அது என்னவோ தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு செய்தியாளர் சந்திப்பென்றாலே எட்டிக்காயாக கசக்கிறது. ஒரு எதிர்க்கட்சித் தலைவரிடம் நியாயமாக கேட்க வேண்டிய கேள்விகளைக் கேட்டால்கூட, சிடுசிடு கடுகடுவென கடுப்படிக்கிறார். அந்த கடுகடுப்பில் நேற்றைய ‘தூ’ சம்பவம் அடுத்தகட்ட அத்தியாயத்தை எட்டியிருக்கிறது. இதற்கு முன் விஜயகாந்த் பத்திரிகையாளர்களை இப்படி கடுப்படித்த சம்பவங்களில் சில இங்கே...
1) கடந்த 2013-ம் ஆண்டு 3ம் தேதி டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் பேசினார். அப்போது செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு, நீங்கள் எந்த பத்திரிகையை சேர்ந்தவர் என்று கேட்டதோடு, 'வீம்புக்கென்றே கேட்பீங்க..!' என்று சாடினார்.
2) கடந்த 2014ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தனது கட்சி எம்எல்ஏக்களை டெல்லிக்கு விஜயகாந்த் அழைத்து சென்று பிரதமர் சந்தித்தார். அப்போது, செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில், செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு ஆவேசப்பட்ட விஜயகாந்த், "நீ போகும் வரை நான் பேச மாட்டேன். கம்முனு இருக்கணும். ஒழுங்கா பேட்டிக் கொடுத்துக்கிட்டு இருக்கிறேன். உனக்கு கொடுக்கணும் என அவசியமில்லை. நா பட்டுபட்டுனு பேசுவேன். போயா...!' என்று ஆவேசப்பட்டார்.
3) மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட முயற்சி தடுக்கும் வகையில், கடந்த 2015 ஏப்ரல் மாதம் அதிமுகவை தவிர்த்து, தமிழக எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசி அவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, டெல்லிக்கு அழைத்து சென்று பிரதமரை சந்தித்தார் விஜயகாந்த். பிரதமரை சந்தித்து பேசிய பின்னர், குழுவினருடன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அமைதியான முறையில் செய்தியாளர்கள் சந்திப்பு சென்று கொண்டிருந்தது. பிரதமரை சந்தித்து பேசியது பற்றி விளக்கம் அளித்துக் கொண்டிருந்த விஜயகாந்திடம் இடையிடையே செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், "நான் இன்னும் படித்துப் பார்க்கவில்லை; படித்து விட்டு பதில் சொல்கிறேன்" என்றார்.
பின்னர் செய்தியாளர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பிக் கொண்டிருந்தனர். திடீரென்று எரிச்சலடைந்த விஜயகாந்த், கேள்வி எழுப்பிய செய்தியாளர் மீது கோபப்பட்டதோடு, அந்த செய்தியாளரை பார்த்து, "உனக்கு கொம்பா முளைச்சிருக்கு, நான் சொல்லிக்கிட்டே இருக்கேன் நீ திரும்ப திரும்ப அதையே கேட்டுக்கிட்டு இருக்கியே...?" என்றார் ஆவேசத்துடன். ஒரு கட்டத்தில் உனக்குக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது என்று கூறிய விஜயகாந்த், "சொன்னதை கேட்கா விட்டால் மைக்கை தூக்கி வீசி விடுவேன்" என்றார்.
4) 2015 அக்டோபர் 17ம் தேதி சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஒரு செய்தியாளர், "ஏன் சார் திடீர் மவுனம்?" என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த விஜயகாந்த், "என்ன மவுனம், நான்தான் பேசிக்கொண்டே இருக்கேனே... கேமராவை பார்த்து பேசிக்கொண்டேதான் இருக்கிறேன். என்ன மவுனம் என்று நீங்கள்தான் சொல்லணும்?' என கோபத்துடன் கூறினார். மேலும், சிவாஜி சிலை தொடர்பான கேள்விக்கு, "அதெல்லாம் நீங்கள் கேட்க வேண்டிய கேள்வி இடமே மாறி வந்து கேட்கிறீங்க!' என்று ஆவேசப்பட்டார்.
5) கடந்த 2012 அக்டோபர் மாதத்தில் சென்னை விமான நிலையத்தில் விஜயகாந்திடம், தே.மு.தி.க. எம்.எல்.ஏ.க்கள் 4 பேர் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்தது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அதற்கு பதிலளிக்க மறுத்துவிட்ட விஜயகாந்த், "இந்தக் கேள்விகளை ஜெயலலிதாவிடம் போய் கேளுங்கள் என்று கூறியதோடு, தொடர்ந்து கேள்வி எழுப்பிய ஒரு செய்தியாளரை, "உன் பத்திரிகை எனக்கு சம்பளமாடா தருது, நாயி!" என அருவருக்கத்தக்க முறையில் பேசி, அவரை அடிக்கப் பாய்ந்தார். மேலும் கேள்வி கேட்க முற்பட்ட ஒரு செய்தியாளரிடம், "உனக்குப் பேட்டி கொடுக்கணும்கிற அவசியம் எனக்குக் கிடையாது; பட்டுப் பட்டுனு பேசிருவேன் போய்யா...." என்று ஆவேசப்பட்டார்.
6) சென்னையில் நேற்று கடந்த (டிசம்பர் 27ம் தேதி) நடந்த செய்தியாளர் சந்திப்பின்போது, ‘2016–ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்குமா? என்று செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த விஜயகாந்த், "ஆட்சியை பிடிக்கவே பிடிக்காது போதுமா? இந்த கேள்வியை ஜெயலலிதாவிடம் கேட்க முடியுமா? கேட்கவே மாட்டீங்களே? பயப்படுவீங்க... பத்திரிகைகாரங்களா நீங்க.... த்தூவ்...!" என்று செய்தியாளர்களை பார்த்து உமிழ்ந்தார்.
அப்போது, அந்த செய்தியாளர், "ஜெயலலிதா பிரஸ் மீட் கொடுத்தால் கேட்கத்தான் செய்வோம்" என பதில் சொன்னதற்கு, "ஏன் பிரஸ் மீட் கொடுக்கலை என்று கேளுங்கள். உங்க முதலாளிங்க சொன்னா நீங்க கேப்பீங்க" என்று செய்தியாளர்களைப் பார்த்து கூறினார்.
vikatan