Showing posts with label கேள்வி பதிலகள். Show all posts
Showing posts with label கேள்வி பதிலகள். Show all posts

Wednesday, April 27, 2011

சொப்பன சுந்தரி வெச்சிருந்த காரை இப்போ யாரு வெச்சிருக்கா?




புது காரில் புகை! என்ன செய்வது?

1. அடகுக் கடைகளில் ஆங்கிலத்தில் கண்டிஷன் களை எழுதி கையெழுத்து வாங்குகிறார்கள். இதை தமிழில் எழுதித் தரவேண்டும் என்று கேட்க முடியுமா?

-ஆனந்த் ராஜ், போரூர்
.
''நிச்சயம் கேட்க முடியும். காரணம், இன்றைக்கு பட்டித்தொட்டிகளில் எல்லாம் நீக்கமற நிறைந்திருக்கின்றன அடகுக் கடைகள். கடைகளின் எண்ணிக்கை உயர்ந்ததற்கேற்ப அடகு வைக்கிறவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்திருக்கிறது.

 பான் புரோக்கர் என்று சொல்லப்படும் சிறிய அடகுக் கடைகளாகட்டும் அல்லது பல்வேறு நகரங்களில் இயங்கும் பெரிய நிறுவனங்கள் ஆகட்டும், ஆங்கிலத்தில் அச்சடிக்கப்பட்ட பேப்பரில்தான் கையெழுத்து வாங்குகிறார்கள்.
நம் மக்கள் எல்லோருக்கும் ஆங்கிலம் தெரியும் என்று சொல்ல முடியாது.

பெரும்பாலும் ஏழை மக்கள்தான் இது மாதிரியான அடகுக் கடைகளை அதிகம் நாடுகிறார்கள். அவர்கள் எளிதில் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளும் வகையில் விதிமுறைகளைத் தமிழில் அச்சடித்துத் தந்தால், பிற்பாடு ஏற்படும் சச்சரவுகள் உருவாகாமலே தடுக்க முடியும். மகாராஷ்டிராவிலும், குஜராத்திலும் விதிமுறைகள் இந்தியில் அச்சடிக்கப்பட்டு கொடுக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் தமிழில் அச்சடித்துக் கொடுக்க முடியாது? ஆனால், அடகு வைக்கிறவர்கள் இதை வாய் திறந்து கேட்டால் மட்டுமே கிடைக்கும்.''


2. வாஷிங்மெஷின் ரிப்பேராகி விட்டது. இப்போது கேட்டால் அந்த மாடலை நிறுத்திவிட்டோம் என்கிறார்கள். ஸ்பேர்பார்ட்ஸ் கிடைக்காது என்கிறார்கள். இவர்கள் மாடலை நிறுத்திவிட்டார்கள் என்பதற்காக நான் பாதிப்படைய முடியுமா?

-பிரபாகர், காரைக்கால்
.
''உங்கள் வாதம் சரியானதே. வாஷிங்மெஷினில் மட்டுமல்ல, இரு சக்கர வாகனங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் கூட தங்களுடைய இஷ்டத்துக்கேற்ப பல மாடல்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்கின்றன. சில மாடல்கள் மிகப் பெரிய வெற்றி கண்டு நிறைய விற்பனையா கின்றன. இன்னும் சில மாடல்கள் கன்ஸ்யூமர் களிடம் போதிய அளவு வரவேற்பு கிடைக்காததால் அதை உற்பத்தி செய்வதை நிறுத்திவிடுகிறது.

 ஆனால், திடீரென  உற்பத்தி செய்வது நிறுத்தப்படும் பட்சத்தில் அதற்கான ஸ்பேர்பார்ட்ஸ்களை கட்டாயம் கொடுத்தாக வேண்டும். அப்படி கொடுக்காவிட்டால், பழைய வாஷிங்மெஷினையோ, வாகனத்தையோ வாங்கிக் கொண்டு புதியதை கொடுக்கும்படி கேட்கும் உரிமை கன்ஸ்யூமர்களுக்கு நிச்சயம்  இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள்.''


3. கடந்த ஜூலை மாதம் முதல் எனது செல்போனில்  நெட்வொர்க் பிராப்ளம் என்று வருகிறது. இது தொடர்பாக எத்தனையோ முறை புகார் செய்தும், மெயில் அனுப்பியும் எந்த பிரயோஜனமும் இல்லை. என் குறை தீர என்ன செய்வது?

-அன்பு, கும்மிடிப்பூண்டி
.
''டிராய் என்று சொல்லப்படுகிற தொலைதொடர்பு கட்டுப்பாட்டு வாரியம் ஒவ்வொரு மாநிலத்திலும்  நோடல் ஆபீஸர் என்று ஒருவரை நியமித்திருக்கிறது. இந்த நோடல் ஆபீஸர்களின் வேலையே செல்போன் நிறுவனங்கள் தொடர்பாக வரும் புகார்களை விசாரித்து நடவடிக்கை எடுப்பதே. ஏர்டெல் நிறுவனத்துக்கு சென்னை சாந்தோமில் அலுவலகம் இருக்கிறது.

 ஏர்செல் நிறுவனத்துக்கு கோவை, மதுரை, திருச்சி, பாண்டிச்சேரி என பல நகரங்களில் நோடல் ஆபீஸர்கள் இருக்கின்றனர். சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனத்தின் இணையதளத்தில் புகுந்து தேடினாலேயே இந்த நோடல் ஆபீஸர்களின் அலுவலகம் அமைந்திருக்கும் முகவரி, அவர்களின் போன் நம்பர் என அனைத்தும் கிடைத்துவிடும். செல்போன் சர்வீஸ் தொடர்பான எந்த குறையாக இருந்தாலும் இந்த நோடல் ஆபீஸரிடம் தாராளமாக தெரிவிக்கலாம்.''


4. சமீபத்தில் புது கார் ஒன்றை வாங்கினோம். வாங்கிய மறுநாளே காரிலிருந்து புகை வந்தது. இதுபற்றி புகார் செய்து, பத்து நாளைக்குப் பிறகுதான் வந்து பார்த்தார்கள். இதோ, அதோ என்று நான்கு நாட்கள் இழுத்தடித்துதான் சரி செய்து கொடுத்தார்கள். லட்சக்கணக்கில் செலவு செய்து ஒரு புது காரை வாங்கினோம் என்கிற மகிழ்ச்சியே எங்களுக்கு போய்விட்டது. நாங்கள் என்ன செய்ய?
-லலிதா, வளசரவாக்கம்
.
''இது மாதிரியான விஷயங்களில் நம் செயல்பாடு எப்படி இருக்கிறது என்பது முக்கியமான விஷயம். புத்தம் புதிய காரை முதல் முறையாக வெளியே எடுத்துச் செல்லும்போதே அதிலிருந்து புகை வருகிறது என்றால் காரை அதே இடத்தில் நிறுத்திவிட்டு, கார் வாங்கிய நிறுவனத்துக்கு போன் செய்து, உடனடியாக வந்து காரை சரி செய்து கொடுக்கும்படி சொல்ல வேண்டும்.

 அவர்கள் வந்து சரி செய்து கொடுக்கும்வரை காரை அந்த இடத்திலிருந்து எடுக்க மாட்டேன் என்று சொன்னால், வேறு வழியில்லாமல் ஓடிவருவார்கள். அப்படி வந்து சரி செய்து கொடுப்பதோடு பிரச்னையை விட்டுவிடக்கூடாது.

'காரிலிருந்து மீண்டும் புகை வராது என்பதை உறுதிப்படுத்த 100 கி.மீட்டருக்காவது தன்னோடு பயணம் செய்ய வேண்டும்’ என்று கேளுங்கள். அதெல்லாம் முடியாது என்று சொன்னால், இந்த காரை எடுத்துக் கொண்டு புது காரை கொடுக்கும்படி கேளுங்கள். இப்படி கேட்பது கார் நிறுவனம் வேண்டுமானால் அநியாயம் என்று நினைக்கலாம்.

 ஆனால், கன்ஸ்யூமரை பொறுத்தவரை, இதெல்லாம் நியாயமான கோரிக்கைகளே. இந்த விஷயத்தை நீங்கள் இப்படி டீல் செய்யும் பட்சத்தில் நீங்கள் புகார் செய்தவுடன் உங்களைத் தேடி வந்து பிரச்னையை சரி செய்து கொடுத்துவிட்டுப் போவார்கள். அநாவசியமாக நீங்கள் அலைய வேண்டிய அவசியம் இருக்காது!''

நன்றி - மோட்டார் விகடன்