Showing posts with label கேபிள் சங்கர். Show all posts
Showing posts with label கேபிள் சங்கர். Show all posts

Thursday, January 22, 2015

கேபிள் சங்கர் மறைமுகமாகத்தாக்கிய வலைப்பதிவர்

எங்கே இருக்கிறது அந்த இணையதளம்? - கோணங்கள் 14


எப்போது தொழில்நுட்பம் வளர ஆரம்பித்ததோ, அப்போதிலிருந்தே பைரஸியும் ஆரம்பமாகி விட்டது. திரையரங்கு மூலம் கிடைக்கும் வருமானத்தைத் தாண்டி, சிறிய முதலீட்டில் படமெடுத்து, உலகப் பட விழாக்களில் திரையிட்டுக் கோடிகளில் வருமானம் சம்பாதிக்கும் இயக்குநர்கள் எப்படிப்பட்ட படத்தை இம்மாதிரியான விழாக்களில் பங்கெடுக்க வைக்கிறார்கள்?
எப்படி யாரைத் தொடர்புகொண்டு அங்கே தங்கள் படத்திற்கான ‘லாபி’ செய்ய முகவர்களைப் பிடிக்கிறார்கள்? இப்படிப்பட்ட திரைவிழா வித்தைகளை மற்றவர்களுக்குச் சொல்லித் தருவதில்லை என்பது துரதிர்ஷ்டமான உண்மை.
ஒவ்வொரு பட விழாக்களுக்கும் போய், முகவர்கள் மூலமாய்ப் படங்களை அனுப்பி, திரையிடத் தெரிவு செய்யப்பட்டு, அங்கே கிடைக்கும் விருதுகள் மூலமாக, அந்த நாட்டில் உள்ள உள்ளூர் விநியோகஸ்தர்கள் மூலம், டிவிடி, அங்கேயுள்ள தொலைகாட்சியில் ஒளிபரப்பும் உரிமை, ப்ளூ ரே, அங்கேயுள்ள திரையரங்குகள் எனப் பல வழிகளில் பணம் பார்க்க முடியும்.
சமீபத்தில் கவனம் பெற்ற ‘குற்றம் கடிதல்’ போன்ற படங்கள் அதன் தகுதிக்காகத் தெரிவு செய்யப்பட்டுத் திரையிடப்பட்டது. ஆனால் பல தமிழ்ப் படங்கள் கான் பட விழாவில், துபாய் பட விழாவில் திரையிடத் தேர்வானது என்று விளம்பரப்படுத்துவார்கள்.
பெரும்பாலும் இத்தகைய படங்கள் இம்மாதிரி விழாக்களில் ‘பெய்ட் ஸ்கிரீனிங்’ எனப்படும் பணம் கட்டித் திரையிடும் முறையில் செய்யப்படுவது. ஆனால் வெளியில் சொல்ல மாட்டார்கள். சரி இதெல்லாம், தொழில் ரகசியம். உலகப் படமெல்லாம் எதுக்கு உள்ளூரில் போட்ட பணத்தை எடுக்கத் தியேட்டர் தவிர வேறென்ன வழி என்று கேட்பது புரிகிறது.
இந்த இணையம் எங்கே இருக்கிறது?
மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கிறார் நண்பர் ஒருவர். அவருக்குச் சம்பளம் மட்டுமே எழுபதாயிரத்துக்கும் மேல். தமிழில் வரும் அத்தனை படங்களையும் பார்த்துக் கருத்து சொல்வார். அவருக்கு வீடு ஏதோ ஒர் அத்துவானக் காட்டுக்குள் இருக்கிறது. அலுவலகத்திலிருந்து நடு இரவில்தான் வீட்டுக்கே போய்ச் சேரும் ஆபத்பாந்தவர்.
“எப்படிங்க எல்லாப் படத்தையும் பார்க்க நேரம் கிடைக்குது?” என்று கேட்டபோது “எல்லாம் இணையத்திலிருந்து தரவிரக்கம் செய்த கோப்புகள்தான்” என்றார். எல்லாப் புதிய படங்களும் வெளியான அன்று மதியமோ.. அல்லது இரண்டாவது நாளோ ‘டாரண்ட்’ இணையதளத்தில் வந்துவிடுகிறது. அதைத்தான் பெரும்பாலும் திருட்டு வீடியோக்காரர்கள் பிரதியெடுத்து விற்கிறார்கள்.
வெளிநாட்டு உரிமம் கொடுப்பதால் தான் பைரஸி வருகிறது; அங்கிருந்து வரும் தம்மாத்துண்டு பணத்துக்கு ஆசைப்பட்டே மொத்த வருமானத்தை இழக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒருபுறம் இருக்கிறது. அதற்கு டாரண்ட் இணையதளமே மூலக் காரணமாக இருக்கிறது. ஆனால் இந்த இணையதளம் எந்த நாட்டிலிருந்து இயங்குகிறது என்று துருவினால் சரியான தகவல் கிடைப்பதில்லை.
இது முழுவதுமே அடிக்கடி எளிதில் இடத்தை மாற்றிக்கொள்ளும் ‘மேகக் கணினி’ எனப்படும் க்ளவுட் கம்ப்யூட்டிங் சர்வர் முறையில் விட்டலாச்சார்யா படத்தின் தந்திரக் காட்சிபோலத் தனது ஜாகையைச் சட் சட்டென்று மாற்றிக்கொண்டே செல்வதால் அதைத் துரத்திப் பிடித்து சர்வதேசப் போலீஸிடம் ஒப்படைப்பது பெரும் சவாலாக இருக்கிறது. மற்றத் திருட்டு வீடியோ இணையதளங்களுக்கும் இதுவே வள்ளலாகவும் இருக்கிறது.
ஆனால் திரையுலகினர் ஒரணியில் திரண்டால் டாரண்டை உண்டு இல்லை என்று பண்ணிவிட முடியும். ஆனால் அது நடப்பதே இல்லை. தவிர டாரண்ட்டை ஒரு இணைய ராபின் ஹுட் என்றே சொல்லிவிடலாம். டாரண்ட் திரைப்படங்களை மற்றும் பரப்புவதில்லை.
மென்பொருட்கள், மின்நூல்கள், ஆவணங்கள் எனக் காசு கொடுத்து வாங்க முடியாத விலையில் எட்டாத உயரத்தில் இருக்கும் ஏழை மற்றும் வளரும் நாடுகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறட்டும் என்றே அவர்கள் இவ்வாறு செய்வதாகத் தெரிகிறது. எப்படியிருப்பினும் குற்றம் குற்றம்தான்.
இப்படிக் கேட்பவர்களை என்ன செய்வது?
சமீபத்தில் நண்பர் ஒருவர் இயக்கி, ஓரளவுக்கு நல்ல நடிகர்கள் நடித்த படம்தான் அதன் வெளிநாட்டு உரிமையைப் பைரஸி வெளிவரக் கூடாது என்பதற்காக, படம் வெளியாகி இரண்டு நாட்கள் வரைக்கும் விற்கவில்லை. அப்படியிருந்தும் முதல் நாள் இரவே தெள்ளத் தெளிவான பிரதி இணையத்தில் உலாவியது.
இப்படி நமக்கும் உபயோகப்படாமல், எவனோ ஒருவன் சம்பாதிப்பதற்காக நாம் படமெடுப்பதா என்று யோசித்து டி.வி.டி.யைப் படம் வெளிவரும்போதே கொண்டு வந்தால் குறைந்தது பணம் தயாரிப்பாளருக்காகவாது வருமே என்று அதற்கான முயற்சி செய்தால் அதற்குப் பல இடங்களில் இருந்து ஆதரவும், எதிர்ப்பும் வந்து கொண்டிருக்கிறது.
50 ரூபாய்க்கு டி.வி.டி போட்டால் அதையே பிரதியெடுத்துத் திருட்டு வீடியோக்காரன் 30 ரூபாய்க்குக் கொடுக்க ஆரம்பிப்பான். பைரஸியை ஒழிச்சுருவீங்களா?,
“இது பிரதியெடுக்கவே முடியாத தொழில்நுட்பத்தில் வெளிவருகிறது” என்றால், இப்படித்தான் “பாய்ஸ் படத்தின் டி.வி.டி.யையும் சொன்னாங்க அதை அடுத்த நாளே உடைத்தெறிந்து பிரதியெடுத்துக் கள்ளச் சந்தையில் வெளியிடவில்லையா என்று கேட்கிறார்கள்.
“திருட்டு டிவி.டி வந்ததும், பேருந்து, உள்ளூர் தொலைகாட்சியில் போட்டுவிடுவார்கள். குறைந்த விலையில் நிஜ டி.வி.டி.யே கொடுத்தால், அதான் அம்பது ரூபா கொடுத்துட்டோம்ல இனிமேல் அது எங்களுடையது, அதை என்னவேணா பண்ணுவோம். அப்ப என்ன பண்ணுவீங்க?” என்று அடாவடியாகக் கேட்பவர்களும் நம் மத்தியில் இருக்கவே செய்கிறார்கள்.
இசை வெளியீடு நடக்கும்போதே இணையத்தில் தரவேற்றும் காலத்தில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கோம், நீங்கள் நிஜ டிவிடி கொடுத்தால், அதை வெளியிட்ட அடுத்த சில மணி நேரத்தில் இணையத்தில் தரவேற்றத்திருடர்கள் தயராக இருப்பார்கள் என்கிறார்கள் இன்னும் சிலர். அதேபோல் ஒரு டி.வி.டி. வந்தால் அதைப் பத்துப் பேர் பிரதிசெய்து போட்டுப் பார்க்கும் உலகத்தில் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு டி.வி.டி. வாங்கிக்கொள்வார்களா என்று கேட்கிறார்கள் இன்னும் பலர்.
இது வேண்டாத வேலையென எதிர்மறையாகவே பேசுபவர்கள் நிறைந்திருக்கும் சூழ்நிலையில் “பெரிய படமே நாலு நாள்தான் ஓடுது, சின்னப் படத்தைப் பார்க்க நாலு பேர்தான் வர்றான். இதுல நீங்க டி.வி.டி. வேற போட்டு விற்றீர்கள் என்றால் திரையரங்கு வரும் நாலு பேரும் காணாமால் போய் நாங்க எங்க தொழிலையே இழுத்து மூட வேண்டியதுதான் என்கிறார்கள் திரையரங்கு உரிமையாளர்கள்.
ஆனால் அந்த நாலு பேருக்குப் படம் காட்ட முடியாமல்தான் சின்னப் படங்கள், வெளியான இரண்டாவது காட்சியிலோ, அல்லது நான்காவது காட்சியிலோ திரையரங்கை விட்டுத்தூக்கப்படுகின்றன. அதற்குக் காரணம் திரையரங்க உரிமையாளர்கள் அல்ல. படங்களை வெளியிடும் முறை.
தமிழ் நாட்டைப் பொறுத்தவரை, வாடகை முறையில் விநியோகஸ்தர்கள் எடுப்பதில்லை. வருமான சதவிகித அடிப்படையில்தான் படங்கள் போடப்படுகின்றன. நான்கைந்து பேர் மட்டும் வரும் படங்களை அவர்கள் வெளியிட்டால் தியேட்டரைச் சுத்தம் செய்யப் பயன்படும் கிருமிநாசினி திரவம் வாங்கக்கூட வருமானம் இருக்காது என்பதும்தான் நிதர்சன உண்மை. பின் இதற்கு என்னதான் வழி? பேசுவோம்.


நன்றி - த இந்து 

கேபிள் சங்கர்

Friday, February 08, 2013

கேபிள் சங்கரின் ஈகோ

இடைவேளையே இல்லாத ஈகோ!

க.நாகப்பன்
சிச்சுவேஷன்-1 
 
 வில்லனின் மனைவி: ''நீங்க ஜெயிலுக்குப் போனாலும் பரவாயில்லை... வெட்டுங்க அவனை.''

ஹீரோவின் நண்பன்: ''இவ என்னடா... நம்மளைக் கொல்றதைவிட, அவ புருஷனை ஜெயிலுக்கு அனுப்புறதுலயே குறியா இருக்கா. வேற எதுவும் கனெக்ஷனா இருக்குமோ?''

சிச்சுவேஷன்-2

ஹீரோவின் நண்பன்: ''இந்தக் காலத்துப் பொண்ணுங்க காபி போடச் சொன்னா, யோசிச்சு ரொம்ப நேரம் ஆக்குவாங்க. ஆனா, 'கட்டிப்பிடி’ன்னா, உடனே கட்டிப்பிடிச்சிடறாங்க.''

இரண்டு நிமிட டிரெய்லரிலேயே கலகலவென ஈர்க்கிறது 'ஈகோ’. வழக்கமான காதல் ஃபீலிங்ஸ் இல்லாமல் சிரிப்புத் தோரணம் அமைத்திருக்கும் படத்தின் இயக்குநர் சக்திவேல், 'மொழி’ ராதாமோகனிடம் சினிமா கற்றவர். ''ஈஸ்வர் - கோமதி பெயர்களின் சுருக்கம்தான் 'ஈகோ’. ஒரு பொண்ணைத் திடீர்னு காணோம். குடும்பமே அந்தப் பொண்ணைத் தேடும்போது, தேவை இல்லாம ஹீரோவும் அவன் நண்பனும் அவங்ககிட்ட சிக்கிக்குறாங்க. அவன்தான் நம்ம பொண்ணைக் காதலிச்சுக் கடத்தியிருக்கான்னு அந்தக் குடும்பம் தப்பா நினைச்சிடுது. 'உன்னால நான் மாட்டிக்கிட்டேன்’,



 'என்னால நீ கெட்டே’னு ஹீரோவும் ஹீரோயினும் ஈகோவுல பொங்குறாங்க. அப்புறம் என்ன நடக்குதுனு காமெடியா சொல்லியிருக்கோம். 'இடைவேளைக்கு முன், இடைவேளைக்குப் பின்’லாம் படத்துல எதுவும் பெரிய வித்தியாசம் இருக்காது. 66 சீன்களும் காமெடிதான். முக்கியமா, படத்துல ஒரு துளிக் காதல்கூட இருக்காது.''


''காதல் கிடையாது, முழுக்கப் புதுமுகங்கள்... இன்னுமொரு யதார்த்த சினிமாவுக்கான பரிசோதனை முயற்சியா?''



''இந்த ஃபார்முலா இப்போ பரிசோதனை முயற்சி எல்லாம் இல்லைங்க. இதுதான் இப்போ ஹிட் மந்திரம். 'தென்மேற்குப் பருவக்காற்று’ விஜய் சேதுபதி, 'அட்டகத்தி’ தினேஷ், 'மைனா’ விதார்த் எல்லாம் அப்போ புதுமுகம். இப்போ ஒரே படத்துல பளிச் அடையாளத்தோட வளர்ந்து நிக்கிறாங்களே.


 அந்த நம்பிக்கையில்தான் புதுமுகங்களோட களம் இறங்கியிருக்கேன். ஹீரோ வேலு, திருச்சிப் பையன். அமெரிக்காவில் சிவில் இன்ஜினீயரிங் படிச்சிட்டு வந்திருக்கார். அப்பாவித்தனமான, மொக்கை வாங்கிட்டே இருக்கும் கேரக்டருக்குப் பொருத்தமா இருக்கார். ஹீரோயின் அனஸ்வரா, கேரளாப் பொண்ணு. சினிமா ஹீரோயினுக்கான எந்த கிளாமரும் இல்லாம பக்கத்து வீட்டுப் பொண்ணு மாதிரி ஹோம்லி லுக்ல ஈர்ப்பாங்க.  




படத்துல ஹீரோகூட சந்தானம் மாதிரி படம் முழுக்க டிராவல் பண்ண வேண்டிய கேரக்டர் ஒண்ணு இருந்துச்சு. 'கனாக் காணும் காலங்கள்’ பாலசரவணன் அதுக்கு செட் ஆனார். தான் வர்ற ஒவ்வொரு சீன், ஷாட், டயலாக்னு எல்லாத்துலயும் பெஸ்ட் கொடுக்கணும்னு உழைக்கிறார். வில்லேஜ், சிட்டினு எல்லா ஃபீல்டுக்கும் செட் ஆவார். வசன உச்சரிப்பு, மாடுலேஷன், ரியாக்ஷன்னு பட்டையைக் கிளப்புறார். நிச்சயம் காமெடியன்கள் வரிசைல பாலாவுக்குப் பலமான இடம் இருக்கு.''


''அதென்ன... இப்போ எல்லா இயக்குநர்களும் காமெடி ரூட்லயே பயணிக்கிறீங்க?''



''நான் 'கந்தகோட்டை’ படத்தை ஆக்ஷன் சப்ஜெக்ட்டாதான் பண்ணேன். படம் பார்த்தவங்க, 'ஆக்ஷன் சீக்வன்ஸ் நல்லா இருக்கு. ஆனா, அது விஜய் மாதிரி ஆர்ட்டிஸ்ட்கள் பண்ண வேண்டிய படம். நகுல் பண்ணதுதான் மைனஸ்’னு சொன்னாங்க. ஏத்துக்கிட்டேன். அதே சமயம், 'உங்களுக்குக் காமெடி நல்லா வருதே... அதை டிரை பண்ணுங்களேன்’னு சொன்னாங்க. அந்தச் சின்ன லீடைப் பிடிச்சுட்டு 'ஈகோ’ பண்ணேன். ஃபர்ஸ்ட் காப்பி பார்த்தவங்க வாய் விட்டுச் சிரிச்சாங்க. அந்தச் சிரிப்பு தியேட்டர்கள்ல அப்படியே ஆயிரம் மடங்கு எதிரொலிக்கணும்!''


நன்றி - விகடன்



டிஸ்கி - டைட்டிலுக்கான விளக்கம், நம்மாளு கேபிள் தான் இந்தப்படத்துக்கு வசனம் . சும்மா டைட்டில் அட்ராக்சனுக்காக , மற்றபடி ஈகோன்னா அவருக்கு என்னன்னே தெரியாது , ஜாலி டைப்

Monday, December 03, 2012

பிரபல பதிவர் கேபிள் சங்கர்-ன் முகமூடி!

முகமூடி!

கேபிள் சங்கர்

டாக்டர்... எனக்கு ஒண்ணுமில்லை. வீட்டுல சொன்னா புரிஞ்சிக்க மாட்டேங்குறாங்க. நீங்க சொன்னாலாவது அவங்க நம்புவாங்கன்னுதான் இங்க வந்தேன்" என்று மிக சீரியஸா பேசிய சுப்ரமணியை ஆழமாய் பார்த்தேன். மிக இளைஞனா இருந்தான். இவனுக்காக மொத்த குடும்பமே என்னிடம் அப்பாயின்ட்மென்ட் வாங்கிக்கொண்டு வந்து பேசியது எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது.
அவன் பேசுறத பார்த்தா நம்புறதா வேண்டாமான்னு தெரியலை டாக்டர்" அம்மா.
சம் டைம்ஸ் ஹி பிகம்ஸ் அரகண்ட்" அப்பா.
என்ன பண்ணுவீங்களோ சார்... அவனை சரி பண்ணிருங்க" அக்கா.
சார்... அவன் பயங்கரமான புத்திசாலி. அதனாலதானோ என்னவோ இப்படி ஆயிட்டான்னு தோணுது" தங்கை.
இப்படி ஆளாளுக்கு அவனை சரி செய்யுங்க சரி செய்யுங்க என்று கண்ணீர் மல்க கெஞ்சியது அவனைச் சந்தித்தே ஆக வேண்டும் என்ற எண்ணத்தை மேலும் அதிகப்படுத்தியது. இதோ இப்போது வந்திருக்கிறான்.
சொல்லுங்க சுப்ரமணி என்ன ப்ராப்ளம் உங்களுக்கு?"
சே.. எனக்கொண்ணும் ப்ராப்ளம் இல்லை சார்.. அவங்கதான் புரிஞ்சிக்க மாட்டேன்னு அடம்பிடிக்கிறாங்க. சினிமால, கதையில வந்தா நம்புறவங்க, நிஜத்தில அந்த மாதிரி இருந்தா நம்ப மாட்டேங்குறாங்க. முதல்ல நீங்களாவது என்னைப் புரிஞ்சிக்கங்க. அப்புறம் அவங்களை கன்வின்ஸ் பண்ணுங்க டாக்டர்" என்று நிறுத்தி நிதானமாய் பேசினான். எனது மனநல மருத்துவ அனுபவத்தில் இதுபோல நிதானமா, ஸ்தாபிதமா பேசிப் பார்த்ததில்லை. எல்லோருமே தமக்கு ஒன்றுமில்லை என்று சொன்னாலும் குரல் காட்டிக் கொடுத்துவிடும். அதீத கோபமோ, லேசான நடுக்கமோ, அல்லது தயக்கமான குரலோ இப்படி ஏதோ ஒன்று அவர்களின் மனநிலையை வெளிப்படுத்திவிடும்.
சரி நீங்க சொல்லுங்க... நான் புரிஞ்சிக்க ட்ரை பண்ணுறேன்" என்றதும் கொஞ்சம் சீரியஸா பார்த்தான். அவன் பார்வையில் என்னை வச்சி காமெடி கீமெடி பண்ணலையில்ல என்ற தொனி தெரிந்தது. கம் ஆன் சுப்ரமணி" என்றேன் அழுத்தமான ஆதரவுக் குரலில். அம்மாதிரியான குரல் எப்போதும் ஒரு நம்பிக்கையைக் கொடுக்கும்.
சார்... நான் ஒரு சூப்பர் ஹீரோ" என்று சொல்லிவிட்டு என் கண்களைப் பார்த்தான். என் கண்களில் கேலியைத் தேடுகிறானென்று புரிந்தது. இவன் சாதாரணன் அல்ல புத்திசாலி. நான் ம் சொல்லு" என்று அவனை உற்சாகப்படுத்தினேன்.
போன மாசம் ஆந்திராவுல ஒரு ரயில் ஆக்ஸிடென்ட் மயிரிழையில தவிர்க்கப்பட்டு ஆயிரத்துக்கு மேல உள்ள பயணிங்க தப்பினார்கள்னு செய்தி படிச்சீங்க இல்லை. அதை நான் தான் செய்தேன்."
ம்.. அப்புறம்"
நீங்க நம்பலை இல்லியா?"
நீயா அப்படி நினைச்சா நான் என்ன செய்ய முடியும் சுப்ரமணி? பிலிவ் யூ... மேல சொல்லுங்க."
ராத்திரி தூங்கிட்டேயிருக்கேன், கனவு மாதிரி சினிமாவுல காட்டுற ஃப்ளாஷ் கட் போல சீன் சீனா தெரியுது. ட்ரெயின் வேகமாய் போய்ட்டிருக்கு. ஒரே காத்தும் மழையுமா இருக்கு, ப்ரிட்ஜைத் தொடுற அளவுக்கு வெள்ளம் போவுது. அஞ்சு நிமிஷத்துல ட்ரெயின் ப்ரிட்ஜ நெருங்கப் போவுது. அடிக்கிற வெள்ளத்தில ப்ரிட்ஜ் ஆட்டம் காணுது. ட்ரெயின் அதும் மேல போச்சுன்னா மொத்தமும் வெள்ளத்தில அடிச்சிட்டுப் போயிரும்னு தெரியுது. சட்டுனு போனேன். ட்ரெயினோட ப்ரேக்கை சடனா போட்டுட்டு அப்படியே கையால பிடிச்சி நிறுத்தினேன். சரியா ப்ரிட்ஜுக்கு ஒரு ரெண்டடி முன்னால நிறுத்திட்டு வந்திட்டேன். இதை நான்தான் பண்ணேன்னு சொன்னா யாரும் நம்ப மாட்டேங்குறாங்க டாக்டர்."
எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை. ஒடுகிற ரயிலை கையால் தடுத்து நிறுத்தினேன் என்கிறவனை என்னவென்று சொல்வது? நிறைய தெலுங்கு படம் பார்ப்பவனா இருப்பானோ?
சரி அந்த ட்ரெயின் ஆக்ஸிடெண்ட் எங்க... எப்ப... நடந்துச்சு?"
போன வாரம் ஆந்திராவுல கிருஷ்ணா நதிமேல ராத்திரி 12.30 மணிக்கு."
அப்ப நீங்க எங்க இருந்தீங்க?"
வேறெங்கே டாக்டர் என் மடிப்பாக்கம் வீட்டு மாடில?" என்றான் சாதாரணக் குரலில்.
மடிப்பாக்கத்திலிருந்து ஆந்திரா கிருஷ்ணா நதி மீது ஓடும் ரயிலை கையால் தடுத்து நிறுத்தினேன் என்கிறான். நிச்சயம் ட்ரீட்மென்ட் கொடுக்கத்தான் வேண்டும்.
சரி. உங்களுக்குப் பிடிச்ச படங்கள் எது?"
எல்லா சூப்பர் ஹீரோ படங்களும், முக்கியமா காமிக்ஸ். அதுன்னா எனக்கு உயிர் டாக்டர். இன்னைக்கும் தெனம் ஒரு காமிக்ஸ் படிக்கலைன்னா எனக்குத் தூக்கம் வராது."
ஓகே... ஓகே... ஸோ... உங்களுக்கு நீங்க படிச்ச, பார்த்த புத்தகத்திலே வர்றா மாதிரி உங்களை நினைச்சிக்கிறீங்க அப்படித் தானே?"
டாக்டர் பார்த்தீங்களா நீங்க என்னை நம்பலை."

நீ சொல்றதை உங்க வீட்டுல மட்டுமில்ல யாரும் நம்பமாட்டாங்க. சரி உனக்கு அந்த மாதிரி பவர் இருக்குன்னு நீ சொல்றதை நான் நம்பினாலும் ப்ரூப் பண்ண லாஜிக்கு உதைக்குது இல்லை. கடவுளையே நேர்ல வான்னு கூப்பிடுற காலமிது."
சுப்ரமணி கொஞ்சம் யோசனையா இருந்தான். அவன் கண்களில் ஒருவிதமான பளபளப்பு இருந்தது. போதை வஸ்து ஏதாவது உபயோகிப்பவனோ?
சரி சுப்ரமணி உங்க டெலி ரொட்டீனை சொல்லுங்க?"
சார் தெனம் அஞ்சு மணிக்கு எழுந்திருவேன். அப்புறம் ஒரு மணி நேரம் வாக்கிங். சூடா ஒரு ஃபில்டர் காஃபி. எட்டு மணிக்கு டிபன் சாப்பிட்டுவிட்டு ஆபீஸுக்குக் கிளம்பினேன் என்றால் மதியம் சாப்பாட்டுக்குத்தான் எழுந்துப்பேன். வேலை பின்னி எடுத்துரும். அப்புறம் சாயங்காலம் ஏழு மணிக்கெல்லாம் வீட்டுக்கு வந்து டிபன் முடிச்சிட்டு சூப்பர் சிங்கர் பாத்துட்டு தூங்கிருவேன். எப்பவாச்சும் ஒரு பீர். அப்படி பீரடிச்சா ஒரே ஒரு தம் அடிப்பேன்" கடைசி ரெண்டு வரிகளை மட்டும் சுற்றும் முற்றும் பார்த்தபடி ரகசியமாச் சொன்னான்.
மிகச் சாதாரணனாய் இருந்தான். எல்லா காமிக்ஸ் கதையிலும் வரும் நாயகன் போல. நிஜவாழ்க்கையில் தன்னால் செய்ய முடியாத விஷயங்களையெல்லாம் தாம் படித்த காமிக்ஸ் நாயகர்களை கற்பனையாய் உருவகப்படுத்திக் கொண்டிருக்கிறான்.
சார்... ப்ரூப் வேணும்னா ரெண்டு நாள் முன்னாடி நடக்க இருந்த ஃப்ளைட் ஆக்ஸிடென்டை பத்தி பேப்பர்ல நியூஸ் வந்திருக்கு... அதுல பாருங்க; அவங்க எப்படி காப்பாத்தப்பட்டாங்கன்னு" என்று தன் பையிலிருந்து ஒரு பேப்பரை எடுத்துப் போட, அதில் தலைப்புச் செய்தியா எல்லா டி.வி.க்களிலும் அலறிய நடுவானில் விபத்திலிருந்து தப்பிய விமானம் என்கிற தலைப்பில் வந்த விமானியின் பேட்டி. நடு வானில் விமானத்தின் இரண்டு இஞ்ஜின் செயலிழந்து விட்டதாகவும், அவ்வளவுதான் என்று நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில் என்ன நடந்தது என்று புரிவதற்குள் விமானம் தரையில் யாரோ அலுங்காமல் குலுங்காமல் வைத்தது போல இறங்கியது எப்படி என்று தம்முடைய பல்லாயிரம் மணி பயண அனுபவத்தில் புரிபடவேயில்லை. கடவுளின் ஆசி அன்று பயணித்தவர்கள் அனைவருக்கும் இருந்திருக்கிறது. அதனால்தான் உயிர் பிழைத்தோம் என்று கடவுளுக்கு வேறு நன்றி சொல்லியிருந்தார். அதைப் படித்து முடித்து நிமிர்ந்த போது சுப்ரமணியின் கண்களில்இப்பவாச்சும் நம்புறீங்களா?’ என்ற கேள்வி இருந்தது. ஆனாலும் என்னால் நம்ப முடியவில்லை.
உங்களுக்கு எப்படி இந்த மாதிரி விபத்துக்கள் எல்லாம் தெரியவரும்? மண்டைக்குள்ள வலி, காதுக்குள்ள தொடர்ந்து குரல்கள் கேட்பது போல? ஏதாச்சும் சிம்ப்டம்ஸ்?"
சார்... அது ஹலூசினேஷன் சார்" என்றவனை ஆச்சர்யமாய் பார்த்தேன். எனக்கு அப்படியெல்லாம் கிடையாது சார். திடீர்னு உடம்பெல்லாம் உஷ்ணமாகி கண்ணு முன்னாடி பாஸ்ட் பார்வர்ட் செய்தாய்ப் போல ட்ரெயின் ஓடுறது, புயலடிக்கிறது, பிரிட்ஜ் உடையப்போறது எல்லாமே ஓடும்."
நாட்டுல ஆயிரம் பிரச்னைங்க நடக்குது; இந்த மாதிரி எல்லாத்துக்கு நீ ஓடிட்டேயிருக்க முடியுமா?"
.. ஒண்ணு சொல்ல மறந்திட்டேன். எல்லா விஷயமும் இந்த மாதிரி தெரியாது. நான் சந்திச்ச ஆட்கள் அந்த விபத்துல மாட்டப் போறதா இருந்தாத்தான் எனக்குத் தெரியும். முக்கியமா பாஸ்ட் பார்வர்ட் ஆகும் போது கடைசியா அவங்க முகம்தான் ஃபீரிஸாகி நிற்கும். அன்னைக்கு ட்ரெயினில என்னோட ஸ்கூல் ஃப்ரெண்ட் இருந்தான். ப்ளைட்டுல நான் லவ் பண்ற பொண்ணு மது அவ இருந்தா."
அவங்களுக்குத் தெரியுமா நீதான் அவங்களைக் காப்பாத்தினேன்னு?"
எங்க சார்.. வீட்டுலயே நம்ப மாட்டேங்குறாங்க; அவங்க எங்க நம்பப் போறாங்க?"
இதெல்லாம் சாத்தியமா? என் அறிவுக்கு மனித மனங்களை அறிந்து தெரிந்த வகையில் இதெல்லாம் ஒருவிதமான மனப்பிறழ்வின் ஆரம்பமாகத்தான் தோன்றியது. இவனை தனியா விட்டுப் பார்த்தால் என்ன செய்கிறான் என்று வாட்ச் செய்ய வேண்டும் எனத் தோன்றியது. ஒரு நிமிஷம் இருங்க இதோ வந்திடறேன்" என்று சொல்லிவிட்டு என் தனியறைக்குள் சென்று அறையின் கதவு இடுக்கு வழியே அவனைக் கவனித்தேன். மிக அமைதியாய் உட்கார்ந்திருந்தான். டேபிளின் மேலிருந்த ஜேம்ஸ் சல்லியின் "The Human Mind” புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்தான். கண்கள் புத்தகத்தின் மேல் அலைபாய்ந்து கொண்டிருந்த நேரத்தில் செல்போன் அடித்தது. மனைவி தான் கூப்பிட்டாள்.
சொல்லும்மா."
இன்னும் ஒன் அவர்ல வர்றேன். ஒரே ஒரு பேஷன்ட்தான் இருக்காரு" என்று பேசிக்கொண்டே நிமிர்ந்து பார்த்த போது சுப்ரமணி அங்கேயில்லை. சட்டென கண்களால் சுற்றிப் பார்த்தபடி மனைவியின் போனை அப்புறம் கூப்பிடுவதா" சொல்லி கட் செய்துவிட்டு, நிமிர்ந்தபோது என் அறையின் வாசல் வழியா சுப்ரமணி உள்ளே நுழைந்தான். முகமெல்லாம் வேர்த்திருந்தது.

என்ன சுப்ரமணி என்ன இப்படி வேர்த்திருக்கு? என்ன ஆச்சு? ஆர் யூ கம்ஃபர்டபிள்? எங்க போயிருந்த?"
ஸ்பென்சர் ப்ளாசால பாம் வெச்சிருந்தாங்க. ஒரே களேபரம். என் அத்தைப் பொண்ணு அங்க இருந்தா. வெடிக்கிறதுக்கு ஒரு நிமிஷம்தான் இருக்கு. சட்டுனு எடுத்துட்டு கடல்ல போட்டுட்டு இப்பத்தான் வந்தேன். அதான் டயர்ட்" என்றான்.
ஒரு போன் அட்டெண்ட் செய்யும் நேரத்திலா? அவசரமாய் வெளியே போய் திருட்டு தம் அடித்துவிட்டு வந்து கதையளக்கிறானா? இல்லையே, வாசனை ஏதும் வரவில்லையே? இது சாத்தியமே இல்லை என்று அவனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தபோது, இன்னும் என்னை நம்பமுடியலை இல்லை? கொஞ்சம் டி.வி.யைப் போடுங்க" என்று அறையில் டி.வி.யின் ரிமோட்டை எடுத்து அவனே ஆன் செய்தான்.
வரிசையா எல்லா சேனல்களையும் ப்ரவுஸ் செய்தபடி வந்தவன் நியூஸ் சேனல்களாய் பார்த்துக் கொண்டிருக்க, அவன் முகத்தில் இருந்த தீவிரம் என்னை வியப்பில் ஆழ்த்தியது. எவ்வளவு தூரம் அவன் தன்னை ஒரு சூப்பர் ஹீரோவாக நம்புகிறான்? அவனையும் டி.வி.யையும் பார்த்துக் கொண்டேயிருந்தேன். எந்த ஒரு சேனலிலும் அவன் சொன்ன செய்தி ஏதும் வரவில்லை. அவன் முகத்தில் ஒரு ஏமாற்றமும் வெறுப்பும் உமிழ்ந்து கொண்டிருந்தது. இம்மாதிரியான பேஷன்டுகள் அப்படித்தான் ரெஸ்ட்லெஸாகி விடுவார்கள்.
இப்போது சுப்ரமணி என் முகத்தையும் டி.வி.யையும் மாறி மாறிப் பார்த்துக் கொண்டிருக்க, திடீரென டி.வி.யில் சமீப செய்தியில் சென்னை ஸ்பென்சர் மாலில் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. அடுத்த நொடியில் கடலில் வெடிக்க வைத்த மாயாவி யார்? பரபரப்பு தகவல்கள் இன்னும் சில நிமிடங்களில்" என்று வர, என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை.
இவன் நிஜம்தான் சொல்கிறான். இவன் ஓர் அபூர்வ பிறவி. என்னால் வெளி உலகுக்கு இவன் கொண்டு வரப்படும் போது எனக்குக் கிடைக்கக்கூடிய புகழ் அவனளவுக்கு உயரமாய் இருக்கப்போகிறது. இன்னும் ஒருசில டெஸ்டுகளை இவனை வைத்துச் செய்ய வேண்டும்.
வாவ்.. சுப்ரமணி யு ஆர் கிரேட். நான் நம்புறேன். நீ சூப்பர் ஹீரோதான். நாளைக்கு உன்னை ஒருமுறை ஹிப்னடைஸ் பண்ணி பார்த்துடறேன். அதுக்கு அப்புறம் நானே உனக்கு சர்டிபிகேட் தர்றேன். நாளைக்கு சாயங்காலம் வரைக்கும் நீ கொஞ்சம் பொறுமையா இருக்கணும். காலையில வந்திரு.. எல்லா டெஸ்டும் முடிச்சிடலாம் என்ன?" என்றதும் சுப்ரமணி முகத்தில் மகா சந்தோஷம் தெரிய சிரித்தான்.
இது போதும் சார். இனி எங்க வீட்டுல என்னை பைத்தியக்காரன்னு சொல்ல மாட்டாங்க.. அது ஒண்ணு போதும் எனக்கு. நிச்சயம் நான் காலையில வந்திர்றேன்" என்று உற்சாகத்தோடு வெளியேறினான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு க்ளினிக்கை பூட்டிக் கொண்டு கிளம்பினேன்.
கார் ஓட்டும் போதெல்லாம் சுப்ரமணியின் நினைப்பாகவே இருந்தது. நான் ஒரு சூப்பர் ஹீரோவோடு பேசியிருக்கிறேன். அவனுடய அசாதாரண சக்தியை நான்தான் முதலில் உணர்ந்தவன் என்று நினைக்கும் போது சந்தோஷமாய் இருந்தது. ஒரு பிரபல சைக்யாட்ரிஸ்ட் நான் அவனை நம்புவது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
நான் சந்தித்த ஆட்களுக்கு ஏதாவது பிரச்னைனாத்தான் எனக்கு தெரியும்" என்று அவன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தபோதுதான் அந்த விபரீத முயற்சியைச் செய்து பார்க்கலாமா என்று தோன்றியது.
எதிர்புறத்தில் வேகமாய் ஒரு பெரிய கண்டெயினர் லாரி வந்து கொண்டிருக்க, ஒரு முடிவோடு காரை வேகமாய் லாரியை நோக்கிச் செலுத்தினேன். சுப்ரமணி வருவான் என்கிற நம்பிக்கையோடு...
ம் சுப்ரமணி முகத்தில் மகா சந்தோஷம் தெரிய சிரித்தான்.
இது போதும் சார். இனி எங்க வீட்டுல என்னை பைத்தியக்காரன்னு சொல்ல மாட்டாங்க.. அது ஒண்ணு போதும் எனக்கு. நிச்சயம் நான் காலையில வந்திர்றேன்" என்று உற்சாகத்தோடு வெளியேறினான். அவன் போவதையே பார்த்துக் கொண்டிருந்துவிட்டு க்ளினிக்கை பூட்டிக் கொண்டு கிளம்பினேன்.
கார் ஓட்டும் போதெல்லாம் சுப்ரமணியின் நினைப்பாகவே இருந்தது. நான் ஒரு சூப்பர் ஹீரோவோடு பேசியிருக்கிறேன். அவனுடய அசாதாரண சக்தியை நான்தான் முதலில் உணர்ந்தவன் என்று நினைக்கும் போது சந்தோஷமாய் இருந்தது. ஒரு பிரபல சைக்யாட்ரிஸ்ட் நான் அவனை நம்புவது எனக்கே ஆச்சர்யமாக இருந்தது.
நான் சந்தித்த ஆட்களுக்கு ஏதாவது பிரச்னைனாத்தான் எனக்கு தெரியும்" என்று அவன் சொன்னது ஞாபகத்துக்கு வந்தபோதுதான் அந்த விபரீத முயற்சியைச் செய்து பார்க்கலாமா என்று தோன்றியது.
எதிர்புறத்தில் வேகமாய் ஒரு பெரிய கண்டெயினர் லாரி வந்து கொண்டிருக்க, ஒரு முடிவோடு காரை வேகமாய் லாரியை நோக்கிச் செலுத்தினேன். சுப்ரமணி வருவான் என்கிற நம்பிக்கையோடு...


நன்றி - கல்கி, கேபிள் சங்கர் , முக மூடி , புலவர் தருமி