தீர்வை நோக்கி நகர வேண்டிய ஒரு பிரச்சினையின் தீவிரத்தைப் பேசுகிறது ‘குற்றம் கடிதல்'. இதற்காகப் பல்வேறு வாழ்வியல் பின்புலங்கள் காட்டப்படுகின்றன. பல்வேறு கலாச்சார நெருக்கடிகள் முன்வைக்கப்படுகின்றன. 'பாலியல் கல்வி' எனும் மையப் புள்ளியை நோக்கிப் பல்வேறு கோணங்களில் சமூக மனநிலையைக் குவிமையப் படுத்துகிறது இத்திரைப்படம்.
ஓர் ஆசிரியை எதிர்பாராத விபரீதத்தில் சிக்கியுள்ள பிரச்சினையாக உருவெடுத்திருக்கும் இத்திரைக்கதையில் எவ்விதச் சமரசமுமில்லை. அதே நேரத்தில் 'ஓர் இரவு ஒரு பகல்' என்ற கால அளவுக்குள், சக ஆசிரியைகள், மாணவர்களின் உலகம், சக உறவுகள், சுற்றியுள்ள சமூக ஏற்றத் தாழ்வுகள் எனப் படு வேகமாகப் பெரிய வட்டமடித்துப் பார்வையாளரைக் கட்டிப்போடுகிறது.
புதியதாகத் திருமணம் ஆகியுள்ள பெண் தன் கணவனோடு நள்ளிரவில், நெடுஞ்சாலையில், அதுவும் லாரியொன்றில் பதற்றத்தோடு பயணிக்கும் முதல் காட்சியே நம்முள் அதிர்ச்சியை விதைக்கிறது. இவர்கள் இவ்வளவு பதற்றத்தோடு எங்கே போய்க்கொண்டிருக்கிறார்கள்? நள்ளிரவில் அந்த அதிர்ச்சி விதை பெரிய விருட்சமாவதுதான் பின்தொடரும் படம்.
அவர்களை லாரியில் ஏற்றிச் செல்லும் டிரைவரைப் போலவே நாமும் அவர்களைப் பற்றிய ஏதேதோ கேள்விகளை உருவாக்கிக்கொள்கிறோம். ஆனால் அதற்கான விடைகள் அவ்வளவு எளிதானவையல்ல. டிரைவரிடம் கணவன் ஏதோ சொல்லி மறைக்க, மனைவியோ ''நான் என்ன நடந்ததுன்னு சொல்றண்ணே'' என்று காலையில் பள்ளியில் தொடங்கி நடந்த நிகழ்விலிருந்து எல்லாவற்றையும் சொல்லத் தொடங்குகிறாள்...
சென்னை நகரத்தின் புத்துணர்ச்சியான அதிகாலை. நகரத்தையொட்டிய கீழ் மத்தியதர வர்க்கக் குடும்பங்கள் நிறைந்த ஒரு வகையில் குப்பம் போன்ற சூழல். ஒரு ஏழை மாணவன் பள்ளிக்குப் புறப்படுவதற்குள் அங்கு நிகழும் பல்வேறு நிகழ்வுகள். சாலையில் நடந்துசெல்லும் ஒருவரை கார் அடித்துவிட்டுத் தப்பித்துச்செல்ல முற்படுவதைத் தடுக்கும் மக்கள். அந்தக் காருக்குச் சொந்தமானவரைக் கண்டிக்கிறார் ஒரு ஆட்டோக்கார 'தோழர்'.
அது மட்டுமின்றி அடிபட்டவரை மருத்துவமனைக்கு எடுத்துச்சென்று சிகிச்சையளித்து மீண்டும் இங்கேயே கொண்டுவந்து விடவேண்டுமெனக் கட்டளையிட்டு உடன் ஒருவரை அனுப்பிவைக்கவும் செய்கிறார். பள்ளி மாணவன் அவரின் ஆட்டோவைச் சுறுசுறுப்பாக ஓட்டிச்செல்ல அவனது தாய் அவனைச் சீக்கிரம் பள்ளிக்கு அனுப்பிவைப்பதற்காக அவனைத் தேடித் துரத்திவந்து பிடித்துவிடுகிறாள்.
இத்தகைய சூழலிலிருந்து வருகிற அச்சிறுவன் எப்போதும் உற்சாகமானவனாக இருக்கிறான். இந்த உலகை அவன் எதிர்கொள்ளும் விதமே அலாதியானது. பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் வருவதற்குமுன் தன்னைச் சுற்றியுள்ள சக மாணவர்களை
உற்சாகமாக வைத்துக்கொள்பவன் அவன். அந்த மாணவனின் ஒரு செய்கை, அதற்கு அனிச்சையாக எதிர்வினையாற்றும் ஆசிரியை.. அரங்கேறுகிறது விபரீதம்!
திருமணம் முடித்துப் பள்ளி திரும்பிய ஆசிரியைக்கு அந்த விபரீதம் பேரிடியாக மாறுகிறது. பள்ளியெங்கும் செய்தி பரவிய இச்செய்தி காட்சி ஊடகங்களின் நிகழ்நேர விவாதப் பொருளாக மாறிக் காட்டுத் தீயாய் திசையெங்கும் பரவுகிறது.
பிரச்சினையின் தீவிரத்தில் இருந்து தப்பித்தல், அதற்கான வழிகாட்டுதல்களை ஏற்றுக்கொள்ளுதல், திட்டமிடாத இரவுநேரப் பயணம், காவல் துறையின் விசாரணை, பாதிக்கப்பட்டோர் தரப்பின் தவிப்பும் கோபமும், சம்பந்தப்பட்டவர்களின் குற்ற உணர்வு... இப்படிப் பரபரப்பான சூழ்நிலைகளைத் தெளிந்த நீரோடை போன்ற திரைக்கதையுடன் சொல்லியிருக்கிறார் அறிமுக இயக்குநர் பிரம்மா. அவரும் அவரது குழுவினரும் கடுமையாக உழைத்துச் சிறந்த ஒரு படத்தைத் தமிழுக்குப் படைத்துள்ளார்கள்.
கதை வேகமாக நகருகிறது. படத்தின் பேசுபொருளோடு சம்பந்தப்பட்ட பல விஷயங்களையும், கதாபாத்திரங்களையும் கையாண்டிருக்கும் விதம் அசாதாரணமானது. மாணவனின் அம்மாவின் அண்ணனாக வரும் ஆட்டோக்காரத் தோழரின் ஆளுமையான பாத்திரத்தை வார்த்த விதம். அவர் மருத்துவமனையில் டாக்டர்களை எதிர்கொள்ளும் விதமும், அந்த ஆசிரியையை இறுதியில் அணுகும் விதமும் கம்யூனிஸக் கொள்கைகள் அடிமட்ட அளவில் நீர்த்துப் போகாமல் இருப்பதைப் பதிவு செய்கிறது.
இப்படத்தில் பாரதியின் 'சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா' என்ற பாடல் அமைந்தவிதமும், அதைக் காட்சிப்படுத்திய முறையும் பிரமிக்க வைப்பவை. படத்தின் கதையையும், சூழலையும் இயக்குநர் சொல்லக் கேட்டு, அதையொட்டி பாரதி பாடலைப் படைத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றும். அவ்வளவு கச்சிதம். வித்தியாசமான பாடல்களுக்காக அறைபோட்டு யோசிக்கும் நம் இயக்குநர் வித்தகர்கள் அவசியம் கவனிக்க வேண்டிய அம்சம் இது.
பொறுப்புமிக்க தலைமையாசிரியர், அவரது பாசமிகு மனைவி, ஆசிரியை பிரிந்து தனித்து வாழும் அம்மா, கணிக்க முடியாத குணாதிசயம் கொண்ட லாரி டிரைவர், போராடும் மாணவனின் மாமா, பேசாமல் பேசிடும் மாணவனின் தாய்... இந்தக் கதாபாத்திரங்கள் வெறுமனே திரைக்கதைக்காக வசனம் பேச வலம் வராமல், ஒவ்வொருவரின் பின்புலமும் ஆழமாகக் காட்சியினூடே பதிவாகியிருப்பது, சினிமா எனும் ஊடகத்தின் மீதான படைப்பாளியின் ஆளுமையைக் காட்டக்கூடியவை.
விறுவிறுப்பான 'ரோடு மூவி'க்குரிய அம்சம் உள்ள இந்தப் படத்தில் உள்ள லாட்ஜ் வாழ்வியல் தொடங்கித் தெருக்கூத்து காட்சிகள் வரை இடம்சார்ந்த பண்பாட்டு விழுமியங்களையும் உள்ளடக்கிய பல்வேறு அம்சங்கள் தமிழ் சினிமாவின் மீது புதிய வெளிச்சத்தைப் பாய்ச்ச முயன்றுள்ளதைப் பாராட்டத்தான் வேண்டும்.
கல்வித்துறைச் சீர்திருத்தங்களுக்கு மாணவனே தயாராகிவிட்டாலும் சுற்றியுள்ள சமூகமும் ஆசிரியர்களும்கூட இன்னும் தயாராகவில்லை என்பதுதான் உண்மை. பிரச்சினையே நம் சமூகம்தான் என்று காட்சி ஊடகத்திற்கே உண்டான நியாயத்தோடு ஒரு அழகான குறுங்கதையாடலை நிகழ்த்தியுள்ள இப்படத்தின் மீது தேசிய வெளிச்சம் பாய்ந்துள்ளது ஒரு நல்ல சகுனமே.
பிரம்மா
நம் சமூகத்தில் கல்வி முறைச் சீர்திருத்தம் தொடர்பான விவாதத்தைத் தூண்டும் படைப்பு, சமகாலப் பள்ளிகளின் இயல்பு வாழ்க்கையைப் பதிவு செய்யும் திரைப்படம், முழுக்க முழுக்க சீரியஸான விஷயங்களை மட்டுமே பேசும் படம்... இப்படிக் கற்பனை செய்துகொண்டு 'நல்ல பிரின்ட் வரட்டும் பார்த்துக்கொள்ளலாம்' என்று என்று நீங்கள் முடிவு செய்துவிட்டால், 'த்ரில்லர்' போன்ற விறுவிறு சினிமாவைத் திரையரங்கின் சீட் நுனியில் அமர்ந்து ரசிக்கும் பரவச அனுபவத்தை இழந்துவிடுவீர்கள்!
- Vijayவிமர்சனம் மிக அருமை ... தமிழில் இப்படியொரு படம் பார்த்து ரொம்ப நாளாச்சு .... வாழ்த்துகள் ...Points555
- கேசவன். செஉங்களின் குற்றம் கடிதல் திரைப்படத்தை திரையரங்கில் காண ஆவலோடு உள்ளேன்.....about 15 hours ago · (0) · (0) · reply (0) ·
நன்றி
த இந்து