Showing posts with label கே பாலச்சந்தர். Show all posts
Showing posts with label கே பாலச்சந்தர். Show all posts

Thursday, October 25, 2012

ஆரோகணம்

ஆரோகணம்' பட இயக்குநர் லட்சுமியை பாராட்டி பாலச்சந்தர் எழுதிய கடிதம்

 'ஆரோகணம்' பட இயக்குநர் லட்சுமியை பாராட்டி பாலச்சந்தர் எழுதிய கடிதம்
சென்னை,அக்.20(டி.என்.எஸ்) லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கி அக்டோபர் 26 இல் உலகமுழுவதும் வெளிவரத்தயாராக இருக்கும் 'ஆரோகணம்' படம் பார்த்தவர்களை எல்லாம் பரவசப்டுத்தியுள்ளது.ஆரோகணம் பார்த்து மிகவும் மகிழ்ந்த- நெகிழ்ந்தவர்களில் ஒருவர் நூறுபடங்களை இயக்கியவரும், தாதா சாகேப் விருது வாங்கியவருமான இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர். படம் பார்த்து விட்டு இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணனுக்கு தனது மனம்திறந்த வாழ்த்துக் கடிதம் ஒன்றை எழுதியிருக்கிறார்.

அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

"கே. பாலசந்தர்,

சென்னை.அன்புள்ள லட்சுமி

மறைந்த டி.பி.ராஜலக்ஷ்மியின் காலம் தொட்டு, தமிழ் சினிமா பல பெண் திரைப்பட இயக்குநர்களைப் பார்த்திருக்கிறது. ஆனால் நேர்மையாகச் சொல்லவேண்டும் என்றால், ஆணாதிக்கம் நிறைந்த இந்த சினிமாத் தொழில் துறையில் அவர்கள் யாருமே ஊக்குவிக்கப்படவில்லை என்பதும், அதனால் அவர்களில் எவருமே இந்திய சினிமா வரலாற்றில் நிலையான இடத்தைப் பிடிக்க முடியவில்லை என்பதும் உண்மையிலேயே வருத்தத்துக்குரிய விஷயம்.

குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய அளவில் தகுதி பெற்ற, சினிமாவுக்குப் போதுமான அளவு தங்களது பங்களிப்பைக் கொடுத்திருக்கின்ற அபர்ணா, சுஹாஸினி, ரேவதி போன்ற பல பிரபலங்களும், வாய்ப்பு கிடைத்தால் இன்னும் பல சாதனைகள் புரியக்கூடிய ‘பீப்ளி லைவ்’ படப் புகழ் இயக்குநர் அனுஷா ரிஸ்வி போன்ற இயக்குநர்களும் இருந்தாலும், இந்திய சினிமாவில் நடிகைகளுக்குக் கிடைத்த அதே அளவு ஊக்குவிப்பு பெண் தொழில்நுட்பக் கலைஞர்களுக்குக் கிடைக்கவில்லை என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். ஆனால், பெண் இயக்குநர்களிடமிருந்து நமக்கு சில அருமையான பங்களிப்புகளும் கிடைத்துள்ளன. சிறப்புமிக்க அந்த வரிசையில் சமீபத்திய வரவு, ‘ஆரோகணம்’ என்ற உங்களின் முதல் படைப்புடன் நீங்கள்!

உங்களைப் பார்த்தபோது, உங்களது துணிச்சலை நிரூபிக்க ஏன் திரைப்பட இயக்கம் என்னும் இவ்வளவு கடினமான பாதையைத் தேர்ந்தெடுத்தீர்கள்  என நான் முதலில் வியந்தேன். ஆனால் படத்தைப் பார்த்த பின்புதான், உங்களை உந்தித் தள்ளியது நல்ல சினிமா மீதான உங்களது காதலும் பெருவிருப்பமும் தான் என்று முழுமையாகப் புரிந்துகொள்ளவும் அறிந்துகொள்ளவும் முடிந்தது.

‘ஆரோகணம்’ திரைப்படத்தில், அந்த விவரித்தலில் ஓர் ஆர்வமும் உற்சாகமும் வெளிப்படையாகத் தெரிகிறது. உங்களது கதாபாத்திரங்கள் பெண்மைக்குரிய நுட்பமான அறிவோடு இருப்பது, நிஜமாகவும் நம்பக்கூடியதாகவும் இருக்கிறது. அவர்கள் அவலநிலையில் இருந்தாலும் உறுதியானவர்கள்..

விவேகமற்றவர்களாக இருந்தாலும் பாராட்டுக்குரியவர்கள்! உங்கள் செலுலாய்ட் கதைப்பரப்பில் உலவும் கதாபாத்திரங்கள் எல்லாம் அதற்குத் தொடர்பில்லாதது போல் தெரிந்தாலும், எப்படியோ கதைக்கான முக்கியமான பகுதியாகிவிடுகின்றனர். நன்கு பரிச்சயமான மற்றும் அவ்வளவாக பரிச்சயமில்லாதமுகங்கள் அனைவருமே அவர்களின் தற்செயலான மற்றும் தீவிரமான பாத்திரப்படைப்புகளால் மனதில் ஆழப்பதிகின்றனர்.


 கருவை எடுத்துரைப்பதில் கொண்டிருக்கும் கட்டுப்பாடு அதேசமயம் கதையின் வேகம்.. இரண்டுமே உண்மையில் மிகுந்த பாராட்டுக்குரியவை. வசனங்களும் அவற்றைப் பேசியிருக்கும் விதமும் மிகச் சரியாக நிறைவாக அமைந்துள்ளன.

இப் படத்தில், வைக்கப்பட்டிருக்கும் கேமரா கோணங்கள் ஆகட்டும்.. தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்‘லொகேஷன்’கள் ஆகட்டும்.. எடுக்கப்பட்டிருக்கும் ‘ஷாட்’கள் ஆகட்டும்.. எல்லாவற்றிலுமே தொழில்நுட்ப நுண்ணறிவு பெருமளவில் தெரிகிறது. ‘க்ளோஸ்&அப்’ காட்சிகளில், அவை வைக்கப்பட்டிருக்கும் நிலை (பொஸிஷன்) மற்றும் காலஅளவு (டியூரேஷன்) ஆகியவை மிகச் சரியாக இருப்பதால் உண்மையில் மனதில் ஆழப்பதிவதாய் இருக்கிறது. இந்தப் பெருமை அனைத்தும் உங்களது தொழில்நுட்பக் கலைஞர்களின் குழுவுக்கும் உங்களின் கூரிய சினிமாக் கற்பனைக்குமே!

படத்தின் இசையும் எந்தவித உறுத்தலும் இன்றி, நம் மனதைக் கவர்கிறது. இரண்டு பாடல்களும் அவற்றைப் படமாக்கியிருக்கும் பின்புலமும் மிக அழகான கலவையாக வெற்றிபெறுகின்றன. இதனாலேயே, மிகத் தீவிரமான அதேசமயம் சுவாரஸ்யமான இந்தத் திரைப்படத்தின் ‘மியூஸிகல் வேல்யூ’ கூடியிருக்கிறது.

ஒரு திரைப்படம் என்பது, அதைப் படைப்பவருடைய ஆத்மாவின் பிரதிபலிப்பு. அது, அந்தப் படைப்பாளியின் மனதின் நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது.. அவருடைய உள்நோக்கங்களைப் பகிரங்கப்படுத்துகிறது.. அவருடைய நாட்டத்தை வரையறுக்கிறது.. அவருடைய பெருவிருப்பத்தை

விவரிக்கிறது.. இந்த அளவுகோல்களால், தமிழ் சினிமா வரலாற்றில் சிறந்த எதிர்காலமுள்ள திரைப்படப் படைப்பாளிகளில் ஒருவராக நீங்கள் தோன்றியிருக்கிறீர்கள்.

துரிதமாக விரைந்துகொண்டிருக்கும் என் படைப்பாற்றலின் இந்த அந்திப்பொழுதில், இடையில் சிறிது நிறுத்தி என்னைச் சிந்திக்க வைத்திருக்கிறீர்கள். என் காலத்தை நிறுத்தி, அப்படியே உறைய வைத்துவிட்டீர்கள்.. தொடர்ந்த அந்த 2 மணி நேரத்தில் உங்கள் புத்திசாலித்தனம், முழுமை, உறுதியான நம்பிக்கை, துணிச்சல் ஆகியவற்றைக் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள், தமிழ் சினிமாவை இன்னும் சிறிதுஉயரத்தில் நிற்கச் செய்திருக்கிறீர்கள்.. இன்னும் கொஞ்சம் கர்வத்தோடு நடைபோட வைத்திருக்கிறீர்கள்..

இவை இரண்டையும் பெண்மைக்குரிய நேர்த்தியோடு செய்திருக்கிறீர்கள்! மேலும், இந்தப் படத்தை நம்பமுடியாத அளவில் மிகக் குறைந்த செலவில் எடுத்திருப்பதுதான் இதில் மிகவும் திகைப்பூட்டும் விஷயம்!

அதற்காக உங்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள்! மற்ற படைப்பாளிகள் உங்கள் மதிநுட்பத்திலிருந்து தங்களுக்கான குறிப்பை எடுத்துக் கொள்வார்கள் என்று நான் உண்மையாக நம்புகிறேன். இந்த ‘ஆரோகணம்’ படத்துக்காக மட்டுமல்ல, இன்னும் நீங்கள் இயக்கத் தீர்மானிக்கவிருக்கும் 99 படங்களுக்கும் சேர்த்து வெற்றியே கிடைக்க நான் வாழ்த்துகிறேன்.


உங்கள் 100&வது திரைப்படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொள்ள முடியாமல் போவதற்கு வாய்ப்பு உண்டு. ஆனாலும், அந்த விழா நிகழும் வேளையில்.. நிச்சயம் அது நடக்கும்.. அப்போது, நான் இந்த மாலை நேரத்தையும் இந்த இடத்தையும், ஒரு படைப்பாளியாகவோ ‘தாதா சாகேப் பால்கே’ விருது பெற்றவனாகவோ இல்லாமல், நல்ல சினிமாவின் காதலனாக நான் பகிர்ந்துகொண்டதை நீங்கள்

நினைவுகூர்வீர்கள் என்று நம்புகிறேன்..!

‘ஆரோகணத்’தின் அத்தனை எழுச்சியூட்டும் குறிப்புகளுக்கும் நன்றி லக்ஷ்மி.. கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்!

விஜியைப் பற்றி ஒரு வார்த்தை… சரிதாவை வைத்து நான் வரலாறு படைத்திருக்கிறேன்.. உண்மையிலேயே உயர்ந்த காவியங்கள் படைத்துள்ளேன். அந்தத் திறமை உண்மையிலேயே மரபு வழி வந்தது என்று விஜி நிரூபித்திருக்கிறார். மேலும், அவரும் என்னுடைய கண்டுபிடிப்பு என்பதை இந்தவேளையில் சொல்லிக்கொள்வதில் நான் அளவுகடந்த பெருமிதம் கொள்கிறேன். அவருடைய ஆற்றலை மீண்டும் கண்டெடுத்திருப்பதற்கு உங்களுக்கு மிகுந்த பாரட்டுக்கள்.

குறைபாடற்ற விதத்தில் நடிகர்களுக்குப் பாத்திரங்களைப் பகிர்ந்தளித்திருக்கும் உங்கள் பாங்குக்கு,

வெல்டன் லக்ஷ்மி!

ஜெய்ஹிந்த்!

கே.பாலசந்தர். (டி.என்.எஸ்)
Oct 20, 2012 







https://lh6.googleusercontent.com/-7AdflGlYRdk/UIFam8iFgEI/AAAAAAAAjyk/befPUkQ94LQ/6%2520SHEETa.jpg 

லட்சுமி ராமகிருஷ்ணனின் 'ஆரோகணம்'
நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் முதல்முதலாக இயக்கியுள்ள ஆரோகணம் திரைப்படம் வரும் அக்டோபர் 26-ம் தேதி வெளியாகிறது.
தமிழில் மிக குணசித்திர நடிகைகளில் ஒருவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவருக்கு நடிப்பு தவிர மேலும் பல திறமைகளும் உண்டு.



கேரளத்தை பூர்வீகமாகக் கொண்ட இவர் இப்போது ஆரோகணம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில்சம்பத், ஜெயப்பிரகாஷ், விஜி சந்திரசேகர், உமா பத்மநாபன், ராஜி விஜயசாரதி ஆகியோருடன், புதியவர்களான விரேஷ்,ஜெய் குஹேனி ஹீரோ, ஹீரோயினாக நடித்துள்ளனர்.



'ஆரோகணம்' படத்தை ஏவிஏ புரொடக்ஷன் சார்பாக திரு. அனுப் தயாரிக்க, மங்கி கிரியேட்டிவ் லேப் இணைந்து தயாரித்துள்ளது.


நன்றி - சென்னை ஆன் லைன், மாலை மலர் , சினிமா 123