Showing posts with label கேரள நாட்டிளம் பெண்களுடனே. -எஸ்.எஸ்.குமரன்.. Show all posts
Showing posts with label கேரள நாட்டிளம் பெண்களுடனே. -எஸ்.எஸ்.குமரன்.. Show all posts

Thursday, September 12, 2013

கேரள நாட்டிளம் பெண்களுடனே-காயத்திரி, அபிராமி, தீட்சிதா--எஸ்.எஸ்.குமரன்.

 

 

தமிழ் சினிமாவில் ஒற்றுமையும், புரிதலும் இல்லை! எஸ்.எஸ்.குமரன்

"மகாகவி பாரதியார் எழுதிய பாடல் வரிகள், இந்த கேரள நாட்டிளம் பெண்களுடனே. இந்த வரிகள் என்னை மிகவும் கவர்ந்தவை. அதனால் படத்திற்கு இந்த வரிகளையே தலைப்பாக வைத்தேன்''என்கிறார் இசையமைப்பாளர், இயக்குநர், தயாரிப்பாளர் என முப்பரிமாண அவதாரம் எடுத்திருக்கும் எஸ்.எஸ். குமரன். 
 சென்னை திரைப்படக் கல்லூரியில் படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பில் இருந்தவரிடம் பேசிய பொழுது, ""அம்பாசமுத்திரத்திலிருந்து நாயகன் திருமணத்துக்குப் பெண் தேடி கேரளா செல்கிறான். என்பதுதான் ஒரு வரி கதை. இதில் இன்னொரு விஷேசம் அப்பாவே ஒரு பெண்ணை தேடி திருமணம் செய்து கொள்ளும்படி மகனைக் கேரளாவிற்கு அனுப்பி வைக்கிறார்.
 படம் பார்க்க வருபவர்களுக்கு எந்ததொரு நெருடலும் இருக்காது. ஐம்பது வருடம் கழித்து கேரளாவைப் பற்றி யாராவது தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைத்தாலும், கேரளாவின் பதிவுகளைச் சொல்கிற பொக்கிஷமாக இந்தப் படம் இருக்கும்.  அம்பிகா மேடம் காலகட்டத்தில் இருந்து இன்றைக்கு டாப்ல இருக்கும் அமலாபால் வரை நிறைய நாயகிகள் கேரளாவில் இருந்து வந்தவர்கள்தான். அவங்க வந்த இடத்திலேயே ஒரு கதை செய்ய வேண்டும் என்று நினைத்தேன்.


மதுரை காதல், தஞ்சாவூர் காதல், சென்னை காதல் பார்த்தாச்சு கேரளா காதலும்தான் கொஞ்சம் பார்ப்போமே?  அவர்களுக்குள் இருக்கிற ஒற்றுமை, திருவிழாக்கள், கொண்டாட்டங்கள் என அனைத்தையும் பதிவு செய்திருக்கிறோம். அறுபத்து ஒன்பது நாள் ஷூட்டிங். கண்டிப்பாக படம் வெளியானதும் தமிழர்களும், மலையாளிகளும் கொண்டாடும் படமாக இது இருக்கும்.  இதில் நாயகனின் தந்தையை மையமாக வைத்துதான் கதை நகர்கிறது. அதற்காக பேராசிரியர் ஞானசம்பந்தம் அவர்களை அணுகினோம். அவர் படத்தின் பெயரை கேட்டுவிட்டு, இது என்ன மாதிரியான படமாக இருக்கும் என்று கொஞ்சம் யோசித்து தயங்கினார். 
அதன்பிறகு அப்படியெல்லாம் இல்லையென்று கதையை பற்றி விளக்கினேன். உடனே கதை பிடித்துபோக நடித்துக்கொடுத்தார். படத்திற்காக அவர் மலையாளம் கற்க வேண்டியிருந்தது. அதற்காக நடிகர் கமலஹாசனிடம் சென்று மலையாளம் கற்று வந்தார்.  அடுத்து இந்தக் கதைக்குப் பாடல்களை யாரை எழுத வைக்கலாம் என்று நினைத்த போது, கவிஞர் வைரமுத்து சார் நினைவுக்கு வந்தார். ஏனென்றால், இந்தப் படத்தின் தலைப்பிலேயே ஒரு கவிதை இருக்கிறது.  படத்தின் தலைப்பைக் கேட்டு பிடித்து போக ரொம்ப ஆர்வமாக, "மெட்டு கொடுங்கள்' என்று கேட்டார். 
எனக்கு அதில் உடன் பாடு இல்லை. "நீங்கள் பாடல் வரிகள் கொடுங்கள் அதற்கு நான் மெட்டு போட்டுக் கொள்கிறேன்' என்றேன். அதற்கு அவர் "அது ரொம்ப கஷ்டமாச்சே?' என்றார். அப்படித்தான் பாடல்கள் வாங்கினேன்.  அதனால்தான் படத்தின் இசைவெளியீட்டு விழாவின் போது, "இனி மெட்டுக்கு பாடல் வரிகள் கேட்காமல் பாடல் வரிகள் மட்டும் கேட்டால், பாதி சம்பளம் வாங்கிக் கொள்வேன்' என்றார். அது ரொம்ப சந்தோஷமா இருந்தது. வருகிற அக்டோபர் மாதம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளேன். மலையாளத்தில் "கேரளா. காம்' என்ற பெயரில் வெளியிடுகிறோம்.


அபி என்கிறவர் நாயகனாக அறிமுகமாகிறார். நாயகிகளாக காயத்திரி, அபிராமி, தீட்சிதா மூன்று பேர் நடித்திருக்கிறார்கள். முதல் படத்தில் நான் தவறவிட்ட விஷயங்களை எல்லாம் இதில் சரி செய்துள்ளேன்.  மூன்று நாயகிகளில் ஒரு நாயகி முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவள். பணக்காரவீட்டுப் பெண். அதற்காக ஒரு பெரிய பிரமாண்டமான வீடு தேவைப்பட்டது. அதற்காக பல வீடுகள் தேடினோம். கடைசியில் ஒரு வீடு கிடைத்தது.



 மிக பிரமாண்டமான டீக்வுட் மரத்திலான வீடு அது. இதுவரை மரத்திலான இவ்வளவு பிரமாண்டமான வீட்டை நான் பார்த்ததே இல்லை. அந்த வீட்டில் இருந்த ஒவ்வொரு சின்னஞ்சிறு பொருட்கள் கூட அவ்வளவு நவநாகரீகமான, விலையுர்ந்த பொருட்களாக இருந்தது. அவ்வளவு பிரமாண்டமான வீடு. முதலில் அந்த வீட்டை ஷூட்டிங்கிற்குத் தரமாட்டேன் என்று சொன்னவர்கள். தமிழ்ப் படம் என்று சொன்னதும், நடிகர் விஜய்யோ, சூர்யாவோ வருவார்கள் என்று நினைத்து வீடு கொடுத்தார்கள்.



ஷூட்டிங் ஆரம்பித்ததும் வந்து பார்த்தார்கள். ஆர்வத்தோடு நாயகன் யாரென்று விசாரித்தார்கள். அந்த நேரம் பேராசிரியர் ஞானசம்பந்தம் சார் மேக்கப் போட்டு கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு இவரா நாயகன்? என்று டென்ஷாகி அந்த இடத்தை விட்டு போனவர், மறுபடியும் ஷூட்டிங் முடிந்த பிறகுதான் வந்தார்கள். அவர்கள் கிளம்பியதும்தான் எங்களால் சுதந்திரமாக வேலை செய்ய முடிந்தது. அதற்காகவே சம்பந்தம் சாருக்கு நிறைய நன்றி சொன்னோம். அதை மறக்கவே முடியாது.

 


   "ஒரு கதாநாயகி என்றாலே பலவித சிக்கல்களை சந்திக்க வேண்டியிருக்கும். நீங்கள் மூன்று நாயகிகளை வைத்து எடுத்திருக்கிறீர்கள். ரொம்ப கஷ்டமாச்சே?'  ""இது மூன்று நாயகிகளுக்கான கதை. மூன்று நாயகிகளில் நாயகன் யாரை திருமணம் செய்து கொள்கிறான் என்பதுதான் படத்தின் சஸ்பென்ஸ்.''    "இசைப்பயணம் நன்றாக தானே போய்க் கொண்டிருந்தது, திடீர்ன்னு இயக்கம் ஏன்?' ""அப்படித்தான் எல்லோரும் கேட்கிறார்கள். என்னைப் பொருத்தவரை எந்த வேலை செய்தாலும் அதில் எந்தக் குறுக்கீடும், தலையீடுகளும் இல்லாமல் செய்ய வேண்டும் என்று நினைப்பேன். இந்தப் பாடல் மாதிரி வேண்டும், அந்தப் பாடல் மாதிரி வேண்டும் என்று திணித்ததால் செய்ய முடியவில்லை. அதேபோல் ஒரு ஓப்பனீங் சாங், குத்து சாங் என்று வந்தால் அதைச் செய்ய என்னால் முடியாது.




 "பூ', "களவாணி' படங்கள் எல்லாம் என் இசைக்குத் தீனி போடுவது போன்று நிறைய விஷயங்கள் இருந்தது. இது போன்று நிறைய படங்களுக்கு இசையமைக்க வேண்டும் என்கிற ஆசையிருக்கிறது. அதற்கேற்ற சூழலும் கதையம்சமும் கிடைக்கவில்லை. அதையும் தாண்டி "இவன் தயாரிப்பபாளர், இயக்குநர் ஆகிட்டான் இனி எப்படி மியூசிக் பண்ணுவான்னு' சொல்லி வாய்ப்புகள் வராமல் இருக்கிறது.''
  "தயாரிப்பாளராக களம் இறங்கியிருக்கீங்க உங்கள் பார்வையில் தமிழ் சினிமா எப்படியிருக்கிறது?'  ""இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்களுக்குப் பாதுகாப்பில்லாத நிலைதான் இருக்கிறது. ஆர்வத்தில் படம் எடுப்பவர்கள், அனுபவமில்லாமல் படம் எடுப்பவர்கள், ஒரு படத்தைப் பார்த்து பாதிக்கப்பட்டு இந்தப் படத்தைப் போல் எடுக்க வேண்டும் என்று நினைத்து எடுத்து ஏமாந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்
 
. தமிழ் சினிமாவில் ஒற்றுமையும், புரிதலும் இல்லை. தியேட்டர் உரிமையாளர்களுக்கும், தயாரிப்பாளருக்கும் உள்ள தூரம் அதிகம். ரசனை உள்ள வியாபாரியிடம் பணமில்லை, பணமுள்ள வியாபாரியிடம் ரசனை இல்லை. ஆர்ட்டிஸ்ட் வேல்யு உள்ள குப்பைப் படங்களை வாங்க இங்கே ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால் நல்ல கதையம்சம் உள்ள புதுமுகம் நடித்த படங்களை வாங்க யாரும் தயாராக இல்லை.'' பொறிந்து தள்ளிவிட்டு புறப்பட்டார் எஸ்.எஸ்.குமரன்.


thanx  - cinema express