சொன்னால் நம்பமுடியாதுதான்! நாச்சியாரம்மாவும் இப்படி மாறுவாள் என்று
நினைக்கவேயில்லை.
அவள் எனக்கு ஒன்றுவிட்ட சகோதரி. நாங்கள் எட்டுப்பேர் அண்ணன் தம்பிகள்.
‘பெண்ணடி’யில்லை என்று என் தாய் அவளைத் தத்து எடுத்துத் தன் மகளாக்கிக்கொண்டாள்.
அம்மாவைவிட எங்களுக்குத்தான் சந்தோஷம் ரொம்ப. இப்படி ஒரு அருமைச் சகோதரி
யாருக்குக் கிடைப்பாள்? அழகிலும் சரி, புத்திசாலித்தனத்திலும் சரி
அவளுக்கு நிகர் அவளேதான்.
அவள் ‘மனுஷி’யாகி எங்கள் வீட்டில் கன்னிகாத்த அந்த நாட்கள் எங்கள்
குடும்பத்துக்கே பொன் நாட்கள்.
வேலைக்காரர்களுக்குக்கூட அவளுடைய கையினால் கஞ்சி ஊற்றினால்தான் திருப்தி.
நிறைய்ய மோர்விட்டுக் கம்மஞ்சோற்றைப் பிசைந்து கரைத்து மோர் மிளகு
வத்தலைப் பக்குவமாக எண்ணெயில் வறுத்துக் கொண்டுவந்து விடுவாள். சருவச்
சட்டியிலிருந்து வெங்கலச் செம்பில் கடகடவென்று ஊற்ற, அந்த மிளகு வத்தலை
எடுத்து வாயில் போட்டு நொறு நொறுவென்று மென்றுகொண்டே, அண்ணாந்து கஞ்சியை
விட்டுக்கொண்டு அவர்கள் ஆனந்தமாய்க் குடிக்கும்போது பார்த்தால், ‘நாமும்
அப்படிக் குடித்தால் நன்றாக இருக்கும்போலிருக்கிறதே!’ என்று தோன்றும்.
ஒரு நாளைக்கு உருத்த பச்சை வெங்காயம் கொண்டுவந்து ‘கடித்துக்’ கொள்ள
கொடுப்பாள். ஒரு நாளைக்குப் பச்சை மிளகாயும், உப்பும். பச்சை மிளகாயின்
காம்பைப் பறித்துவிட்டு அந்த இடத்தில் சிறிது கம்மங்கஞ்சியைத் தொட்டு
அதை உப்பில் தோய்ப்பார்கள். உப்பு அதில் தாராளமாய் ஒட்டிக்கொள்ளும்.
அப்படியே வாயில் போட்டுக்கொண்டு கசமுச என்று மெல்லுவார்கள். அது,
கஞ்சியைக் ‘கொண்டா கொண்டா’ என்று சொல்லுமாம்! இரவில் அவர்களுக்கு
வெதுவெதுப்பாகக் குதிரைவாலிச் சோறுபோட்டு தாராளமாஅ பருப்புக்கறி விட்டு
நல்லெண்ணெயும் ஊற்றுவாள். இதுக்குப் புளி ஊற்றி அவித்த சீனியவரைக்காய்
வெஞ்சனமாகக் கொண்டுவந்து வைப்பாள். இரண்டாந்தரம் சோற்றுக்குக் கும்பா
நிறைய ரஸம். ரஸத்தில் ஊறிய உருண்டை உருண்டையான குதிரைவாலிப் பருக்கைகளை
அவர்கள் கை நிறைய எடுத்துப் பிழிந்து உண்பார்கள்.
வேலைக்காரர்களுக்கு மட்டுமில்லை, பிச்சைக்காரர்களுக்குக்கூட நாச்சியாரம்மா
என்றால் ‘குலதெய்வம்’தான். அவளுக்கு என்னவோ அப்படி அடுத்தவர்களுக்குப்
படைத்துப் படைத்து அவர்கள் உண்டு பசி ஆறுவதைப் பார்த்துக்கொண்டிருப்பதில் ஒரு தேவ திருப்தி.
அவள் வாழ்க்கைப்பட்டு, புருஷன் வீட்டுக்குப் போனபிறகு எங்கள் நாக்குகள் எல்லாம்
இப்போது சப்பிட்டுப் போய்விட்டது. உயர்ந்த ஜாதி நெத்திலியைத் தலைகளைக் கிள்ளி
நீக்கிவிட்டுக் காரம் இட்டு வறுத்துக் கொடுப்பாள்.
இப்போது யாருமில்லை
எங்களுக்கு. அந்தப் பொன்முறுவல் பக்குவம் யாருக்கும் கைவராது.
பருப்புச்சோற்றுக்கு உப்புக்கண்டம் வறுத்துக் கொடுப்பாள். ரஸ சாதத்துக்கு
முட்டை அவித்துக் காரமிட்டுக் கொடுப்பாள். திரண்ட கட்டி வெண்ணெயை
எடுத்துத் தின்னக் கொடுப்பாள், அம்மாவுக்குத் தெரியாமல்.
அவள் அப்பொழுது எங்கள் வீட்டிலிருந்தது வீடு நிறைந்திருந்தது. தீபம்போல் வீடு
நிறைஒளி விட்டுப் பிரகாசித்துக்கொண்டிருந்தாள்.
மார்கழி மாசம் பிறந்துவிட்டால் வீட்டினுள்ளும் தெருவாசல் முற்றத்திலும் தினமும்
வகை வகையான கோலங்கள் போட்டு அழகுபடுத்துவாள். அதிகாலையில் எழுந்து நீராடி
திவ்யப்பிரபந்தம் பாடுவாள். இப்பொழுதும் பல திருப்பாவைப் பாடல்களை என்னால்
பாராமல் ஒப்புவிக்கமுடியும். சிறுவயசில் அவளால் பிரபந்தப் பாடல்களைப்
பாடக் கேட்டுக்கேட்டு எங்கள் எல்லோர்க்கும் அது மனப்பாடம் ஆகிவிட்டது.
அப்பொழுது எங்கள் வீட்டில் மரத் திருவிளக்கு என்று ஒன்று இருந்தது. அது
அவ்வளவும் மரத்தினாலேயே ஆனது. தச்சன் அதில் பல இடங்களில் உளிகளைப் பதித்து
நேர்கோடுகளால் ஆன கோலங்களைப் போட்டிருந்தான். மொங்காங்கட்டையின்
வடிவத்தில் நிற்கும் பெரிதான பற்கள் இருக்கும். அதில் உயரத்துக்குத்
தகுந்தபடி ஏற்றவும் இறக்கவும் வசதியாக இருக்கும்படியாக ‘ட’ வடிவத்தில் ஒரு
துளையிட்ட சக்கையில் ‘சல்ல முத்த’ என்று சொல்லப்படும் மாட்டுச்சாண
உருண்டையின் மீது மண் அகல்விளக்கு வைக்கப்பட்டு எரியும். சாணி உருண்டை
தினமும் விளக்கு இடும் போதெல்லாம் மாற்றிவிட்டுப் புதிதாக வைக்கப்படும்.
அப்புறம் x மாதிரி ஒரு போர்வைப் பலகை கொண்டு இரவு வெகு நேரம் வரைக்கும்
பெண்கள் புடைசூழ இவள் உரக்க ராகமிட்டு வாசிப்பாள்
. வாசித்துக்கொண்டே
வரும்போது இவளும் மற்றப் பெண்களும் கண்ணீர் விடுவார்கள். கண்ணீரைத்
துடைத்துக்கொண்டே தொண்டை கம்மத் திரும்பவும் ராகமிட்டு வசனத்தைப்
பாடுவாள். அவர்கள் கண்ணீர் விடுவதையும் மூக்கைச் சிந்துவதையும் நான்
படுக்கையில் படுத்துக்கொண்டு பேசாமல் இந்தக் காட்சிகளையெல்லாம் பார்த்துக்
கொண்டேயிருப்பேன்.
அவள் வாசிப்பதை என் காதுகள் வாங்கிக்கொள்ளாது. என் கண்களே பார்க்கவும்
செய்யும்; ‘கேட்க’வும் செய்யும்.
விளக்கின் ஒளியில்தான் அவள் எவ்வளவு அழகாகப் பிரகாசிக்கிறாள். அழகுக்கும்
விளக்கின் ஒளிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிறது. கறிக்கு உப்பைப்போல் அழகுக்கும்
அதி ருசி கூட்டுகிறதுபோலும் விளக்கு.
தானாகக் கண்கள் சோர்ந்து மூடிக்கொண்டுவிடும்.
அதிகாலையில் ரங்கையா வந்து என்னை எழுப்பினான். ராமர், லக்ஷ்மணர், சீதை
மூவரும் எங்கள் தெருவின் முடிவிலுள்ள கிழக்காகப் பார்த்த ஒரு
வீட்டிலிருந்து இறங்கிக் காட்டுக்குப் போகிறார்கள். பார்வதி அம்மன்
கோயிலைத் தாண்டி, பள்ளிக்கூடத்தையும் கடந்து, கம்மாய்க்கரை வழியாக அந்த
மூவரும் போகிறாள். எனக்குத் தொண்டையில் வலிக்கிறாற்போல் இருக்கிறது.
முகத்தைச் சுளிக்க முடியவில்லை. ரங்கையா தோள்களைப் பிடித்துப் பலமாக
உலுக்கியதால் விழித்துவிட்டேன். சே! நன்றாக விடிந்துவிட்டிருக்கிறது.
ரங்கையா சிரித்துக்கொண்டு நின்றிருந்தான், கிளம்பு கிளம்பு என்று
ஜரூர்ப்படுத்தினான்.
நாச்சியாரம்மா செம்பு நிறையத் தயிர் கொண்டுவந்து வைத்தாள், இருவரும்
வயிறுமுட்டக் குடித்துவிட்டுக் கிளம்பினோம்.
ரங்கையா எங்கள் மச்சினன்; ‘வீட்டுக்கு மேல்’ வரப்போகும் மாப்பிள்ளை.
நாச்சியாரம்மாவை இவனுக்குத்தான் கொடுக்க இருக்கிறோம். இவனும்
நாச்சியாரம்மாபேரில் உயிரையே வைத்திருக்கிறான்; அவளும் அப்படித்தான்.
‘புல்லை’யையும் ’மயிலை’ யையும் பிடித்து ரங்கையா வண்டி போட்டான். அவை
இரண்டும் எங்கள் தொழுவில் பிறந்தவை. ஒன்று இரண்டு; இன்னொன்று நாலு பல்.
பாய்ச்சலில் புறப்பட்டது வண்டி. ஊணுக் கம்பைப் பிடித்துத்தொத்தி, அவற்றில்
இரண்டைக் கைக்கு ஒன்றாகப் பிடித்துக்கொண்டு குனிந்து நின்றுகொண்டேன்.
சட்டத்தில் இரும்பு வளையங்கள் அதிர்ந்து குலுங்கிச் சத்தம் எழுப்பியது.
வண்டியின் வேகத்தினால் ஏற்பட்ட குலுக்கலில் உடம்பு அதிர்ந்தது.
கல்லாஞ்சிரட்டைத் தாண்டி வண்டியின் அறைத் தடத்துக்குள் காளைகள்
நிதானங்கொண்டு நடை போட்டன.
நடுவோடைப் பாதையிலுள்ள வன்னிமரத்தருகில் வண்டியை அவிழ்த்து, காளைகளை
மேய்ச்சலுக்காக ஓடைக்குக் கொண்டு போனோம்.
காட்டில் பருத்தி எடுக்கும் பெண்கள் காட்டுப் பாடல்கள் பாடிக்
கொண்டிருந்தார்கள். அவர்களிடையே நாச்சியாரம்மாவும் நிரை போட்டுப் பருத்தி
எடுத்துக் கொண்டிருந்தாள். பருத்தி ‘காடாய்’ வெடித்துக் கிடந்தது; பச்சை
வானத்தில் நட்சத்திரங்களைப்போலே. ரங்கையா தன் மடியிலிருந்த கம்பரக் கத்தியால்
கருவைக் குச்சியைச் சீவி, பல் தேய்க்கத் தனக்கு ஒன்று வைத்துக்கொண்டு எனக்கு
ஒன்று கொடுத்தான்.
போக இன்னொன்று தயார் செய்து வைத்துக்கொண்டான்!
நேரம், கிடை எழுப்புகிற நேரத்துக்கும் அதிகமாகிவிட்டது. காளைகள் வயிறு முட்டப்
புல்மேய்ந்து விட்டு வன்னிமர நிழலில் படுத்து அசைபோட்டுக் கொண்டிருந்தன.
நாச்சியாரம்மா, பருத்தியைக் கருவமரத்து நிழலில் கூறுவைத்துக் கொடுத்துக்
கொண்டிருந்தாள். மடிப் பருத்தி, பிள்ளைப் பருத்தி, போடு பருத்தி என்று
பகிர்ந்து போட, பள்ளுப் பெண்கள் சந்தோஷமாக நாச்சியாரம்மாவை
வாழ்த்திக்கொண்டே வாங்கிச் சென்றுகொண்டிருந்தார்கள். அவர்கள் எங்கள்
வீட்டில் வேறு யார் வந்து கூறுவைத்துக் கொடுத்தாலும் ஒப்பமாட்டார்கள்.
நாச்சியாரம்மாதான் வேணும் அவர்களுக்கு.
கிஸ்தான் தாட்டுக்களில் பகிர்ந்த பருத்தி அம்பாரத்தைப் பொதியாக்கட்டி வண்டியில்
பாரம் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் புறப்பட்டோம்.
பள்ளுப்பெண்கள் முன்கூட்டிப்
புறப்பட்டுப் போய் விட்டார்கள் - நாச்சியாரம்மாவும் நானும் வண்டியில்
ஏறிக்கொண்டு பருத்திப் பொட்டணங்களின்மேல் உட்கார்ந்துகொண்டு ஊணுக்கம்புகளைப் பிடித்துக்கொண்டோம். ரங்கையா வண்டியை விரட்டினான்.
வருகிற பாதையில் மடியில் பகிர்ந்த பருத்தியோடு நடந்து வருகிற பெண்டுகளின்
கூட்டத்தைக் கடந்துகொண்டே வந்தது வண்டி. அவர்கள் வேண்டுமென்று
குடிகாரர்களைப்போல் தள்ளாடி நடந்துகொண்டே வேடிக்கைப் பாடல்களைப்
பாடிக்கொண்டும் ஒருவருக்கொருவர் கேலிசெய்து தள்ளிக்கொண்டும் வந்தார்கள்.
தொட்டெரம்மா கோயில் பக்கத்தில் வந்ததும் ரங்கையா கயிறுகளை முழங்கைகளில்
சுற்றி இழுத்து வண்டியை நிறுத்தினான். தொட்டெரம்மா கோயிலின் இலந்தைமுள்
கோட்டையின்மேல் நாச்சியாரம்மா ஒரு கூறு பருத்தியை எடுத்து இரு கைகளிலும்
ஏந்திப் பயபக்தியோடு அந்த முள்கோட்டையின் மீது போட்டாள். பின்னால்
வந்துக்கொண்டிருந்த பள்ளுப்பெண்கள் குலவையிட்டார்கள். ரங்கையா கயிற்றை
நெகிழ்ந்து விட்டதும் புல்லையும் மயிலையும் வால்களை விடைத்துக்கொண்டு
பாய்ந்து புறப்பட்டது.
********
ஊரெல்லாம் ஒரே சலசலப்பு. என்ன ஆகுமோ என்ற பயம். தலையைத் தொங்கப்
போட்டுக்கொண்டே வந்து சேர்ந்தான் ரங்கையா. ‘என்ன ஆச்சி?’ என்று அவனைக்
கேட்பதுபோல் பார்த்தோம் யாவரும். அவன் என்னை மட்டிலும் ‘ராஜா, இங்கே வா’
என்று தனியாகக் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னான்.
எங்கள் ஊரில், சுந்தரத்தேவன் என்று ஒரு பெரிய போக்கிரி இருந்தான். ஏழுதடவை
ஜெயிலுக்குப் போனவன். மூன்று கொலைகள் செய்தவன். அதில் ஒன்று இரட்டைக்
கொலை. அவனுடைய மகனை, எங்கள் தகப்பனார் எங்கள் புஞ்சையில் ‘வாங்கித்திங்க’
பருத்திச்சுளை எடுத்தான் என்றதுக்கு ஊணுக்கம்பால் அடி நொறுக்கி எடுத்து
விட்டார். பையனைக் கட்டிலில் வைத்து எடுத்துக்கொண்டு வந்து அவனுடைய
வீட்டில் கிடத்தியிருக்கிறார்கள். சுந்தரத்தேவன் வெட்டரிவாளை
எடுத்துக்கொண்டு வந்து எங்கள் வீட்டை நோக்கிப்
புறப்பட்டுக்கொண்டிருக்கிறான். விஷயம் இதுதான். ரங்கையா போய் எவ்வளவு
சமாதானம் சொல்லியும் கேட்கவில்லை அவன்.
நாச்சியாரம்மா சுந்தரத்தேவன் வீட்டை
நோக்கிப் போனாள். அவள் அங்கு
போயிருப்பாள் என்று நாங்கள் முதலில் நினைக்கவில்லை; பிறகுதான்
தெரியவந்தது.
அங்கு அவள் போனபோது ஒரே கூட்டம். அழுகைச் சத்தம். நாச்சியாரம்மா
நுழைந்ததும் பரபரப்பு உண்டானது. பெண்கள் பணிவாக வழிவிட்டு விலகி நின்றனர்.
அடிப்பட்ட சிறுவ்னை அந்தக் கட்டிலிலேயே கிடந்த்தியிருந்தது. இரத்த உறவு
கொண்ட பெண்கள் ஓவென்று அழுதுகொண்டிருந்தார்கள். சிறுவனின் தாய் கதறியது
உள்ளத்தை உலுக்குவதாக இருந்தது. நாச்சியாரம்மா சிலையானாள். அவள்
கண்களிலிருந்து தாரை தாரையாக நீர் வடிந்தது. அவள் சுந்தரத்தேவனை ஏறிட்டுப்
பார்த்தாள். பின்பு கட்டிலின்
சட்டத்தில் உட்கார்ந்தாள்.
தன் முந்தானையாள் கண்ணீரை ஒத்திக்கொண்டு
அச்சிறுவனின் இரத்தம் உறைந்த முகத்தைத் துடைத்தாள். சுந்தரத்தேவன் கட்டிலின்
பக்கத்தில் நெருங்கி அரிவாளைத் தரையில் ஊன்றி ஒற்றைக் கால் மண்டியிட்டு
உட்கார்ந்துகொண்டு இடது முழங்கையைக் கட்டிலின் சட்டத்தில் ஊன்றி முகத்தில்
ஐந்து விரல்களால் விரித்து மூடிக்கொண்டு ஒரு குழந்தைபோல் குமுறி அழுதான்.
நாச்சியாரம்மா சிறுவனை மூர்ச்சை தெளிவித்தாள். வீட்டிலிருந்த புளித்த மோரை
வருத்திச் சிறிது கொடுத்துத் தெம்பு உண்டாக்கினாள். மஞ்சணத்தி இலைகளைப்
பறித்துக்கொண்டு வரச் சொன்னாள். அதை வதக்கித் தன் கையாலேயே ஒத்தடம் கொடுத்தாள்.
சுவரொட்டி இலைகளை வாட்டிப் பக்குவப்படுத்திக் காயங்களைக் கட்டினாள். பின்பு
வீட்டுக்கு வந்து, பத்துப் பக்கா நெல் அரிசியும், இரண்டு கோழிகளையும்
கொடுத்தனுப்பினாள்.
நாங்கள் ஊமைகளைப்போல் ஒன்றுமே பேசாமல் அவைகளை எல்லாம் பார்த்துக்கொண்டே இருந்தோம்.
எங்கள் தகப்பனாரோ, இப்பொழுதுதான் ஒன்றுமே நடக்காதது போல் தலையில் கட்டிய
லேஞ்சியோடு நிம்மதியாக உட்கார்ந்து கொண்டு சுவர்நிழலில் சூரித்தட்டை
வீசிக்கொண்டிருந்தார். இடையிடையே வாயில் ஊறும் வெற்றிலை எச்சியை இரண்டு
விரல்களை உதட்டில் அழுத்திப் பதித்துக்கொண்டு பீச்சித் துப்புவார். அது
கம்மந்தட்டைகளையெல்லாம் தாண்டித் தூரப்போய் விழும்.
********
எல்லாப் பெண்களையும்போல் நாச்சியாரம்மாவுக்கும் ஒருநாள் கல்யாணம்
நிச்சயமானது. அந்தக்காலத்துப் பெண்கள் தங்களுக்குக் கல்யாணம்
நிச்சயமானவுடன் அழுவார்கள். அவர்கள் ஏன் அப்படிச் செய்தார்கள் என்று
இன்றுவரைக்கும் நான் யாரிடமும் காரனம் கேட்டுத் தெரிந்துகொள்ளவில்லை.
ஆனால், அதில் ஒரு ‘தேவ ரகஸியம்’ ஏதோ இருக்கிறது என்று மட்டும் நிச்சயம்.
நாச்சியாரம்மாவும் ஒரு மூணுநாள் உட்கார்ந்து கண்ணீர் வடித்து ‘விசனம்’
காத்தாள்.
வழக்கம்போல் மூன்றுநாள் கல்யாணம். அந்த மூன்று நாளும் அவள் ‘பொண்ணுக்கு
இருந்த’ அழகைச் சொல்லிமுடியாது. கல்யாணம் முடிந்த நாலாம்நாள் அவள்
எங்களையெல்லாம் விட்டுப் பிரிந்து மறுவீடு போகிறாள். சுமங்கலிகள் அவளுக்கு
ஆரத்தி எடுத்தார்கள். ஆரத்தி சுற்றிக்கொண்டே அவர்கள் பாடினார்கள். அந்தப்
பாடலின்
ஒவ்வொரு கடேசி அடியும் கீழ்க்கண்டவாறு முடியும்-
*‘மாயம்ம லக்ஷ்மியம்ம போயிராவே...’
(எங்கள் தாயே லக்ஷ்மி தேவியே போய் வருவாய்)*
அந்தக் காட்சி இன்னும் என் மனசில் பசுமையாக இருக்கிறது. அவளை நாங்கள்
உள்ளூரில்தான் கட்டிக்கொடுத்திருக்கிறோம். ஐந்து வீடுகள் தள்ளித்தான் அவளுடைய
புக்ககம். அவளுக்கு நாங்கள் விடை கொடுத்து அனுப்புவது என்பதில்
அர்த்தமில்லைதான். ஆனால் ஏதோ ஒன்றுக்கு நிச்சயமாக விடை கொடுத்தனுப்பி
இருக்கிறோம்.
அந்த ஒன்று இப்பொழுது எங்கள் நாச்சியாரம்மாவிடம் இல்லை. அது அவளிடமிருந்துபோயே போய்விட்டது.
-----
2
ஆம் அது ரொம்ப உண்மை.
ராஜா அடிக்கடி சொல்லுவான். இப்பொழுதுதான் தெரிகிறது எனக்கு.
நான் நாச்சியாரம்மாவைக் கல்யாணம் செய்து அடைந்து கொண்டேன். ஆனால் அவளிடமிருந்து எதையோ பிரித்துவிட்டேன்.
அவள் இப்பொழுது ரெட்டிப்புக் கலகலப்பாக உண்மையாகவே இருக்கிறாள். என்
குடும்பத்தைப் பிரகாசிக்கச் செய்கிறாள். எங்கள் கல்யாணத்துக்கு முன்பு எனக்கு
இருந்த நாச்சியாரம்மாள்; இப்பொழுது இருக்கும் என் நாச்சியாரம்மாள்; நான் அந்த
அவளைத்தான் மிகவும் நேசிக்கிறேன்.
இப்பொழுது மூணு குழந்தைகள் எங்களுக்கு, தொடர்ந்த பிரசவம். இது அவளைப்
பாதித்திருப்பது உண்மைதான். குழந்தைகளையும், குடும்பத்தையுமே சதா கவனிக்கும்
சுயநலமி ஆகிவிட்டாள்.
எங்கோ ஓர் இடத்தில் கோளாறாகிவிட்டது. சந்தேகமே இல்லை. ஓய்வு
ஒழிச்சலில்லாமல் முன்னைவிடப் பலமடங்கு அவள் இப்பொழுது உடைக்கிறாள்.
உழைத்து ஓடாய்த் தேய்ந்து வருகிறாள் என்னவள். ஒருநாளில் அவள் தூங்குகிற
நேரம் மிகவும் அற்பம். என்ன பொறுமை, என்ன பொறுமை!
குழந்தைக்கு முலையூட்டிவிட்டு விலகிய மாராப்பைக்கூடச் சரி செய்து கொள்ளாமல்
தூளியில் இட்டு ஆட்டும் இந்த இவளா அவள்?
ஏகாலிக்கும், குடிமகளுக்கும் சோறுபோட எழுந்திருக்கும்போது முகம் சுளிக்கிறாள்.
குழந்தைக்குப் பாலூட்டும்போதோ, அல்லது தான் சாப்பிட உட்காரும்போதோ
பார்த்துத்தான் அவர்கள் சோறு வாங்கிப் போக வருகிறார்கள் தினமும் என்று புகார்
செய்கிறாள். பிச்சைக்காரர்களுக்கு ‘வாய்தாப்’ போடுகிராள். வேலைக்காரகளின்மேல்
எரிந்து விழுகிராள். ‘அப்பப்பா என்ன தீனி தின்கின்றான்கள் ஒவ்வொருத்தரும்’
என்று வாய்விட்டே சொல்ல ஆரம்பித்துவிட்டாள்.
குடுகுடுப்பைக்காரன் இப்பொழுதெல்லாம் அட்டகாசமாக வந்து எங்கள் தலைவாசலில்
வெகுநேரம் புகழ்வதில்லை. பெருமாள் மாட்டுக்காரன் தன் மாட்டுக்கு
கம்மஞ்சோற்றையும் பருத்திக்கொட்டையையும் தவிட்டையும் கலந்து வைக்கும் அந்த
‘நாச்சியார்’ எங்கே போனாள் என்று தேடிக்கொண்டிருக்கிறான்.
கல்யாணத்துக்கு முன் நாச்சியாரு, நின்ற கண்ணிப்பிள்ளை சேகரித்து மெத்தைகள்,
தலையணைகள் தைப்பாள். மெத்தை உறைகளிலும் தலையணை உறைகளிலும் பட்டு நூலால்
வேலைப்பாடுகள் செய்வாள்.
அவள் தனியாக உட்கார்ந்துகொண்டு நிம்மதியாகவும்
நிதானமாகவும் யோசித்து யோசித்துச் செய்யும் அந்தப் பின்னல் வேலைகளில், தன்
கன்னிப் பருவத்தின் எண்ணங்களையும் கனவுகளையுமே அதில் பதித்துப்
பின்னுவதுபோல் தோன்றும். இடையிடையே அவளுக்குள் அவளாகவே குறுநகை செய்து
கொள்வாள். சில சமயம் வேலையைப் பாதியில் நிறுத்திவிட்டுப் பார்வை எந்தப்
பொருள்பேரிலும் படியாமல் ‘பார்த்து’க்கொண்டே இருப்பாள். அப்புறம் நீண்ட
ஒரு பெருமூச்சு விட்டுவிட்டு மீண்டும் தையலில் மூழ்குவாள்.
ஒருநாள் நாச்சியாருவின் வீட்டுக்குப் போயிருந்தேன். எனக்கு ஒரு புதிய ஏர்வடம்
தேவையாக இருந்தது. அவர்களுடைய வீட்டில் அப்பொழுது களத்து ஜோலியாக
எல்லாரும் வெளியே போயிருந்தார்கள். அடுப்பங்கூடத்தை ஒட்டி ஒரு நீளமான ஓடு
வேய்ந்த கட்டிடம். அதில் ‘குறுக்க மறுக்க’ நிறையக் குலுக்கைகள்.
குதிரைவாலி,
நாத்துச்சோளம், வரகு, காடைக்கண்ணி முதலிய தானியங்கள் ரொம்பி இருக்கும். புதிய
ஏர் வடங்கள் ஓட்டின் கைமரச் சட்டங்களில் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது.
தொங்கிய கயிறுகளுக்கு மத்தியில், மண் ஓட்டில் ஓட்டை போட்டுக்
கோர்த்திருந்தார்கள்.
ஏர்வடத்தைக் கத்தரிக்கக் கயிறு வழியாக இறங்கி மண்
ஓட்டுக்கு வந்ததும் எலிகள் கீழே விழுந்துவிடும். ஆள் புழக்கம் அங்கு
அதிகமிராததால் தேள்கள் நிறைய இருக்கும். பதனமாகப் பார்த்துக் குலுக்கை
மேல் ஏறி நின்றேன். மத்தியான வெயிலால் ஓட்டின் வெக்கை தாள முடியாததாக
இருந்தது.
தற்செயலாக மறுபக்கம் திரும்பிப் பார்த்தேன். அங்கே தரையில் நாச்சியாரு ஒரு
தலைப்பலகையை வைத்துக்கொண்டு தூங்கிக்கொண்டிருந்தாள்! மார்பின்மீது விரித்துக்
கவிழ்க்கப்பட்ட ’அல்லி அரசாணி மாலை’ப் புத்தகம். பக்கத்தில் வெங்கலப்
பல்லாங்குழியின் மீது குவிக்கப்பட்ட சோழிகள். ஜன்னலில் ஒரு செம்பு, பக்கத்தில்
ஒரு சினுக்குவலி, இரண்டு பக்கமும் பற்கள் உள்ள ஒரு மரச்சீப்பு, ஒரு ஈருவாங்கி,
ஒரு உடைந்த முகம்பார்க்கும் கண்ணாடி முதலியன இருந்தன. அவள் அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தாள். பால் நிறைந்து கொண்டே வரும் பாத்திரத்தில்
பால்நுரைமீது பால் பீச்சும்போது ஏற்படும் சப்தத்தைப்போல் மெல்லிய குறட்டை ஒலி.
அவள் தூங்கும் வைபவத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தேன்.
அடர்ந்த நீண்டு
வளைந்த ரெப்பை ரோமங்களைக் கொண்ட மூடிய அவள் கண்கள் அவ்வளவு அழகாய்
இருந்தது. மெதுவாக இறங்கிப் போய் அந்த மூடிய கண்களில் புருவத்துக்கும்
ரெப்பை ரோமங்களுக்கும் மத்தியில் முத்தமிட வேண்டும்போல் இருந்தது.
சொல்லி வைத்ததுபோல் நாச்சியாரு கண்களைத் திறந்தாள். தூக்கத்தினால் சிவந்த
விழிகள் இன்னும் பார்க்க நன்றாக இருந்தது. குலுக்கைமேல் இருந்த என்னை அதே
கணம் பார்த்துவிட்டாள். ‘
இது என்ன வேடிக்கை?’ என்பதுபோல் சிரித்துப்
பார்த்தாள்.
அவள் எழுந்த வேகத்தில் புஸ்தகம் அவளுடைய காலடியில் விழுந்தது. விழுந்த
புஸ்தகத்தைத் தொட்டு வேகமாக இரு கண்களிலும் ஒற்றிக்கொண்டு அதை எடுத்து
ஜன்னலில் வைத்தாள். பின்பு லஜ்ஜையோடு சிரித்துத் தலைகவிந்துகொண்டே,
நழுவும் மார்பு சேலையை வலதுகையினால் மார்போடு ஒட்ட வைத்துக்கொண்டு மெதுவாக
அந்த இடத்தை விட்டு நழுவினாள்.
கல்யாணத்துக்கு முன்பிருந்தே நாங்கள் பரஸ்பரம் ஒருவரையொருவர்
அறிந்துகொண்டோம். யாரும் அறியாமல் தொலைவில் இருந்துகொண்டே ரகசியமாக
ஒட்டிப் பழகினோம். இதயங்கள் அப்படி ஒன்றி ஊசலாடின. பேசாத ரகசியங்கள்தான்
எங்களுக்குள் எத்தனை!
எனக்கு என்னென்ன சௌகரியங்கள் வேண்டுமென்று நான் உணர்த்தாமலே அவளுக்குத்
தெரிந்திருந்தது. ஆச்சரியப்படும்படி அவைகள் செய்து முடிக்கப்பட்டிருக்கும்
அப்போது.
********
ஒரு நாள் கோவில்பட்டியிலிருந்து ராத்திரி வந்தேன். அன்று வீட்டிற்கு நிறையச்
சாமான்கள் வாங்க வேண்டியிருந்தது. காலம் முன்னைமாதிரி இல்லை. ஒரும்பாகிவிட்டது.
முன்னெல்லாம் கொஞ்ச ரூபாயில் நிறையச் சாமான்கள் வாங்கிக்கொண்டு வரலாம்.
இப்போதோ நிறைய ரூபாய்கள் கொண்டுபோய் கொஞ்ச சாமான்களையே வாங்கமுடிகிறது.
வந்ததும் வராததுமாய்ச் சாமான்களையெல்லாம் வண்டியிலிருந்து இறக்கி
வைத்துவிட்டுப் பணப்பையையும் கச்சாத்துகளையும் நாச்சியாருவிடம்
கொடுத்துவிட்டு அப்படியே வந்து கட்டிலில் வீழ்ந்தேன். உடம்பெல்லாம்
அடித்துப்போட்டதுமாதிரி வலி. கண்கள் ஜிவ்வென்று உஷ்ணத்தைக்
கக்கிக்கொண்டிருந்தது. மண்டைப் பொருத்தோடுகளில் ஆக்ரா இறக்கியது போல்
தெறி. கம்பளியை இழுத்துப் போர்த்திக்கொண்டேன். குழந்தைகள் அயர்ந்து
தூங்கிக்கொண்டிருந்தன. அரிக்கன் லாம்பை சரியாகத் துடைத்துத் திரியைக்
கத்தரித்து விடாததாலோ என்னவோ சுடர் பிறைவடிவில் எரிந்துகொண்டிருந்தது.
சிம்னியில் புகைபிடிக்க ஆரம்பித்திருந்தது.
அந்த வெளிச்சத்தில் அவள் கச்சாத்துக்களிலிருந்த தொகைகளைக் கூட்டிக்கொண்டும்,
மீதிப்பணத்தை எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டுமிருந்தாள்.
கணக்கில் ஒரு ஐந்து ரூபாய் சொச்சம் உதைத்தது. அந்த ரூபாய்க்கான கணக்கு என்ன
என்று என்னிடம் கேட்டாள்.
’எல்லாத்தையும் எடுத்துவை
கணக்கு எங்கெயும் போய்விடாது;
காலையில் பாத்துக்கலாம், எல்லாம்.’
அவள் பிடிவாதமாகக் கணக்குப் பார்த்துக்கொண்டிருந்தாள்.
எனக்கு கண்களைத் திறக்க முடியவில்லை. மூடிக்கொண்டே இருக்கவேண்டும்போல்
இருந்தது. என்னுடைய நெற்றி ஒரு இதமான விரல்களின் ஒத்தடத்துக்கு ஏங்கியது.
மூக்கு மயிர் கருகும்படியான உஷ்ணக்காற்றை நான் வெளிவிட்டுக் கொண்டிருந்தேன்.
நல்ல உயர்ந்த காய்ச்சல்.
சூழ்நிலையின் பிரக்ஞை வட்டம் சுருங்கிக்கொண்டே வந்தது. சின்ன, மெல்லிய
சப்தங்கள்கூடக் கோரமாகக் கேட்டன. கண்களைத் திறந்து நாச்சியாரு என்ன
செய்கிறாள் என்று திரும்பிப் பார்த்தேன். அவள் ரூபாய் அணா பைசாவில்
மூழ்கியிருந்தாள்.
குளிர்ந்த காற்றுப்பட்டதால் கண்கள் நீரை நிறைத்தன, துடைத்துக்கொள்ளக் கையை
எடுக்க இஷ்டமில்லை. அதை இமைகளாலேயே மூடி வெளியேற்றினேன். மீண்டும்
நாச்சியாருவையே பார்த்தேன். அவளுடைய ரவிக்கையின் அவிழ்க்கப்பட்ட முடிச்சு
முடியப்படாமலே தொங்கின. கூந்தல் வாரிச் சேர்க்கப்படாததால் கற்றைகள்
முன்முகத்தில் வந்து விழுந்து கிடந்தன.
என்ன ஆனந்தமான ‘சொகம்’ இந்தக் கண்களை மூடிக்கொண்டே இருப்பதினால்! கானல்
அலைகளைப்போல் என் உடம்பிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் உஷ்ண அலைகள்
கண்ணால் பார்க்கமுடியாமலிர்ந்தாலும் தெரிந்தது. நான்
எரிந்துக்கொண்டிருக்கும் ஒரு
சிதைக்குள் படுத்திருப்பதுபோல் குளிருக்கு அடக்கமாக இருந்தது. உயர்ந்த
காய்ச்சலின் போதை இடைவிடாது மீட்டப்படும் சுருதிபோல் லயிப்பு மயமாக இருந்தது.
இந்த ஆனந்தத்தில் பங்குகொள்ள எனக்கு ஒரு துணைவேண்டும்போல் இருந்தது. அவள் எங்கே? அவள்தான்; என் அருமை நாச்சியாரு.
‘நாச்சியாரு, என் பிரியே! நீ எங்கிருக்கிறாய்?’