கேரளாவில் கலவரம் கிளப்பும் சகோதரர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்.. தமிழ் நாட்டில் பஞ்சம் பிழைக்க வந்த மலையாளிகளின் எண்ணிக்கை 30 லட்சம் பேர்.. அவர்களுக்குத்தேவையான தண்ணீரைக்கொடுப்பதாக நினைத்துக்கொண்டாலே போதும்..
திருப்பூர், கோவை, ஈரோடு மாவட்டங்களீல் கார்மெண்ட்ஸ் பணீக்கு இருக்கும் டெய்லர்கள் பெரும்பாலும் கேரளாவை சேர்ந்த பெண்களே.. இப்போது முல்லை பெரியாறு பிரச்சனைக்காக தமிழர்களை தாக்குபவர்கள் அதே போல் தமிழ்நாட்டில் இருக்கும் கேரள மக்கள் நலன் பற்றி நினைத்துப்பார்க்க வேண்டும். தமிழகம் முழுவதும் இருக்கும் நர்ஸ்களீல் 68 % பேர் கேரளா பெண்களே..
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரும் கேரள அரசின் மனுவை, உச்ச நீதிமன்ற 'அரசியல் சாசன பெஞ்ச்' இன்று தள்ளுபடி செய்தது.
அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.
ஆனால், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
இரு தரப்புக்கும் அறிவுரை...
இதில் குறிப்பிடத்தக்க அமசமாக, முல்லைப் பெரியாறு விவகாரத்தில், எரிகிற தீயில் எண்ணெய் ஊற்றுவதுபோல் கருத்துகளை வெளியிடாமல், மக்களிடையே நிலவும் பதற்றத்தைத் தணிக்க, பொறுப்புடன் செயல்படுமாறு, தமிழக, கேரள தரப்புகளுக்கு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியது.
முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்த வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை கேரள அரசு இதுவரை அமல்படுத்தவில்லை.
அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் தற்போதைய நீர் மட்டமான 136 அடியை 120 அடியாக குறைக்க வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதால், புதிய அணை கட்ட வேண்டும் என்றும் கேரள அரசு வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக, அம்மாநில பேரவையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கேரளாவில் நடந்த போராட்டங்களின்போது அணையை உடைக்க முயற்சிகள் நடந்ததைத் தொடர்ந்து, தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
அவற்றில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்றும், அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு கேட்டுக்கொண்டது.
அதேபோல், கேரள அரசு சார்பிலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் என்றும், அப்போதுதான் நில நடுக்கங்களில் இருந்து அணையை பாதுகாக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கிடையில், திமுக சார்பில் நேற்று புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அந்த மனுவில், அணையின் நீர் மட்டத்தை 120 அடியாக குறைக்க வேண்டும் என்ற கேரள அரசின் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.
மேலும், அணையின் நீர் மட்டத்தை 142 அடியாக அதிகரிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்ற உத்தரவை அமல்படுத்த கேரள அரசு ஒத்துழைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும் என்றும் திமுகவின் மனுவில் வலியுறுத்தப்பட்டது.
இந்த நிலையில், முல்லைப் பெரியாறு அணை பிரச்னை தொடர்பான தமிழகம் மற்றும் கேரள அரசின் மனுக்கள், நீதிபதி டி.கே.ஜெயின் தலைமையில் ஆர்.எம்.லோக்தா, தீபக்வர்மா, அனில்தவே, சந்திரமவுலி பிரசாத் ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட 'அரசியல் சாசன பெஞ்ச்' முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
கேரள அரசுக்குக் கண்டிப்பு..
அப்போது, முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 136 அடியில் இருந்து 120 அடியாக குறைக்க உத்தரவிட வேண்டும் எனக் கோரிய கேரள அரசைக் கண்டித்த அரசியல் சாசன பெஞ்ச், அந்த மனுவை தள்ளுபடி செய்வதாக அறிவித்தது.
ஏ.எஸ். ஆனந்த் அறிக்கையின்படிதான், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று அவர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனர்.
அந்த அறிக்கை தாக்கல் செய்யப்படும் வரை, அணையின் நீர்மட்டம் குறைப்பது தொடர்பாக எவ்வித உத்தரவும் பிறப்பிக்கப்பட மாட்டாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசுக்கு நோட்டீஸ்..
அதேவேளையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழில் பாதுகாப்பு படையை நிறுத்த வேண்டும் என்ற தமிழக அரசின் மனு தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப, அந்த பெஞ்ச் உத்தரவிட்டது.
இதுதொடர்பான விசாரணை நாளை மறுதினம் நடைபெறும் என உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் அறிவித்தது.
ஜெயலலிதாவுக்கு கண்டிப்பு...
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டு இருப்பதாக, கேரள அரசும், அரசியல்வாதிகளும் பீதி கிளப்புவதை தடுக்க உத்தரவிட வேண்டும் என்று தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மற்றொரு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.
அத்துடன், முல்லைப் பெரியாறு தொடர்பாக பத்திரிகைகளில் ஒருபக்கம் விளம்பரம் வெளியிட்டதற்காக, முதல்வர் ஜெயலலிதாவுக்கு உச்ச நீதிமன்ற அரசியல் சாசன பெஞ்ச் கண்டனம் தெரிவித்தது.
முல்லைப் பெரியாறு தொடர்பான வழக்கு, விசாரணையில் இருக்கும்போது, அதுபற்றி விளம்பரம் செய்யக் கூடாது என்றும், நீதிமன்ற உத்தரவை அரசியலுக்கு பயன்படுத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
'கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளில் தெரியும்’ என்பதுபோல, 'அணை பலமிழந்து உள்ளது. அதை உடைத்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும்’ என்று இத்தனைக் காலமாக புளுகி வந்த கேரளாவின் குட்டு, அந்த மாநில உயர் நீதிமன்றத்திலேயே உடைபட்டு விட்டது. இதனால் பிரச்னையை திசை திருப்புவதற்காக, அரசாங்கத்தின் ஆசிகளோடு வன்முறைகளில் இறங்கிவிட்டனர் கேரள சகோதரர்கள்!
இதுதொடர்பாக தமிழகப் பொதுப்பணித் துறை முன்னாள் பொறியாளர் விஜயகுமார் ''முல்லை-பெரியாறு அணையிலிருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தருவதற்காக 999 வருடங்களுக்கு ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. இதை காலி செய்யவும், இடுக்கி அணைக்கு மொத்த தண்ணீரையும் கொண்டு செல்வதன் மூலம், கேரளத்தில் மின் உற்பத்தியை அதிகரிக்கவும்தான் 'அணை பலமாக இல்லை' என்கிற வதந்தியை கேரளா தொடர்ந்து கிளப்பி வருகிறது. இதற்கு ஆதரவாக சினிமா மூலமாகவும் பீதியைக் கிளப்புகிறது.
அணை மிகவும் பாதுகாப்பாக இருக்கிறது என்பதே உண்மை. அனுமதிக்கப்பட்ட அளவைவிட குறைவான நீர்க்கசிவுதான் இருக்கிறது. இதையெல்லாம் விளக்கி, அணையின் பாதுகாப்புத் தன்மை குறித்த தொழில்நுட்ப விளக்கங்களுடன் 'பெரியாறு அணையின் உண்மை நிலை’ என்கிற குறும்படத்தை தமிழக மூத்த பொறியாளர்கள் சங்கத்தின் சார்பில் தயாரித்து வெளியிட்டுள்ளோம். ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, இந்திய பிரதமரை சந்தித்து இந்த குறும்பட சி.டி-யைக் கொடுத்துள்ளதுடன், ஒரு லட்சம் குறுந்தகடுகளைத் தயாரித்து இலவசமாக விநியோகம் செய்யத் தொடங்கியுள்ளார்.
நாம் சொல்வதுதான் உண்மை என்பது... தற்போது கேரள மாநில உயர் நீதிமன்றத்தில், கேரள அரசின் வாக்குமூலத்திலேயே உறுதிப்பட்டுவிட்டது. 'அணை உடைந்தால், கேரளாவில் உள்ள ஐந்து மாவட்டத்தைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் இறந்து போவார்கள்' என்கிற பொய்யைத் திரும்பத் திரும்ப சொல்லி வந்தது கேரளா.
'ஒருவேளை அணை உடைந்தால், மக்கள் பாதுகாப்புக்காக என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.?’ என கேரள உயர் நீதிமன்றம் ஒரு கேள்வியை எழுப்ப... 'அணை உடைந்தால் பாதிக்கப்படப் போவது 500 பேர்கள் மட்டுமே. அத்துடன் அணை உடைந்தால், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்’ என அம்மாநில அட்வகேட் ஜெனரல் தண்டபாணி நீதிமன்றத்திலேயே உண்மையை உடைத்து விட்டார். இதனால், கேரளத்தின் பொய் முகம்... உலகுக்கே உரித்து வைக்கப்பட்டுவிட்டது''
''தற்போது அட்வகேட் ஜெனரலை உண்டு இல்லை என்று மிரட்டி வரும் கேரளத்தவர்கள், தமிழகத்துக்கும் தமிழர்களுக்கும் எதிராக மிகமோசமாக வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு உள்ளனர். இந்த நிலையில் தமிழக விவசாயிகள் மற்றும் கேரளத்தின் இடுக்கி மாவட்டத்தில் வாழும் தமிழர்களின் கோரிக்கை... 'மொழிவாரி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது கேரளாவுடன் இணைக்கப்பட்ட தேவிக்குளம், பீர்மேடு ஆகிய தமிழகப் பகுதிகளை மீண்டும் தமிழகத்துடன் இணைக்க வேண்டும்’ என்பதுதான். மக்கள் எழுச்சியின் மூலமாக இதை சாத்தியமாக்கும் முயற்சியில் பல்வேறு தமிழ் அமைப்புகள் இறங்கி விட்டன'' என்றும் சொன்னார்.
மத்திய பாதுகாப்புப் படையிடம் ஒப்படைக்க வேண்டும்!
இந்நிலையில் கேரளாவைச் சேர்ந்த வன்முறைவாதிகள் அணைப்பகுதியில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளதால்... அணையின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது. இதுதொடர்பாக முல்லை-பெரியாறு மீட்புக்குழுவின் செயலாளர் தன்ராசு, ''வன்முறை மூலமாக அணையை உடைத்து, தனது திட்டத்தை நிறைவேற்றப் பார்க்கிறது கேரளா. டிசம்பர் 3-ம் தேதி கேரள இளைஞர் காங்கிரசைச் சேர்ந்தவர்கள், தமிழகத்துக்கு தண்ணீர் வரும் மதகுப் பகுதியில் நுழைந்து கண்ணில் பட்டதையெல்லாம் அடித்து நொறுக்கியுள்ளனர். அடுத்த நாள், கேரள பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்கள் பெரியாறு அணைப்பகுதியில் நுழைந்து பேபி அணையை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
கேரள போலீஸ் கைகட்டி வேடிக்கை பார்த்துள்ளது. இதுபோன்ற முயற்சிகள் காரணமாக எப்போது வேண்டுமானாலும், அணை உடைக்கப்பட நிறைய வாய்ப்பு இருக்கிறது. எனவே தமிழக முதல்வரும் மற்ற அரசியல்தலைவர்களும் கேட்டுக் கொண்டபடி உடனடியாக மத்தியத் தொழில் பாதுகாப்புப் படையின் கட்டுப்பாட்டில் பெரியாறு அணை ஒப்படைக்கப்பட வேண்டும். இதையும் மீறி அணைக்கு ஏதாவது பாதிப்பு வந்தால்... உடைபடுவது அணை மட்டுமல்ல... இந்திய ஒருமைப்பாடும்தான்'' என்று எச்சரிக்கைக் குரலில் சொன்னார்.
கேரளாவில் ஆளும் காங்கிரஸ் 70 எம்.எல்.ஏ-க்களையும், எதிர்க்கட்சியான மார்க்சிஸ்ட் 69 எம்.எல்.ஏ-க்களையும் வைத்துள்ளன. தற்போது, பெரியாறு பாசனப் பகுதியில் அமைந்துள்ள ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த பிரவம் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்க இருக்கிறது. கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றால்... ஆட்சியே பறிபோய்விடும். அதனால், இந்தப் பிரச்னையை ஊதி பெரிதாக்கி வெற்றி பெற நினைக்கிறது காங்கிரஸ் என்றொரு குற்றச்சாட்டு கிளம்பியிருக்கிறது.
'கூடன்குளம் பிரச்னைதான் தென்னக மீடியாக்களில் பிரதான பிரச்னையாக உருவெடுத்து உலகின் கவனத்தை ஈர்த்துக் கொண்டிருந்தது. இதை திசை திருப்புவதற்காகவே, கேரளாவை ஆளும் காங்கிரஸ் அரசின் உதவியோடு, முல்லை-பெரியாறு பிரச்னையை பெரிதாக ஊதிவிட்டிருக்கிறது மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு'' என்று குற்றம் சாட்டியுள்ளனர் கூடன்குளம் அணு உலைக்கு எதிராக உண்ணாவிரதம் நடத்திவரும் போராட்டக் குழுவினர்