்பாடு காணப்பட வில்லை என்றே கூறப்படுகிறது.

இருபுறக் கோர்வை வேலைக்கு ஒரு தறிக்கு இரு நெசவாளிகள் தேவை. ஒருபுறக் கோர்வைக்கு ஒரு நெசவாளி போதும். இத்துடன் ஒரு தறிக்கு பயிற்சி நெசவாளியும் ஒருவர் வேண்டும். விசைத்தறிக்கு இடம்பெயர்ந்தது பட்டுச் சேலை. அங்கு அதிக அளவு உற்பத்தி, அதிகக் கூலி என்றானதால், கைத்தறிப் பட்டுச் சேலை நெசவில் கோர்வை கை வேலைப்பாடு என்கிற பாரம்பரிய கலைத்திறன் நுட்பம் கரைந்து போனது!" என்று இடையில் ஊடுருவும் நூலிழையாகப் பேசுகிறார் அந்த இளைஞரின் மூத்த சகோதரரான விஸ்வநாத்.
நெசவாளர்களில் பலரும் தமது பூர்விகத் தொழிலிலிருந்து, வேறு வகை வேலைகளுக்கு மாறிப் போய் விட்ட நிலையில், பாரம்பரிய கோர்வை கை வேலைப்பாடு திறனையும் சற்றே எளிதாக்கி, மீட்டுருவாக்கம் செய்துள்ளார் விஜய்கணேஷ்.

எனக்குள் பெருங்கனவுகள் பல உள்ளன. எங்களுடைய ஏழு தறிகளில் இருபுறக் கோர்வை பட்டுச் சேலைகள், மீதமுள்ள தறிகளில் ஒரு புறக் கோர்வை பட்டுச் சேலைகள் நெய்யப் படுகின்றன. முதலில் எங்கள் தறிகளில் வேலை செய்யும் நெசவாளிகளுக்கு சற்றே கூடுதலான ஊதியம் தந்து வருவதென முடிவெடுத்தோம். மேலும் இதனைப் பெரிய கார்ப்பரேட் நிறுவனம் போல இயங்கச் செய்ய வேண்டுமென்கிற எதிர்காலத் திட்டமும் என் மனசுக்குள் உள்ளது




 பொதுவாகவே கைத்தறி பெரு உற்பத்தியாளர்கள் தாமாக முன்வந்து நெசவாளர்களுக்குக் கூடுதல் கூலி தரலாம். ஆனால், அவர்கள் தருவதில்லை. ஏனெனில் அவர்களிடமிருந்து போகும் ஒரு பட்டுச் சேலையின் விலையை அவர்கள் நிர்ணயிப்பதில்லை. ஜவுளி விற்பனையாளரே நிர்ணயிக்கின்றனர். இந்த இரு தரப்பினருக்கும் இடையேயான இடைவெளியைச் சுருக்க வேண்டும். பட்டுச் சேலையின் விலையை அதன் உற்பத்தியாளரே இறுதியாக்க வேண்டும். அப்போதுதான் அதன் உற்பத்தியாளருக்கும் சரி, நெசவாளிக்கும் சரி உரிய பலன்கள் கிடைக்கும். அப்போது பாரம்பரிய கோர்வை கை வேலைப்பாடு ரக கைத்தறிப் பட்டுச் சேலைகளுக்கு உரித்தான மதிப்பும் கௌரவமும் தடையின்றி கிடைக்கும். பாரம்பரியக் கலை நீடிக்கும்!" என்கிறார் விஜய் கணேஷ்.